பெண்களுக்கான இல்லற உரிமைகள்
ஃபாத்திமுத்து சித்தீக்
[ கேரளத்து ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பு ஒன்றில், ”இந்தியாவில் இன்று வழக்கிலிருக்கும் சட்டங்களில், மிக நவீனமானதாக இருப்பதோடு தவறின் விளைவாக நேரும் மணமுறிவுக்குக்கூட அனுபவபூர்வமான பொறுப்பேற்று தீரப்பளிக்கும் ஒரே சட்டம் இஸ்லாமிய சட்டம்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அறியாமையாலோ, காழ்ப்புணர்ச்சியாலோ நம்முடைய கட்டுப்பாடான வாழ்க்கை நெறிமுறைகளைப் பார்க்கும் பிறசமயத்தவர்களுக்கு சுலபத்தில் கைகொடுப்பது பலதாரமணம்தான்! மனித இயல்பை நன்கு புரிந்து கொண்டு, பலதார மணத்தைப் பொறுத்தவரை இஸ்லாம் இதை ஒரு சலுகையாகத்தான் தந்திருக்கிறது.
பலதாரமணம் மூலம் முஸ்லீம்கள் சட்டபூர்வமாக பெண்களுக்குத் தரும் அந்தஸ்தை பிறசமுதாய ஆண்கள் தருவதில்லை. சின்னவீடுகளாக, வைப்பாட்டிகளாக செட்அப் செய்து கொளவதோட சரி! அல்லது ”சிகப்பு விளக்கு”ப் பகுதிகளுக்கச் சென்று சீரழிகிறார்கள். இதனால் ஏற்படும் தீமைகளை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. நாமும் தக்க தருணங்களில் சுட்டிக்காட்டுவதில்லை.]
அல்லாஹ் ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பை பொதுவாக்கி வைத்திருக்கும்போது அதன் அழுத்தம் பெண்களின் மேல்தான் அதிகமாகப் பதிகிறது. அப்படிப்பட்ட அழுத்தத்தில்தான் வேறுபாடுகள் இருக்கிறதா?
சுமூகத்தின் உயர்மட்டத்தினருக்கும் கீழ்மட்டத்தினருக்கும் தான் எத்தனையெத்தனை பாகுபாடுகள்?! நகரத்தில் வசிக்கும் பெண்களுக்கும், கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கும் இடையில்தான் எத்தனை பாகுபாடுகள்?!
முஸ்லீமல்லாத மலைவாழ் மக்களிடையேயும், சில பழங்குடியினரிடையேயும், சில இனங்களிலும் குடும்பத்தின் மூத்த மகன் மட்டுமே திருமணம் செய்த கொள்வதும், மற்ற உடன்பிறந்த சகோதரர்களுக்கும் அவளே மனைவியாயிருப்பாள் எனும் புராதன இதிகாசப் பழக்கம் இன்றைக்கும் காணப்படுகிறது.
மேலைநாட்டு முஸ்லீம் அறிஞர் முஹம்மது மர்மடியூக் பிக்தால் ”இஸ்லாமிய கலைப்பண்பு” எனும் நூலில் எழுதியிருப்பது போன்று ”… பல்வேறு நாடுகளிலும் முஸ்லீம் பெண்கள் அனுபவித்த சுதந்திரம் வட்டாரப் பழக்கவழக்கங்களுக்கும் ஒத்ததாக இருந்தது. இஸ்லாமியச்சட்டம் அவர்களுக்கு உரிமைகளை வழங்கியிருந்தது…”
”திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது” என்று புனித லேபிள் ஒட்டாத இஸ்லாம், சுதந்திரமான ஆண் – பெண்ணுக்குமிடையே நடக்கும் வாழ்க்கை ஒப்பந்தத்தையே திருமணம் என்கிறது. இந்த ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர், வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்வதில் மனப்பூர்வமான சம்மதம் இருப்பதை இரு சாட்சிகள் முன்னிலையில் வாய் வார்த்தையால் தெரிவிக்க வேண்டும்.
”எந்தப் பெண்ணையும் அவள் சம்மதமின்றி திருமணம் முடிக்கக் கூடாது”, வெட்கப்பட்டுக்கொண்டு மௌனமாக இருந்தால் ”அவளது மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொள்ளலாம்” எனும் பொருள்பட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.
