எது பலம்?
தென்காசி மர்ளிய்யா
ஒவ்வொரு மனிதனும் தனது பலத்தை எண்ணி பெருமிம் கொள்கிறான். பலம் தன்னை பாதுகாக்கிறது என்று கருதுகிறான். அதனால் பலத்தை பெருக்கிக் கொள்ளவும் பலவீனங்களை சரி செய்யவும் முயல்கிறான்.
ஆரோக்கியத்தை பலமாகக் கருதுகிறவன் நோயை பலவீனமாகக் கருதுகிறான்.
பணம் பலம் என எண்ணுபவன் ஏழ்மையைக் கண்டு அஞ்சுகிறான்.
பதவிதான் பலம் என்று நம்புகிறவன் பதவி இல்லாமல் இருக்கும் போது பலவீனத்தை வெறுக்கிறான்.
ஆண் வாரிசுதான் பலம் என சமூகம் இவனுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. ஆண் பிள்ளைக்கு தவம் இருக்கிறான்.
பலநேரங்களில் பலமே பலவீனமாகி விடுகிறது
ஃபிர்அவ்ன் தனது அதிகாரத்தையும், படைகளையும் பலமாகக் கருதியே தன்னை கடவுள் என பிரகடனப்படுத்தினான். ஆனால் அவன் நீரில் மூழ்கடிக்கப்பட அதுவே காரணமாக இருந்தது. அவன் ‘பலமாக’ கருதியதுதான் ‘பலவீனமாக’ இருந்தது.
காரூன் தனது கோட்டை கொத்தளங்களையும் தனது அறிவையும் பலமாக கருதினான். அவன் பலமாக கருதியவை அவனோடு சேர்ந்து மண்ணுக்குள் புதையுண்டு போனது. ஹிட்லர் தனது பாதுகாப்பிற்காக தோண்டிய பதுங்கு குழியே அவனது மரணக் குழியானது.
பாதுகாப்பான பயணம் என பேருந்தில் பயணம் சென்றால் முதலுதவிப் பெட்டியை முன்னால் பார்க்கலாம். அபாயச்சங்கிலி என ரயிலில் தொங்கிட்டு இருக்கிறார்கள். டிராஃபிக் பிச்சனை இல்லை என்று விமானத்தில் போனால் கூட ஆபத்தின் போது பாராசூட் மூலம் குதிப்பது எப்படி என்றுதான் முதலில் சொல்லித் தருகிறார்கள். அதுவும் வேண்டாம் என சாலை ஓரத்தில் நடந்து சென்றால் ‘பேருந்து மோதி நடந்து சென்றவர் பலி’ என பத்திரிகையில் செய்தி வருகிறது.
முன்னால் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாவலர் தான் அவரை சுட்டுக்கொன்றான். ராஜீவ் காந்தியின் மரணத்தை பாதுகாப்பு வளையத்தால் காப்பாற்றிட இயலவில்லை. மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மரத்தடியில் ஒதுங்கிய நேரம் பார்த்து மின்னல் மரத்தில் விழுந்து உயிரை குடித்து விடுகிறது.
சில நேரம் பலவீனமே பலமாகி விடுவது…
சில நேரம் பலம் என்பது பலமே இல்லாததாகி விடுவதும் பலவீனமே பலமாகி விடுவதும் உண்டு. பத்ரு போரில் பலவீனமான அணிதான் வெற்றிப் பெற்றது. மூன்று மடங்கு அதிகமாக இருந்த பலமான அணி பலவீனப்பட்டு போனது.
சிலவேளை ஒன்றுக்கு பலவீனம் மற்றொன்றக்கு பலமாக இருப்பதுண்டு. பன்றிக்கு பலவீனம் அதன் மூக்கு. யானைக்கு அதுவே (தும்பிக்கை) பலம். குதிரைக்கு முதுகு பலம். மாட்டுக்கு அது பலவீனம். முதலைக்கு தண்ணீர் பலம். நீச்சல் தெரியாதவைகளுக்கு அது பலவீனம்.
பொன் நகையும், பணக்கட்டும் பாதுகாப்ப என கருதி மனிதன் அதை பாதுகாத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அது களவாடப்பட்டு அதற்காகவே கொல்லப்பட்டும் விடுகிறான்.
உண்மையில் பலம் எது?
எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் பலம் – மிகப்பெரிய பலம், பாதுகாப்பு – உண்மையான பாதுகாப்பு இறைநம்பிக்கையும், இறையச்சமும்தான்.
நன்றி: ‘முஸ்லீம் முரசு’ 2010, மே மாத இதழ்.