பிறசமூகத்தவருடனான முஸ்லிம்களின் விவாகத் தொடர்பு!
பிறமதத்தவர்கள் எனும் வட்டத்தில் இறைவனுக்கு இணைவைத்து வணங்கும் சிலை வணங்கிகள், விக்கிரக ஆராதனைக்காரர்கள், வேதத்தை உடையவர்கள் என அழைக்கப்படும் யூத, கிறிஸ்தவர்கள், இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய ‘முர்தத்’கள் உட்பட நாஸ்திகர்கள், மதநம்பிக்கையற்ற கம்யூனிஸ வாதிகள் போன்றோரும் அடங்குவர்.
ஒரு முஸ்லிம் பெண் மேற்குறிப்பிட்ட எப்பிரிவைச் சேர்ந்த ஆணையும் மணமுடிப்பது ஹராமாகும். இது இமாம்களினதும் இஸ்லாமிய அறிஞர்களினதும் ‘இஜ்மாஃ’ என வழங்கப்படும் ஏகோபித்த முடிவாகும். கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் இம்முடிவுக்கு ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது.
”ஈமான் கொண்டோர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் அவர்களது ஈமானை நன்கறிந்தவன். எனவே அவர்கள் முஃமினான பெண்கள் என நீங்கள் அறிந்தால் காபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள் ஏனெனில் (ஈமான் கொண்டுள்ள) இப்பெண்கள் அவர்களுக்கு மனைவியராக அனுமதிக்கப்பட்டவர்களல்லர். அவர்கள் இவர்களுக்கு (கணவர்களாக) அனுமதிக்கப்பட்டவர்களுமல்லர்.” (அல் குர்ஆன் 60:10)
மேலும் கீழ் வரும் வசனமும் இக்கருத்துக்கு ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது: ‘அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்.’ (அல் குர்ஆன் 2:221)
முஸ்லிம் ஆண்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கும் முஷ்ரிக்கான பெண்களைத் திருமணம் செய்வது ஹறாமாகும். ‘அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்’ (அல் குர்ஆன் 2:221) அவ்வாறே ஒரு முஸ்லிம் ஆண், ஒரு நாஸ்திகப் பெண்ணையோ, மத நம்பிக்கையற்ற கம்யூனிஸம் போன்ற கொள்கைகளை ஏற்றுள்ள பெண்ணையோ மணமுடிப்பது ஹராமாகும்.
ஆயினும், முஸ்லிம் ஆண்களுக்கு வேதத்தை உடையவர்களான யூத கிறிஸ்தவப் பெண்களை மணம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. கீழ்வரும் அல் குர்ஆன் வசனம் இதற்கு ஆதாரமாக உள்ளது.
பிரசேத்தில் ”முஃமின்களான கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களையும் விலைப்பெண்களாகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக்கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து மணமுடித்துக்கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.” (5.5)
”ஆரம்ப காலத்தவர்களில் யூத, கிறிஸ்தவப் பெண்களை மணம் செய்வதை ஹறாம் என்று எவரும் கூறியமைக்கு தக்க ஆதாரம் எதுவும் கிடையாது” என இமாம் இப்னுல் முன்திர் குறிப்பிடுகின்றறார்.
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறு திருமணம் முடிப்பதை ஹறாம் எனக் கண்டிப்பாக கூறியிருக்கிறார்கள்.
ஆயினும் பல ஸஹாபாக்களும் பல தாபிஈன்களும் ஹறாமாக மாட்டாது என்ற கருத்தையே கொண்டுள்ளனர்.
உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு,
தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு,
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு,
ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு,
ஹுதைபா ரளியல்லாஹு அன்ஹு போன்றோர் இக்கருத்துக்கு ஆதரவானவர்களாவர்.
தாபியீன்களில்
ஸஈத் இப்னுல் முஸையிப் ரஹ்மதுல்லாஹி அலைஹி,
ஸஈத் இப்னு ஜுபைர் ரஹ்மதுல்லாஹி அலைஹி,
அல்ஹஸன் ரஹ்மதுல்லாஹி அலைஹி,
முஜாஹித் ரஹ்மதுல்லாஹி அலைஹி,
தாவூஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி,
இக்ரிமா ரஹ்மதுல்லாஹி அலைஹி,
அஷ்ஷஃபீ ரஹ்மதுல்லாஹி அலைஹ,
அழ்ழஹ்ஹாக் ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்றோர் இக்கருத்துக்கு ஆதாரவானவர்களாவர்.
இமாம் ஷாஃபிஈயும் யூத, கிறிஸ்தவப் பெண்களை மண முடிப்பது ஆகும் என்ற கருத்தையே கொண்டிருக்கிறார்.
இமாம் நவவி அவர்களது கருத்தும் இதுவே.
