கணவனிருந்தும் விதவைகளாக!
முஸ்லிம்(?) ஜமாஅத்களின் விந்தைகள்!
நமது நாட்டில் ஒரு பெண் ஒருவனைத் திருமணம் செய்து, புகுந்த வீட்டிற்கு வருகிறாளென்றால் அந்தப் பெண் மட்டும் அவனுக்கு அடிமையல்ல! அந்தப் பெண்ணின் வீட்டார்கள் அத்தனை பேர்களும் கணவனுக்கும் அவனது வீட்டாருக்கும் அடிமையாய் இருக்கிறார்கள். அவனுடைய வீட்டிலுள்ளவர்கள் எல்லோருக்குமே அடிமை சாஸனம் எழுதிக் கொடுத்தவர்கள் போல் செயல் படவேண்டும் என்ற நிலை உள்ளது.
ஒரு பெண் ஒருவனைத் திருமணம் செய்வதென்பது, ஒரு முள் மரத்தில் அழகான சேலையைப் போடுவதைப் போலத் தான். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு, பெண் வீட்டுக்காரர்கள் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களைப் பற்றி சொல்லும் போது, “என்ன செய்வது? விடுங்க! நாம பெண்ணு வீட்டுக்காரங்க! கொஞ்சம் விட்டுக் கொடுத்துத் தான் போக வேண்டும். முள்ளில் சேலையைப் போட்டாச்சு! என்ன செய்றது? பாத்துத் தான் எடுக்கணும்” என்று சலிப்புடன் கூறுவர்.
மனைவி என்பவள் கணவனுக்கு அடிமையாகி விடுகிறாளென்பதற்கு அடையாளம் தான் அவளுக்கு அவன் கட்டுகிற தாலி அல்லது கருக மணி! அவளது குடும்பமே கணவனுக்கு அடிமை என்பதற்கு அடையாள முத்திரையாக, திருமண நாளன்று பெண்ணுடைய சகோதரன் மாப்பிள்ளையின் கால்களை ஒரு செம்புத் தண்ணீரால் குனிந்து கழுவி விடுவான்.
குனிந்து கழுவிக் கொண்டு அடிமைப் பட்டிருக்கும் அந்தப் பெண்ணின் சகோதரனிடம், “நீ மட்டுமல்ல! உன் குடும்பத்தினர் எல்லோருமே இனி எனக்கு அடிமை தான். அதற்கு ஒப்புதல் முத்திரை தான் இந்தத் தங்க மோதிரம்” என்று மாப்பிள்ளை போடுவார். இந்த அடிமைத் தனத்தை முக மலர்ச்சியுடன் ஏற்று அந்தப் பெண் வீட்டார்கள் மாப்பிள்ளையை வரவேற்று உள்ளே கூட்டிச் செல்வார்கள்.
அந்த வட்டாரத்துக்காரர்ககளும் ஊர் பெரியவர்களும் ஆலிம் பெருந்தகைகளும் மாப்பிள்ளையுடன் சென்று அந்த அடிமைத்தனத்திற்கு அங்கீகாரம் தந்து விடுகிறார்கள். இது தான் அந்த நிகழ்ச்சியின் தத்துவம்.
ஒரு பிரச்சனை என்றால் மாமியார் மட்டுமல்ல! வீட்டிலுள்ள பெருசுகள் முதல் சிறுசுகள் வரை, குஞ்சிலிருந்து குருனா வரை அவளுக்கு எதிராக ஒன்று திரண்டு விடுவார்கள். இவள் ஏற்றுக் கொண்ட மாப்பிள்ளையும் ஒரு மாதிரியாக அமைந்து விட்டால் நரகம் தான். ஒன்று அப்பெண் தானாகவே தற்கொலை செய்து கொள்வாள். அல்லது அவர்களே கொன்று விடுவார்கள். இப்படித்தான் பல ஊர்களில் நடக்கிறது
இப்படி நடப்பது கொஞ்சமென்றால் இது போன்ற பிரச்சனையில் தாங்க முடியாமல் அந்தப் பெண்ணே தாய் வீட்டிற்கு வந்து விடும். அல்லது அந்தக் குடும்பத்தினரோ அல்லது கணவனோ அவளைத் தாய் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். இப்படிப்பட்ட பஞ்சாயத்துத்துகள் தான் இப்போது அதிகம் நடக்கிறது.
