35. நாஸ்திகர்களின் குறையல்ல:
இதற்கு நாம் நாஸ்திகர்களைக்குறை சொல்ல மாட்டோம். அப்படி அவர்கள் தவறாக இஸ்லாத்தை எண்ணும் வகையில் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணாக நடக்கும் மிகப் பெரும்பான்மை முஸ்லிம்களையே குறை சொல்லுகிறோம்.
முஸ்லிம் அல்லாதவர் இஸ்லாத்தைத் தவறாக விளங்கி கொள்ள இவர்களே காரணகர்தாவாக இருக்கிறார்கள் என்று சொல்லுகிறோம். மிகப் பெரும்பான்மை முஸ்லிம்கள் இவ்வாறு நடப்பதால் இஸ்லாம் அவற்றையே போதிக்கிறது என்று அவர்கள் எண்ணுவதில் என்ன தவறு இருக்க முடியும்?
ஆயினும் நாஸ்திக நண்பர்களுக்கு நாம் சொல்லிக் கொள்ள விரும்புவது, தயவு செய்து இன்றைய முஸ்லிம்களின் வாழ்க்கை முறைகளைப் பார்த்து நீங்கள் இஸ்லாத்தை எடை போடாதீர்கள்.
சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனின் இறுதித்தூதர் அறியாமையிலும், மௌட்டீகத்திலும் மூழ்கிக் கிடந்த மக்களிடம் போதனை செய்து அவர்களை அகில உலக மக்களின் வழிகாட்டிகளாக ஆக்கினார்களே அந்தச் சரித்திரத்தைப் புரட்டிப் பாருங்கள் என்று செல்லுகிறோம்.
இறைகொடுத்த இறுதிமறைக் கட்டளைகள் மனித அபிப்பிராயங்கள் கலக்காமல் அவை தூய்மையான நிலையில் கடைபிடிக்கப்பட்ட போது அவை உலக மக்களிடம் ஏற்படுத்திய அதிசயிக்கத்தக்க உன்னத மாறுதல்களை மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்திப் பாருங்கள் என்று சொல்லுகிறோம்.
உலகலாவிய மக்கள் இப்படி நடக்க ஆரம்பித்துவிட்டால் உலகின் பிரச்சினைகள் தீர்ந்து சுபிட்சமான, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமைந்துவிடும் என்று நாஸ்திகர்கள் கற்பனையாகச் சொல்லுவதுபோல், நாமும் இனிமேல் நடக்கப்போவதை கற்பனை செய்து பார்க்கச் சொல்லவில்லை. நடைமுறைப்படுத்திக் காட்டப்பட்ட உண்மைச் சரித்திரத்தைப் பார்க்கச் சொல்லுகிறோம்.
ஆனால் வருந்தத்தக்க விஷயம் இதற்கு முன்னால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டட மறைவழி எப்படி மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்டு அவர்கள் வழி தவறிச் சென்றார்களோ அதேபோல் இறுதித் தூதருக்குக் கொடுக்கப்பட்ட இறுதி மறை போதிக்கும் வழி மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்டு இவர்களும் வழி தவறிச் சென்றிருக்கிறார்கள்.
எனவே இன்றைய பெரும்பான்மை முஸ்லிம்களின் நிலையை வைத்து இஸ்லாத்தை எடை போடாதீர்கள் என்று சொல்லுகிறோம். முஸ்லிம்கள் செய்யும் தவறுகள் இஸ்லாத்தின் தவறுகளல்ல என்பதை நாஸ்திக நண்பர்கள் உணர வேண்டுகிறோம். அந்த இறைவழியை எடுத்துச் சொல்லும் அல்குர்ஆன் மனிதக் கரங்களால் மாசுப்படுத்தப்படாமல் பாதுகாப்பான நிலையில் உள்ளது அதனை முறைப்படி விளங்க முற்படுங்கள் என்றே நாஸ்திக நண்பர்களுக்குச் சொல்லுகிறோம்.
36. ஆத்திரமோ, அனுதாபமோ வேண்டாம்!
அந்த குர்ஆனையும் நாங்கள் அணுகிப் பார்த்து விட்டோம், அதிலும் பல குறைகளைக் கண்டு பிடித்து விட்டோம். எங்களது தோழர்கள் அவற்றைத் தெளிவுபடுத்தி பல நூல்கள் வெளியிட்டிருக்கின்றனர் என்று அவர்கள் சொல்லலாம் நாம் அவர்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புவது இதுதான் மனித இயல்பின்படி குற்றங்காணும் குறுகிய கண்ணோட்டத்தோடு எதனைப் பார்த்தாலும் சரியானவையும் தவறாகவே தெரியும். அதேபோல் நியாயப்படுத்தும் குறுகிய கண்ணோட்டத்தோடு எதனைப் பார்த்தாலும் தவறானவையும் சரியாகவே தெரியும்.
