காஷ்மீர் ஆப்பிள்! சொல்லும்போதே சுவையாக இருக்கிறதல்லவா! ஆப்பிள் பழம் எல்லாத் தரப்பு மக்களாலும் விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமான விருந்துகளிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் உணவாகப் பயன்படுகிறது.
மருத்துவத்தில் இதன் உபயோகம் அதிகரித்துள்ளது. ஆப்பிள் பழம் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஆப்பிள் எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கிறது. எல்லா ஊர்களிலும் வாங்க முடிகிறது.
பொதுவாகவே பழவகைகளில் ஆப்பிள் உயர்ந்த பழம். நல்ல பலத்தை தரும். அதிக இரத்தம் விருத்தியாகும். பழவகைகளில் முக்கியமானது ஆப்பிள். ஸ்காண்டிநேவியர்கள் ஆப்பிளை, இறைவனின் உணவு என்கின்றனர்.
ஆப்பிளில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. ஆப்பிள் சதைப்பற்றுள்ள பழம். 80 சதவிகிதம் தண்ணீர், குறைந்த கலோரிகள் கொண்டது. இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துகளும், பாஸ்பரஸ், கால்ஷியம், இரும்பு, ப்ரக்டோஸ், சுக்ரோஸ் முதலான சர்க்கரை, மாவுச்சத்து, நார்ச்சத்து முதலானவை அடங்கியுள்ளன.
சுமார் 12 மீட்டர் உயரம் வரை வளரும். முட்டை அல்லது நீள்வட்ட வடிவமான இலைகள் அடிப்பகுதி அகன்று மேற்புறம் மழமழப்பாக இருக்கும். இலை விளிம்புகள் இரம்பம் போலிருக்கும். இலைகள் பச்சை, மஞ்சள் அல்லது சிவப்பு இந்த நிறங்கள் அனைத்தின் சாயலும் கொண்டதாக இருக்கும். இதன் மலர்கள் ஊதா அல்லது வெள்ளை நிறத்தில் பெரிய கொத்தாகப் பூக்கும். மலர்கள் மிகுந்த நறுமணம் உடையவை.
ஆப்பிளை பழமாக, சாறாக, ஜெல்லியாக, சர்பத்தாக உண்ணலாம். சரிவிகித சத்துணவில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆப்பிள் பழத்தைக் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்திகரிக்கப்படும். இரத்த சோகை குணமாகும். ஜலதோசம், மூச்சு சம்பந்தமான வியாதிகள், சருமநோய்கள், வயிறு சம்பந்தமான நோய்கள் முதலியன அவ்வளவமாகப் பாதிப்பதில்லை. சருமம், முகம் முதலியன பளபளக்கும்.
ஆப்பிள் பழத்திலுள்ள வைட்டமின் B1 உயிர்ச்சத்து உடலுக்குப் பல நன்மைகளை செய்யக் கூடியதாக இருக்கிறது. தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் சீதளத்தை உண்டு பண்ணும். பழத்திலுள்ள B1 உயிர்ச்சத்து இதயத்திற்கு நல்ல பலத்தைத் தரும். மனசந்தோஷத்தை உண்டு பண்ணும். மனோதைரியம் உண்டாக்கும். உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்கச் செய்யும். மலச்சிக்கலை நீக்கும். இரைப்பையிலிருந்து மலக்குடல் வரை நல்ல பலத்தைக் கொடுக்கும்.
ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன. ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயனக் கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாகச் செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்புசத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. இரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.
தேவையற்ற கொழுப்புச் சத்து குறைக்கப்பட்டு HDL அதிகரிக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது. அதிக இரத்தப் போக்கைத் தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்தச் சர்க்கரை குறைய உதவுகிறது. சோடியம் உடம்புக்குப் பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.
ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள். சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது. குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்குப் பேதி கண்டால் ஆப்பிள் பழத்தை வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு இன்ஷா அல்லாஹ் குணமாகும். வலிப்பு நோய் உள்ளவர்கள ஆப்பிள் பழச்சாறு 60 மி.லி, அத்திப் பழச்சாறு 60 மி.லி கலந்து தினசரி இரண்டு வேளை கொடுத்து வந்தால் மூன்று தினங்களில் வலிப்பின் தீவிரம் இன்ஷா அல்லாஹ் குறைந்துவிடும்.
மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிடும் பலக்கத்தைக் கொண்டுள்ளதால் தேவையான சக்தியைப் பெறுகிறார்கள். இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் பழம் மட்டும் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.
தூக்கத்தில் எழுந்து நடக்கும் இயல்புடையவர்கள் குணமடைய, இரவில் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தண்ணீரில் போட்டு வைத்திருந்து அதிகாலையில் இதன் சாற்றைப் பிழிந்து கொடுத்துவந்தால் தூக்கத்தில் எழுந்து நடக்கும் ஆபத்தான நிலையில் இருந்து, ஆச்சரியப்படும்படியான நிவாரணத்தைப் இன்ஷா அல்லாஹ் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும். சரியான உடல் வளர்ச்சியும், சதைப் பிடிப்பும் இல்லாதவர்களும் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஒல்லியான உடல் சீராகப் பருமன் அடைவார்கள்.