கணவனிருந்தும் விதவைகள் முஸ்லிம் (?) ஜமாஅத்களின் விந்தைகள்!
இப்படி எத்தனை பெண்கள் தங்களுடைய தாய் வீட்டில் குழந்தைகளோடு சிரமப்பட்டு, கண்ணீரும் கம்பலையுமாக கணவர்கள் இருந்தும் விதவைகளாக காலந் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
இதைப் பற்றி எந்த ஆலிம் பெருந்தகைகள் கவலைப் படுகிறார்கள்? இதைப் பற்றி எத்தனை மவ்லானாக்கள் உபதேசம் புரிகிறார்கள்? இதற்கு அவர்கள் அல்லாஹ்விடம் என்ன பதில் கூறப் போகிறார்கள்?
இந்த அவலத்தை சுன்னத் வல் ஜமாஅத் பெரியவர்கள், ஆலிம்கள் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. கல்யாண மற்றும் சுன்னத் விருந்தா? உடனே போய் கலந்து கொண்டு அல் ஃபாதிஹா போட ஓடும் பெருங் கூட்டம் இதுபோன்ற பஞ்சாயத்தென்றால் பிடிக்கிறது ஓட்டம். என்ன செய்வது? இது தான் மிக வேதனை! நமக்கு வந்த சோதனை!
ஒவ்வொரு முஸ்லிமும் ஏக இறைவனை மட்டும் ஈமான் கொண்டு நம்பிடவில்லை. அல்லாஹ்வை நம்புவதுடன் மறுமை நாளையும் சேர்த்து உறுதியாக நம்பி வாழ்பவனே உண்மையான முஸ்லிம்.
இஸ்லாத்தின் தனித் தன்மையே ஏக இறைவனையும் இறுதி நாளையும் நம்புவதாகும். இந்த நம்பிக்கை எந்த அளவுக்கு ஆழமாக மனதில் பதிந்துள்ளதோ அந்த அளவுக்கு இறையச்சம் மிகுந்து தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகும் வாய்ப்பு உண்டு.
அதனாலேயே குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இவற்றை நம்ப வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லப்பட்டுள்ளது. மறுமை நாளை நம்பியவர்கள் தான் அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் விலகி இருப்பார்கள். இதனால் தான் தடுக்கப்பட்ட சில விஷயங்களை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும் போது அல்லாஹ்வை நம்புவதோடு அவர்கள் மறுமை நாளையும் நம்பக் கூடியவர்களாக இருந்தால் என்று நிபந்தனை வைக்கிறான்.
”அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை”. (அல்குர்ஆன் 2:228)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கூட மறுமை நாளை முன் வைத்து பல கட்டளைகளை இட்டுள்ளார்கள்.
இவர்கள் இறுதி நாளை நம்பியவர்களா?
இன்று முஸ்லிம்கள் பெரும்பாலும் மறுமை நாளை நம்பியிருந்தாலும் அதற்குப் பயந்து இவ்வுலகில் நடப்பதில்லை. மறுமையை நம்பாதவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதே போன்று இவர்களும் நடக்கிறார்கள். இதன் விளைவாக அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்து விடுகிறார்கள். மனிதனுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமைகளை முறையாகச் செய்வதில்லை.
இவ்வாறு இவர்கள் செய்யும் குற்றங்களில் ஒன்று தான் மனைவியைத் துன்புறுத்தி அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முறையாக நிறைவேற்றாமல் இருப்பது. எத்தனையோ கண்வன்மார்கள் தன்னை நம்பி வந்த பெண்ணை அனுபவித்து விட்டு அவளுடைய கையில் ஒரு குழந்தையைக் கொடுத்து விடுவதுடன் அவளிடம் சண்டையிட்டு அவளை அவளுடைய தாய் வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள்.
