Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மன்னித்தல் ஓர் மகத்தான செயல்!

Posted on September 27, 2010 by admin

“இனி ஜென்மத்துக்கும் அவனை மன்னிக்க மாட்டேன்.”

“செத்தாலும் சரி, அவன் முகத்தில் முழிக்க மாட்டேன்.”

“நான் செய்திருக்கிற காரியத்திற்கு என்னை நானே மன்னிக்க முடியாது.”

பரிச்சயமிருக்கிறதா? வீட்டுக்கு வீடு பழக்கப்பட்ட டயலாக் இது. மேற்படி வசனங்களில் உள்ள முக்கிய உள்ளர்த்தம் என்ன தெரியுமா? பிறரையோ அல்லது நம்மை நாமோ மன்னிக்க மறுக்கிறோம். மட்டுமல்லாமல்,

“எங்கோ தவறொன்று நிகழ்ந்துவிட்டது. அதை நிவர்த்திக்க வேண்டிய முயற்சி எதுவும் நான் எடுக்க முடியாது. கடந்த காலத்திலேயே வாழ்வேன். நடந்த தவறுக்கு யாரையாவது பழி சுமத்திக் கொண்டே இருப்பேன். அல்லது என்னை நானே பழித்துக் கொள்வேன்.”

இதுதான் மன்னிக்க மறுப்பதன் உண்மை. நம்மில் பலர் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மன்னிக்க மறுப்பதன் மூலம் பிறரையோ நம்மையோ ஒரு குற்ற உணர்வுடனேயே வைத்துக் கொள்கிறோம். மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் அது நமக்கு வசதியாக சொகுசாக இருக்கிறது. ஆனால் அது நாளுக்குநாள் நமக்கு அதிகப்படியான மனவேதனையை அளித்து – சுமந்து திரிகிறோம்.

இதில் மற்றொரு சிக்கலான வேடிக்கை ஒன்று உள்ளது.

தன் சகலையின் மனைவியினுடைய சகோதரியின் அப்பாவை தன்னால் மன்னிக்க முடியாதென்றால் அது தன்னுடைய பிரச்சனையல்ல, அது தன் சகலையின் மனைவியினுடைய சகோதரியின் அப்பாவின் பிரச்சனை எனும்படியான எண்ணம் சிலருக்கு உண்டு. உங்களுக்கும் உங்கள் மாமனார் மீது அப்படியொரு எண்ணம் உள்ளது என்றால் – மன்னிக்கவும். அது அவருடைய பிரச்சனையல்ல, உங்களுடைய பிரச்சனை!

“என்ன ஸார் இப்படிச் சொல்றீங்க? அவர் எத்தகைய அல்ப ஆசாமி தெரியுமா?” என்று அவர் உங்களுக்குச் சீர் அளித்த பைக்கிற்கு ஹெல்மெட் வாங்கித் தரவில்லை என்று உடனே என்னிடம் மல்லுக்கட்ட வரவேண்டாம்.

யோசித்துப் பாருங்கள்.

நீங்கள் அவரை மன்னிக்க மறுப்பதால் மனவேதனை அடைவது யார்? முதல் ஆளாக நீங்கள்தான். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நிகழ்வது என்ன தெரியுமா? நாம் யாரிடம் கோபம் கொண்டு மன்னிக்க மறுத்துக் கொண்டிருக்கிறோமோ அவர் அதை உணராவதராகவே இருப்பார். அதனால் அவர் தன்னளவில் “சோற்றைத் தின்றோமா, டிவியில் ஸீரியலைப் பார்த்தோமா” என்று சுகமாக வாழ்ந்து கொண்டிருக்க, மனதில் கிடந்து மாய்வது நீங்களாகத்தான் இருக்கும். 

