டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)
இஸ்லாமிய மதம் சாந்தியினையும்-சமாதானத்தினையும் ஹ_தபிய்யா உடன்படிக்கை மூலம் உலகிற்கு பறை சாட்டிய மதம், ஒருவர் மற்றொருவரை சந்திக்கும் போது உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாகுக என்று முகமன் கூறும் பழக்கம் உள்ள மதம், சகோதரத்தினை வலியுறுத்தும் மதம், ஈகை என்ற பசிபோக்கும் சீரிய வறியவர் வலி தீர்க்கும் நிவாரணி உள்ள மதம் இஸ்லாம், ஒற்றுமை என்ற பாசக் கயிறினை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று போதித்த மதம் இஸ்லாம்.
பார் போற்றும் புனிதராக வந்து தன் துணைவியார் அன்னை கதிஜா பிராட்டியார் ஒருவரால் ஏற்றுக்கொண்டு இன்று 150 கோடி மக்களை உலகில் கொண்ட மதம் இஸ்லாம் நோன்புப் பெருநாளை நேக்கி வீறுநடை போட்டுக்கொண்டு இருக்கும் நேரத்தில் தஞ்சை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவிடாக்குறிச்சியில் சகோதர யுத்தகளமாகி இருவர் இறந்தும், பலர் படுகாயம் அடைந்திருப்பதினைக் கண்டு முஸ்லீம்கள் அனைவருடைய கண்களும் குளமாகுவது இயற்கைதானே!
நோன்பு மாதமென்றாலே வீண் வம்பு, சண்டை, சச்சரவு, பகை, பசி மறந்து, தனித்திருந்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் நல்ல மாதம் என்று தான் சொல்லுவது பழக்கம். நோன்பு மாதத்தின் முத்தாய்ப்பு வைத்தாற்போல லைலத்துர் கதிர் நாளில் பார்போற்றும் புனிதர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு புனிதக் குர்ஆன் அருளப் பெற்ற மாதம்.
அப்படிப்பட்ட புனித மாதத்தில் சிறுவர் முதல் முதியவர் வரை பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகை நடத்தி நோன்பு திறக்கம் நிகழ்ச்சிகளில் ஒருவருக்கொருவர் பாச உணர்வோடு நடந்து கொள்ளுவது வழக்கம். ஏழை, எளியவர்களுக்கு சக்காத், சதக்கா, பித்ரா கொடையின் மூலம் வாரி வழங்குவதினை எல்லா பத்திரிக்கைகளும், எலக்ரானிக் மீடியாக்களும் படம் போட்டு காட்டுகின்றன.
நோன்பு நேரத்தில் மாற்று மதத்தினவருடன் போட்டிப்போட்டுக் கொண்டு நோன்பு நேர நிகழ்ச்சிகளில் பாச உணர்வோடு கலந்துரையாடல் செய்யும் நாம் அல்லாஹ்வினையும் அவனுடைய திருத்தூதரையும் நம்பும் நாம் நம் சகோதரர்களுடன் தோழமையுடன் நடந்து கொள்வதில்லை என்பது திருவிடாக்குறிச்சியில் நடந்தசம்பவத்தினைப் பார்த்த பின்பு கோள்வி எழுப்பத் தோனவில்லையா?
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்த இஸ்லாத்தின் பாசப்பிணைப்பில் அனைவரும் சகோதரர்களாக கட்டுண்டோம். ஆனால் அதற்குப் பின் வந்த இமாம்களால் பல்வேறு பிரிவுகளாக இன்று பிரிந்து நிற்கின்றதால் சமுதாயக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதற்கு அந்த இமாம்கள் காரணம் அல்ல. மாறாக அந்த இமாம்கள் சொன்னதாக பிதற்றும் தனி நபர் போதனைகளால் பிரிந்துள்ளோம் என்றால் மறுக்க முடியாது.ஆனால் எல்லாப் பிரிவினரும் வழிபடும் ஏகத்துவ அல்லாஹ்வும் அவனுடைய இறுதித்தூதரையும் தான்.
ஓடும் நதிகள் பல பிரிவுகளாக பிரிந்து சென்றாலும் ஒன்றாக சங்கமம் ஆகும் இடம் இஸ்லாம் என்ற மகா சமுத்திரமென்றால் மிகையாகுமா? சிறு சிறு சாதனைகளுக்குக் கூட தங்களை தாங்களே பாராட்டிக் கொள்ளும் சமுதாய இயக்கங்கள் தங்களை தாங்களே சுய பரீசலனை செய்து கொண்டு பணியாற்ற வேண்டும்.
இன்னும் சட்டசபைத் தேர்தல் அறிவிப்புக்கூட வரவில்லை அதற்குள்ளாக தங்கள் ஆதரவுகளை சில கட்சி தலைமைகளிடம் தெரிவித்து தங்கள் படமும் பத்திரிக்கைகளில் வர ஏற்பாடு செய்துள்ளனர். அந்தக் கட்சி தலைமைகளிடம், எங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்த நீதியரசர்கள் சச்சார், மற்றும் ரங்கநாத் மிஸ்ரா போன்றவர்களின் பரிந்துரைகள் நிறைவேற்றி, மகளிருக்கு ஒதுக்கீட்டில் இஸ்லாமிய பெண்களுக்கு தனி ஒதிக்கீடு போன்ற குறைந்தளவு திட்டங்களுக்குக் கூட தங்கள் ஆதரவு கருத்துக்களை அந்தக்கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்ற உறுதி மொழியாவது வாங்கப்பட்டு அதனை பத்திரிக்கை வாயிலாக வெளியிடப்பட்டதா என்றால் இதுவரை இல்லைதானே! ஆகவே அந்த இயக்கங்களின் சமீபகால செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமானவை என்று உங்களுக்குத் தோனவில்லையா?மற்றொன்று, ‘மீலது விழா நேரத்தில் போரா சமுதாயத் தலைவர் ‘புர்கானி முபாரக்’
என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இணையான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அது சில இடங்களில் இன்னமும் அகற்றப்படாமல் உள்ளதினை மண்ணடியில் இன்றும் காணலாம்.