மனதுக்குப் பிடிக்காதவரைத் திருமணம் செய்துகொள்ளும் நிர்பந்தம் இஸ்லாத்தில் இல்லை. சகசமயத்தினரில் இதே காலகட்டத்தில் இதற்கு நேர்மாற்றமாக இருந்தது. பணத்துக்காக, பெண்ணைப் பெற்றவர்கள் வயதான மாப்பிள்ளை, மூளைபிசகியவர், இரண்டாம் தாரம், மூன்றாம் தாரமாக… என்று யாருக்கு வேண்டுமானாலும் தங்கள் இஷ்டத்துக்கு கட்டிவைத்து விடுவார்கள். பெண்களுக்கு மறுத்துப்பேச எவ்வித உரிமையும் இல்லாமலிருந்தது. ஆனால் முஸ்லீம்களிடத்தில் மணமகனுக்கு எந்த அளவுக்கு திருமணத்தில் சம்மதம் இருக்கிறதோ அந்த அளவுக்கு மணமகளின் சம்மதமும் முக்கியம் என்பது கட்டாயமாகும்.
வரதட்சணை எனும் வரன், பெண்வீட்டாரிடம் தட்சணை வாங்கும் காலத்தில், இல்லற வாழ்க்கையில் ஈடுபடவிருக்கும் பெண்ணுக்கு மணக்கொடை எனும் ”மஹர்” கொடுத்து கௌரவிக்கச் சொன்னது இஸ்லாம். இது வாழ்க்கைத்துணையாக ஜோடி சேருபவருக்குத் தரப்படும் பாதுகாப்புக்கட்டணம் எனலாம். இதை கணிசமான ரொக்கமாக, நாகையாக, வீடாக, சொத்தாகப் பெறும் பெண் உண்மையிலேயே பாதுகாப்பு வளையத்தில் பத்திரமாக இருக்கிறாள். அவளது வயதான காலத்தில் இதுவே அவளுக்கு ஜீவனாம்சமாகவும் இருக்கும்.
இஸ்லாம் அவளுக்குத் தரச்சொல்லாத ஜீவனாம்சம் கேட்டு கோர்ட், கேஸ் என்று அலைய வேண்டியதில்லை. பைத்துல்மால் தேடிச்சென்று உதவிகேட்டு நிற்கவேண்டியதில்லை. இஸ்லாமிய நாடுகளில் இந்த அடிப்படைத் தத்துவத்தை பல்வேறு ரூபங்களில் வெளிப்படுத்துகிறார்கள். இப்படி பெருந்தொகையை, சொத்தை மஹராகத் தரும் பட்சத்தில் அநாவசியத் ‘தலாக்கு’களைப் பற்றி எச்சரிக்கையுணர்வு உள்ளவர்களாக ஆண்கள் இருக்கிறார்கள். அதனால் மணமுவந்து திருமணக்கொடையாக பெருந்தொகையை பெண்களுக்களித்து செயல்படும்போது இறைமார்க்கம் பெண்களுக்களித்த உரிமையைப் பெற்றவர்களாகிறார்கள்.
கேரளத்து ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பு ஒன்றில், ”இந்தியாவில் இன்று வழக்கிலிருக்கும் சட்டங்களில், மிக நவீனமானதாக இருப்பதோடு தவறின் விளைவாக நேரும் மணமுறிவுக்குக்கூட அனுபவபூர்வமான பொறுப்பேற்று தீரப்பளிக்கும் ஒரே சட்டம் இஸ்லாமிய சட்டம்தான்” என்று புகழ்ந்துரைத்திருப்பது இங்கு கவனிக்கத் தக்கது.
மணமுறிவு, பலதாரமணம்… போன்ற புனிதமான சலுகைகளை சமூகத்தில் ஒருசிலர் துஷ்பிரயோகம் செய்வதாலும், சினிமா செய்திப் பத்திரிகைகள் என்று ஊடகங்களின் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களாலும்தான் தவறான எண்ணங்கள் ஏற்படுகிறது என்று கருதலாம்.
அறியாமையாலோ, காழ்ப்புணர்ச்சியாலோ நம்முடைய கட்டுப்பாடான வாழ்க்கை நெறிமுறைகளைப் பார்க்கும் பிறசமயத்தவர்களுக்கு சுலபத்தில் கைகொடுப்பது பலதாரமணம்தான்! மனித இயல்பை நன்கு புரிந்து கொண்டு, பலதார மணத்தைப் பொறுத்தவரை இஸ்லாம் இதை ஒரு சலுகையாகத்தான் தந்திருக்கிறது.