உங்கள் அத்தையின் மைத்துனர் மாடியில் புதிதாய் அறையொன்று கட்டி, அதற்காக ஒரு புதுமனை புகுவிழா நடத்தி, உங்களைக் கூப்பிட மறந்துவிட்டார். “எத்தகைய அவமதிப்பு? மனுஷரா அவர்? அவரை மன்னிக்கவே முடியாது,” என்று நீங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் பாதிப்பு யாருக்கு? அவருக்குத் தூக்கம் தொலையப் போகிறதா, வயிற்றைப் புரட்டப் போகிறதா, வாயில் கசப்புணர்வு ஏற்படப் போகிறதா? ம்ஹும். அவையனைத்தும் உங்களுக்குத்தான் நிகழ்ந்து கொண்டிருக்கும்.

உங்களுக்கு நீங்கள் முக்கியம், உங்கள் ஆரோக்கியம் முக்கியம், உங்கள் மன மகிழ்வு முக்கியமென்றால், அவரை மன்னிக்க வேண்டும். ஏன்? அவருக்காக அல்ல. உங்களுக்காக. ஒருவரின் உடல் நலக்குறைவிற்கு அவரது பிழை பொறுக்கா மனமும் ஒரு முக்கியக் காரணமாய் அமையும்.

பொதுவாய்ப் பிறருடைய குற்றங்குறைகளைப் பெரிதுபடுத்தி, உங்களுடைய மன வேதனைக்கு அவரைக் குற்றவாளியாக்க நீங்கள் விரும்பினால் என்னவாகிறது தெரியுமா?

நீங்கள் உங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறீர்கள் என்றாகிறது.

பிறரைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பது நிலைமையை மோசமாக்குவதைவிட என்ன பலனைத் தரும்? மாறாய்க் குறை சொல்வதை நிறுத்திக் கொண்டால் மட்டுமே மேற்கொண்டு ஏதாவது செய்து நிலைமையைச் சீராக்க இயலும். அதனால் பிறரைக் குறை சொல்லிக் கொண்டிருப்பது – பிரச்சனைகள் எதையும் தீர்க்க விரும்பாமல் தீர்ப்பதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்க விரும்பாமல் இருக்க உதவும் கெட்ட போதை வஸ்து ஆகும்..

இதைப் படித்துவிட்டு, “என் உறவிலேயும் மன்னிக்க முடியாத சில சமாச்சாரம் நடந்து விட்டது. இங்கு எழுதியுள்ளது புரிவதைப்போல் தெரிகிறது. சரி ஸார். போகட்டும் மன்னித்து விடுகிறேன், ஆனால் ஒனறு, நடந்ததை என்னால் மறப்பது என்பது மட்டும் முடியாது,” என்று தஞ்சையிலிருந்து பாபு  மின்னஞ்சல் அனுப்பலாம்.

பாபு என்ன சொல்கிறாரென்றால், “நான் கொஞ்சூண்டு மன்னித்துவிடுகிறேன்; மிச்சத்தை மனதில் ஓரமாய் வைத்துக் கொள்கிறேன்; பின்னர் ஏதாவது சந்தர்ப்பத்தில் சொல்லிக்காட்ட அவை தேவைப்படும்.”

மன்னிக்கவும் பாபு. உண்மையாய் மன்னிப்பதென்பது நம் அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வதுவே! “மன்னிப்போம், மறப்போம்.” அவர்களுக்கு எப்படியோ இதில் நமக்கு உண்மை இருக்கிறது. மன்னிப்பதென்பது பழையதை மறப்பதுமாகும். அதுவே மேன்மை.

யாரிடம் தவறில்லை? நாமெல்லாம் வாழ்க்கையை எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

கற்றது, பெற்றது என்றதன் அடிப்படையில் தெரிந்து கொண்ட அளவு சிலாக்கியமாய் வாழ முயன்று கொண்டிருக்கிறோம்.

அப்படி வாழும் வாழ்க்கையில் பல தவறுகள் இழைக்கிறோம்; தவறான தகவல்களின் அடிப்படையில் சில காரியங்கள் ஆற்றுகிறோம்,

சில சமயம் முட்டாள்த்தனமான காரியங்கள் செய்கிறோம்.

யோசித்துப் பார்த்தால் அவையனைத்தையும் நாம் உணர்ந்தே செய்திருக்கப் போவதில்லை.

நம் வாழ்க்கை சிறப்பாய் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செய்திருப்போம்.

கண்ணைத் திறந்து கொண்டே மலையிலிருந்து கிழே குதிப்போமா என்ன?

பிறந்த குழந்தை கண்ணைத் திறந்த நொடியிலேயே, “இதோ பூமிக்கு வந்துவிட்டேன். நான் முடிந்தளவு எனது வாழ்க்கையைச் சொதப்பிக் கொள்ளப் போகிறேன்” என்று தீர்மானம செய்து கொண்டு பிறப்பதுமில்லை; வளர்வதுமில்லை. அந்தந்தத் தருணங்களில் நமக்குள்ள மன முதிர்ச்சியினாலேயே வாழ்வில் சில தவறுகள் நிகழ்ந்திருக்கும்.

ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் கற்றுக் கொண்டது, வீட்டில் பெரியவர்கள் சொன்னது, மருத்துவர்கள் உபதேசித்தது என்ற தகவல்களின் அடிப்படையில் தம் குழந்தைகளை வளர்க்கிறார்கள். நாம் வளர்ந்த பிறகு நமக்குப் பிடித்தவகையில் நம்மைப் பெற்றவர்கள் வளர்க்கவில்லை என்று கோபித்துக் கொள்ள முடியுமா? அதற்காகப் பெற்றவர்களை மன்னிக்கவே முடியாது என்று தீர்மானித்துக் கொண்டு, “உங்கள் வளர்ப்பு சரியில்லை என்பதை உலகத்துக்கு நிரூபித்துக் காட்டுகிறேன் பார்,” என்று தறுதலையாக, கிரிமினலாக வாழ்ந்தால் என்னாவது?

புரிந்து கொள்ளவேண்டியது என்ன? பிறரைக் குறை சொல்வதென்பது பிரச்சனையைத் தீர்க்காது. ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் அது நடந்து முடிந்துவிட்டது. சரி அடுத்து ஆகவேண்டிய நல்லதைப் பார்ப்போம் என்று நகர வேண்டும். தீர்ந்தது விஷயம்.

மனதிற்குள் அதையே அரைத்துக் கொண்டிருந்தால் நோய் தான் மிஞ்சும்.

அதெல்லாம் இருக்கட்டும்; என் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக மற்றவர் எனக்கிழைத்த அநீதியை, அக்கிரமத்தை, அட்டூழியத்தை நான ஏன் மன்னிக்க வேண்டும்? என்று கேள்வி எழலாம். நடந்த அநீதி, அக்கிரமம், அட்டூழியம் என்பதெல்லாம் கிரிமினல் விஷயங்களாக இருந்தால் அது வேறு கதை. நீங்கள் வக்கீல் வீடடிற்கு அவருடைய ஊதியத்தை பையில் எடுத்துக் கொண்டுபோய்ப் பேச வேண்டி/யிருக்கும்/ய விஷயங்கள். நாம் இங்கு சொல்ல வருவது வேறு.

சமூக வாழ்வில் மன்னிப்பு என்பது அற்புதமான செயல். நீங்கள் ஒருவரை உள்ளார்ந்து மன்னிக்க முற்பட்டுவிட்டால் உங்களிடம் ஒரு மாற்றம் ஏற்படும். மாற்றம் ஒரு தொற்று வியாதி. உலகளவில் பாடாவதி ஸ்டைலுக்கும் ஆபாச ஆடையலங்காரத்திற்கும் அது ஒரு காரணி. இங்கு உங்கள் மாற்றம் நல்ல வைரஸ்.

மன்னிப்பு மனதில் தோன்றியதுமே உங்கள் ஆத்திரம் தணிகிறது. உங்களிடம் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. நீங்கள் உங்கள் எதிராளியிடமும் உங்களுடைய நடவடிக்கையை மாற்றிக் கொள்கிறீர்கள். அடுத்து அவரும் அதைப் போல் உங்களிடம் அவர் அறியாமலேயே இயல்பாய் மாற ஆரம்பிப்பார். நாம் ஒரு விஷயத்தை ஆரோக்கியமான கண்ணோட்டத்தில் அணுக முயற்சி எடுத்துவிட்டாலே போதும், மற்றவர்கள் நம்முடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மாறுவதைக் காணலாம்.

