முஸ்லிம் சமூகம் வீணுக்காகப் படைக்கப்படவில்லை
[ முஸ்லிம் சமூகம் வீணுக்காகப் படைக்கப்படவில்லை. ஓர்உயர்ந்த இலட்சியத்திற்காகப் படைக்கப்பட்டுள்ளது. இறைவனிடமிருந்து வந்த சத்தியத்தை சொல்லாலும் செயலாலும் தாமும் பின்பற்றி, பிறருக்கும் எடுத்துரைத்து, நன்மையை ஏவி, தீமையைத் தடுக்க வேண்டிய மகத்தானப் பொறுப்பு அதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த இலட்சியத்தை அடைய முஸ்லிம்களிடையே பரஸ்பர அன்பு, நேசம் பரிவு இரக்கம், ஒற்றுமை உணர்வு தேவை.]
திடுக்கிட வைக்கும் திருவிடைச்சேரி
திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரி எனும் கிராமத்தில் கடந்த 05-09-2010 அன்று இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான தொழுகை தொடர்பான வாக்குவாதத்தில் நோன்பு நோற்றிருந்த முஸ்லிம்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிகழ்வானது அமைதியையும் சகிப்புத் தன்மையையும் கொண்ட இஸ்லாத்தைப் பின்பற்றும் தமிழக முஸ்லிம்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனியச் செய்துள்ளது.
புண்ணியம் பூத்துக் குலுங்கும் புனிதமிகு ரமளான் மாத்தின் கண்ணியமிக்க இறுதிப்பத்து நாட்களில் வருகின்ற மாட்சிமிக்க இரவை (லைலத்துல்கத்ர்), பிரார்த்தனை, பாவ மன்னிப்பு கோருதல் ஆகியவற்றின் மூலம் செழுமைப்படுத்த வேண்டிய இரவை வீண் வாக்கு வாதங்கள் விதண்டாவாதங்கள், கோபம், ஆணவம் ஆகியவற்றால் கொலைகார இரவாக மாற்றியுள்ளனா் என்பதை நினைத்து முஸ்லிம்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்..
இறந்தவாகள் எந்த அமைப்பைச் சோ்ந்தவர்கள், சுட்டுக் கொன்றவர்கள் எந்த அமைப்பைச் சோ்ந்தவர்கள் என்பதை ஆராய்வதில் பயனில்லை. ஒரு காசுக்குக் கூடப் பயனில்லாத முஸ்லிம்கள் முஸ்லிம்களையே சுட்டுக் கொன்றுள்ளனா் என்றுக்கருதுவதே சரியானதாகவிருக்கும். விழிப்புணர்வே இல்லாமலிருந்த தமிழக முஸ்லிம்களுக்கு எல்லாவிதமான விழிப்புணர்வையும் அளித்து இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு முன்னேற்றியுள்ளது கண்டு கண்ணீா் சிந்தாமல் இருக்க முடியவில்லை.
இஸ்லாமிய சீர்திருத்தப் பணி என்பது இறைத்தூதர்கள் ஆற்றிய ஒப்பற்ற பணியாகும். உண்மை, வாய்மை, பொறுமை, நிலைகுலையாத் தன்மை கசிப்புத் தன்மை, சமூகத்தின் மீது ஆழ்ந்த அக்கறை, ஆகிய உயர்குணங்கள் அதற்குத் தேவை.
மக்களின் மனங்களைக் கவரும் அழகிய உரையாடல்கள், விவேகம் அதன் அணிகலன்களாகும். இவற்றைப் பெற்றிருந்த இறைத்தூதர்கள் சீர்திருத்தப் பணியாற்ற முனைந்தபோதெல்லாம் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அளித்தனா். அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு மன்னிக்கும் மனப்பான்மையுடன் அவா்கள் செயல்பட்டனர்.
மக்களின் தவறான செயல்களைக் கண்டு அஞ்சிவிடாமல் அவர்கள் நேர்வழி பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.. உறுதியான இறைநம்பிக்கையும் அல்லாஹ்வின் மீதான தவக்கலும் அவா்களின் வலிமையான ஆயுதங்களாகத் திகழ்ந்தன. மக்களின் சிந்தனை, நடத்தை, பண்பாடு ஆகியவற்றை முற்றிலும் மறுகட்டமைப்பு செய்யும் மனப் புரட்சியை மேற்கொண்டதே அவர்களின் சாதனை. மாறாக, டீ டம்ளருக்குள் புரட்சி செய்வதற்காக அவர்கள் வரவில்லை.
சக முஸ்லிம்களை பரிகாசம் செய்தல், ஏளனம் செய்தல், இழிவுபடுத்துதல், கொச்சையான வார்த்தைகளால் காயப்படுத்துதல், வாக்குவாதத்தில் வெற்றிபெற போட்டிபோடுதல், எங்களைத்தவிர வேறு யாருமே உண்மையான முஸ்லிம்கள் இல்லை, எங்களைத்தவிர யாருமே நல்லவர்கள் இல்லை. என ஆணவம் கொண்டு பிதற்றுதல், விதண்டாவதங்களில் ஈடுபடுதல், நற்செயல் புரிந்தமைக்காக தற்பெருமை கொள்ளுதல், ஆகியன இஸ்லாம் தடைசெய்துள்ள தீய குணங்களாகும். இஸ்லாம் எடுத்துரைக்கப்பட்டபோது அதனை எதிர்த்த மக்களிடம்தான் இந்தத்தீய குணங்கள் காணப்பட்டன.
முஸ்லிம்கள் உயர்பண்பினைப் பெற்றிருந்தனர் என்பதைத் திருக்குர்ஆனை ஆய்வு செய்கின்ற அனைவருமே உணர முடியும்.
முஸ்லிம் சமூகம் வீணுக்காகப் படைக்கப்படவில்லை.
ஓர்உயர்ந்த இலட்சியத்திற்காகப் படைக்கப்பட்டுள்ளது.
இறைவனிடமிருந்து வந்த சத்தியத்தை சொல்லாலும் செயலாலும் தாமும் பின்பற்றி,
பிறருக்கும் எடுத்துரைத்து,
நன்மையை ஏவி, தீமையைத் தடுக்க வேண்டிய மக்கதானப் பொறுப்பு
அதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த இலட்சியத்தை அடைய முஸ்லிம்களிடையே
பரஸ்பர அன்பு,
நேசம்,
பரிவு,
இரக்கம்,
ஒற்றுமை உணர்வு தேவை.
இதனைச் சீா்குலைக்கும் முயற்சிகள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சமுதாயத் தலைமை மேற்கொள்ள வேண்டும்.
சமுதாயத்தலைமை இந்த முறையில் சிந்திக்கக் தவறிவிடுவதால் திருவிடைச்சேரி துப்பாக்கிச் சூடு போன்ற நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர அனுமதிக்கக் கூடாது. சமுதாயம் ஓரணியில் திரண்டு இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
நன்றி : சமரசம் செப்டம்பா் 16 – 30 2010