ஒரே மனைவியோடு திருப்திபடாத, பாலுணர்வு அதிகமுள்ள ஒரு மனிதன் செல்வந்தனாகவும், இறையச்சமுள்ளவனாகவும் இருப்பின், மார்க்க ஒழுங்கு முறைகளுக்குப் புறம்பான வழியில் சென்ற கெட்டுப்போகாமல், பெண்ணுக்கு தக்க அந்தஸ்து அளித்து நீதி நெறிமுறை தவறாமல் நடக்க அளித்த சலுகைதானே தவிர வேறு எவ்வித கட்டாயமும் இல்லை. அதோடு இஸ்லாமியச்சட்டப்படி முதல் மனைவி இருக்கும்போது இரண்டாம் மணம் முடிப்பது அத்தனை சுலபமானதல்ல.
பலதாரமணம்; மூலம் முஸ்லீம்கள் சட்டபூர்வமாக பெண்களுக்குத் தரும் அந்தஸ்தை பிறசமுதாய ஆண்கள் தருவதில்லை. சின்னவீடுகளாக, வைப்பாட்டிகளாக செட்அப் செய்து கொளவதோட சரி…! அல்லது ”சிகப்பு விளக்கு”ப் பகுதிகளுக்கச் சென்று சீரழிகிறார்கள். இதனால் ஏற்படும் தீமைகளை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. நாமும் தக்க தருணங்களில் சுட்டிக்காட்டுவதில்லை.
முறைப்படி திருமணமில்லாத உறவில் பிறக்கும் குழந்தைகளுக்கு இனிஷியலும் போட முடியாமல் தவிக்கிறார்கள். அப்படி அவர்களை நிராதரவாக தவிக்கவிடாமல், அந்தப் பெண்ணுக்கும் குழந்தைக்கும் பலதாரமணம் மூலம் இஸ்லாம் சமூக அந்தஸ்து அளிக்கிறது. ஒரு விதத்தில் இந்த அபலைப் பெண்கள் பெறும் ”சமூக நீதி” பெண்ணுரிமையைச் சேர்ந்ததுதான்.
எகிப்து, ஈரான், இராக், சூடான், மலேசியா, இந்தோனேஷியா போன்ற முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக வாழும் நாடுகளில் பெண்கள் முன்னெறியவர்களாக இருக்கும்போது, இந்தியாவில் மட்டும் இப்படி பிற்போக்காக இருக்கிறார்கள் என்றால், அது நிச்சயமாக பிறசமூகத் தாக்கமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இந்நிலையிலிருந்து பிறசமயத்தவர் வேகமாக மீண்டுவிட நாம் மட்டும் நின்ற இடத்திலேயே நிற்கிறோமோ என்று நினைக்க வேண்டியுள்ளது!
இஸ்லாம் பெண்ணுக்களித்த உரிமைகளில் மிக முக்கியமான ஒன்று விதவை மறுமணம். பிற சமூகங்களில் கணவனை இழந்த கைம்பெண்கள் பட்ட அவதி ஒன்றல்ல இரண்டல்ல சொல்லி முடிப்பதற்கு! மோசமான இழிநிலையில் முடக்கிப்போட்டு, மொட்டையடித்து அவர்கள் அழகை குறைக்கும் விதமாக மிக மோசமான சடங்குகள் பல செய்து வதைத்திருக்கிறார்கள்.
ஆனால், மறுமலர்ச்சி மார்க்கமாகிய இஸ்லாம் ”பிறப்பும் இறப்பும் இறைக்கட்டளை” தக்க துணையின்றி கணவனை இழந்த பெண் தனித்திரக்கத் தேவையில்லை… கௌரவமான பாதுகாப்பான வாழ்க்கைக்கு ”மறுமண உரிமையே மருந்து” என்கிறது.
முஸ்லீம் பெண்கள் தங்கள் கடமைகளையும் உரிமைகளையும் இரு கண்களென கடைப்பிடிக்க வேண்டும். நம்மைத்தாக்குவத போன்று குறை கூறும் பிறசமய சகோதரிகளுக்கு தக்க பதில் தந்து விளக்கவது காலத்தின் கட்டாயம்.
நன்றி: சிந்தனை சரம், மாத இதழ்