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வேதத்தை உடைய யூத, கிறிஸ்த வர்களை முஷ்ரிக்குகள் எனக்கருதியே தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். ஆயினும் அல் குர்ஆன் இவ்விரு பிரிவினரையும் பிரித்துக் குறிப்பிட்டிருப்பதனை அவதானிக்கலாம்.
”வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள், தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (தம் வழிகளிலிருந்து) விலகுபவர்களல்லர் (98:1)
யூத, கிறிஸ்தவப் பெண்களைத் திருமணம் முடிப்பதை ஆதரிக்கும் அறிஞர்களும் அதனை ‘மக்றூஹ் எனக் குறிப்பிடுகின்றனர். அதிலும் ‘தாருல்குப்ர்’ என அழைக்கப்படும் காபிர்களின் நாட்டில் வாழும் இத்தகைய பெண்ணைத் திருமணம் முடிப்பதை, கடுமையான மக்ரூஹ் என்று சிலரும், ஹறாம் என வேறு சிலரும் கருதுகின்றனர். இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு ஹறாம் என்ற கருத்தையே கொண்டுள்ளார். தனது கருத்துக்கு ஆதாரமாக கீழ்வரும் அல்குர்ஆன் வசனத்தைக் காட்டியுள்ளார்:
பிரசேத்தில் ”வேதம் அருளப் பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும் அவனது தூதரும் ஹறாம்மாக்கியவற்றை ஹறாம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக்கொள்ளாமலும் இருக்கிறார்களோ அவர்கள் (தம்) கைகளால் கீழ்படிதலுடன் ‘ஜிஸ்யா’ கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்” (9:20), இக்கருத்தை இமாம் இப்றாஹீம் அந்நகஈயும் ஆதரிக்கின்றார் என அல்குர்துபி குறிப்பிடுகின்றார்.
இத்தகைய கருத்துக்கள் அனைத்தையும் கருத்திற்கொண்டு குர்ஆனினதும் ஹதீஸினதும் வெளிச்சத்தில், ஒரு யூத அல்லது கிறிஸ்தவப் பெண்ணை மணமுடிக்க விரும்பும் ஒரு முஸ்லிம் ஆண் கருத்திற் கொள்ள வேண்டிய அம்சங்களையும் நிபந்தனைகளையும் கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி கீழ்வருமாறு விளக்குகின்றார்:
1. இஸ்லாம், வேதத்தை உடையவர்களின் பெண்களை மாத்திரமே திருமணம் முடிக்க அனுமதிக்கின்றது. அதாவது, அடிப்படையில் ஓரு வேதத்தைக் கொண்டுள்ள பெண்ணைத் திருமணம் முடிக்க அனுமதிக்கின்றது. ஒரு தீன் இல்லாத, ஒரு தீனை ஏற்றுக்கொள்ளாத நாஸ்திக, கம்யூனிஸ பெண் போன்றவர்களைப் பொறுத்தவரையிலும் இஸ்லாம் ஏற்றுக்கொள்ளாத மார்க்கங்களான பஹாயிசம், நுஸைரிய்யா போன்ற கொள்கைகளை ஏற்ற பெண்களையும் திருமணம் முடிப்பது முற்றாகவே விலக்கப்பட்டதாகும். இத்தகைய பெண் அல்லது அவளது குடும்பத்தவர்கள் அவளை கிறிஸ்தவர்களிலோ அலலது யூதர்களிலோ ஒருவராகக் கருதினாலும் சரியே.
2. மேலும் இஸ்லாம், கற்புடைய சுதந்திரமான, வேதத்தை உடைய பெண்ணை மணமுடிப்பதையே அனுமதிக்கிறது. எந்தவொரு ஆணுக்கும் தன் உடலை விற்கும் பெண்ணை திருமணம் செய்ய, அது அனுமதிப்பதில்லை.
3. எந்த சமூகம் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானதாக இருக்கின்றதோ அத்தகைய சமூகத்தைச் சேர்ந்த, வேதத்தை உடைய பெண்ணைத்திருமணம் செய்வதும் அனுமதிக்கப்பட்டதல்ல. ஏனெனில், திருமணம் என்பது பெண்ணின் குடும்பத்துடன் கொள்கின்ற தொடர்பாகும்.
அவர்கள் மீது காட்டும் அன்புமாகும். அவ்வாறே அப்பெண் தனது மார்க்கத்திற்கும் சமூகத்திற்கும் விசுவாசமாக இருப்பாள் என்ற வகையில், அவள் முஸ்லிம்களுக்கெதிராக தம் மதத்தினருக்கு உதவியாக இருக்க மாட்டாள் என்பதற்கு எத்தகைய உத்தரவாமும் கிடையாது. இவ்வகையில் இன்றைய இஸ்ரேலியப் பெண்ணை மணப்பது ஆகாது.
