கரீம்கனி
உலகில் வாழும் கோடான கோடி மக்களுக்கு சமர்ப்பணம்
மனித வாழ்வு சுருங்கி ஆயட்காலத்தின் அளவு குறைந்து கொண்டே போகிறது. மரண அறிவிப்பு சிலருக்கு நீரழிவு நோய், இதய நோய், சிறுநீரகக் கோளாறு எனப் பலவகையில் வருகிறது. இந்த நோய்களுக்கு வயது வித்தியாசம் இல்லை.
ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு மரணம் சமீபமாகிக் கொண்டிருக்கிறது. இதனை உணராதவர்களாக உலா வந்து கொண்டிருக்கின்றனர். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நாளில் 70 தடவை மரணத்தை நினைவு கூர்ந்திருக்கிறார்கள். 70 முறை தவ்பா (பாவமன்னிப்பு கோருதல்) கேட்டிருக்கிறார்கள்.
மரணம் என்ற சொல்லைக் கேட்டவுடன் மனிதர்களின் முகம் சுருங்கிப் போகிறது. காற்று வந்து காதை அடைக்கிறது.
ஏன் இந்த நிலை?
மரணம்; நிச்சயிக்கப்பட்ட நாளில், நிமிடத்தில், நொடியில் வந்தே தீரும். அதற்கு முன்னதாக கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க வேண்டும் ஒவ்வொருவரும்.
ஐம்பது வயது வரை என்னென்ன நன்மைகளை செய்திருக்கிறோம். நாம் பெற்ற அறிவை, அறிவை, கல்வியை, செல்வத்தை மற்றவர்களுக்கு தர்மம் செய்திருக்கிறோமா என்பதை ஒவ்வொருவரும் எண்ணிப்பார்த்து வாழ்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
தாம் பெற்ற அனுபவத்தை இளைய தலைமுறைக்கு வழங்கி அவர்களுககு வழிவிட வேண்டும். இறப்பெய்தும் கடைசி மணித்துளி வரை ‘நான்தான் இருப்பேன்’ என அடம்பிடிப்பவர் மரணத்தை மனிதில் இருத்தாத மனிதர்.
ஒரு பணியை 60 வயதுக்காரரைவிட 40 வயதுக்காரர் வேகமாகச் செய்வார். அவர் விவேகத்தோடு செய்யாத பட்சத்தில் முன்னவரின் விவேகம், பின்னவருக்கு பயன்படலாம். ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வைய்யகம்’ முதுமொழி செயல்முறைப் பட வேண்டும்.
தாம் பெற்றதிலிருந்து நல்லவற்றையே வழங்க வேண்டும். நல்லவை என்பதற்கு ‘தய்யிபாத்து’ என்ற சொல் கையாளப்படுகிறது. இதற்கு தரத்தில் உயர்ந்தவை என்று பொருள் கூறப்படுகிறது.
இறைவனுக்குப் பணிந்து நடந்து மனிதர்களுக்குத் தீங்கிழைக்காமல் இயன்றவரை உதவி செய்து வாழ்வதையே திருமறையும் வலியுறுத்துகிறது. இறைவழியில் நடப்பவர்களுக்கு மரண அச்சம் மனதில் எழுவதே இல்லை.
அனைத்துத் துறைகளிலும் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மரணத்தை கண்முன் நிறுத்தி வாழ்க்கையில் பயணப்பட வேண்டும். தத்தமது அனுபவம், அறிவு, பணம் ஆகியவற்றை செலவழிக்க முன்வரவேண்டும்.
நன்றி: ”முஸ்லீம் முரசு” 2009, டிசம்பர் மாத இதழ்.