தொழும் போது பேண்டை தூக்கி விடுங்க பாய்!
கமால் துபாய்
விடுமுறையில் சென்னை சென்றிருந்த நேரம்…. நானிருந்த ஏழுகிணறு பகுதியிலுள்ள ஒரு பள்ளி.
தொழ நான் நிற்கிறேன்……
அப்போது வேகவேகமாக வந்த ஒரு நபர்….. அவருடைய பேண்ட்டை தொழுவதற்கு முன் மடித்துவிடுகிறார்
மடித்துவிட்டுக் கொண்டே என்னைப் பார்த்து “பாய் பேண்டை மடிச்சி விடுங்க பாய்” என்றார். என் பேண்ட் என்னவோ மடிக்கப்படாத போதிலும் கணுக்கால் வரை தான் இருந்தது. (அவர் பேண்டோ பாதத்திற்கு வெளியே கால் மீட்டர் தொங்கிக் கொண்டிருந்தது)
வரும்போது ரோடில் உள்ள சளி மூத்திரம் எச்சில் அசுத்தமான நீர் என அனைத்தையும் அந்த பேண்டின் அடிபாகம் வருடிக் கொண்டே வந்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
இது போல் பள்ளியில் தொழ வருபவர்கள் பலர் தொழுவதற்கு முன் தங்கள் பேண்டை மடித்து விடுவதைக் காணலாம் (ஏதோ தொழ நிற்கும் போது மட்டுமே ஆடையை கணுக்காலுக்கு மேல் மடித்துவிட்டுக் கொண்டு தொழ வேண்டும் என்பது போல)
அப்படி மடித்து விடுபவர் ஒருவரை ”ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?” என்று வினவியபோது, ”இல்லை என்றால் தொழுகை கூடாது” என்றார் ( அதாவது ஆடை கணுக்காலுக்கு கீழே இருந்தால் தொழுகை கூடாதாம்)
இஸ்லாத்தில் பள்ளியில் தொழும்போது மட்டும் ஆடையை கணுக்காலுக்கு மேலே தூக்கி விட்டுக்கொண்டு தொழ வேண்டும் என்ற கட்டளையோ வெளியே போகும் போது ஆடையால் ரோட்டை பெருக்கிக் கொண்டு போகலாம் என்ற அனுமதியோ இல்லை
இஸ்லாத்தின் படி கணுக்காலுக்கு கீழே ஆடை வரக்கூடாது என்பதற்கான முக்கிய காரணமே….. உடைச்சுத்தம். கணுக்காலுக்கு கீழே ஆடை தொங்கினால் அதுவும் பாதத்திற்கு கீழே கால் மீட்டருக்கு ஆடை வெளியே தொங்கினால் அது ரோட்டிலுள்ள சளி மூத்திரம் எச்சில் அசுத்தமான நீர் மலம் என அனைத்தையும் அள்ளிக் கொண்டு வராதா…… அப்படி அள்ளிக் கொண்டு வந்த அந்த அசுத்த ஆடையோடு தொழுதால் அந்த தொழுகை ஏற்றுக் கொள்ளப் படுமா?
இப்படி ரோட்டில் உள்ள மற்றவர்களின் அசுத்தங்களைச் சுமப்பவர்கள் செய்யும் மாபெரும் தவறு தங்கள் ஆடைகளிலுள்ள அசுத்தங்களை பள்ளிவாயில்களின் கார்பெட் விரிப்புகளில் இறக்கிவிட்டு தொழுமிடங்களை அசுத்தமாக்கிவிடுவதுதான்.
இவர் ஒளு செய்யும் போது ஆடையின் அடிபாகங்கள் ஓரங்கள் ஈரமாகி அவர் தொழும் போது அசுத்தங்களோடு கலந்த அந்த ஈர நீர் பள்ளி விரிப்புகளில் இறங்கி அந்த தொழுமிடங்கள் நிரந்தரமாக அசுத்தமாகிவிடுவதுதான்.
இவர் ஆடையாவது தோய்க்கும் போது ஒரு முறை சுத்தமாவது ஆகிவிடும் ஆனால் பள்ளியின் விரிப்பு……. கழுவினால் அன்றி அந்த நஜீஸ் நிரந்தமாகப் போகாது… பள்ளியின் விரிப்பு எப்போது கழுவப்படும். சாத்தியம் மிகக் குறைவு.
அடுத்தத் தவறு. இறைவன் முன்னால் நிற்கும் போது பர்ஃபெக்ட் ஆக நிற்க வேண்டும். அலுவலகத்தில் அதிகாரியின் முன்னால் இப்படி பேண்டை தூக்கி விட்டுக் கொண்டு நிற்போமா….. மாட்டோம் அல்லவா ….அதைப்போல் அல்லாஹ்வின் முன் நிற்கும் போது ஆடைகளை அரைகுறையாக எடக்குமடக்காக மடித்துவிட்டுக் கொண்டு தூக்கிவிட்டுக் கொண்டு நிற்கக்கூடாது அது பேண்ட் ஆகட்டும அல்லது சட்டையாகட்டும்.
மூன்று நபர்களிடம் அல்லாஹ் மறுமை நாளில் பேசமாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களை தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு கடும் வேதனை உண்டு” என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று முறை இதைக் கூறினார்கள். அப்போது நான், ‘(அந்த மூவரும்) நட்டமடைந்து விட்டார்கள். கவலை அடைந்து விட்டார்கள். இறைத்தூதர் அவர்களே! அவர்கள் யார்?” என்று கேட்டேன். 1)வேட்டியை (அணிந்திருக்கும் போது) தரையில் பட பூமியல் தொங்க விட்டுச் செல்பவன் 2) தான் செய்த உதவியை சொல்லிக் காட்டுபவன் 3) பொய் சத்தியம் செய்து தன் சொத்தை விற்பனை செய்தவன் என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 794)