4. மார்க்கப்பற்றுள்ள, தனது தீனில் அக்கறையுள்ள முஸ்லிம் பெண்மணி, வெறுமனே தனது பெற்றோரிடமிருந்து இஸ்லாத்தை வாரிசாகப் பெற்ற பெண்மணியைவிடச் சிறந்தவள். றஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதனை எமக்குக் கூறுகின்றார்கள்: ‘மார்க்கமுள்ள பெண்ணை அடைந்து கொள்வீராக, இன்றேல் அழிந்துவிடுவீர்!’ (ஆதாரம்-புகாரி), இவ்வகையில் ஒரு முஸ்லிம் பெண், எவ்வகையிலும் எந்த வேதத்தை உடைய பெண்களை விடவும் சிறந்தவளே.
5. மேலும் ஒரு முஸ்லிம் இத்தகைய ஒரு மனைவியினால் தனது குழந்தைகளின் அகீதாவுக்குக் குந்தகமோ அலலது வழிகாட்டலில் குழப்பமோ ஏற்படும் எனப்பயந்தால் தனது தீனைப் பாதுகாத்துக் கொள்ள இவ்வபாயத்தை தவிர்ந்து கொள்ள முயல்வது வாஜிபாகும். குறிப்பாக மனைவியின் சூழலில் – அவளது சமூகத்தில் வாழுபவருக்கு இன்று இத்தகைய நிலை ஏற்படும்.
6. முஸ்லிம்கள் எண்ணிக்கையிற் குறைவாக வாழுகின்ற ஒரு பிரசேத்தில் அங்குள்ள ஆண்கள் முஸ்லிம்களல்லாத பெண்களை மணப்பது ஹறாமாக்கப்பட வேண்டும் என்பதே பலமான கருத்தாகும். முஸ்லிம் பெண்களுக்கு முஸ்லிமல்லாத எவரையும் திருமணம் முடிப்பது ஆகாது என்றிருக்கும் போது இததகைய ஒரு சூழலில் முஸ்லிம் ஆண்கள் முஸ்லிமல்லாத எவரையும் திருமணம் செய்வது அங்குள்ள முஸ்லிம் பெண்களை அல்லது அவர்களில் பெருந்தொகையினரை அழிக்கும் செயலாகும். இதனால் முஸ்லிம் சமூகத்திற்குப் பாரிய அளவில் தீமை விளையும். இவ்வனுமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இத்ததீங்கைத் தவிர்க்க முடியும்.
வேதத்தை உடைய பெண்களைத் திருமணம் முடிக்க அனுமதித்தமைக்கான காரணங்கள்:
இத்திருமணத்தின் மூலமாக வேதத்தை உடையவர்களுக்கும் இஸ்லாத்துக்குமிடையிலுள்ள தடைகள் நீங்க இடமுண்டு. திருமணத்தினால் தொடர்புகளும் பரஸ்பர குடும்ப உறவுகளும் ஏற்படும். இதனால், இஸ்லாத்தைப் படிப்பதற்கும் அதன் கொள்கைகளை, அடிப்படைகளை விளங்குவதற்கும் வழி பிறக்கும். இது அவர்களையும் இஸ்லாத்தில் இணையச் செய்வதற்கு வழியாகும்.
அவர்கள் ஓர் இறை வேதத்தை ஏற்றோர் என்ற வகையிலும் பல கொள்கைகளில் அவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் ஒற்றுமை காணப்படுகின்றதென்ற வகையிலும் அவர்கள் இத்தகைய ஓர் உறவினால் இஸ்லாத்தை நெருங்குவதற்குக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு என இஸ்லாம் கருதுவதனால்தான் இத்தகைய திருமணத்தை அனுமதித்துள்ளது.
இதே நேரத்தில், ஒரு முஸ்லிம் பெண் வேதத்தையுடைய ஓர் ஆணை திருமணம் முடிப்பதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. எப்பொழுதும் கணவன், மனைவி மீது ஆதிக்கம் செலுத்துபவனாவான். அவனது கட்டளைகளை ஏற்பது, அவனுக்குக் கட்டுப்படுவது அவளது கடமையாகும். ஒரு முஸ்லிமை ஒரு காஃபிர் கட்டுப்படுத்துவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. இதனால்தான் இஸ்லாம் இத்தகைய திருமணத்தை அனுமதிப்பதில்லை.
மேலும் காஃபிரான அந்தக் கணவன் தனது முஸ்லிம் மனைவியின் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. மாறாக, அதனைப் பொய்படுத்துவான். இத்தகைய விரிந்த முரண்பாடோடு குடும்ப வாழ்க்கை நடாத்துவது அசாத்தியமானதாகும். இதே நேரத்தில் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு வேதத்தை உடைய பெண்ணைத்திருமணம் முடித்தால் அவன் அவளது மார்க்கத்தையும் அங்கீகரிப்பான். அவளது வேதத்தையும் நபியையும் விசுவாசிப்பான் தனது ஈமானின் ஒரு பகுதியாக அதைக் கொள்வான்.