எம்பெருமானார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அநாதைகளை ஆதரியுங்கள் என்று கூறியுள்ளார்கள்.
அயலவர்களை ஆதரியுங்கள், நோயாளர்களை பார்வையிடுங்கள், அவர்களது சுகத்திற்காக பிரார்த்தனை புரியுங்கள், அண்டை வீட்டான் பசித்திருக்க தான் மாத்திரம் புசிப்பவன் என்னைச் சார்ந்தவன் அல்ல என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்.
அல்லாஹ்வின் கயிற்றை பலமாக பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் என அல்-குர்ஆன் கட்டளையிடும் போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒற்றுமை பற்றி எவ்வளவோ வரைவிலக்கணங்களை விரிவாக விளக்கியுள்ளார்.
ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு துன்பம், நோய் இடையூறு ஏற்படுமிடத்து அதற்காக முன்னின்று உதவக் கூடியவன் மற்றுமொரு முஸ்லிமாகவே இருக்க வேண்டும்.
இஸ்லாம் தெளிவான விளக்கங்களை தருமிடத்து, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ் விளக்கமளிக்கும் போது அனைத்திற்கும் மேலாக அல்-குர்ஆன் எமக்கு வழிகாட்டும் போது எமது நடத்தைகள் நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை சீர்தூக்கி பார்ப்பதே இக்கட்டுரையின் குறிக்கோளாகும்.
புனித அல்-குர்ஆனில் ”சிந்தியுங்கள்” என்ற வாசகம் பல்வேறு இடங்களில் வலியுறுத்தப்படுகின்றது.
பெருமானாரின் அழகிய முன்மாதிரியும் ஹதீஸ் விளக்கங்களும் இதனை மேலும் வலியுறுத்தி நிற்கின்றது. ஆயினும் நடைமுறையில் முஸ்லிம்களினால் இது பற்றிய அறிவும் தெளிவும் விளக்கமும் செயற்பாட்டிற்கு வந்துள்ளதா என்பது கேள்விக்குறியானதே.
இன்றைய நிலைமையில் நாம் காணும் நோய்களும், துன்பங்களும், துயரங்களும் அவஸ்தைகளும், அவலங்களும் ஏராளம். இது பற்றி சிறிது விரிவாக நோக்குவோம்.
அநாதைகளை ஆதரிப்பதற்கென அவர்களுக்கான பல்வேறு நிலையங்கள் பல பாகங்களிலும் உருவாகியுள்ளன. அங்கவீனர்களின் வாழ்வையும் வளப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிலையங்கள் நாலாபக்கமும் உருவாகி வருகின்றது. மந்த புத்தியுடையவர்களை ஆதரிப்பதற்கும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இவ்வாறு நிலையங்களும், திட்டங்களும் செப்பனிடப்படும் போது இன்னுமொரு பகுதியினர் எத்தகைய கஷ்டத்தினை, துன்பத்தினை அனுபவிக்கின்றனர் என்பதனையும் தேடிப்பார்ப்பது முஸ்லிம்களாகிய நமது தவிர்க்க முடியாத கடமையும் பொறுப்புமாகும்.
இன்று சிறுநீரகம் செயலிழக்கும் போது பல்வேறு அவஸ்தைகளுக்கு உள்ளாகி இதற்கான வைத்திய பராமரிப்புச் செலவிற்கும் இறுதியில் சத்திர சிகிச்சைக்கும் இலட்சக்கணக்கான ரூபாய்களை செலவிட வேண்டியுள்ளது. இன்று நமது சகோதர முஸ்லிம்களிடையே ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகள் ஏராளம். இவர்களது குடும்பம் நட்டாற்றில் விடப்பட்ட அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இவர்களது மனைவி மக்கள் படும் அவஸ்தைகள் ஏராளம். கணவனை காப்பாற்ற முயலும் மனைவியும் குடும்பமும் அல்லது மனைவியை காப்பாற்ற முயலும் கணவனும் பிள்ளைகளும் இன்று நம் மத்தியில் இல்லாமல் இல்லை.