குடற் கிருமிகள் வெளியேற ஆப்பிள் பழத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் குடற் கிருமிகள் இன்ஷா அல்லாஹ் அழிந்துவிடும்.
திருமண வயதை எட்டிய நிலையில் உள்ள ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இந்திரியச் சுரப்பு கூடும்.
உடம்பில் சிலருக்கு கெட்டவாடை வரும்; வியர்வை நாற்றம் அடிக்கும். இப்படி உள்ளவர்கள் விலை உயர்ந்த வாசனையுள்ள செண்ட்டுகளையும், பவுடர்களையும் பயன்படுத்துவார்கள். இவர்களின் இரத்தம் சுத்தியடையவும், கெட்ட வாடைகள் இல்லாமல் இருக்கவும், தினசரி இரண்டு ஆப்பிள் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும். உடலில் நல்ல மணம் இயற்கையாக உண்டாகும்.
ஆப்பிள் பழச்சாற்றைத் தேவைக்கு ஏற்ப தயாரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் பாகு பதம் வரும். இந்தப் பாகை எடுத்து வைத்துக்கொண்டு காலை, மாலை, இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வந்து, வயதுக்கு ஏற்ற அளவில் செயல்படும். இதய நோயாளிகளும், மூளையின் போஷாக்கு தேவைப்படுபவர்களும் இம்முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல பலனைக் கொடுக்கும். குதிகால் வாதம் உள்ளவர்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் குதிகால் வாதம் இன்ஷா அல்லாஹ் படிப்படியாகக் குறைந்து குணமாகும்.
சிறிது காலம் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து இன்ஷா அல்லாஹ் பூரண குணம் ஏற்படும். தேவையான அளவு ஆப்பிள் பழத்தை எடுத்து இட்லி வேகவைப்பதுபோல் நீராவியில் வேக வைத்து எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேன் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மூளைக்கு சக்தியளிக்கும். மூளையில் சோர்வு இருக்காது. பல், ஈறுகள் கெட்டிப்படும். நரம்பு பலவீனம் நிவர்த்தியாகும். உடம்புக்குத் தேவையான முழு போஷாக்கையும் கொடுக்கும்.
போதைக்கு அடிமையானவர்களுக்கு நோய் நிவாரணம் :
நாம் அன்றாடம் உணவை உட்கொள்ளும் பொழுது சில நேரங்களில் அஜீரணம் காரணமாக புளித்த ஏப்பம், வயிறு ஊதல், மலச்சிக்கல் போன்ற பல தொல்லைகள் உண்டாகும். இந்த தொல்லைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மருந்துகளையும், செரிமான டானிக்குகளையும் உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலானோர் உண்ணும் உணவை செரிப்பதற்கும், போதைக்கும் குறைந்தளவு மதுவை அருந்துவதுண்டு. இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பிக்கும் மதுபோதை பழக்கம் நாட்கள் செல்லச் செல்ல கடும் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புக்கு ஆளாகின்றனர்.
இது போன்ற மது போதை அடிமைகளை மீட்கவும், அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே.
பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த அப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய அப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங் களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.
விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து அப்பிளை சாப்பிட்டு வர மது அருந்தும் எண்ணம் கட்டுப்படும். தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது.
வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.
ஆப்பிள் ஜூஸ்:
ஆப்பிள் பழம் ஒன்றைத் துண்டித்து எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட் 500 கிராம் சேர்த்துக் கொள்ளவேண்டும். பனங்கற்கண்டும் தேவையான அளவில் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து மிக்சியில் அடித்து தினசரி சாப்பிட்டுவந்தால் இயற்கையான தாதுபலத்தைத் தரும். இதய நோய் பாதிப்பு வராமல் செய்துவிடலாம். புற்றுநோய் வராமல தடுக்கும். குறிப்பாக குடற்புற்று, ஆசனப்புற்றைத் தடுப்பதில் முக்கியமானது. உடம்பு செல்கள் புதுப்பிக்கப்படுகிறது. இளமை நீடிக்க உதவுகிறது.
ஆப்பிள் மரப்பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். இதை நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இப்பூக்களை வாங்கி சுத்தம் செய்து, இதற்குச் சமமாய்ச் சர்க்கரைச் சேர்த்து நன்கு கலவை செய்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைத்து துணியால் வேடுகட்டி ஒரு மண்டலம் வெய்யிலில் வைத்து எடுத்துக் கொண்டு தினசரி 10 கிராம் அளவில் சாப்பிட்டுவந்தால் ஆண்மைக் கோளாறுகள் நீங்கி ஆண் தன்மை அதிகரிக்கும். இதயம் பலப்படும். மூளைக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.