Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இலகுவான மார்க்கம், இஸ்லாம்

Posted on September 24, 2010 by admin

அல்லாஹ் தனது திருமறையில் ‘’அல்லாஹ் உங்களுக்கு இலகுவாக்க விரும்புகிறானே தவிர, கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை.’ (ஸூரத்துல் பகரா 185)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்;

‘இலகுபடுத்துங்கள், சிரமப்படுத்தாதீர்கள்; ஆசையூட்டுங்கள், வெறுப்பூட்டாதீர்கள்.’ (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்; புகாரி, முஸ்லிம்)

இஸ்லாம் மானிடருக்கு அருளாக வந்த மார்க்கமாகும். அது மனிதனை வாழ்வாங்கு வாழவைக்க விரும்புகின்றது: சிரமங்கள், நெருக்கடிகள் அற்ற சீரான ஒரு வாழ்வை மனிதனுக்கு அமைத்துக்-கொடுக்க வேண்டுமென்பதை இஸ்லாம் தனது அடிப்படை நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. இந்த உண்மையைத் தான் மேலே தரப்பட்ட ஹதீஸ் இரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றது.

மார்க்கம் என்பது விளங்குவதற்கு இலகுவானதாகவும் விளங்கியதைச் செயற்படுத்துவதற்குச் சிரமமற்றதாகவும் இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படையான ஒரு கருத்தாக இருப்பதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாமிய பிரசாரப்பணிக்காக ஸஹாபாக்களை அனுப்பிய போது இந்த அம்சத்தை ஞாபகமூட்டினார்கள்.

யெமன் பிரதேசத்துக்கு தஃவாப் பணிக்காக முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு, அபூ மூஸா அல் அஷ்அரி ரளியல்லாஹு அன்ஹு, ஆகிய இருவரையும் அனுப்பிய வேளையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனை ஞாபகமூட்டினார்கள். ‘இலகுபடுத்துங்கள், சிரமப்படுத்தாதீர்கள்: ஆசையூட்டுங்கள், வெறுப்பூட்டாதீர்கள்.’

அல் குர்ஆனும் இக்கருத்தை ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

‘அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை.’ (அல் குர்ஆன்: பகரா 286)

‘அல்லாஹ் உங்களுக்கு இலகுவாக்க விரும்புகிறானே தவிர, கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை.’ (அல் குர்ஆன்: பகரா 185)

‘சிரமம் எப்பொழுதும் இலகுபடுத்தலை வேண்டி நிற்கும்’ என்ற மார்க்கச் சட்டவிதி, நாம் விளக்க எடுத்துக் கொண்ட ஹதீஸ்களிலிருந்தும் அதையொத்த குர்ஆன் வசனங்களிலிருந்துமே மார்க்கச் சட்டவல்லுநர்களால் பெறப்பட்டுள்ளது. இந்த விதியின் அடிப்படையில்தான், சிரமமான கட்டங்களிலெல்லாம் ‘ருக்ஸத்’ என்ற சலுகைகளை மார்க்கம் வழங்குகிறது. இச்சலுகைகளே இஸ்லாம் மனிதனைச் சிரமப்படுத்த விரும்புவதில்லை என்பதை எடுத்துக் காட்டுவனவாயுள்ளன.

பிரயாணத்தை இஸ்லாம் சிரமமான ஒரு காரியமாகக் கருதுகிறது. எனவே, பிரயாணிக்குப் பல விசேட சலுகைகளை வழங்குகிறது. உதாரணமாக, ஐங்காலத் தொழுகைகளை சுருக்கிச் சேர்த்துத் தொழுவதற்கும், ரமழானில் நோன்பை விடுவதற்கும், ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றா-மலிருப்பதற்கும் பிரயாணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நோயையும் இஸ்லாம் ஒரு சிரமமெனக் கருதி, நோயாளிக்குப் பல சலுகைகளை வழங்கியுள்ளது. வுளூவுக்குப் பதிலாகத் தயம்மும் செய்வதற்கும், இருந்த நிலையில் அலலது படுத்த நிலையில் அல்லது சைக்கினை மூலம் தொழுவதற்கும் கூட்டுத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை ஆகியவற்றை விடுவதற்கும் ரமழான் நோன்பை நோற்காதிருப்பதற்கும் இன்னும் பல விடயங்களுக்கும் இஸ்லாம் நோயாளிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

பலவந்தப்படுத்தலையும் இஸ்லாம் ஒரு சிரமமாகக் கருதுகிறது. எனவே, ஒருவன் பலவந்தத்தின் காரணமாக ஒரு ஹராத்தைச் செய்தால் இஸ்லாம் அவனைக் குற்றவாளியாகக் கருதுவதில்லை.

மறதியும் ஒரு சிரமமாகும். மறதியாகச் செய்யும் தவறுகளை இஸ்லாம் பாவமாகக் கருதுவதில்லை. அவ்வாறே அறியாமை,நிர்ப்பந்தம் ஆகியவற்றின் காரணமாகச் செய்கின்ற குற்றங்களையும் இஸ்லாம் குற்றமாகக் கருதுவதில்லை.