இத்தகைய ஒரு பரிதாப நிலைமையினை அதுவும் வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையில் போராடும் நோயாளிகள் பற்றி எங்களது கவனம் திசை திருப்பப்பட்டுள்ளதா? சிந்தியுங்கள் சகோதரர்களே. நோயினால் அவஸ்தையுறும் குடும்பத்திற்கு ஆறுதல் வார்த்தை கூறியாவது அல்லது தங்களால் முடிந்த உதவிகளை தனியாகவோ கூட்டாகவோ சேர்ந்து நிறைவேற்றிக் கொடுக்கும் போது இறை அருளால் அக்குடும்பம் அடையும் நிம்மதியும் மகிழ்ச்சியும் வார்த்தைகளால் வடித்துவிட முடியாது.
இங்குதான் நமது அன்பு, பாசம், சகோதரத்துவம், ஒற்றுமை என்பன ஒன்றுக்குமேல் ஒன்றாக வெளிச்சம் பெறுகின்றது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாயினால் சொல்வதோடு மாத்திரம் நின்றுவிடவில்லை. அனைத்தையுமே செயலில் காட்டிய உத்தம நபியின் வழித்தோன்றல்கள் நாம்.
கைகளையும், கால்களையும் இழந்தவர்கள், பார்வையையும் அனைத்திற்கும் மேலாக மூளையை இழந்தவர்கள், பைத்தியக்காரர்கள் என்ற பட்டம் கட்டப்பட்டு குழம்பித் திரிபவர்கள், அரைகுறை பைத்தியங்கள் அல்லது மந்த புத்தியுள்ளோர் பற்றி நீங்கள் கேள்விப்படவில்லையா?
இவர்கள் இருக்கும் வீடுகளுக்கு அல்லது இவர்களை பராமரிக்கும் நிலையங்களுக்கு வாழ்க்கையில் ஒரு நாளாவது மனைவி மக்களோடு சென்று பார்க்க வேண்டியது அனைவரதும் கடமையும் பொறுப்புமாகும்.
இத்தகைய கடமைகளையும் பொறுப்புக்களையும் தட்டிக்கழித்து தாம் உண்டு தமது மனைவி மக்கள் உண்டு குடும்பம் உண்டு என்ற ஒரே எண்ணத்தோடு வாழ்பவர்களும் எம்மத்தியில் இல்லாமல் இல்லை. எவர் எக்கேடு கேட்டாலும் அதுபற்றி நமக்கேன் கவலை என்று உதாசீனம் செய்வோர் பலரும் எம்மிடத்தில் இல்லாமல் இல்லை. மற்றவர்களுக்கு உதவும் மனோபாவம் உலோபித்தனம் என்ற கவசத்தால் மூடப்பட்டுள்ளதா என்றும் சந்தேகிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
வெறுங்கையோடு பிறந்த நாம் வெறுங்கையோடு இறைவனை சந்திக்கத்தான் போகின்றோம். அப்போது எங்களது சொத்துக்களும், பதவிகளும், தராதரங்களும் எம்முடன் வரப்போவதில்லை. நாம் செய்த நல்ல அமல்கள் அதுவும் அல்லாஹ்வாலும், றஸ¥லாலும் அங்கீகரிக்கப்பட்ட நல்லமல்கள் மாத்திரமே நம்முடன் வரும். பெண்களுக்கே வாழ்வளித்த பெருமானார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய முன்மாதிரியும் செயற்பாடுகளும் இன்று எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கப்படுகின்றது என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
இஸ்லாமிய சமூகம் நெருக்கடிகளுக்கும் அவலங்களுக்கும் உள்ளாகி அவஸ்தைப்படுவதை கண்டும் காணாதது போல் நடமாடும் இஸ்லாமிய சகோதரர்களே, முதலில் நாம் இறை கட்டளைக்கேற்ப ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்வோம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் உண்மை முஸ்லிம்களாகவும் சகோதர சகோதரிகளாகவும் வாழப் பழகிக் கொள்வோம்..
அநாதைகளின் உயர்ச்சிக்கு அல்லாஹுவின் துணையோடு செயற்படுவோம்