சிறு சிறு பிரச்னைகளை சமுதாய இயக்கங்கள் தவிர்த்து மிகவும் பின் தங்கியிருக்கும் சமுதாய மக்கள் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி போன்றவைகளில் முன்னேற வழிவகுத்தால் அவர்களுடைய செயல்பாடுகள் பொன்னெழுத்துக்களால் பொரிக்கப்படும். பள்ளிவாசல்களின் வக்ப்போர்ட் சட்ட, திட்டங்களுக்குட்பட்டு தொழுகைகள், திருமணம், பள்ளிக்கூடங்கள், மதரஸாக்கள், நூலகங்கள், விளையாட்டு சங்கங்கள், தினசரி மற்றும் வாரச்சந்தைகள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் சில சமுதாய இயக்கங்கள் தங்களுக்குத் தாங்களே ராஜாக்கள் என் சில முறைகளை ஏற்படுத்தி செயல்படுத்தி முறைப்படி இயங்கும் பள்ளிவாசல் அமைப்பிற்கு எதிரி அமைப்புகளாக செயல்படுவதில் தான் வீனான குளறுபடிகள், ரத்தம் சிந்தல் போன்றவைகள் ஏற்படுகின்றன.உதாரணத்திற்கு கல்கத்தா நகரில் பள்ளிவாசல்கள் ஒளிபெருக்கிகள் மூலம் தொழுகைக்கு அழைப்பது சிலருக்கு இடையூறாக இருப்பதாகச் சொல்லி அதனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற செய்தியினை பத்திரிக்கைகள் சில காலங்களுக்கு முன்பு வெளியிட்டன.
அதேபோன்ற நிலையும் சென்னை மண்ணடி பகுதியில் வந்தாலும் வரலாம். ஏனென்றால் ஏற்கனவே இருக்கும் பள்ளிவாசல் பகுதிகளுக்குப் பக்கத்திலே சில சமுதாய இயக்கங்கள் அலுவலகம் அமைத்து ஒளிபெருக்கி மூலம் தங்கள் வழிபாடுக்கு அழைக்கிறார்கள்.
இது போன்ற அழைப்பின் மனக்கசப்புதான் திருவிடாச்சேரி கிராமத்தில் ரத்தக்களறிக்கு வழிவகுத்துள்ளது. இது நமது சமுதாயத்திற்கு தேவையான ஒன்றா என்றுஎண்ணிப்பார்க்கவேண்டும்.தமழில் ஒரு கிராமிய பழமொழி உங்களுக்கு தெரிந்திருக்கும். ‘ஊர் இரண்டுபட்டால்
கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பது தான் அந்த பழமொழி. இஸ்லாமிய அமைப்புகள் போடும் சண்டைகளால் சமுதாய எதிரிகளுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கலாமா? நாட்டிலே நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கு முதலில் முஸ்லிம் தீவிரவாதிகள் தான் காரணம் என்று சொன்னவர்கள் இன்று மகாராஸ்ட்ரா மாநிலம் மாலேகான், ஹைதாராபாத், கோவா போன்ற இடங்களில் ஏற்பட்ட குண்டு வெடிப்புகளுக்கு காவி தீவிரவாதிகள் தான் காரணம் என்று தைரியமாக சொன்ன உள்துறை அமைச்சருக்கு எவ்வளவு கண்டனக்கனைகள். அப்படியிருக்கும் போது சும்மா கிடந்த வாய்க்கு அவல் கிடைத்தது போல திருவிடைக்குறிச்சி சம்பவங்கள் ஒரு வாய்ப்பாக சமுதாய எதிரிகளுக்கு அமையும் என்பது வெள்ளிடைமலை.
இந்த நேரத்தில் 5.5.1970 அன்று இரவு கொட்டும் மழையில் மறைந்த தன்னலமற்ற சமுதாய செம்மல் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் உத்திரபிரதேசத்தில் அலிகார் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆற்றிய பேருரையின் போது, ‘நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம். சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிக மிக அவசியம். சிறுபான்மை சமுதாய மக்கள் ஒற்றுமையாக சேர்ந்து வாழ்வது குர்ஆனின் கட்டளையாகும். இறைவனின் கட்டளையை ஏற்று முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்ந்த காலம் வரை சிறப்பாக வாழ்ந்தார்கள். என்று ஒற்றுமையினை மறந்தோமோ அன்றே நாம் தரம் தாழ்ந்து விட்டோம்…’ ஆகவே நாம் வேற்றுமையில் இருப்பதால் தான் இன்று அதனை விட தாழ்ந்த நிலைக்கு சகோதரர்களுக்குள் ரத்தம் சிந்தும் அளவிற்கு சென்றுள்ளோம். அதனை நினைத்துத்தான் நம் கண்கள் குளமாகி விட்டது என்றால் மிகையாகுமா?
ஆகவே இனியாவது நாம் வேற்றுமை மறந்து ஒற்றுமை என்ற பாசக்கயிறை கெட்டியாக கட்டிப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு அப்படி செய்தால்தான் வருங்கால சமுதாய பொது பிரச்சனைகளுக்கு வழி தேட முடியுமென்றால் சரிதானே சொந்தங்களே!