[ பெரும்பாலும் நான் அழகாக இல்லை, குட்டையாக இருக்கிறேன், தலைமுடி நீளமாக இல்லை, பற்கள் வரிசையாக இல்லாமல் துருத்திக் கொண்டு இருக்கின்றன, குண்டாக இருக்கிறேன், முகப்பருக்கள் அதிகமாக உள்ளன போன்ற பிரச்சினைகளே அவர்களை கவலையடையச் செய்கின்றன.
நாளாக நாளாக கவலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தங்களைப் பற்றிய தாழ்ந்த சுயமதிப்பீட்டிற்கு ஆளாகிறார்கள். விளைவு? படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடம் இருந்து விலகத் தொடங்குகிறார்கள்.
இவ்வாறு பெண்கள் தனிமையை நாடத் தொடங்கினாலே, அவர்கள் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.]
இந்த உலகில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. பெரியவர்கள்-சிறியவர்கள், பெண்கள்-ஆண்கள், திருமணம் ஆனவர்கள் – ஆகாதவர்கள், ஏழைகள் – பணக்காரர்கள், படித்தவர்கள் – படிக்காதவர்கள், வேலைக்கு செல்பவர்கள் -சுயதொழில் செய்பவர்கள் என எல்லோரையும் இந்த பிரச்சினை என்னும் பெரும்பூதம் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது.
இதில் பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே! அதிலும் குறிப்பாக விடலைப்பருவம் என்று சொல்லக்கூடிய பருவ வயதுகளில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் சொல்லி மாளாதவை.
விடலைப்பருவம் என்பது மகிழ்ச்சியும், பரவசமும் கலந்த உன்னதமான பருவம் என்றாலும், உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும் காலமும் கூட. இந்தக் காலத்தில் அவர்கள் பார்க்கும் பார்வை, அனுபவிக்கும் உணர்வுகள், எண்ணங்கள் என எல்லாவற்றிலுமே மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக இந்த வயதில் தங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களைக் கண்டு கூச்சமடைவதுடன், ஒருவிதமான பயமும், தயக்கமும் அவர்களை ஆட்கொள்கின்றன.
பூப்படைதல், முகப்பரு, மாதவிடாய் பிரச்சினைகள், களைப்பு, உடல் பருமன் போன்ற உடலியல் ரீதியான மாற்றங்களில் ஏராளமான சந்தேகங்கள் வந்துவிடுகின்றன. பாலியல் உட்பட எதைப்பற்றி வேண்டுமானாலும் தயக்கம் இல்லாமல் பேச, ஒரு விசேஷ வழிகாட்டி தேவைப்படும் பருவமிது. இந்த விசேஷ வழிகாட்டி இல்லாதபோது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள்.
இந்த நிலையில்தான் தீய நண்பர்களின் சகவாசத்தால் போதை, பாலியல் உறவு என தவறான பழக்க வழக்கங்களை நோக்கி அவர்களின் பயணம் தொடங்குகிறது. இதனால் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை சிக்கல் மிகுந்ததாக மாறுகிறது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் சில போலி மருத்துவர்களின் தவறான விளம்பரங்கள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன.
பெரும்பாலும் நான் அழகாக இல்லை, குட்டையாக இருக்கிறேன், தலைமுடி நீளமாக இல்லை, பற்கள் வரிசையாக இல்லாமல் துருத்திக் கொண்டு இருக்கின்றன, குண்டாக இருக்கிறேன், முகப்பருக்கள் அதிகமாக உள்ளன போன்ற பிரச்சினைகளே அவர்களை கவலையடையச் செய்கின்றன.
நாளாக நாளாக கவலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தங்களைப் பற்றிய தாழ்ந்த சுயமதிப்பீட்டிற்கு ஆளாகிறார்கள். விளைவு? படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடம் இருந்து விலகத் தொடங்குகிறார்கள். இவ்வாறு பெண்கள் தனிமையை நாடத் தொடங்கினாலே, அவர்கள் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
இந்தப் பருவத்தில் தங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை தெளிவாகத் தெரிந்து கொண்டு, தங்களுடைய உடல்நலப் பராமரிப்புக்குத் தேவையான பொறுப்பையும், வழிமுறைகளையும் சுயமாக வளர்த்துக் கொண்டாலே போதும். பிரச்சினைகளில் இருந்து சுலபமாகத் தப்பிக்கலாம்.
பெரும்பாலான பெண்கள் அதிகம் சாப்பிடுவதில்லை. அதிலும் குறிப்பாக டீன்ஏஜ் வயதுகளில் உள்ளவர்கள் ‘ஸ்லிம்‘மாக இருந்தால்தான் அழகு என நினைத்து பட்டினி கிடக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் ரத்த சோகை, அதிகப்படியான சோர்வு போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக படிப்பில் நாட்டம் குறைவதால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. தொடர்ச்சியான இந்த தாழ்வு மனப்பான்மையால் மன அழுத்தம் உண்டாகி தனிமையை நாடுகின்றனர். எனவே சத்தான காய்கறிகள், பழங்கள் சாப்பிட அவர்களை பழக்கப்படுத்த வேண்டும்.
ஒருவருக்கு அழகாய்த் தோன்றும் ஒன்று, மற்றவருக்கு அழகற்றதாய் தெரியலாம். எனவே அழகு என்பது நம்மிடம் இல்லை, பார்ப்பவர்களின் கண்ணில் தான் இருக்கிறது என்பதை விளக்க வேண்டும்.
உயரமாக இல்லாமல் குட்டையாக இருக்கிறோம் என்ற கவலை இவர்களே தானாக வரவழைத்துக் கொண்ட கவலைதான். உயரம் குறைவாக இருப்பதற்கு ஹார்மோன் கோளாறு, உணவுப்பற்றாக்குறை… இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.
சிலருக்கு வளர்ச்சி தள்ளிப் போவதும் உண்டு. இவர்கள் சில வருடங்கள் சென்றபின் வேகமாக வளர்ந்து, தங்களின் சராசரி உயரத்தை அடைவர். இது தெரியாமல் அவர்கள் மனக்குழப்பங்களுக்கு ஆளாகி வாழ்க்கையை வீணாக்குகின்றனர். எனவே ஒருவருக்கு அழகு மட்டும் முக்கியமல்ல. அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி போன்றவையும் முக்கியம் என்பதை உணர வைக்க வேண்டும்.
பருவ வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவர்களுக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம் பெற்றோர்கள் பேச வேண்டும். பேச கூச்சமுள்ள பெற்றோர்கள் அது தொடர்பான புத்தகங்களை அவர்களுக்கு படிக்கத் தரலாம்.
உடல் மாற்றங்கள், பழக்க வழக்கங்கள், சமூக, கலாச்சார மாறுதல்கள் போன்ற விஷயங்கள் பற்றி பெற்றோர்கள் குழந்தைகளிடம் சுதந்திரமாக பேச வேண்டும். இவ்வாறு பேசுவதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் தயங்குகிறார்கள்.
நாமும் பருவ வயதுகளில் கண்ணாடி முன்னால் நின்று நம்மை ரசிப்பதிலேயே பாதி நேரத்தை செலவிட்டவர்கள் தானே! என்பதை நினைத்துப் பாருங்கள். தயக்கம் தானாகவே ஓடிவிடும்.
அபராசிதன்
நன்றி: புலரி