o லிப்ஸ்டிக் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் வெளியில் செல்லலாமா?
o மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரமா?
o பெண்ணின் இடை (இடுப்பு) தெரிகிற விதத்தில் ஆடை அணிவதினால் மறுமையில் தண்டனை உண்டா?
o நடு விரலிலும், ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்று ஹதீஸ் உள்ளதாகக் கூறுகிறார்களே! இது சரியா?
o பெண்கள் பள்ளியில் தொழ இறைவன் தடைவிதித்தாக ‘குர்ஆன்’ வசனத்தில் உள்ளதா?
0 லிப்ஸ்டிக் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் வெளியில் செல்லலாமா?
பர்தா அணிந்து, மார்க்கம் சொல்கின்ற முறையில் வெளியில் செல்லக்கூடிய பெண்கள் அலங்காரமாக லிப்ஸ்டிக் போன்ற பொருட்களைப் பயன்படுத்திக் கொண்டு செல்லலாமா?
அந்நியர்கள் இருக்கும் இடங்களுக்குச் செல்லும் பெண்கள் இவ்வகையான கூடுதல் அலங்காரங்களைத் தவிர்க்க வேண்டும். கணவன் மற்றும் கீழ்க்கண்ட வசனங்களில் கூறப்படுபவர்கள் இருக்கும் இடங்களில் மட்டுமே கூடுதலான அலங்காரங்களைப் பயன்படுத்தலாம்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!
அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.
தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.
அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.
நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.(அல்குர்ஆன் 24:31)
0 மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரமா?
மார்க்கத்தில் மெட்டி அணிவது கூடுமா? மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரம் என்று கூறுகின்றார்களே!
பெண்கள் திருமணமானதற்கு அடையாளமாகக் கால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணிந்து கொள்ளும் மோதிரம் போன்றுள்ள அணிகலனுக்கு மெட்டி என்று கூறுகின்றனர். இந்த அணிகலனை, பெரும்பாலும் மாற்று மதத்தில் திருமணமானதற்கு அடையாளமாக அணிகின்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் திருமணத்திற்கு அடையாளமாக இதை அணியவில்லை. சாதாரண அணிகலனாக அணிந்துள்ளனர்.
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெருநாள் அன்று பெண்கள் பகுதியில் தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டபோது மோதிரங்களையும், மெட்டிகளையும் பிலாலின் ஆடையில் அப்பெண்கள் போடலானார்கள்” என்று புகாரி (979, 4895) ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.
மெட்டியை மதச்சடங்காக இல்லாமல் அது ஒரு அணிகலன் என்ற அடிப்படையில் அணிந்து கொள்ளலாம். எப்படி ஒரு மோதிரத்தை விரும்பிய போது போட்டுக் கொண்டு விரும்பிய போது கழற்றி விடுகிறோமோ அதே அடிப்படையில் இதையும் பயன்படுத்தலாம். மேலும் திருமணம் ஆனவர்கள் என்றில்லாமல் அனைவரும் இதைப் பயன்படுத்தலாம்; எந்த விரலிலும் அணியலாம் என்ற அடிப்படையில் போட்டுக் கொள்வதில் தவறில்லை.
0 பெண்ணின் இடை (இடுப்பு) தெரிகிற விதத்தில் ஆடை அணிவதினால் மறுமையில் தண்டனை உண்டா?
முஸ்லிம் பெண்களில் அதிகமானவர்கள் சேலை அணிகிறார்கள். இவ்வாறு சேலை அணிவதால் தன்னையும் அறியாமல் இடுப்புப் பகுதி வெளியில் தெரிகிறது. இதனால் மறுமையில் தண்டனை உண்டா?
முகம் மற்றும் முன் கைகள் ஆகிய பகுதிகளைத் தவிர பெண்கள் தங்கள் உடல் பகுதி அனைத்னையும் அன்னிய ஆண்கள் முன்னால் கண்டிப்பாக மறைத்தே ஆக வேண்டும். சேலை உள்ளிட்ட எந்த ஆடையாக இருந்தாலும் அதை அணிந்தால் உடல் பகுதிகள் வெளியே தெரியும் என்றால் அந்த ஆடையை அணிந்து அன்னிய ஆண்கள் முன்னால் காட்சி தரக் கூடாது.