இதுவரை கண்டது பிறர் நமக்கிழைத்த தவறுக்கு அவர்களை மன்னிப்பது.

நாம் நம்முடைய தவறுக்கு நம்மை வருத்திக் கொள்வதும் நடக்கும். எனவே நம்மை நாமே மன்னிப்பதும் முக்கியம். நம்மை நாமே எப்படி வருத்திக் கொள்கிறோம்?

நம்முள் சிலர் சுயபச்சாதாபத்தில் தங்களுடைய தவறுக்குத் தம்மையே தண்டித்துக் கொள்வதாகக் கருதித் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தம் மனதை வருத்தி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பார்கள். அத்தகைய நடவடிக்கை சிறிதாகவும் இருக்கலாம்; பெரிதாகவும் இருக்கலாம்.

0 சிலர் தின்று கொழுத்து உடலைக் கெடுத்துக் கொள்வார்கள்.

0 சிலர் திண்ணாமல் உடல் வருத்தி மெலிவார்கள்.

0 சிலருக்கு மொடாக் குடி.

0 சிலர் திட்டமிட்டுத் தங்களது உறவைத் துண்டித்துக் கொள்வார்கள்

0 சிலருக்கு வறுமையில் கிடந்து மடிவோம் என்று சங்கல்பம்

0 சிலருக்கு ஆரோக்கியத்தை அழித்துக் கொள்வது என்று ஆனந்தம்

இதற்கெல்லாம் அவர்களுடைய ஆழ்மனதில் ஒரு காரணம் ஒளிந்து கொண்டிருக்கும். “நான் படு கேவலமானவன்,” “நான் மோசமானவன்,” “நான் ஆரோக்கியமாய், மகிழ்வாய் வாழ லாயக்கற்றவன்.”

உலகில் பல வியாதியஸ்தர்களுக்கு “தாங்கள் ஆரோக்கியமாய் வாழ அருகதையில்லை” என்ற குற்ற உணர்வு உள்ளது என்று புள்ளிவிவரம் கூறுகிறதாம்.

நீங்கள் உங்களையே குற்றம் சொல்லி, மன மகிழ்வைத் தொலைத்து விடுவதால் என்ன பயன்? மேலும் ஓரிரு வருடங்களுக்கு உங்கள் குறைகளையே நினைத்து நீங்கள் அழுது கொண்டிருந்தால் எல்லாம் சரியாகி விடுமா? அப்படிப் பார்த்தால் ஓட்டு போட்ட குற்றத்திற்காகவே அவரவரும் அழுது மாய வேண்டியதுதான்.

முதலில் நீங்கள் உங்களை மன்னித்து, நல்லதொரு குப்பைத் தொட்டியாய்ப் பார்த்து உங்களின் குற்ற உணர்வைத் தூக்கி எறிந்து விடவேண்டியது தான். அது அவ்வளவு எளிதன்று என்று நீங்கள் சொல்லலாம். ஸார் இது உங்கள் வாழ்க்கை. அதற்காகச் சற்று கடின முயற்சி எடுப்பதில் தப்பே இல்லை.

மனைவி, கணவன், மாமனார், மாமியார், எதிர்வீட்டுக்காரர், பால்காரர், வானிலை அறிக்கை வாசிப்பவர் என்று ஒவ்வொருவரையும் குற்றம் சொல்லிக் கொண்டேயிருந்தால் அது பிரச்சனையை எவ்விதத்திலும் தீர்க்க உதவாது. வராத மழைக்காகக் குடை எடுத்துக் கொண்டு செல்ல நேர்ந்திருந்தாலும் பிறருடைய நக்கல் சிரிப்பை உதாசீனப்படுத்திவிட்டு வானிலை அதிகாரியை மன்னித்து விடுங்கள்.

postee by: Novshath, G-Tex, Dammam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

90 − 87 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb