கலீல் பாகவீ
உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை.
பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை.
காலையில் எழுந்து டீ அல்லது காஃபி
குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும்…
என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை.
புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும்
என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை.
இவருக்குத்தான் இனிய பெருநாள்…!
தன் ஆணவத்தை அடக்கி
அலட்சியப் போக்கை அழித்து
பகலில் பட்டினி கிடந்து
இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு
பசி, தாகத்தால் இச்சையை வென்று
இறை கடமைகளை நிறைவேற்றி
தானத்தால் ஏழைகளின் கண்களை திறந்த
உண்மை முஸ்லிமுக்குத்தான் பெருநாள்…!
வறியவர்களின் தேவைகளை கவனித்து
பட்டினியையும், பசியையும் அடக்கி,
நோன்பினால் ஈமானை பலப்படுத்தி
ஆன்மிக பலத்தை நிலை நாட்டி
ஒரு மாத கடுஞ்சோதனையை வென்று
இறைவனுக்காக நோன்பிருந்த
இறைமறையை ஓதி உணர்ந்த
இறைகடமைகளை நிறைவு செய்த
உண்மை முஃமினுக்குத்தான் உன்னத பெருநாள்…!
ஏழைவரி(ஜகாத்)யை முறையாக அளித்து
கருமித்தனத்தை அடியோடு ஒழித்து
சிறியவர்களை போற்றி – பாராட்டி
பெரியவர்களை மதித்து நடந்து
அறிஞர்களுடன் பண்புடன் நடந்து
செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு
இனி பாவமே செய்யமாட்டேன்
என்ற உறுதி கொண்ட
உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!
எனது தொழுகை அல்லாஹ்வுக்கே!
எனது தியாகச் செயல் அல்லாஹ்வுக்கே!
எனது பொதுப்பணி அல்லாஹ்வுக்கே!
எனது வாழ்வு அல்லாஹ்வுக்கே!
எனது மரணம் அல்லாஹ்வுக்கே!
என்று சத்தியப் பிரமாணம் எடுத்த
உண்மையளர்களுக்குத்தான் உண்மைப் பெருநாள்…!
பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A (அரபிக்)., M.A (தத்துவமும் சமயமும்).,