திருமணம் சரிந்து சிதைவதேன்?!
ஆ.மு.ரஸூல் முஹ்யித்தீன்
[ முஸ்லீம் திருமணங்களில் மஞ்சள் மேனி, பண வலிமை, ஊர் வெறி காரணிகளாகிறது. இதன் கோர விளைவு விவாகரத்து வரை சென்று முடிகிறது. ஆங்கில முஸ்லீம் வார இதழில் வெளியிடும் திருமண விளம்பரங்களில் 35 சதவீதம் கைவிடப்பட்ட மகளிர்க்கானது.
ஆண், பெண் இருபாலரில் மீண்டும் மணப்பொருத்தம் தேடுவோர் – அதாவது மறுமணம் வேண்டுவோர் 10 சதவீதம் உயர்ந்துளள்தாக இன்னொரு புள்ளிவிபரம் கூறுகிறது. முஸ்லீம் திருமண இணையதளத்தில் திருமணத்திற்கு காத்திருப்போர் எண்ணிக்கை 1,10,000. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 15,000 பேர் மட்டுமே காத்திருந்தோர் பட்டியலில் இடம் பெற்றனர். திருமணம் இலகுவாக நடைபெறவில்லை.
ஆடம்பர திருமணங்கள் முஸ்லீம் சமுதாயத்தில் பாலியல் மறுப்பை உருவாக்கும். நகரமயமாக்கம் சமூக உறவுகளில் சிதைவைத் தந்துள்ளது.]
வல்லரசு நாடுகளுக்கு எதிராகப் பேரணி, கண்டனம், எதிர்க்குரல் முழங்குமளவுக்கு தமிழக முஸ்லீம் பெண்கள் இன்று விழிப்புணர்வு பெற்றுள்ளனர். தனியார் சின்னத்திரைகள் முஸ்லீம் இயக்க வாடகை நிதி கைங்கர்யத்தில் (sponsor) மகளிர் பங்களிப்பை வெளிச்சமிடுகின்றன.
முஸ்லீம் மகளிர் அடைந்துள்ள விழிப்புணர்வுக்கு இதுவும் ஒரு சாட்சி. இஸ்லாமியக் கண்காட்சியில் முஸ்லீம் மகளிருக்கு தனியே உபதேச அரங்குகளும் இன்று நிஜக்காட்சி. திருமண மண்டப இஸ்லாமிய சொற்பொழிவுகள், கேள்வி பதில் நாடகத்தனங்களில் முஸ்லீம் மகளிர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதாக காட்சிகள் காட்டப்படுகின்றன.
முஸ்லீம் மகளிர் கல்வி நிறுவனங்கள், மதப் பிரச்சார நிலையங்கள் புற்றீசல் போல பெருகுகின்றன. பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் கல்லூரிகளிலும் முஸ்லீம் மகளிர் எண்ணிக்கை கணிசமாக வெளிப்படையாகவே அதிகரித்து வருகிறது.
”சிறுகுடும்பம், சிங்காரக் குடும்பம்” நாட்டில் திணிக்கப்பட்ட சூழலில் முஸ்லீம் பெண்களும் குடும்பக் கட்டுப்பாடு காத்து மைய நீரோட்டத்தில் கலந்து விட்டனர். இருபது ஆண்டுகளாக தமிழகத்தில் நுழைந்துள்ள பெட்ரோ டாலர் வருமானமும் பெண் கல்விக்கு அடித்தளமிட்டுள்ளது. உடன் நுகர்வு வெறியும் ஊடாடுவதை மறுக்க இயலாது.
கல்வியும், வேலை வாய்ப்பும் இதனால் அதிகரித்தன. சொந்தக்காலில் நிற்பதற்கு உரிய நிதி வலிமையும் மகளிருக்கு எளிதாயிற்று.
தொலைக்காட்சி, பணியிடம், நிதி வரவு, கூட்டுக்குடும்பச் சிதைவு ஏனைய சமுதாயத்தில் சிக்கலை ஏற்படுத்தியதைப் போலவே முஸ்லீம் சமுதாயமும் பாதிப்புக்குள்ளானது.