தன்னையும் அறியாமல் இடுப்பு வெளியில் தெரிந்தால் தண்டனை உண்டா? என்று கேட்டுள்ளீர்கள். இந்த ஆடை அணிந்தால் அதில் இன்னின்ன பகுதிகள் வெளியில் தெரியும் என்பது அறியாத விஷயமல்ல. எனவே அறியாமல் செய்யும் தவறு என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது.
எனவே உடல் பகுதிகள் வெளியில் தெரியும் வகையில் அமைந்துள்ள சேலையை அணிந்து அன்னிய ஆடவர் முன்னால் வரக் கூடாது.இது போன்று ஆடை அணிந்தும், அணியாத நிலையைக் கொண்ட பெண்களை நரகவாசிகள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை.
ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும்.
அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர்.
இன்னொரு சாரார் பெண்கள் ஆவர்.
இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள்.
தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள்.
அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும்.
எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும்.
ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.”
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 3971
0 நடு விரலிலும், ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்று ஹதீஸ் உள்ளதாகக் கூறுகிறார்களே! இது சரியா?
நடு விரலிலும், ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்று ஹதீஸ் உள்ளதாகக் கூறுகிறார்களே! இது சரியா?நடு விரலிலும், ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணிவதைத் தடை செய்து ஹதீஸ் உள்ளது.”இந்த விரலிலும் இந்த விரலிலும் மோதிரம் அணிவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள்” என்று அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறி விட்டு, நடு விரலையும், ஆட்காட்டி விரலையும் குறிப்பிட்டார்கள்.” (நூல்: முஸ்லிம் 3911)
0 பெண்கள் பள்ளியில் தொழ இறைவன் தடைவிதித்தாக கீழ்கானும் வசனத்தில் உள்ளதா?
இறைவன் தன் திருமறையில் அந்நூர் அத்தியாயத்தில், “இறை இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும் மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர்” என்று கூறுகிறான். பெண்கள் தொழுகிறார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை. அப்படி என்றால் பெண்கள் பள்ளியில் தொழ அல்லாஹ் அனுமதிக்கவில்லையா?
(இறை) இல்லங்கள் உயர்த்தப் படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள். (அல்குர்ஆன் 24:36,37)
இந்த வசனத்தில் ஆண்கள் என்று குறிப்பிடப்படுவதால் பெண்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.
திருக்குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்த அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களில் பெண்கள் பள்ளிக்கு வருவதை அனுமதித்து ஏராளமான செய்திகள் இடம் பெற்றுள்ளன. பெண்கள் பள்ளிக்கு வரக் கூடாது என்பது தான்
மேற்கண்ட வசனத்தின் கருத்து என்றால் அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கியிருப்பார்கள். எனவே இந்த வசனம் நீங்கள் கூறும் அந்தக் கருத்தைக் கூறவில்லை என்பதை அறியலாம். ஆண்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுவது ஏன்? என்ற கேள்வி எழலாம். பள்ளிக்கு வரும் அனைவரைப் பற்றியும் இந்த வசனம் பேசவில்லை. வணிகமோ, வர்த்தகமோ அல்லாஹ்வின் நினைவை விட்டும் தடுக்காத ஆண்களும் அதில் இருக்கிறார்கள் என்று தான் கூறுகிறது.
பொதுவாக ஆண்கள் வியாபாரத்தில் ஈடுபடக் கூடியவர்கள்; சில சமயங்களில் வியாபாரம் என்பது இறை நினைவை விட்டும் திசை திருப்பி விடும். இந்த நிலை ஏற்படாமல் மறுமையை அஞ்சி தொழுகை, ஸகாத் போன்றவற்றை நிறைவேற்றுபவர்களும் இருக்கிறார்கள் என்பதையே இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.