பெண் உடல் மொழி என்றால் என்ன? அதன் தத்துவ, வரலாற்றுப் பின்னணிகள் என்ன?
பெண்ணுடலை விவரிக்கும் விரிக்கும் மொழி பெண்ணுடல் மொழியா?
அல்லது பெண் உடலின் சைகைகள் சமிக்ஞைகள் நடவடிக்கைகள் செயல்பாடுகள் போன்றவை மூலம் அவள் சொல்வதாக புரிந்து கொள்ளப்படுவது பெண்ணுடல் மொழியா?
உடலும் மொழியும் ஒன்றா, வெவ்வேறா?
உடலை மொழி பிரச்சினையில்லாமல் அப்படியே பிரதிநிதித்துவப்படுத்துமா?
அப்படி பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா?
புரட்சி என்று உச்சரித்தால் புரட்சியாகி நடந்துவிடுமா?
இட்லி என்று எழுதிய காகிதத்தை உண்டால் பசி தீர்ந்துவிடுமா?
நிறைய கேள்விகள் முன்னே நிற்கின்றன.”உடலை எழுதுதல்” என்பது பெண்ணியங்களின் முன்னெடுப்பில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுத் தருணத்தில் நிகழ்கிறது. இவ்வரலாற்றுத் தருணத்துக்கும் “புத்துலகை உருவாக்குதல்” என்கிற கருத்தாக்கத்துக்கும் கனவுக்குமான தொடர்பை பெண்ணியல் ஆராய்ச்சியாளர்கள்,
குறிப்பாக செசிலி லிண்ட்சே போன்றவர்கள் விவரிக்கிறார்கள்.”மாற்று உலகங்கள்”, கடந்து முன்செல்லல்”, “பெண்ணிய எதிர்காலங்கள்” போன்ற கற்பனைகளும் கனவுகளும் பெண்ணியப் பேச்சுகளில் எழுத்துகளில் உருவானதையும், இதில் ஒரு முக்கியமான அங்கமாக “உடல் எழுத்து” தொடங்கியதையும் பேசுகிறார்கள்.
குறிப்பாக ப்ரெஞ்ச் பெண்ணியத் தத்துவச் சிந்தனைப் போக்கில் ஹெலன் சிக்ஸ¤, மோனிக் விட்டிக் போன்றவர்களால் எடுத்தாளப்பட்ட கருத்தாக்கம் “உடல் எழுத்து”, “உடல் எழுத்து” என்பதற்கும் புத்துலகை உருவாக்கும் கருத்தியலுக்கும் இருக்கிற தொடர்பு யோசிக்க வேண்டிய ஒன்று.
பெண்ணியப் புத்துலகம் எப்படி இருக்க வேண்டுமென்பதைப் பற்றிக் கருத்துவேறுபாடுகள் கொண்ட, விவாதித்த விட்டிக், சிக்ஸு இருவருமே ஒருவிஷயத்தில் ஒரேநிலைப்பாடு கொண்டவர்கள்.
அது மொழிபற்றிய அவர்கள் பார்வை. “கடந்த காலத்தைப் பெற்று அல்லது கடத்தித்தருகிற மொழியே, கலாசாரச் செயல்பாடுகள், கருத்தியல் வடிவங்களுக்கான அடிப்படையாக இருக்கிறது” என்று அவர்கள் நினைத்தார்கள். ஆகவே, மொழியும் எழுத்துமே நிகழ்காலத்தைக் கேள்வி கேட்கும், புத்துலகை உருவாக்குவதில் முதன்மைப்பட வேண்டும் என்றும் நம்பினார்கள்.
பெண்தன்மையும் ஆண் தன்மையும் உடல் அடிப்படையிலிருந்து பெறப்படுகிறது. “பெண்மை சந்தேகத்துக்கிடமின்றி, உடலிலிருந்துதான் வருகிறது. உடற்கூற்றியல், உயிரியல் வித்தியாசங்களிலிருந்து, பெண்களை ஆண்களிலிருந்து பெரிதாக வேறுபடுத்தும் உந்துதல்களின் கட்டமைப்புகளிலிருந்து அது பெறப்படுகிறது”
ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான உறுதியான வித்தியாசங்கள் என்று அவர் நம்பியதை அவருடைய ஒரு கட்டுரையில் சீனக்கதை ஒன்றைச் சொல்லி நிறுவுகிறார். போர் வீரருக்கான உபாயங்களைக் கற்றுத்தரும் ‘சுன்ட்ஸே’ கையேட்டிலிருந்து எடுத்தாளப்படுகிறது. இந்தக்கதை. முன்னொருகாலத்தில் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.
