அதிசய பழங்கள்!
[ ‘அந்த நாளில் ஒரே ஒரு மாதுளையை ஒரு கூட்டத்தினர் உண்பார்கள். அதன் தோலில் நிழல் பெறுவார்கள்’ (அந்த அளவு அது பெரிதாக இருக்கும்).]
இயற்கையுடன் மனிதன் விளையாடுவது என்பது இடைவிடாமல் மும்முரமாக நடந்துவரும் ஒரு விளையாட்டு. அவ்வப்போது ஒட்டு மரத்தின் மூலம் பெரிய அளவில் காய்கறி, பழ வகைகளை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள். அதில் வெற்றியும் அடைந்து வருகிறார்கள்.
ஜெர்மனியில் ஓர் இடத்தில் உலகிலேயே மிகப்பெரிய பூசணிக்காய் ஒன்று விளைந்தது. அதன் எடை மட்டும் சுமார் 500 பவுண்டு ஆகும். மக்கள் இந்த அதிசயத்தை கண்டு களித்தனர். விஞ்ஞானிகள் இதனை ஆராய்ந்து வருகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன் நமது கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜி.டி. நாயுடு கூட தனது தோட்டத்தில் இயற்கையான அளவைவிட பெரிய அளவில் காய் கனிகளை பயிர்வித்து காண்பித்ததை தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது. இன்றும்கூட பல இடங்களில் இதுபோன்ற ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இதைப்பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்று பார்ப்போமா! இதைப்பற்றியெல்லாம் கூடவா இஸ்லாம் கூறுகிறது என்கிறீர்களா? இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது! பரிபூரணமான மார்க்கமாயிற்றே இஸ்லாம். அது சொல்லாமல் விட்ட விஷயங்கள் எதுவுமில்லை என்பது சிந்திப்பவர்களுக்கு நிச்சயமாக வெள்ளிடைமலையாகத் தெரியும்.
அகிலத்தின் அருட்கொடை அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் ஒரு முறை கூறினார்கள்:
‘மிக விரைவில் இறைவனின் அருள்வளம் உங்களை வந்து அடையும்.’
(யஃஜுஜ், மஃஜுஜ் மடிந்தபின்) ‘அவர்களின் அம்புகளையும், விறகுகளையும், அம்பராத்தூளிகளையும் ஏழு ஆண்டுகளுக்கு முஸ்லீம்கள் விரகுகளாகப் பயன்படுத்துவார்கள்.
பின்னர் அல்லாஹ் மழையை அனுப்புவான். அனைத்து இல்லங்களையும் அம்மழை அடையும். பூமியை கண்ணாடிபோல கழுவிவிடும்.
பின்னர் பூமியை நோக்கி, ‘உன் கனிகளை முளைக்கச்செய்! உன்னிடம் இருந்த பரக்கத்தை (அபிவிருத்தியை) திரும்ப வழங்கு!’ என்று கூறப்படும்.
‘அந்த நாளில் ஒரே ஒரு மாதுளையை ஒரு கூட்டத்தினர் உண்பார்கள். அதன் தோலில் நிழல் பெறுவார்கள் (அந்த அளவு அது பெரிதாக இருக்கும்).
பாலிலும் அபிவிருத்தி (பரக்கத்) செய்யப்படும். ஒரு ஒட்டகத்தில் ஒரு முறை கறக்கும் பால் ஒரு பெரும் கூட்டத்தினருக்கு போதுமானதாக இருக்கும்.
ஒரு மாட்டில் ஒரு முறை கறக்கும் பால் ஒரு குலத்திற்குப் போதுமானதாக இருக்கும்…’ (அறிவிப்பாளர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
‘என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ, அவன் மீது ஆணையாக! மரியமுடைய மகன் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்க இருக்கிறார். அவர் சிலுவையை முறிப்பார், பன்றியைக் கொல்வார். ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார். (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவுக்கு செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!’ (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி
– அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை)