ஹுஸைனம்மா
படம் ஓடிக்கொண்டிருந்தது. வழக்கம்போல ஒரு ஹீரோ, ஹீரோயின், வில்லன் கதைதான். வில்லனை ஜெயித்து, ஹீரோ ஹீரோயினைக் கைப்பிடிக்கும் கதை. இந்தப் படங்களிலெல்லாம் வில்லன் ஏன்தான் வர்றானோ? எப்பப் பாரு ஒரே மாதிரி கதை. ஒரு ஹீரோ, அவனுக்கு பிரச்னை கொடுக்கிறதுக்குன்னே ஒரு வில்லன்.
அதென்ன எல்லாப் படத்துலயும் ஒரு வில்லன்? வில்லன் இல்லாம ஏதாவது படம் வந்திருக்கா? ஆனா வில்லன் இல்லாத படத்துல என்ன சுவாரஸ்யம் இருக்கும், இல்லையா? வில்லன் இருந்தாத்தான் ஹீரோ அவனோட தீய எண்ணங்களையும், திட்டங்களையும் முறியடிச்சு, அவனை ஜெயிச்சு வெற்றி வாகை சூடி காதலியையோ, கம்பெனியையோ, நாட்டையோ கைப்பற்ற முடியும்.
இதுவே, வில்லன்னு ஒரு கேரக்டரே இல்லாம, ஹீரோவும், ஹீரோயினும் காதலிச்சு, கல்யாணமும் பண்ணி, குடும்பம் நடத்தி, வயசாகி…. இதுல என்ன சுவாரசியம் இருக்கு? படம்னா, ஒரு வில்லன் இருக்கணும், இருந்தாத்தானே விறுவிறுப்பு? அந்த வில்லன், எதிரி நாட்டவனா இருக்கலாம், இல்ல, சொந்த அக்கா புருஷனாவும் இருக்கலாம், ஏன், உடன்பிறந்த அண்ணனாகக் கூட இருக்கலாம். ஆனா வில்லன் வேணும்.
நிஜ வாழ்வில் வில்லன்கள் உண்டா? இருப்பாங்களே, எதிர்வீட்டுக்காரி, செட் பண்ணி வச்ச ஃபிகரை தள்ளிக்கொண்டுபோகும் நண்பன், மேனேஜரிடம் போட்டுக்கொடுத்தே பேர் வாங்கும் அக்கவுண்ட்ஸ் அஸிஸ்டண்ட், இப்படி விதம்விதமாக… யாருமே இல்லையென்றாலும், நம்மனமே நம் வில்லனாய் பல சமயங்களில்!!
ஆம், மனம்தானே நமக்கு வில்லனாய் நிற்கிறது பலபோதும்!! சரியான பாதை அறிவுக்குத் தெரிந்தாலும், மனம் வில்லனாய் மாறி, நம்மைத் தவறிழைக்க வைக்கிறதே!! மனதைக் கொண்டு, தீய எண்ணங்கள் எனும் வில்லனை ஜெயிக்க முடிந்தால், நாம் ஹீரோ!! வில்லனை ஜெயிக்காமல், அதன் பாதையில் நடந்தால், எனக்கு நானே வில்லன்!!
ஆக, நான் வில்லனாக இருப்பதும், ஹீரோவாக இருப்பதும் நம் கையில், அதாவது என் மனதில்!! மீண்டும் அந்தக் கேள்வி வந்தது. வில்லனின் அவசியம் என்ன? ஏன் எல்லாருமே நல்லவர்களாகவே இருக்கக்கூடாது? அப்படி இருந்தால் உலகம் அமைதியான இடமாக இருக்குமே!!
ஏதோ மெல்ல மெல்ல புரிந்தது. இதோ, நன்மையின் வடிவாக நான் இருக்கிறேன்; தீமையின் வடிவாக ஷைத்தான் இருக்கிறான். உனக்கென்று நான் கொடுத்த உன் ஆறாவது அறிவும் இருக்கிறது; அதனைக் கொண்டு, நன்மை, தீமை தெளிந்தாராய்ந்து, அதன்படி நட என்று சொல்கிறானோ வல்ல இறைவன்?
ஏன் ஷைத்தானைப் படைக்க வேண்டும்? அவன் இல்லையென்றால் எல்லாருமே நல்லவர்களாக இருப்பார்களே; உலகில் கொலை, கொள்ளை, வஞ்சம், துரோகம், அழுகை, கோபம் எதுமே இருக்காதே. இவை இல்லாத பூவுலகில் வாழ்வது எவ்வளவு சுகமாக இருக்கும்?
சுகமாக இருக்கும்; ஆனால்
எல்லாருமே நல்லவர்களாக இருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?
அடிமைகள் அல்லவா, சுய விருப்பு, வெறுப்பு இல்லாது, உடையவன் இட்ட கட்டளைப்படி நடக்கும் நிர்பந்தத்தில் இருப்பர். அதாவது, சுய பகுப்பு என்ற ஒன்றே இல்லாது, கிட்டத்தட்ட ஐந்தறிவு படைத்த விலங்குகள் போலவே மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
மனிதர்களுக்கு மட்டும் ஆறாவது அறிவு எதற்கு? நன்மை, தீமை பகுத்தறிந்து, சரியானதைத் தேர்ந்தெடுத்து, அதன் வழி நடக்கவே இந்த ஆறாவது அறிவு!!
நம்முன், பலவகை உணவுகளையும் வைத்து, இதில் உன் விருப்பப்படியும், தேவைப்படியும் உணவைத் தேர்ந்தெடுத்து உண் என்று சொல்வதற்கும்; ஒரே வகை உணவை மட்டும் வைத்து, இதுதான் உன் அன்றாட உணவு என்பதற்கும் வேறுபாடு உண்டல்லவா?
ஆக, ஷைத்தானைப் (தீய சக்தியை) படைத்ததன்மூலம் மனிதர்களுக்கு நியாயமே செய்துள்ளான் இறைவன். வாய்ப்பே கொடுக்காமல், நல்லவர்களாக இருக்க வைப்பதைவிட, ஆப்ஷன்ஸ் கொடுத்து, Choose the best answer என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை நம்மிடமே தந்திருக்கிறான் இறைவன்!!
source: http://hussainamma.blogspot.com