இதன் பின்பு அவர்கள் அப்பெண்ணுடைய நிலையையும் அக்குழந்தையின் நிலையையும் எண்ணிப் பார்ப்பதில்லை. யாரோ, எவரோ என்று கண்டும் காணமால் இருந்து விடுகிறார்கள். இவ்வாறு பிரச்சனைகள் ஏற்படும் போது மார்க்கம் கூறும் வழிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை.
நாங்கள் உண்மை முஸ்லிம்கள் அல்லாஹ்வையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் நேசிக்கும் உண்மை விசுவாசிகள் என மார் தட்டிக் கொள்ளும் பல முஸ்லிம்கள் பெண்களுக்கு எதிரான பலவிதமான கொடுமைகளைப் புரிவதோடு அவற்றுக்குத் துணை போவதைப் பார்க்கும் போது நெஞ்சு பொறுக்கவில்லை. அந்த அளவுக்குக் கொடிய கொடுமை கொடி கட்டிப் பறக்கிறது. இதையெல்லாம் கவனிக்கும் போது இவர்கள் இறைவனையும் இறுதி நாளையும் நம்பியவர்களா? என சந்தேகப்பட வேண்டி உள்ளது. அந்த அளவுக்குக் கொடுமைகள் புரிகிறார்கள்.
பெண்ணுக்கு மட்டுமல்ல! பெண்ணைப் பெற்றவர்களுக்கும் அவர்கள் மண்டை ஒட்டை மண்ணில் கொண்டு வைக்கும் வரை பிரச்சனை ஒய்ந்த பாடில்லாமல். நீண்டு கொண்டே செல்கிறது
இருண்ட காலமான அய்யாமுல் ஜாஹிலிய்யா காலத்தில் பெண்கள் கீழ்த் தரமாகவும் இழிவாகவும் நடத்தப் பட்டார்கள். இஸ்லாம் வந்து அவற்றைத் தகர்த்து தரை மட்டமாக்கி பெண்களுக்குரிய உயர்வுகளையும் உரிமைகளையும் கொடுத்து உலகை வியக்கச் செய்தது. பெண்ணுலகை விழிக்கச் செய்தது.
ஆனால் இன்று பெரும்பாலான முஸ்லிம்கள் தலை கீழாக மாறி அறியாமைக் கால பழக்க வழக்கத்தையும் மிஞ்சும் வகையில் அதற்கும் மேலாக, மிக மோசமான நிலைக்குச் சென்று விட்டார்கள். ஜாஹிலிய்யா (அறியாமை)க்காரர்கள் கூட பிறந்த குழந்தைகளை புதைக்கின்ற கெடுமையைத் தான் செய்தார்கள். ஆனால் இவர்கள் அதை விடக் கொடிய காரியத்தையல்லவா செய்கிறார்கள். அது என்ன கொடிய கொடுமை? அதுதான் மனித சமூக வைரஸ் வரதட்சணை வன்கொடுமை.
மற்ற மாபாதகச் செயல்கள் அந்த அறியாமைக் கால மக்களிடம் மலிந்திருந்தாலும் பெண் சமுதாயத்தை சீரழிக்கின்ற சமூகக் கொடுமையாகிய வரதட்சணைக் கொடுமையை அவர்கள் செய்திடவில்லை. அவர்கள் கூட செய்யாத இந்த வரதட்சணை வன் கொடுமையை இஸ்லாமிய பெயர் தாங்கிகளான ஜமாஅத் பெரியவர்களும், வரதட்சணையின் தீமையை பிற மக்களிடம் முறையாகப் போதிக்கக் கடமைப்பட்டுள்ள மார்க்கமறிந்த ஆலிம்களும் சேர்ந்து இந்தக் கொடுமையை அரங்கேற்றுவது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
இப்படிப்பட்ட ஆலிம்களும் சமூகப் பெரியோர்களும் பெண்களுக்கு எதிராக நடக்கும் உரிமை மீறல்களுக்கும், அக்கிரமங்களுக்கும் எதிராக எப்படி குரல் கொடுப்பார்கள்? குரல் கொடுப்பவர்களையும் குரல் கொடுக்கத் தூண்டுபவர்களையும் தடுப்பதில் திறம்பட செயல் படுகிறார்களே தவிர பெண்களுக்கு ஒரு போதும் நியாயத்தைப் பெற்றுத் தர மாட்டார்கள்.