பருவமடையாத சிறுவர்கள், பெண்கள், சித்தசுவாதீனமற்றோர் ஆகியோருக்கும் சட்டங்களிற் பல விதிவிலக்குகளும் சலுகைகளும் சிரமங்களைத்தவிர்க்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளன.

மார்க்கத்தின் பெயரால் தன்னையும் பிறரையும் சிரமங்களுக்குட்படுத்தக் கூடாது:

தம்மால் சுமக்க முடியாத சுமைகளைச் சுமக்க முயலக்கூடாது என்ற கருத்தையும் இந்த ஹதீஸ் தருகின்றது. இஸ்லாம் விலக்கப்பட்டவற்றின் வட்டத்தைச் சிறியதாகவும் ஆகுமானவற்றின் வட்டத்தை விரிந்ததாகவும் ஆக்கிவைத்துள்ளது. பேணுதல், தக்வா என்ற பெயரால் அல்லாஹ் ஆகுமாக்கியவற்றை ஹராமாக்கிக் கொள்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஹராத்தை ஹலாலாக்குவதை விட ஹலாலை ஹராமாக்குவதை இஸ்லாம் பாரதூரமான குற்றமாகக் கருதுகிறது. இத்தகைய கடுமையான போக்குடையோரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள். ‘கடுமையான போக்குடையோர் அழியட்டும், கடுமையான போக்குடையோர் அழியட்டும், கடுமையான போக்குடையோர்; அழிந்தே போகட்டும்’ என்று அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம், அஹ்மத்,அபூதாவூத்)

இலகுபடுத்துவோர்களாக அனுப்பப்பட்டுள்ளீர்களே அன்றி, சிரமப்படுத்துபவர்களாக அல்ல.’ (புகாரி, முஸ்லிம்)

ஹலால், ஹராம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் முழுமையாக அல்லாஹ்வுக்குரியது. இதில் மனிதன் தலையிடுவது ஷிர்க்காகும். இந்த வகையில், அல்லாஹ்வால் எமது வசதிக்காகவும் சுக வாழ்வுக்காகவும் ஆகுமாக்கித் தரப்பட்டுள்ளவற்றைத் ‘தக்வா’ என்ற முலாம் பூசி ஹராமாக்க முயல்வது ஷிர்க் ஆகும்.

“(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், பரிசுத்தமான (மேலான) ஆகாரத்தையும் ஆகாதவையென்று தடுப்பவர் யார் என்று கேளும்.” (அல் குர்ஆன்: அஃராப் 32)

மதீனாவில் ஸஹாபாக்களிற் சிலர், அல்லாஹுதஆலா ஆகுமாக்கியவற்றைப் பேணுதல் என்ற பெயரால் தமக்கு ஹராமாக்கிக் கொள்ள முயன்றபோது அல்லாஹ் அத்தகையோரைக் கண்டித்து, அவர்களை நெறிப்படுத்தி நேரான வழியில் செலுத்தும் நோக்கோடு கீழ்வரும் வசனங்களை இறக்கினான்:

“விசுவாசிகளே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கும் பரிசுத்தமானவற்றை நீங்கள் ஆகாதவையாக்கிக் கொள்ளாதீhகள். அன்றி, நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதேயில்லை.” (அல் குர்ஆன்: மாயிதா: 87)

வாழ்க்கையை ஆன்மீக வாழ்வு, லௌகீக வாழ்வு எனக் கூறுபோட்டு நோக்குவோரும், உலக வாழ்க்கையை முற்றாகத் துறந்து வாழவேண்டுமென்ற சிந்தனைப் போக்குடையோரும் இறைவனின் கண்டனத்திற்கு உட்படுவர். இத்தகையோரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கண்டித்துள்ளார்கள்.

‘‘திருமணம் எனது வழிமுறை, எனது வழிமுறையை வெறுப்பவர் என்னைச் சார்ந்தவரல்லர்.’’ (புகாரி)

‘இஸ்லாத்தில் துறவறம் இல்லை.’ (அஹ்மத்)

இஸ்லாமிய தஃவாப் பணியில் ஈடுபடுவோர் எப்பொழுதும் மக்களோடு நளினமான முறையில் நடந்துகொள்ள வேண்டும்; கடுமையான போக்கைத் தவிர்த்தல் வேண்டும் என்ற கருத்தையும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. அல்குர்ஆன் இந்தக் கருத்தைக் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றது:

“(நபியே) நீர் (மனிதர்களை) நளினமாகவும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உம் இறைவனின்பால் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) நீர் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கஞ் செய்வீராக!” (அல் குர்ஆன்: 16:125)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பிரசாரத்தின் வெற்றிக்கு அவர்களது நளினமான போக்கும் அணுகுமுறையும்தான் காரணம் என்ற உண்மையை அல்குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

“(நபியே) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே, நீர் அவர்கள் மீது இரக்கமுள்ளவரானீர். கடுகடுப்பான வராகவும் கடின சித்தமுள்ளராகவும் நீர் இருந்திருப்பீரானால், உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள்.” (அல் குர்ஆன்:3:159)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

18 − = 10

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb