இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ”என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்.” (புகாரி எண் 887)
பல் துலக்குவதில் நம்மில் உள்ள அலட்சியமே வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
அதுவுமின்றி பல் சொத்தையாக இருந்தாலும் வாய் துர்நாற்றம் வீசும். இவை முக்கிய காரணங்கள் என்றாலும், இவை தவிர வேறு பல காரணங்களும் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
தொண்டையின் இரு பக்கமும் ”டான்ஸில்” என்ற சுரப்பி உள்ளது. இந்த சுரப்பியில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டால் வாயில் துர்நாற்றம் ஏற்படும். முதலில், ஒரு இ.என்.டி. மருத்துவரை அணுகி, பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பிரச்னை இல்லை என்று சொன்னால், வயிறு மற்றும் குடல் நோய் நிபுணரை சந்தியுங்கள். ஏனெனில், வயிறு தொடர்பான பல பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.முதலாவது, உணவுக் குழாயில் ஏற்படும் இன்ஃபெக்ஷன் (இதுதான் காரணம் என்று தெரிந்தால், சர்க்கரை வியாதிக்கான பரிசோதனையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், இப்படி, உணவுக் குழாயில் இன்ஃபெக்ஷன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மற்றவர்களை விட சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கே அதிகம்).
அடுத்த காரணம், ”ரிஃப்லெக்ஸ்” (Reflux) எனப்படும் பிரச்சினை. உணவுக் குழாய் என்பது ஒரு வழிப் பாதை, உணவு செலுத்துவது மட்டும்தான் அதன் வேலை. ஆனால், சிலருக்கு இரைப்பையில் இருந்து அமிலம் மேல் நோக்கி உணவுக் குழாய்க்கு வந்து போகும். இந்தப் பிரச்னை இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
மூன்றாவது காரணம் ஜீரணமாகாமல் இருப்பது. இரைப்பையில் உள்ள உணவு இரண்டரை முதல் நான்கு மணி நேரத்துக்குள் ஜ”ரணாகிவிட வேண்டும். இரைப்பையில் கட்டி, புண் என்று ஏதேனும் இருந்து, உணவு நெடு நேரம் தங்கியிருந்தால் வயிற்றிலிருந்து அந்த உணவால் வரக்கூடிய ”புளித்த நாற்றம்” வாயிலும் வரும்.
வயிறு சம்பந்தமான எல்லாப் பிரச்சினைகளையும் ”எண்டோஸ்கோப்பி” என்ற உள்நோக்கியின் மூலம் பார்த்து, மேலே சொன்ன காரணங்களில் எதனால் என்று கண்டறிந்து சிகிச்சை கொடுப்பதன் மூலம் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம். அதுவரை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ”மௌத் வாஷ்” பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு 6 முறையாவது ”மௌத் வாஷ்” பயன்படுத்தி வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும்.”
வாய் துர்நாற்றத்தைப் போக்க கிராம்பு
கிராம்பில் கார்போஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.
கிராம்பின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பும் சேர்க்கப்படுகிறது.
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கிராம்பை வாயில் போட்டு மென்று வந்தால் அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.
பற் சொத்தை ஆரம்பிக்கும் காலக்கட்டத்திலேயே அதனைக் கண்டறிந்து, சொத்தை ஏற்படும் பல்லில் ஒரு கிராம்பை நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
முடிந்தால் சிறிது நேரம் வாயில் சுரக்கும் எச்சிலை துப்பிக் கொண்டே இருக்கலாம். இவ்வாறு செய்து வந்தால் சொத்தை ஏற்பட்ட பல் எது வென்று உங்களாலேயே கண்டுபிடிக்க முடியாது.