பழமைக்கும், நவீனத்துவத்துக்குமான போட்டி, இழுபறி, போர், வம்பு, கெடுபிடிகள் இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன.
வெளிநாட்டில் பணிபுரியும் குடும்பத் தலைவர்களின் இல்லங்களில் பிரச்சனை பூதகரமாக படமெடுக்கிறது.
வறுமையிலிருந்து வெளியே வர, சுய மரியாதை, அத்தியாவசிய வாழ்வியல் தேவை நிறைவேற ஆண் அயலகம் போகிறான். இதே காரணங்கள் மகளிர் பணிக்குச் செல்வதற்கும் முழுமையாகவே பொருந்தும்.
என்றாலும் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது மகளிர் நிலை பரிதாபமாகிறது. வரதட்சணை, நகை, விருந்துபசாரம், ஆடை, மண்டப வாடகை மணமகளின் தலையில் சுமத்தப்படுகிறது.
குணநலனை முதன்மைப்படுத்தி திருமணம் உத்தேசிக்க வலியுறுத்தும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏவுரை கண்டுகொள்ளப் படுவதில்லை. அழகு, அந்தஸ்து, பணம் இன்று முதலிடம் வகிக்கிறது.
முஸ்லீம் திருமணங்களில் மஞ்சள் மேனி, பண வலிமை, ஊர் வெறி காரணிகளாகிறது. இதன் கோர விளைவு விவாகரத்து வரை சென்று முடிகிறது. ஆங்கில முஸ்லீம் வார இதழில் வெளியிடும் திருமண விளம்பரங்களில் 35 சதவீதம் கைவிடப்பட்ட மகளிர்க்கானது.
ஆண், பெண் இருபாலரில் மீண்டும் மணப்பொருத்தம் தேடுவோர் – அதாவது மறுமணம் வேண்டுவோர் 10 சதவீதம் உயர்ந்துளள்தாக இன்னொரு புள்ளிவிபரம் கூறுகிறது. முஸ்லீம் திருமண இணையதளத்தில் திருமணத்திற்கு காத்திருப்போர் எண்ணிக்கை 1,10,000. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 15,000 பேர் மட்டுமே காத்திருந்தோர் பட்டியலில் இடம் பெற்றனர். திருமணம் இலகுவாக நடைபெறவில்லை.
முஸ்லீம் சமுதாயத்தின் சமூக தளம் மிக பலவீனமாயுள்ளது. மணவரன்களுக்குரிய குணநலன் உத்தரவாதம், சான்றிதழ் எளிதில் கிடைப்பதில்லை.
முஹல்லா ஜமாஅத்துக்கள் வலிமைபெற வேண்டும். சேவை மனதுடையோர் நிர்வாகப் பொறுப்புகளில் அமர வேண்டும். திருமணம் மற்றும் விவாகரத்து இரண்டுமே எளிமைப்பட வேண்டும். விதவை, மறுமணம், பலதார விருப்பம் ஷரீஅத் பார்வையில் பாலியல் நீதி, சம நோக்குடன் கவனிக்கப்பட வேண்டும். செயல்பட வேண்டும்.
ஆடம்பர திருமணங்கள் முஸ்லீம் சமுதாயத்தில் பாலியல் மறுப்பை உறுவாக்கும். நோய், தனிமை, விரக்தி, தாபம், மோகம் பெருகும். திருமணம் உடைபடுவது இயற்கை. நகரமயமாக்கம் சமூக உறவுகளில் சிதைவைத் தந்துள்ளது. உரிமை வேட்கையும் இயல்பானதே. திருமண விழாவையும், திருமண விலக்க விழாவையும் ஒரு சேர பாவிக்க வேண்டும். இரண்டும் இயற்கையுடன் இணைந்தது. இதில் காட்டப்படும் ஆதிக்கம், அலட்சியம், சமூகத்தை மேலும் சிதைக்கும்.
(நன்றி: முஸ்லீம் முரசு – மார்ச் 2008 ல் வெளியான கட்டுரை)