இஸ்லாமிய மார்க்கத்தில் ஏன் பலதார மணம் செய்ய அனுமதி?
திருமணம் என்பது நம் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் பெரும்பாலும் மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படுவது திருமணத்திற்கு பிறகு தான். எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அவர் திருந்தி சீரான வாழ்க்கைப்பாதையில் பயணிக்கத் தொடங்குவது மனைவி என்ற உறவு கிடைத்த பிறகு தான்.
அத்தனை சிறப்புடைய திருமணம் பற்றியும், திருமணம் என்றால் என்ன, கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்? இஸ்லாம் திருமணம் குறித்து சொல்லும் நடைமுறைகளை சுருக்கமாக பார்க்கலாம்.
இஸ்லாம் சொல்லும் திருமணம் என்றால் என்ன?
பொதுவாக திருமணம் என்பது ஒரு ஆணும், பெண்ணும் உள்ளம், உடலால் இணைந்து வாழ ஏற்படுத்தப்பட்ட ஒரு சடங்கு என்று தான் நாம் அறிந்து வைத்திருக்கும். ஆனால், இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்பது இரு தரப்பினரின் சம்பந்தத்துடன் செய்யப்படும் ஒரு கண்ணியத்திற்குரிய வாழ்வியல் ஒப்பந்தம்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் முஸ்லீம்களுக்கான தனி திருமணச்சட்டங்கள் இருக்கின்றன. அது முஸ்லீம்களின் நடைமுறைகளில் என்றும் தலையிட்டதில்லை. மதச்சார்பின்மையை இதன் மூலமும் இந்தியா நிரூபிக்கிறது.
இஸ்லாமிய திருமணத்திற்கு மணமக்கள் சம்மதம், இரு வீட்டார் ஒப்புதல், சாட்சிகள், ஜமாத்தார்கள் எனப்படும் ஊர் பொதுமக்கள் மிக மிக அவசியம். குறிப்பாக பெண் தரப்பில் பெண்ணின் தந்தை, சகோதரர்கள் அல்லது அதற்கு சமமான பாதுகாவலர்களின் ஒப்புதல் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவர்கள் இல்லாத திருமணம் செல்லாது. இந்த முறை மூலம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கைவிடும் சில காவாலிகளிலிடமிருந்து பெண்ணிணம் காப்பாற்றப்படுகிறது.
திருமணத்தின் போது மணமக்கள் இருவரின் சம்மதம் வாய்மொழியாக கேட்கப்பட்டு, அது பதிவுசெய்யப்பட்டு கையெழுத்தும் வாங்கப்படுகிறது. பொதுவாக இஸ்லாத்தில் காதல் (!!) மணமென்பது மிகவும் குறைவு. காரணம், காதல் என்ற பெயரில் காம களியாட்டங்கள் நிகழ்த்தி, அதன் விளைவாக கர்ப்பமாக்கி அந்த பெண்ணை கைவிடுவது என்பது சகஜமான ஒன்று. ஆனால், இஸ்லாம் காதலுக்கு எதிரியில்லை. உடல் உணர்ச்சியை அடிப்படையாக கொண்டு கொள்ளப்படும் அன்பை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
உதாரணத்திற்கு பருவமடைந்த ஒரு பெண் வேற்று ஆணை தனிமையை சந்திக்கக்கூடாது. அப்படி சந்திக்கும் போது அங்கு 3 பேர் இருப்பார்கள். 1. ஆண் 2. பெண். 3. அவர்களை தவறு செய்ய வைத்து வழி கெடுக்க தூண்டும் ஷைத்தான். ஒரு பெண்ணை மணக்க தேர்ந்தெடுக்கும் போது இஸ்லாம் சொல்லித்தரும் வழி. 1. இறைவனின் மார்க்கத்தில் சிறந்தவள் 2. ஒழுக்கத்தில் சிறந்தவள் 3. குடும்ப பாரம்பரியத்தில் சிறந்தவள் 4. கல்வியில் சிறந்தவள் 5. அழகில் சிறந்தவள், 6. செல்வத்தில் சிறந்தவள். இஸ்லாம் பணத்திற்கு கடைசி இடத்தை கொடுக்கிறது. தனக்கான இணையை தேர்ந்தெடுக்கவும், நிராகரிக்கவும் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும் உரிமை வழங்கப்படுகிறது.
