பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவிற்கு வந்து எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன.
எட்டு ஆண்டுகளுக்கு முன்னே, தங்களை வாழவும் அனுமதிக்காமல் விரட்டியடித்த மக்கள் நிறைந்த மக்கா நகரத்தில், வெற்றி வீரராக நுழைந்தபோது தங்களோடு வந்த பெரும்படைக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விடுத்த, சரித்திரத்தின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பெற்ற உத்தரவு:
‘இறைவன் நமக்கு வெற்றியை அளித்துள்ள இந்நேரத்தில், நமது விரோதங்கள் மறக்கப்படட்டும்.
மக்காவாசிகள் நமக்களித்த துன்பங்களும், துயரங்களும் மறந்து மன்னிக்கப்படட்டும். தற்காப்பிற்காகவன்றி முஸ்லீம் போர்வீரர்கள் எவரும் தமது ஆயுதத்தை உயர்த்தக்கூடாது.
மக்காவாசிகள் அனைவருக்கும் நான் பொதுமன்னிப்பு அளித்துள்ளேன்.’
உடல்வலிவு மட்டுமல்ல, இணையற்ற உள்ள வலிவும் கொண்டிருந்த அந்த முஸ்லீம் பெரும் படை, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றி மக்கா நகரத்தில் நுழைந்தபோது ஆயுதங்களை உயர்த்தவில்லை.
என்ன நேருமோ என நடுங்கிக் கொண்டிருந்த மக்காவாசிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொதுமன்னிப்பு அறிக்கையைக்கண்டு பேராச்சர்யம் அடைந்தனர்.
நகரத்தின் சுற்றுவட்டத்தைக் கடந்து கஃபாவுக்கு வந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவாசிகள் அனைவரும் அங்கு வரவேண்டுமென கேட்டுக் கொண்டார்கள். சிறிது நேரத்தில், மக்கள் வெள்ளம் போல், கஃபா வாசலில் திரண்டு நின்றனர்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருமுறை கூட்டத்தை நோக்கினார்கள்.
அக்கூட்டத்தில், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எள்ளி நகையாடியவர்கள் இருந்தனர்.
அவர்களை முகத்திலே அறைந்தவர்கள் இருந்தனர்.
அவர்கள் செல்லும் வழியெலாம் முள்ளையும், கல்லையும் வீசிய கொடியோரும் இருந்தனர்.
அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் முற்றுகையால் பட்டினி போட்டு கொல்ல முயன்றவர்கள் இருந்தனர்.
இரவோடு இரவாக அவர்களைக் கொன்றுவிடுவதற்காக வாளையேந்தி வீட்டைச் சூழ்ந்து கொண்டவர்கள் இருந்தனர்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறவினர்களையும், நண்பர்களையும் போர்க்களங்களிலே கொன்று குவித்து சித்தரவதை செய்த மக்கள் இருந்தனர்.
அவர்களெல்லாம் இன்று உதவியற்றோராய், உரமற்றோராய், தலைகுனிந்து நிற்பதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டார்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பேசினார்கள்:
‘எல்லாப்புகழும், வெற்றியும் அல்லாஹ்வுக்கே! மனிதரில் பிறப்பால் ஒருவரைவிட ஒருவர் உயர்ந்தவரல்ல. ஆனால், ஒழுக்கத்தால் மனிதன் உயர முடியும். நாம் அனைவரும் ஆதமுடைய மக்களே. அவர்களில் எவர் நல்ல காரியங்கள் அதிகமாகச் செய்கிறாரோ அவரே உயர்தவர் ஆவார்.’
இவ்வாறு கூறிய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் பேச்சை ஒருகணம் நிறுத்தி, கூட்டத்தினரை நோக்கி கேட்டார்கள்:
‘குரைஷிகுல மக்களே! உங்களை நான் எப்படி நடத்தவேண்டுமென நினைக்கிறீர்கள்?’
‘பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! எங்களுக்கு கருணை காட்டுங்கள். எங்களை மன்னித்துவிடுங்கள்’ என்று கூட்டத்தினர் கூவினார்கள். இதைக்கேட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்களிலே நீர் நிறைந்தது.
மீண்டும் கூட்டத்தை நோக்கி கூறினார்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்;
‘நபி யூஸூஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தங்களது சகோதரர்களுக்கு கூறியதையே நான் உங்களுக்கும் கூறுகிறேன். பழிவாங்கும் எண்ணம் எனக்குக் கிடையாது. கடந்த காலச் செயல்கள் மறக்கப்படட்டும். அல்லாஹ் நம் அனைவரையம் மன்னித்து அருள்புரிவானாக!’
அனைத்திற்கும் அழகிய முன்மாதிரியான அகிலத்தின் அருட்கொடை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த வரலாற்றை இன்றைய முஸ்லீம்கள் ஒவ்வொருவரும் உண்மையாக பின்பற்றினால் ஒற்றுமை ஓடிவராதா? அதைவிடுத்து ஒற்றுமை ஒற்றுமை என்று ஓராயிரம் முறையல்ல, நூராயிரம் முறை ஓங்கி ஒலித்தாலும் வீண்தான்.
மண்ணுக்குள் போவதற்குள் மமதைகள் மறைய அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.
– அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை)