இறவாத மனிதரா ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம்?
மௌலவி,எம்.எஸ்.எம்.இம்தியாஸ் ஸலஃபி
உலகத்திற்கு அனுப்பப்பட்ட நபிமார்களில் ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம்மட்டும் இன்னும் உயிரோடு வாழ்ந்து வருகிறார்கள். கடற்கரையோரத்தில் சுற்றித்திரிகிறார்கள்; கடல் பிரயாணம் செய்பவர்கள் அவரிடம் பாது காப்புத் தேடி அழைப்பு விடுத்தால் உடனே வந்து காப்பாற்றுவார்க ஆண்டு தோறும் ஹஜ் செய்ய வருகிறார்கள்ளூ ஹஜ்ஜாஜிகளுடன் முஸாபஹா செய்கிறார்கள்; எல்லா நபிமார்களையும் சந்தித்திருக்கிறார்கள்; பெரியார்கள் நாதாக்கள், ஷைகு மார்கள் கூட அவரை சந்தித்து ஸலாம் கூறியுள்ளார்கள்..
“ஐனுல் ஹயாத்” என்றொரு நீரூற்று உண்டு. அதில் சிறிதளவேனும் பருகியவர் என்றென்றும் உயிர்வாழ்வார் மரணிக்கமாட்டடார். அதை ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் பருகியுள்ளார்கள். அதனால் ‘சாகாவரம்’ பெற்றுள்ளார்கள் – இவ்வாறு ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம்பற்றி கதை சொல்லப்பட்டு வருவதை பார்க்கிறோம்.வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் இப்படியான ஒரு கதை மிகவும் அழகாக சோடித்து அற்புதமாக பேசப்பட்டது. தரீக்காகாரர்களும் பேசிவருகிறார்கள்.
எனவே ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா?
உலகம் அழியும் வரை உயிர் வாழ்வதற்கு எவரையேனும் அல்லாஹ் விட்டு வைத்திருக்கிறானா?
அல்லாஹ்வுடைய தூதர் இது பற்றி ஏதும் கூறியுள்ளார்களா? என்பதை கவனிப்போம்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம்படைக்கப்பட்ட போது அவர்களுக்கு சுஜுது செய்ய மலக்குகளுக்கும் இப்லீஸ் (ஷைத்தானு)க்கும் அல்லாஹ் கட்டளையிட்ட போது இப்லீஸ் மட்டும் மறுப்புத் தெரிவித்தான். அதனால் அவன் சுவர்க்கத்திலிருந்து பூமிக்கு அனுப்பப்பட்டான் என்ற வரலாறை அல்குர்ஆன் கூறுகிறது.
அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிய ஷைத்தான் பூமிக்கு வரும் முன் அல்லாஹ்விடம் கேட்ட வரம் பற்றி கூறும்போது இறந்தோரை எழுப்பும் நாள் வரையில் நீ எனக்கு அவகாசம் அளிப்பாயாக என்று இப்லீஸ் கேட்டான். நிச்சயமாக நீ (அவ்வாறே) அவகாசம் அளிக்கப்பட்டவனாக இருக்கிறாய் என்று அல்லாஹ் கூறினான். (7:13-15)
மனிதர்களை வழிகெடுப்பதற்கு சாகாவரம் பெற்ற ஒருவனாக ஷைத்தான் இருக்கிறான் என்று குர்ஆன் மிகத் தெளிவாக கூறுகிறது. இறைவனுக்குச் சவாலாக ஷைத்தான் களம் இறங்கியிருப்பதனால் ஆதம் நபி முதல் கியாமத் நாள் வரும் வரை மனிதர்கள் வழிதவறாமல் எச்சரிக்கையாக நடககவேண்டும் என்பதற்காக நபிமார்கள் மூலம் அல்லாஹ் அறிவுரைகளை அனுப்பி வைத்தான்.
மக்களை நல்வழிப்படுத்த வந்த எல்லா நபிமார்களும் முஹம்மது நபியுடைய வருகைக்கு முன் மரணித்துவிட்டார்கள். அதில் ஈஸா அலைஹிஸ்ஸலாம்அவர்கள் மட்டும் உயிரோடு இருக்கிறார்கள். கியாமத் நாளின் அடையாளமாக அவர்கள் இறக்கப்படுவார்கள் என்று குர்ஆன்மற்றும் நபிமொழி கூறுகிறது.
“முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒரு இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன் (வந்த) தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியே திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செயய்வே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (3:144)
உஹத் யுத்தத்தின் போது முஹம்மது நபி வஃபாத்தாகி விட்டார்கள் என்ற வதந்தி பரவியபோது ஸஹாபாக்களுடைய மனோ நிலை வேறுவிதமாக இருந்தது. அப்போது தான் இவ்வசனம் அருளப்பட்டது. அது போல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணிக்கவே மாட்டார் என உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர் களின் வபாத்தின்போது கூறியபோது அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு இந்த வசனத்தை ஓதிக் காட்டி முஹம்மது நபியும் மரணிக்கக் கூடிய வரே என்பதை எடுத்துக் காட்டினார்கள்.
எனவே ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம்நபியாகவோ அல்லது சாலிஹான மனிதராகவோ இருந்தாலும் அவரும் மரணித்து விட்டார் என்றே குர்ஆன் கூறும் சான்று இதோ.
(நபியே!) உமக்கு முன் (வாழ்ந்த) எந்த மனிதருக்கும் நாம் நித்திய வாழ்வை ஏற்படுத்தியதில்லை (21:34) ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம்இதில் விதிவிலக்கல்ல என்பதற்கு மற்றொரு சான்று இது.
“நான் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவருக்கு உதவ வேண்டும் என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து இதனை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்கு கட்டுப்படுகின்றீர்களா? என்று நபிமார்களிடம் அல்லாஹ் கேட்டான். “நாங்கள் உறுதிப்படுத்துகின்றோம் என்று நபிமார்கள் கூறினார்கள். (அல் குர் ஆன் 3:81)
ஒரு நபி பிரசாரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது இன்னுமொரு நபி அனுப்பப்பட்டால் அந்த நபி மற்ற நபிக்கு பக்கபலமாக நின்று உதவ வேண்டும் என்ற உறுதிமொழியில் நபிமார்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாமிய பிரசாரப் பணியை செய்து பல இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகி பல யுத்தங்களை சந்தித்து போராடியபோது ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் உயிருடன் இருந்தால் ஏன் முன்வந்து உதவவில்லை?
நபியவர்களுக்கு பக்கபலமாக நின்று ஏன் துணை புரியவில்லை?
அவர்கள் என்றென்றும் உயிரோடு இருப்பவர் என்றால் அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியை ஏன் நிறைவேற்றவில்லை?
அல்லாஹ்வுடைய கட்டளைக்கு மாற்றமாக ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம்ஓடி ஒழிந்திருப்பார்கள் என நம்பலாமா? குற்றம் சாட்டலாமா?
நிச்சயமாக முடியாது, கூடாது. அவர்கள் உயிரோடு இல்லை. அதனால்தான் முஹம்மது நபியவர்களை சந்திக்கவில்லை. உதவி செய்ய வரவில்லை என்பதே உண்மையாகும்.
சமகாலத்தில் இரு நபிமார்கள் மூன்று நபிமார்கள் பணிபுரிந்துள்ளார்கள். வாழ்ந்துள்ளார்கள் என்று குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம்கல்வி அறிவு கொடுக்கப்பட்ட ஒரு அடியார். அவரிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம்பல விடயங்களை அறிந்து கொண்டார் என்று அல்லாஹ் (18:60-82) கூறுகிறான். ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம்முஹம்மது நபியின் காலத்தில் வாழ்நதிருந்தால் அதனை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டு இருப்பான். அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம்நபியவர்களின் காலத்திலும் உயிரோடு இருக்கவில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
“அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா அலைஹிஸ்ஸலாம்உயிருடன் இருந்தால் என்னைப் பின்பற்றுவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத்)
மேலே கூறப்பட்ட 3:81 வசனத்திற்கு விளக்கமாக இந்த நபிமொழி காணப்படுகிறது. மூஸா நபி உயிருடன் இருந்தால் அவரும் முஹம்மது நபியை ஈமான் கொண்டு முஹம்மது நபியுடைய ஷரீஅத்தை பின்பற்றி துணை நிற்கவேண்டும். ஆனால் மூஸா நபி அன்று உயிருடன் இருக்கவில்லை. ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் உயிரோடு இருந்தால் அவர் கண்டிப்பாக முன் வந்து ஈமான் கொண்டு இந்த ஷரீஅத்திற்கு துணை நின்றிருக்க வேண்டும். அவர்களும் உயிருடன் இருக்கவில்லை என்பதற்கு இதுவும் மிகச் சிறந்த சான்றாகும்.
ஒரு நாள் இஷாத் தொழுகைக்குப் பின் ஸஹாபாக்களை நோக்கி ”இன்று உயிருடன் உள்ள எவரும் இந்த பூமியில் நூறு ஆண்டுகளுக்குப் பின் உயிருடன் இருக்க மாட்டார்கள்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ், நூல்: புகாரி, முஸ்லிம்)
நபியவர்களின் காலத்தில் ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம்உயிருடன் இருந்ததாக வைத்துக் கொண்டாலும் நூறு ஆண்டுகளுக்குப் பின் அவரும் மரணித்தாக வேண்டும். நித்திய உயிர் பெறமுடியாது. எனவே அவர் அன்றும் உயிரோடு இல்லை. இன்றும் உயிரோடு இல்லை இனியும் உயிரோடு இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்று இது.
எனவே ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம்அவர்கள் சாகாவரம் பெற்றவர் என்றும் உயிர் வாழும் மனிதர் என்று கூறுவது வெறும் கற்பனையும் கட்டுக் கதைகளுமே தவிர வேறில்லை.
ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் நித்திய உயிர் பெற்றவர் என்று கதையளப்பவர்கள் தாங்கள் சொல்லும் கதை பொய்யானது என்பதற்கு “வருடம் தோறும் இல்யாஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை சந்தித்து ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம்ஸலாம் சொல்கிறார்” என்று கூறும் செய்தியே போதிய சான்றாகும்.
ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம்அவர்களை நித்திய ஜீவனாக முயன்று கடைசியில் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம்அவர்களையும் நித்திய ஜீவனாக ஆக்கி விட்டார்கள்? பொய்கள் எப்போதும் நிலைத்திருப்பதில்லை என்பதற்கு அவர்களுடைய அற்புத புராண கதைகளே சான்றாகி விட்டது.
ஷைத்தானுக்குக் கொடுக்கப்பட்ட இந்த சாகாவரம் யாருக்கும் எந்த நபிக்கும் கொடுக்கப்படவில்லை. என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.