சில வாரங்களுக்கு முன்பு பாட்டிமலூவில் உள்ள தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த எனது அத்தையின் மகன் அதாரை உன்னை நாங்கள் கொன்று விடுவோம் என மிரட்டி உள்ளனர் மத்திய ஆயுத படையைச் சார்ந்தவர்கள். அவன் உள்ளே சென்று ஒழிந்து கொண்டான். எனது அத்தையின் பத்து நிமிட கெஞ்சலுக்கு பின்னரே அவன் படைவீரர்கள் அவனை பார்த்து மிரட்டிய வார்த்தைகளை சொன்னான்.
எனது அத்தை வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். கோபத்தில் தன் கண்களில் வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு தனது வீட்டின் அருகே நடந்து கொண்டிருந்த விடுதலை போராட்ட ஊர்வலத்தில் தன்னையும் தன் மகனையும் இணைத்து கொண்டு, தங்களின் பயன் போகும் வரையில் விடுதலை முழக்கங்களை எழுப்பினார்.
இது அவர்களுக்கு பயனும் தந்தது. அவர்கள் இருவருமே வீட்டை விட்டு வந்து இது போன்ற ஊர்வலத்தில் கலந்து கொள்வது இது தான் முதல் முறை. எனது அத்தை தனது கைகளில் உள்ள ரூபாய் நோட்டுகளில் எல்லாம் “இந்தியாவே வெளியேறு, இந்தியாவே திரும்பி போ (Go India, Go Back)” என்ற வாசகங்களையும், அந்த ஐந்து வயது சிறுவனோ அதே வாசகங்களை தனது வீட்டு சுவர்களில் எழுதிவைத்தான்.
இந்த ஒரு வாக்கியம் மட்டும் தான் அவனுக்கு ஆங்கிலத்தில் அவனுக்குத் தெரியும். இது போன்ற சிறுவர்கள் தான் சிறீநகரின் அடைக்கப்பட்ட கடைக் கதவுகளிலும், யாருமில்லாத சாலைகளிலும், சுவர்களிலும் இது போன்ற விடுதலை முழக்கங்களை எழுதுகின்றனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பிரச்சனைகளை எல்லாம் தாண்டி காஷ்மீர் விடுதலை நிகழ்வு சென்று விட்டது. காஷ்மீர் துப்பாக்கிகளிலிருந்து விடுதலை முழக்கங்களுக்கு மாறிவிட்டது.
இதில் கல்லெறிவது கூட தங்கள் அமைதி வழி போராட்டம் அரசால் மிகக்கடுமையாக அடக்கப்படும் போது மட்டுமே நிகழ்கின்றது. 2008ல் 3 இலட்சம் மக்கள் வீதிகளுக்கு வந்து மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மனித சங்கலி போராட்டம் நடத்தினர். அப்பொழுது ஒருவர் கூட எந்த ஒரு பதுங்கு குழியையும், படை வீரரையும் தொடக்கூட இல்லை. ஆனால் இந்த வருடம் காஷ்மீர் மக்களின் அமைதி ஊர்வலங்கள் அரசால் கட்டாயமாக தடை செய்யப்பட்டன. கூட்டத்தை கலைப்பதற்காக மக்களை சுடுவதற்கு இராணுவத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
இந்த வருடத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் மக்கள் கூடுவதற்கு இராணுவம் அனுமதியே கொடுக்கவில்லை. இறுதி ஊர்வலத்தில் சென்றவர்களை நோக்கி அவர்கள் பலமுறை சுட்டனர். இதனால் பலர் கல்லெறிபவர்களாக ஆக்கப்பட்டார்கள்.
காஷ்மீரில் இன்று இராணுவத்தினால் ஒரு மருத்துவமனையையோ, தங்களுக்கு உதவக் கூடிய வீட்டையோ காண்பது அரிதான ஒன்று. காஷ்மீரிகள் இந்தியாவுடனான தங்கள் பிரச்சனையை துப்பாக்கிகள் இல்லாமல் தீர்வு காணுகின்றனர். ஊடகங்கள் காஷ்மீரிகளை பாகிசுதானின் உளவு நிறுவனத்தின் காசுக்காகவும், PDP யின் காசுக்காகவும் போராடுபவர்களை போல காட்டும் போது நான் கடுமையான கோபத்திற்கு உள்ளாகின்றேன். சிறீநகரின் எல்லா தொகுதிகளையும் வென்றது தேசிய காங்கிரசு, PDP அல்ல. இந்த இடம் தான் கல்லெறிதலில் மிக முக்கியமான நகரமாகும்.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஒரு நேர்காணலில் பரூக் அப்துல்லாவிடம் இந்த கேள்வியை கேட்டேன், நீங்கள் உங்களை காஷ்மீரிகளின் தலைவராக பார்க்கின்றீர்களா?, அல்லது காஷ்மீரில் உள்ள ஒரு அரசியல் கட்சியின் தலைவராக பார்க்கின்றீர்களா?. அவர் மிகவும் கோபமாக சொன்னார் நான் 60 விழுக்காடு வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளேன். இப்பொழுது அந்த வாக்குகள் எல்லாம் எங்கு சென்று விட்டன என எண்ணுகிறார் அவர்? கல்லெறிபவர்களும், அமைதி வழியில் போராடுபவர்களும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கொல்லப்படுவது தொடர்ந்தால் காஷ்மீரிகள் தாங்கள் முன்பு வைத்திருந்த துப்பாகிகளை கண்டிப்பாக மீண்டும் கையிலெடுப்பார்கள்.
உலகிலேயே அதிக ஆயுத கொள்வனவு செய்யும் நாடான இந்தியாவிற்கும், காஷ்மீரில் உள்ள 7,00,000 துருப்புகளுக்கும் எதிரான இன்னொரு ஆயுத புரட்சியும் தீவிரவாதம் என்ற பெயரில் மறைத்து அழிக்கப்படும். AK 47 துப்பாக்கிக்கு எதிராக கையில் கல்லுடன் மோதும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் கையில் உள்ள கல்லை கீழே வைத்து விட்டு தாங்களும் AK 47 துப்பாக்கியை கையிலெடுத்தால் நிலைமை 1990களில் இருந்ததைவிட மிக மோசமாக மாறிவிடும்.
காஷ்மீர்களுக்கு தெரியும் எவ்வாறு ஆயுதப் போராட்டம் தங்கள் குழந்தைகளையே அரித்து தின்னும் என்று, ஆனாலும் அவர்கள் தங்கள் விடுதலைக்காக அதைச் செய்வார்கள். ஆனால் தற்போது காசுமீர் போராட்டம் வெறும் கற்களுடன் மட்டுமே நடைபெறுகின்றனது. ஆனால் தங்களைச் சுற்றி உள்ள இந்த கண்ணாடி மாளிகைகள் அப்படியே இருக்காது. போர் மிகத் தீவிரமான ஒன்றாக மாறும், இருந்தபோதிலும் என்னுள் உள்ள அமைதி விரும்பி அந்த நிலைக்கு காசுமீர் தள்ளப்படாது என்று கூறுகிறான்.
காஷ்மீரில் இஸ்லாம் என்ற வார்த்தை தொன்று தொட்டு இருந்து வருகின்றது, இதை காஷ்மீரிகள் தங்களுக்கே உரிய தனித்துவ முறையில் புரிந்துகொண்டுள்ளனர். எனது தாயார் புனித தளங்களுக்கு செல்வார். எனது பெண் தோழியும் கூட. எனக்கு தெரிந்த எல்லா பெண்களும் அங்கே செல்வார்கள். மசூதிகளை விட அதிகமான கூட்டம் இந்த புனித தளங்களில் எப்போதும் இருக்கும். சூஃபி இஸ்லாம் இங்கு பல நூறு வருடங்களாக இருந்து வருகின்றது. இந்த புரட்சிகளும் கூட ஒழுக்கு நெறிகளை பின்பற்றியே நடக்கின்றது. காஷ்மீரிகள் பணிவானவர்கள் மற்றும் விட்டுக் கொடுப்பவர்கள் என்பதை எப்பொழுது எங்களின் பலவீனமாக அரசு கருத ஆரம்பிக்கின்றதோ அப்பொழுது அரசு அடக்குமுறை தகர்க்கப்படும்.
1990களில் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு என்ன நடைபெற்றது என்பது எனக்கு தெரியாது. நான் அப்பொழுது சிறியவன். ஆனால் இன்று அந்த நிகழ்வு பல திரிபுகளுக்கு உள்ளாகிவிட்டது. காஷ்மீரில் பண்டிட்டுகளையே காணாத இசுலாமிய இளைய தலைமுறைகளில் நானும் ஒருவன். ஆனால் அந்த வருடம் என்ன நடைபெற்றது என்பது பற்றிய பல கதைகளை நான் கேள்விப்பட்டுள்ளேன்.
எப்பொழுதெல்லாம் அன்று என்ன நடைபெற்றது என தெளிவாக தெரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றோனோ அப்பொழுதே அது தெளிவில்லாமல் செல்ல ஆரம்பிக்கின்றது. எங்களது பழைய குடும்ப புகைப்படங்களில், பல காஷ்மீர் பண்டிட்டுகளை நான் பார்த்ததுண்டு. எங்களது குடும்பத்தை பொருத்தவரையில் பண்டிட்டுகளுக்கு எதிராக பேசுவது தவறு, அவர்கள் விடுதலையை எதிர்க்கும் வலது சாரி இயக்கத்தை சார்ந்தவர்களாக(இதை ஒரு மத போராட்டமாக பார்ப்பவர்கள்) இருந்தாலும் சரி. பண்டிட்டுகள் மீண்டும் அவர்களின் பூர்விக நிலங்களில் வந்து குடியேற வேண்டும். என்னை போன்ற இளைஞர்கள் அவர்களை வேறு யாரோ ஒருவர் என எண்ணாமல் நண்பர்கள் போல பழகவேண்டும் என்ற எண்ணம் என்னுள் எப்போதும் உண்டு.
என்னை பொருத்தவரை காஷ்மீர் என்பது கென்றி காரிட்டர் பிரசனின் புகைப்படத்தை போல. அந்த புகைப்படத்தில் ஒரு பெண்கள் கோ.இ.மாரன் மலை உச்சியில் நின்று கொண்டு தங்களது தெய்வங்களை வணங்கிக் கொண்டிருப்பார்கள். ஒருவர் பழைய காஷ்மீரி பர்காவிலும், இன்னொருவர் காஷ்மீரின் பாரம்பரிய உடையுடனும் மலைகளையும், அகண்ட வானவெளியை பார்த்த மாதிரி இருப்பார்கள். அவர்களின் இறைவழிபாட்டு முறைகளில் வேறுபாடிருப்பினும், அவர்களின் கோரிக்கை ஒன்றாக இருந்தது. இந்த பிரச்சனை ஏற்கனவே அவர்கள் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது. அமைதி வழி போராளிகள் கொல்லப்படுவது தொடர்ந்தால் இந்த பெண்களும் ஒரு நாள் காணாமல் போய் விடுவார்கள். நாம் கனவு கண்ட காஷ்மீர் கனவிலேயே போய்விடும் போல் உள்ளது.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் நானும் “விடுதலை” போராட்டம் முடிவடைந்து விட்டதாக நினைத்தேன். ஆனால் துப்பாக்கிகளிலிருந்து கல் என்ற ஆயுதமாக மாற எடுத்துக் கொண்ட காலம் தான் அது என்பது எனக்கு இன்று புரிகின்றது. 1953களில் சர்வசன வாக்கெடுப்பு என்று இருந்தது. 1970களின் ஆரம்பத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமான “Al Fatah” (அல் பாத்தா என்பதற்கு வெற்றி எனப் பொருள். இந்த இயக்கம் முன்னெடுத்த போராட்டமே சுய நிர்ணய உரிமை போராட்டம் ஆகும்) என்றானது , 1989களில் சம்மு காசுமீர் விடுதலை அமைப்பு என்றானது, இன்று ஒன்பது வயது கல்லெறியும் சிறுவன் என்றிருக்கும் போராட்ட நிலையில் என்றும் விடுதலை முழக்கம் மட்டும் மாறவே இல்லை. போராட்ட வழிமுறைகள் மட்டுமே மாறியுள்ளன.