சீன அரசன் ஒருவன் தனது ஜெனரல் சுன் ட்ஸேக்கு ஒரு கட்டளையிடுகிறான். “போர் உபாயங்கள் தெரிந்தவன் நீ, யாருக்கும் பயிற்சி கொடுத்து சிறந்த வீரனாக மாற்றத் தெரிந்தவனும் நீ, என் மனைவிகளை (நூற்றி எண்பது) போர் வீரர்களாக மாற்றிக் காட்டு” என்கிறான். ஆணையை ஏற்ற சுன் ட்ஸே அரசனின் மனைவிகளை இருவரிசைகளாக நிறுத்துகிறான்.
இருவரிசைகளிலும் அரசனுக்கு மிகவும் பிடித்த இரு ராணிகளை முதலில் நிறுத்துகிறான். பின் அவர்களுக்கு முரசடிப்பதைச் சொல்லித் தருகிறான். இரண்டு அடிகள் வலது பக்கம், மூன்று அடிகள்- இடது பக்கம், நான்கு அடிகள்- திரும்பி பின்பக்கம் முன்னேற வேண்டும். ஆனால் இந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்வதற்கு பதிலாக பெண்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
ஜெனரல் சொல்லிக்கொடுத்தபடி இருக்கிறான். பெண்களோ சிரித்தபடி இருக்கிறார்கள். பலமுறைகள் அவன் முயன்றும் பலனில்லை.
கடைசியாக தான் சொல்லிக் கொடுத்தவற்றில் ஜெனரல் தேர்வு வைக்கிறான். நியமவிதிகளின்படி, தேர்வில், போர்வீரர்களாக பயிற்சியெடுக்கும் பெண்கள் போர்வீரர்களாக ஆகாமல் சிரித்துக் கொண்டிருந்தால், அது கலகமாக அறியப்படும், பெண்களுக்கு அப்போது மரணதண்டனைதான் விதிக்கப்பட வேண்டியிருக்கும். சிரித்துக் கொண்டடிருந்த பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அரசன் உள்ளுக்குள் கொஞ்சம் கலங்குகிறான். ஒன்றா, இரண்டா, நூற்றி எண்பது ஆயிற்றே. எத்தனை இழப்பு?
அரசன் இதை விரும்பவில்லை. என்றாலும் சுன் ட்ஸே கொள்கையில் குறியாய் நிற்பவன், அரசனை விடவும் அவன் ஆணை அரசமயமானது என்று தெரிந்தவன். சட்டம், முழு மொத்தமானது சட்டம். ஆணையை திருப்பி வாங்க முடியாது. அவன் மன உறுதியுடன் முன்னணியில் நிற்கும் இரண்டு ராணிகளின் கழுத்தையும் சீவுகிறான். எதுவுமே நடக்காதது போல, அடுத்த இரு பெண்கள் அவர்கள் இடங்களில் பதிலிடப்படுகிறார்கள். திரும்ப தேர்வு நடக்கிறது. இம்முறை பெண்கள் சிரிக்கவில்லை, சின்ன சப்தமும் இல்லை. சோதனை மிகச்சரியாக நடந்தேறுகிறது.
ஆண்மைக்கும் பெண்மைக்குமான சமன்பாட்டை இக்கதையிலிருந்து காணலாம். ஆண்மை அல்லது ஆண்மைப் பொருளியல் என்பது நேரத்தைக் கண்காணிக்கும் விதியால் இரண்டு அடிகள், மூன்று அடிகள், நான்கு அடிகள் என முரசால், எது எப்படி இருக்கவேண்டுமோ அப்படியிருக்க, ஒழுங்குபடுத்தப்படுகிறது. அதற்கேற்ப ஆணைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன; கற்றுக் கொடுக்கப்பட்டு உருவேற்றப்படுகின்றன.
பெண்மை அல்லது பெண்மைப் பொருளியலோ பெண்ணிலிருந்து போர் வீரனை உருவாக்கும் வலிமையால் வரலாற்றில் நிறுவப்படுகிறது. தலையைச் சீவக்கூடிய ஒட்டுமொத்த வலிமை அது. பெண்ணுக்கு வேறு தேர்வு இல்லை. வாளுக்குத் தலையைக் கொடுக்க வேண்டும். அல்லது அவள் தலை கழுத்தின் மேல் இருக்க, அவள் அவளாக இல்லாமல் இருக்க வேண்டும்.
முரசடிகளை கவனமாகக் கேட்காவிட்டால் தலையைக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
ஒரு விதத்தில் வரலாற்றைக் கண்காணிக்கிற ஆண்களாகட்டும், தலையைக் காப்பாற்ற ஒழுங்குவிதிகளுக்குக் கட்டுப்படுகிற பெண்களாகட்டும், இவர்கள் அனைவரையுமே சமுதாயத்தின் நியமவிதிகள் கட்டுப்படுத்துகின்றன. .