இஸ்லாத்தில் எத்தனை திருமணம் செய்யலாம்..?
இஸ்லாத்தின் சட்டப்படி ஒரு ஆண் 4 திருமணம் வரை செய்யலாம். உடனே புருவமுயர்த்தி இதென்ன அநியாயம் என்காதீர்கள். பொறுமை..!! இந்த கட்டளை இறைவனிடமிருந்து வந்த காலகட்டம் என்ன தெரியுமா? அறியாமையும், விஞ்ஞானமும் இல்லாத காலகட்டம். போர், கொள்ளை நோய் என்று மனித உயிர்கள் மாய்ந்த நேரம். அதில் குறிப்பாக போர்களில் ஆண்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டார்கள். அவர்கள் வாழ வழியில்லாமல் வறுமையால் பீடிக்கப்பட்டு விபசாரத்தொழிலுக்கு தள்ளப்படும் நிலை நிலவியது. அப்போது ஏற்பட்டது தான் இந்த சட்டம்.
அது மட்டுமல்ல, ஒரு ஆண் மணமடைந்து அவன் மனைவியோடு திருப்தியில்லாத பட்சத்தில் அவளை பிரிந்தால் காலம் முழுக்க அவன் தனிமையிலும், உடல் ஆசை இல்லாமலும் வாழ முடியுமா..? நிச்சயம் முடியாது. அவனும் விபசாரியைத் தேடி தான் போவான். உலக மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி உலகில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை கூடுதல். இது இயற்கை. இந்த நிலை காலம், செல்ல செல்ல பெண்ணுக்கு கணவன் கிடைக்காத நிலையை உண்டாக்கும். இல்லறத்திற்கு வழி இல்லாத பெண்கள் பிழைக்க அவர்களும் விபசாரம் செய்ய வாய்ப்பு உண்டு. இப்படி எல்லாவற்றுக்கும் தீர்வாக இருப்பது தான் பலதார மணம்.
சரி.. அப்படியானால் ஆண் இஷ்டப்பட்டபடி 4 பெண்களை மணக்கலாமா..? அதான் நடக்காது. அதற்கென்று மிக கடுமையான நிபந்தனைகள் இருக்கின்றன. அதில் முதல் நிபந்தனை என்னவென்றால் முதல் மனைவியின் மனப்பூர்வ சம்மதம் வேண்டும். இப்போது சொல்லுங்கள். கிடைக்குமா..? ஆனால், அந்த காலத்தில் கிடைத்தது. அரேபியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மணம் புரிந்தார்கள். எப்படி சாத்தியம் தெரியுமா..? திருமணம் பற்றி இஸ்லாம் சொன்னதை கடை பிடித்தார்கள்.
இஸ்லாம் சொல்கிறது, யார் ஒருவர் ஒன்று மேற்பட்ட திருமணம் செய்யப்போகிறாரோ, அவர் தங்கள் மனைவிகளுக்குள் எல்லா வகையிலும் நியாயமாக சமமாக அவர்களை நடத்த வேண்டும். அதை செயல்படுத்த இயலாதவர்களுக்கு அது அனுமதி இல்லை. அதே போல் நடந்தார்கள், திருமணமும் செய்தார்கள். இல்லையென்றால் ஒரு மனைவியை வைத்துக்கொண்டே இத்தனை அல்லல்படும் நாம், இன்னொரு திருமணத்தை நினைப்பது எளிதா..?
பெண்கள் தன் கணவனை இன்னொரு திருமணம் செய்ய சம்மதிக்க பல காரணம் இருந்தன. கணவனின் சமமாக நடத்தும் குணம், அவன் மீது கொண்டு அதீத அன்பு, குழந்தையின்மை, நோய், முதுமை அல்லது இயலாமை காரணமாக இருந்தது. இந்த கடைசி 3 பிரச்சினைகள் இருந்தால் நாம் எடுக்கும் நடவடிக்கை விவாகரத்தாக இருக்கும். அதன் மூலம் அந்த பெண்ணின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு அவனும் தன் நிம்மதி இழக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு இஸ்லாம் சொன்னதை விட சரியான தீர்வு வேறு எதுவும் உண்டா..?
ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்யலாம், பெண்கள் செய்யக்கூடாதா?
இதென்ன அநியாயம்..? ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்யலாம், பெண்கள் செய்யக்கூடாதா? என்ற கேள்வி வரும். அதற்கும் இஸ்லாத்தில் பதில் உண்டு. இஸ்லாத்தில் ஆண் பெண் உடற்கூறுகளை வைத்து சில விஷயங்களை நன்மைக்காக கற்பிக்கிறதே தவிர உறவில், உரிமையில், நடத்தப்படுவதில் இரு பாலாரும் சமமே. இன்னும் சொல்லப்போனால், இஸ்லாம் பெண்களை மிகவும் மேன்மைப்படுத்துகிறது.
ஆண்களைப் போலவே பெண்களும் இன்னொரு ஆணை மணம் செய்ய உரிமை உண்டு. ஆனால், நிபந்தனை இன்னொருவனுக்கு மனைவியாக இருக்கக்கூடாது. உதாரணத்திற்கு கணவன் கொடுமையால் விவாகரத்து பெற்றவர்கள், விதவைகள், வஞ்சிக்கப்பட்டவர்கள் தாராளமாக மறுமணம் செய்யலாம். அப்படி திருமணம் செய்பவர்களை இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது. இதற்கு சிறந்த உதாரணம் நபிகள். அவர் ஒரு விதவையைத்தான் மணம் புரிந்தார். அது ஏன் பெண்ணுக்கு இந்த நிபந்தனை என்று கேட்கலாம். இஸ்லாம் காரணகாரியமில்லாமல் எதையும் சொல்வதில்லை.
உதாரணத்திற்கு மனிதனுக்கு தாய், தந்தை உறவும், அவர்கள் மூலம் கிடைக்கும் கௌரவம், மரியாதை, சொத்துக்கள் மிகவும் இன்றியமையாதது. ஒரு அனாதைக்கு, தவறான வழியில் பிறந்த குழந்தைக்கு இந்த உலகத்தில் கிடைக்கும் மரியாதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒரு ஆணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்கள் மூலம் குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகள் எல்லோருக்கும் அவன் ஒருவன் தந்தை என்பது மிகவும் தெளிவாக தெரியும். அதன் மூலம் உரிமையும், சொத்துக்களும் எல்லோருக்கும் சமமாக பங்கிட முடியும். இதுவே, ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவன்கள் இருந்து அவளுக்கு பல குழந்தைகள் இருந்தால் எந்த கணவனுக்கு பிறந்த குழந்தை என்று அவர்களை இனம் காண முடியுமா..?
கணவன்கள் ஒருவொருக்கொருவர் விலகிசெல்ல வாய்ப்புண்டு. அதுமட்டுமல்ல, இதனால் பல வழிகளில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நியாயமான முடிவும் எடுக்க முடியாது. இது சம்பந்தமாக இஸ்லாம் சமூகத்தின் சொல்லும் வழியான விளக்கம். விஞ்ஞானத்தின் வழியாக இஸ்லாம் சொல்லும் விளக்கம் என்ன..?
ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் இருப்பதை இஸ்லாம் தடை செய்வதின் விஞ்ஞான நோக்கத்தை காண்போம். அறிவியல் கண்டுபிடிப்பின் படி எயிட்ஸ் உள்ளிட்ட பாலியல் நோய்களுக்கான ஊற்றுக்கண்ணாக இருப்பது முறைகேடான உறவு என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதாவது மனைவி அல்லாது இன்னொரு பெண்ணுடன் உறவு கொள்ளுதல். அந்த பெண்ணும் இன்னும் பல ஆணுடன் உறவு வைத்திருப்பாள் என்பது சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
இந்த நிலை பாலியல் நோயை ஏற்படுத்தும் பட்சத்தில் பலரிடம் உறவு கொள்ளும் விபசாரிக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களிடம் உறவு கொள்ளும் மனைவிக்கும் பெரும் வித்தியாசம் இருக்காது. அவர்கள் செய்வது சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்டது என்றாலும் கூட நடைமுறையில் ஒத்துவராத விஷயமிது. காரணம், அவர்கள் உடல் ரீதியாகவே அப்படிப்பட்ட நிலையை பெற்றுள்ளார்கள்.
அது மட்டுமல்ல, அவனே அவனுக்கென்று கிளி மாதிரி மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி சின்னவீடு வைத்துக்கொள்ளும் இந்த உலகத்தில் ஒன்று மேற்பட்டவர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரே ஒரு மனைவியின் மீது மற்ற கணவர்களுக்கு அன்பும், காதலும், ஈடுபாடும் இருக்காது. அவன் மனைவியை விடுத்து பிற பெண்களிடம் உறவு கொண்டு அவன் பாலியல் நோயை பெற்று அதை அவன் மனைவிக்கு கொடுத்து, அவள் மற்ற கணவர்களுக்கு கொடுத்து, மற்ற கணவர்கள் உறவு கொள்ளும் மற்ற பெண்களுக்கு கொடுத்து இந்த நோய் பரவி உலகமே பாலியல் நோயால் பீடிக்கப்படும்.
ஆனால், ஒரே கணவரிடம் உறவு கொள்ளும் பெண்களுக்கு இந்த அபாயம் இல்லை. அதுமட்டுமல்லாமல், ஒரே ஒரு மனைவி இருக்கும் பட்சத்தில் ஆண்களுக்கே உரிய அதிகாரம், ஆளுமை குணம் கணவர்களுக்குள் போட்டி பொறாமையை ஏற்படுத்தி, பிரச்சினையை பெரிதாக்கி அதனால் ஏற்படும் விளைவு மிக மோசமானதாக இருக்கும்.
இஸ்லாம் பலதார மணம் செய்ய எல்லோரையும் ஊக்கப்படுத்துகிறதா..?
சரி.. அப்படியானால் இதன் மூலம் இஸ்லாம் பலதார மணம் செய்ய எல்லோரையும் ஊக்கப்படுத்துகிறதா..?
நிச்சயம் இல்லை. ஒரு பிரச்சினையின் தீர்வாக விவாகரத்து, அதனால் பெண்ணின் வாழ்க்கை இழப்பு, விபசாரம், நோய் என்று போகாமல் சுமுகமாக, சுகமாக வாழ இஸ்லாம் சொல்லித்தரும் வழி இது. இஸ்லாத்தில் இந்ததபல தார மணம் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து இவ்வளவு விமர்சிக்கப்படுகிறதே..
நீங்களே சொல்லுங்கள். இந்தியாவின் மக்கள் தொகை தொகையில் எல்லா மதத்தினரின் சதவீதத்தில் பல தார மணம் செய்த முஸ்லீம்களின் சதவீதம் எவ்வளவு..? மற்ற மதத்தினரைவிட குறைவாக இருப்பார்கள். காரணம், கடுமையான நிபந்தனைகளும், வழி முறைகளும். அது மட்டுமல்ல, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி என்பது அத்தனை சாதாரண விஷயமல்ல. அதற்கான மன பலம், உடல்பலம், பொருள் பலம் அவசியம் வேண்டும்.
நமக்கு ஒரு மனைவியுடன் வாழ்க்கை தள்ளுவதற்கே நாக்கு தள்ளுகிறது..!! நம் முதல்வருக்கு 2 மனைவிகள். ஆனால், அவர் முஸ்லீம் இல்லை. அவரை சமுதாயம் ஒதுக்கவில்லை. அவர்களுக்குள் பிரச்சினையும் இல்லை.
எனக்கு ஒரே ஒரு மனைவி தான். என்னால் பலதார மணத்தை என் விஷயத்தில் ஏற்கமுடியாது. ஏனென்றால் அதற்கான காரணகாரியங்கள் எங்கள் இருவருக்கும் இல்லாததால் அதன் அவசியம் இல்லை. அவசியம் உள்ளவர்கள் தீர்விற்காக அதை செய்வதில் தவறில்லை. அது வழிகெட்டு வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைக்காட்டிலும் பல மடங்கு சிறந்தது.
கடைசியாக, பலதார மணத்தின் அவசியத்தை நிர்ணயிப்பவை நம் மதமல்ல. அவற்றை சம்பந்தப்பட்டவர்களின் தேவை, புரிதல், அனுசரித்தல், பகிர்தல் ஆகியவை தான் நிர்ணயிக்கின்றன.
source:http://idhayampesukirathu.blogspot.com/2010/08/07.html