இஸ்லாம் நமக்கு கிடைத்த அரியதோர் பொக்கிஷமாகவும் மாபெரும் பாக்கியமாகவும் உள்ளது. இப்படிப்பட்ட இந்த இஸ்லாத்தை கடைப்பிடிக்காமல் இருந்ததற்கு அவர்கள் எல்லோரும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே தீரவேண்டும்.
திருமணமென்பது வெறும் மகிழ்ச்சியும் குதூகலமும் மட்டுமன்று. மாறாக அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பாசப் பிணைப்பையும் கணவனுடைய தேவையை மனைவி நிவர்த்தி செய்வதும் மனைவியுடைய தேவையை கணவன் நிவர்த்தி செய்வதுமாகும். பெண்ணுடைய நலத்திற்கு முழுவதுமாக கணவன் பொறுப்பேற்றுக் கொள்ளும் ஒரு உறுதியான ஒப்பந்தமாகும். இதை அவன் அல்லாஹ் முன்னாலும் அவையோர் முன்னாலும் ஒப்புக் கொண்டேன் என்று கூறி கொடுக்கும் ஓர் உறுதிமொழியாகும். இதைக் கீழ் வரும் குர்ஆன் வசனம் நமக்கு விளக்கிச் சொல்கிறது;
”உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?” (அல் குர்ஆன் 4:21)
சிறிய விஷயத்திற்காகவெல்லாம் சண்டை போடாமல் பெண்ணிடத்தில் குறைகள் தென்பட்டால் அதைப் பொறுத்துக் கொள்வது தான் நல்லது. அதன் மூலம் வேறு ஏதோ ஒரு வகையில் நல்ல பலனை பின்னால் அல்லாஹ் ஏற்படுத்துவான் என்று பொறுத்து நல்ல முறையில் மனைவியரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களிடம் ஆண்கள் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையும் குர்ஆனும் ஹதீஸும் சொல்கிறது
”நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக் கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத் திருப்பான்”. (அல்குர்ஆன் 4:19)
நம் மனைவிடம் கனிவாகப் பேச வேண்டும், நம் தோற்றத்தையும் செயல்களையும் இயன்ற வரை அழகிய வடிவில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் மனைவியர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென நாம் நினைப்பது போல் நாம் அவர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும்.
அந்தப் பெண்களுக்குக் கடமைகள் இருப்பதைப் போன்றே நியாயமான உரிமைகளும் அவர்களுக்கு உண்டு என அல்லாஹ் கூறுகிறான்.
“இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2915)
பெண்கள் விஷயத்திலும் அவர்களின் உரிமையைப் பேணும் விஷயத்திலும் ஆண்கள் மிகவும் கவனமற்றவர்களாக, அலட்சிய மானவர்களாக இருக்கிறார்கள். அதிலும் கணவன்கள் தம் மனைவியர்கள் விஷயத்தில் மிகவும் அலட்சியமாகவே ஏனோ தானோ என இருக்கிறார்கள். சிலர் வரம்பு மீறி மோசமாக நடந்து கொள்கிறார்கள். இதற்குக் காரணம் அல்லாஹ்வைப் பற்றிய அச்சம், மறுமை பயம், இஸ்லாமிய அறிவு ஆகியவை அவர்களிடத்தில் இல்லாததேயாகும்.
மேலும் மதரஸாக்களில் இஸ்லாத்தை அதன் தூய்மையான முறையில் கற்றுத் தராததாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூய்மையான சொல், செயல், அங்கீகாரத்தை மட்டுமே போதிக்காமல் கண்ட கண்ட கதை கப்ஸாக்ளைப் போதிப்பதாலும் இவ்விளைவுகள் ஏற்படுகிறன.
மேலும் இஸ்லாத்திற்கு மாற்றமாக நடப்பவர்கள் யாராகயிருந்தாலும் தாட்சனியமில்லாமல் கண்டிப்பவர்கள் இல்லாதது மற்றும் ஒரு காரணமாகும். ஒரு சிலர்கள் மட்டும் கண்டிப்பதால் போதிய பலனில்லாமல் போய்விடுகிறது.