வெ. ஜீவகிரிதரன்
அமெரிக்க நாட்டின் பொருளாதார இதயமான நியூயார்க் நகரின் இரட்டை கோபுரங்கள் 2001 செப்டம்பர் 11-ல்தான் தகர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உலக அளவிலே ஹஹபயங்கரவாதத்திற்கு எதிரான போர் -பிரகடணத்தை அமெரிக்கா அறிவித்து களத்தில் இறங்கியதை நாம் அறிவோம்.
ஆனால், எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் பேராசைக்கு இது இன்னொரு காரணம் மட்டுமே என்பதை வெளி உலகம் அறியாது.
அரபு நாடுகள் அனைத்தும் முஸ்லிம் நாடுகளாக இருப்பதால், முதலில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து-அவர்களை ஒடுக்குவதாக கூறி அந்நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து-அதன் பின் அங்குள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்கிறது அமெரிக்கா.
ஈராக் பேரழிவு ஆயுதங்களை குவித்து வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டி, அதன் மீது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடுத்து, அதிபர் சதாம் உசேனையும் அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் அனைவரையும் கொன்றொழித்தது. ஆனால், பேரழிவு ஆயுதம் ஒன்றைக் கூட ஈராக் மண்ணில் இருந்து கைப்பற்றி உலகுக்கு காட்ட இயலவில்லை. இன்று ஈராக் என்ணெய் வளம் முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது.
இப்படியான ஆக்கிரமிப்புப் போர்களின் போது பல்லாயிரம் அப்பாவி மக்களைக் கொல்வதுடன் பல நூறு பேரை கைதிகளாக பிடித்து, விசாரணை என்ற பெயரிலே கொடும் சித்ரவதை செய்வது அமெரிக்காவின் வாடிக்கை. ஈராக் மீதான ஆக்ரமிப்புப் போரின் போது ஈராக் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலிருந்தும் பல ஆயிரம் பேரை கைது செய்தது அமெரிக்க ராணுவம். அக்கைதிகளை அடைத்து வைக்க கியூபா நாட்டின் குவாண்டனாமோ வளைகுடாவில் சிறைச்சாலையையும் அமைத்தது. இது சிறைச்சாலையாக இல்லாமல் கொடும் சித்ரவதைச் சாலையாகவே இருந்தது. பல நூறு கைதிகள் இங்கு பிணமாக்கப்பட்டனர்.
இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நாள் முதல் 9.7.2004 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டுமே 24,000 கைதிகள் இந்த சிறையிலே விசாரணை என்ற பெயரிலே இது மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இது வெளி உலகின் குற்றச்சாட்டு அல்ல. அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலே உள் விசாரணை ஒன்றை நடத்தியது.
இந்த மூன்று வருட காலங்களில் குவாண்டனாமோ சிறையில் பணி புரிந்த சுமார் 493-எப்.பி.ஐ. அதிகாரிகளுக்கு அதன் தலைமையகம் ஈமெயில் ஒன்றை அனுப்பியது. அதில் சிறைக் கைதிகளிடம் இராணுவ அதிகாரிகள் யாரேனும் வரம்புமீறி, அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பற்றி தெரியுமா? அப்படி ஏதும் நடந்திருந்தால் அதில் சம்பந்தப்பட் அதிகாரிகள் யார்? போன்ற விவரங்களை தலையகத்துக்கு தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டது. மொத்தம் 493 அதிகாரிகளில் 434பேர் இதற்கு பதிலனுப்பினர்.
தங்கள் பதிலில் தாங்கள் பணிபுரிந்த பொழுது சிறையில் நடந்த கொடுஞ் செயல்கள், சித்ரவதைகள், மேலும் அதைச் செய்த அதி காரிகளின் விவரங்கள் ஆகியவற்றை அளித்திருந்தனர். இச்செய்தி எப்.பிஐ. தலைமையகத்தால் டிசம்பர் 2004ல் அரசுக்கு அளிக்கப்பட்டது.
மனித உரிமை மீறல்கள், ஐ.நா.வின் ஜெனிவா ஒப்பந்த மீறல் போன்ற கொடுஞ் செயல்களில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டது அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பாலேயே வெளிப்பட்டதால், ஒரு உள் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு அமெரிக்க இராணுவம் தள்ளப்பட்டது. 2004-டிசம்பரில் தென் பிராந்திய கமாண்டர். பண்டஸ் ஜே.கிரட்டாக் இராணுவ புலன் விசாரணைக்கு உத்தரவிட்டார். பிரிகேடியர் ஜெனரல் ஜான். டி. பர்லோ விசாரணை
அதிகாரியாக நியமிக்கப்பட்டார். முதலில் 2 மாதம் விசாரணை நடத்திய ஜான். டி.பர்லோ, தன்னை விட மூத்த அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டிய நிலை இருப்பதை தலைமையகத்துக்கு தெரியப்படுத்தினார். அதனால் 28.2.2005 அன்று இந்த விசாரணைக் குழுவில் லெப்டினன்ட் ஜெனரல் ரேன்ட்ஸ் எம்.ஷ்மித் மற்றும் அமெரிக்க வான்படையின் தென்பிராந்திய கமாண்டர் டேவிட் மோன்தான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்த புலன் விசாரணைக்குழு 24.3.2005 வரை விசாரணை நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட அமெரிக்க தென் பிராந்திய இராணுவ அதிகாரிகள், 30க்கும் மேற்பட்ட எப்.பி.ஐ. அதிகாரிகள், ஜாய்ன்ட் டாஸ்க் போர்ஸ் எனப்படும் கூட்டு நடவடிக்கைப் படை பிரிவு 160,170 மற்றும் குவாண்டனாமோ அதிகாரிகள், அமெரிக்க இராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.
விசாரணையின் போது பல்வேறு குற்றச் செயல்களில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்ட தகவல்கள் புற்றீசல்களாய் வெளிவந்தன. இந்த புதிய தகவல்களையும் சேர்த்து புலன் விசாரணை செய்யுமாறு 5.5.2005ல் இராணுவ தலைமையகம் மீண்டும் உத்தரவிட்டது.
சித்ரவதைகள்
இந்த புலன் விசாரணைக் குழு விசாரிக்க வேண்டியதாக கூறப்பட்ட ஒழுங்கீனங்கள் என்ன தெரியுமா? இராணுவ விதிகளிலே கூறப்பட்டுள்ள விசாரணை உத்திகளை மீறி வேறு வகையான உத்திகளை விசாரணையின் போது கையாண்டது என்பதுhன். அவை யாவை?
1. விசாரணைக் கைதிகளின் மீது இராணுவ நடவடிக்கையில் உபயோகப்படுத்தப்படும் நாய்களை ஏவி விட்டு பயங்கரமாக குரைக்க வைப்பது. கடிக்க விடுவது போல பயமுறுத்துவது (இந்த உத்தி 12.11.2002க்கு பிறகு அங்கீகரிக்கப்பட் உத்தியாக மாற்றப்பட்டது)
2. கைதிகள் குர்ஆனின் ஆயத்துகளை தொடர்ந்து முணுமுணுப்பதாகக் கூறி அவர்களின் வாய்களை சுற்றி ஒட்டும் நாடாவைக் கொண்டு இறுக்கிக் கட்டி வைத்தது.
3. கைதிகளை விசாரணை செய்யும் போது தான் இராணுவ அதிகாரி என்பதை மறைத்து, எப்.பி.ஐ. அதிகாரி எனப் பொய் சொல்லி அவர்களை மிரட்டியது.
4. எப்.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் பணிகளை செய்ய விடாமல் இராணுவ அதிகாரிகள் தடுத்தது.
5. வக்கிரமான பாடல் இசைகளை பயங்கர சத்தத்துடன் நீண்ட நேரம் அலறச் செய்து கைதிகளை சித்ரவதை செய்தது.
6. ஒரு நாளைக்கு 18 முதல் 20மணி நேரம் விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து 48 முதல் 54-நாட்கள் கைதிகளை தூங்கவே விடாமல் விசாரணை செய்தது. தொடர்ந்து 10 அல்லது 15 நிமிடங்களுக்கு மேல் தூங்க அனுமதிக்காதது. (இந்த உத்தி 2.12.2005க்கு பிறகு அங்கீகரிக்கப்பட்ட உத்தியாக மாற்றப்பட்டது).
7. தரையிலே சிறு வளையம் பொறுத்தி அதிலே கைதியின் இரு கைகளையும் மணிக் கட்டுவரை நுழைத்து பூட்டி விடுவது இதன் மூலம் எப்போதும் கைதி குறுகிய நிலையில் குனிந்தே இருக்க வேண்டும்.
8.அளவுக்கு அதிகமான வெப்பத்தையும், அளவுக்கு அதிகமான குளிரையும் மாறி மாறி கைதிகள் மேல் செலுத்தியது (2.12.2005க்கு பின்னர் இந்த உத்தி அங்கீகரிக்கப்பட்டுவிட்டது)
9. ஆண் கைதிகளின் தொடை மீது அமர்ந்து பெண் இராணுவ அதிகாரிகள் லேப் டான்ஸ் எனப்படும் பாலியல் வக்கிர நடனம் ஆடியது.
10. பெண் இராணுவ அதிகாரி ஆண் கைதி முகத்தின் மீது மாதவிலக்கில் வெளிப்பட்ட இரத்தத்தை பூசியது (விசாரணையில் அது வெறும் சிவப்பு மைதான் என கூறப்பட்டது)-
11. கைதிகளிடமிருந்து குர்ஆன் நூலை பிடுங்கி எறிவது.
12. பெண் இராணுவ அதிகாரிகள் தங்களின் உடைகளைக் களைந்து விட்டு ஆண் கைதிகளின் உடலோடு உரசுவது, அவர்களின் தலை மயிரில் விரல்விட்டு கோதுவது, அவர்களின் மர்ம உறுப்புகளை தொடுவது போன்ற பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது. (இந்த உத்தி இராணுவ விசாரணையின்போது கைதியின் மன உறுதியை குலைக்கச் செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட உத்திதான் என விசாரணையின்போது விளக்கம் தரப்பட்டது).
13. கைதிகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை தராமல் சித்ரவை செய்தது.
14. குர்ஆனை தரையிலே கிடத்தி விட்டு அதன் மேல் ஏறி உட்கார சொல்வது.
15. கைதிகளின் மன உறுதியைக் குலைப்பதற்காக அவர்களின் குடும்பமே தற்போது சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொய் சொன்னது.
இவையல்லாம் கடுமையான உடல் ரீதியான சித்ரவதைகளுக்கும் மேலாக செய்யப்பட்ட மன ரீதியான சித்ரவதைகள்தான். உடல் ரீதியான சித்ரவதைகளுக்கு அளவே இல்லை.
அமெரிக்க இராணுவத்தின் புலன் விசாரணையின்போது கைதிகளிடம் கையாள வேண்டிய விசாரணை உத்திகளில், கைதிகளின் மன உறுதியைக் குலைப்பதற்கென சில உத்திகள் கையாளப்படுகின்றன. இராணுவ விதிகள் எப்.எம்.34-52 விதிகள் எனப்படும் அவை என்ன தெரியுமா?
1. ஆண் கைதிகளுக்கு பெண்களின் உள்ளாடைகளை மட்டும் அணிவிப்பது.
2. கைதியின் தாயும், சகோதரியும் விபச்சாரிகளாக மாறிவிட்டதாக பொய் தகவல் தருவது.
3. கைதி ஒரு ஓரின சேர்க்கையாளன் என முத்திரை குத்துவது. ஓரின சேர்க்கை மூலம் வன் புணர்ச்சிக்குள்ளாக்கப் போவதாக மிரட்டுவது.
4. நாய்க்கு கழுத்திலே கட்டும் பட்டையைப் போல கைதியின் கழுத்திலே கட்டி சிறு கயிறு அதிலே இணைத்து நாள் முழுவதும் நாயைப் போல அறையை சுற்றி, சுற்றி வரச் செய்வது.
5. வக்கிரமான பாடல்களை அலறவிட்டு அந்த இசைக்கு ஏற்ப விசாரணை அதிகாரியுடன் நடனமாட வேண்டும் என கொடுமைப் படுத்துவது.
6. கைதியை முழு நிர்வாணமாக்கி விட்டு பெண் அதிகாரிகளின் மத்தியிலே நிற்கச் செய்வது.
7. தொழுகை நடத்த முயலும் போது தடுப்பது.
8. கைதியில் தலை மீது அடிக்கடி நீரைக் கொட்டுவது.
இந்த உதிகளின் மூலம் ஒரு கைதி தொடர்ந்து 160 நாட்கள் தனிமைச் சிறையிலேயே, ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் விசாரிக்கப்பட்டதாக விசாரணைக் கோப்புகளில் இருந்ததை மேற்சொன்ன இராணுவ புலன் விசாரணைக் குழு காண முடிந்தது. அக்கிரமங்கள் மூடி மறைப்பு!
இந்த கொடும் செயல்கள் எல்லாம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், ஐ.நா.வின் ஜெனிவா ஒப்பந்த விதிகளை மீறுவதாகவும், மனித குல நாகரிகத்துக்கு எதிரானதாகவும் இருந்த போதும், விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழு அத்துனை அக்கிரமங்களையும் மூடி மறைத்தது. கைதிகள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ன.
1. இராணுவ விதிகளில் அங்கீகரிக்கப்பட்ட விசாரணை உத்திகள்.
2. இராணுவ விதிகளால் பிற்பாடு அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட விசாரணை உத்திகள்.
3. அங்கீகரிக்கப்படாத விசாரணை உத்திகள்.
இவற்றில் பெரும்பான்மையான குற்றச்சாட்டுகள் முதல் இரண்டு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன. மூன்றாவது வகை குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களை எச்சரித்து விட்டு விடலாம் எனப் பரிந்துரை செய்யப்பட்டது.
சர்வதேச நெருக்கடி காரணமாக சமீபத்தில் குவாண்டனாமோ சிறையை படிப்படியாக மூடிவிடுவது எனவும், அங்குள்ள கைதிகளை அமெரிக்காவின் சாதாரண சிறைகளுக்கு மாற்றி விடுவது என்றும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
2002ம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த உமர் காதிர் என்ற 15-வயது சிறுவன் அல்-காயிதா அமைப்பை சேர்ந்தவன் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டான்.
இன்றுவரை அச்சிறையின் அனைத்து சித்ரவதைகளையும் சந்தித்தும் உயிரோடு உள்ளான். அவன் மீதான வழக்கு விசாரணை தொடங்குவதாக அமெரிக்க ராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளது. விசாரிக்கப்போகும் நீதிபதிகள் யார் தெரியுமா? அதே கொடுங்கோல் இராணுவத்தின் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுதான். இங்கு கொலைக் களமே நீதிமன்றம்… கொலைகாரர்களே நீதிபதிகள்!!