“பெரிய பொருளாதார மற்றும் அதிகார போட்டியில் வளர்ந்து வரும் நாடான இந்தியா” காஷ்மீரி மக்களின் மனங்களை கவர பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்து முயற்சி செய்தது. பெரும்பான்மையானோர் அந்த பணத்தை பெற்றிருப்பினும் தங்கள் உணர்வுகளை ஒரு பொழுதும் அவர்கள் மாற்றிகொள்வதாயில்லை. இது வழிமுறை 1. இது சரியாக நடைபெறாததால் வழிமுறை 2ல் தவறான நபர்களுக்கு நட்சத்திர விடுதிகளில் கவனிப்பு நடந்தது. ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை. இந்தியா தனது பணத்தையும், ஆயுதத்தையும் கீழே வைத்து விட்டு காஷ்மீர் பிரச்சனையை காஷ்மீரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க வேண்டும்.
இரண்டு வழிகளில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம். முதலில் இதை பிரச்சனை என்றுணர்து, பிரச்சனையில் சம பங்குள்ளவர்கள் என கருதி தில்லி காசுமீரி மக்களுடன் சரியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது. அல்லது இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை எனக் கூறி நோயை அல்லாமல் நோயின் அறிகுறிகளை மட்டும் குணப்படுத்தும் வேலையில் ஈடுபடுதல். தேசிய காங்கிரசு PDP போன்ற அரசியல் கட்சிகள் கூறும் இந்திய அரசமைப்பின் எல்லைக்குள் “சுயாட்சி” போன்றவற்றை எல்லாம் மைய அரசு தூக்கியெறிந்து பல நாளாகி விட்டது.
மக்கள் கூட்டமைப்பின் தலைவர் “சாச்சத் லோனோ கூறும் “அடையக்கூடிய தேசியம்” என்பதை பற்றி இரண்டு வருடமாக ஒருவர் கூட இதுவரை வாயே திறக்கவில்லை. குரியத் கூட்டமைப்பின் தலைவரான மிர்வாசு உமர் கூறுகையில் “தில்லியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் நாங்கள் எங்கள் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை ஊசலாட்டதில் வைத்துள்ளோம்” என்கிறார். இந்தியா ”வெறும் புகைப்படத்திற்கு மட்டும் அல்லாமல் குறைந்தபட்சம் நேர்மையுடன் பேச்சு வார்த்தை நடத்தும் என நாங்கள் நம்புகின்றோம்” என்றார் அவர்.
இந்திய படை வீரர்களோ மிகவும் ஏழ்மையான கிராமத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை யாருமற்ற பதுங்கு குழிகளில் கழிக்கின்றனர். கல்லுக்கு பதிலாக காஷ்மீரத்து சிறுவர்களின் வாழ்க்கையை முடித்து விடுகின்றார்கள். சுற்றி போடப்பட்டுள்ள முள்வேலிகள், உளவியல் ரீதியான கோளாறுகளால் அதிக பட்சமான தற்கொலைகளும், தங்கள் குடும்பத்தினரையே கொலை செய்தல் போன்றவையும் காஷ்மீரில் மிக அதிக அளவில் உள்ளன. இந்தியா இவர்களை தேச பகதிக்காக எரியும் மெழுகாய் மட்டும் பார்க்காமல் தகுதி வாய்ந்த குடிமகன்களாய் என்று பார்க்கத் தொடங்குகின்றதோ அன்று தான் காஷ்மீரிகளுக்கும், படையினருக்கும் உண்மையான விடுதலை ஆகும்.
இந்தியா ஒன்று காஷ்மீரை விட்டு வெளியேறலாம் அல்லது அங்குள்ள மக்களின் மனதில் இடம்பிடிக்கலாம். ஆனால் 63 வருடங்களாகியும் இந்தியாவால் காஷ்மீர் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவே இல்லை.
மூலப்பதிவு : http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne280810Iamapracifist.asp
நன்றி: வினவு