எனவே ஆத்திரமோ, அனுதாமோ இல்லாமல் நடுநிலையோடு அல்குர்ஆனை ஆராய முன் வாருங்கள். ஆல்குர்ஆனைக் கொண்டு இறைவனின் இறுதித்தூதர் 1400 வருடங்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்திக் காட்டிய வாழ்க்கை நெறியை ஆராய்ந்து பாருங்கள். அதில் நீங்கள் கற்பனை செய்துள்ளதை விட உயரிய மேலான சுபீட்சமான ஒரு வாழ்க்கைத்திட்டம் மனிதர்களுக்காக இருப்பதை அறிந்து கொள்வீர்கள்.
மற்ற மதங்களைப்போல் இஸ்லாமும் ஒரு மதமே என்ற உங்களின் தவறான எண்ணம் மாறி இஸ்லாம் ஒரு மதமல்ல, அது இறைவனால் மனித வர்கத்திற்குக் கொடுக்கபட்டுள்ள வாழ்க்கை நெறி, அதைவிட சிறந்த வாழ்க்கை நெறியை உலகில் தோன்றிய எந்த மனிதனும் தர முடியாது. எந்த இஸமும் தர முடியாது என்ற மறுக்க முடியாத மாபெரும் உண்மையை நீங்களும் விளங்கிக் கொள்வீர்கள்.
அந்த இறை கொடுத்த மறை வழி மனிதன் இவ்வுலகிலும் அவன் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களையும் முறையாகவும், நிறைவாகவும் அனுபவிக்க வழி வகுத்துத் தந்திருக்கிறது. அது துறவு வாழ்க்கையை கற்பிக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்வீர்கள். இறை வழங்கிய மறைவழி விட்டு மனிதன் தனது சுயவழி தேடிக்கொண்டதின் விளைவே இவ்வுலக வாழ்க்கையை முறையாக அனுபவிக்க முடியாமல் போகிறது என்பதையும் துறவு வாழ்க்கை கொண்டே மனிதன் முக்தி பெற முடியும் என்பது தவறான ஐதீகம் என்பதை எல்லாம் விளங்கிக் கொள்வீர்கள்.
அது இறை நம்பிக்கை உடையவர்களே நாஸ்திகர்களைவிட இவ்வுலக வாழ்க்கையின் மனமகிழ்வை முழுமையாக அனுபவிக்க முடியும் என்பதை ஆதாரங்களுடன் பார்ப்போம்.
நாஸ்திகர்களுக்கு இறுதி அறிவுரையாக ஒன்றைப் பார்த்தோம். அதாவது நாஸ்திகர்கள் இறைவனோ, மறுமையோ இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆஸ்திகர்கள் இறைவனும் மறுமையும் உண்டு என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதில் நாஸ்திகர்களின் கூற்று உண்மையானால் பாதிப்பு இரு சாராருக்கும் இல்லை. நாஸ்திகர்களும் தப்பி விடுவார்கள். ஆஸ்திகர்களும் தப்பி விடுவார்கள் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம். அதே சமயம் நாஸ்திகர்களின் கூற்று பொய்யாகி ஆஸ்திகர்களின் கூற்று உண்மையானால் ஆஸ்திகர்கள் தப்பிக்கொண்டார்கள். நாஸ்திகர்கள் வகையாக மாட்டிக் கொண்டார்கள் என்பதையும் நாஸ்திகர்கள் மறுக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
37. மதங்களாலேயே நஷ்டம்:
மறுமையை நம்பி இவ்வுலக வாழ்க்கையில் ஆஸ்திகர்கள் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனரே என்று நாஸ்திகர்கள் கேட்டால் மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட மதங்களை நம்பி மூடநம்பிக்கைகளில் மூழ்கி துறவற வாழ்க்கையையும், அனாச்சாரங்களைக் கொண்ட தடைகளையும் தாங்களாக ஏற்படுத்திக் கொண்ட மதவாதிகளே நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் இவ்வுலக வாழ்க்கையயும் நஷ்டப்படுத்திக் கொள்கின்றனர். மறுவுலக வாழ்க்கையையும் நஷ்டப்படுத்திக்கொள்கின்றனர். மாறாக இறை கொடுத்த நேரான வாழ்க்கை நெறியை முறையாகக் கடைபிடித்து ஒழுகிறவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் இன்பங்களை முறையாக முழுiயாக அனுபவித்து வருகின்றனரே அல்லாமல் அவற்றில் எதனையும் அவர்கள் இழக்க வில்லை, நஷ்டப்படுத்திக் கொள்ள வில்லை என்பதையும் தெளிவுபடுத்தி இருந்தோம்.
மதவாதிகள் இவ்வுலக வாழ்க்கையையும், மறுவுலக வாழ்க்கையையும் நஷ்டப்படுத்திக் கொள்கின்றனர். நாஸ்திகர்கள் இவ்வுலக வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொள்ளாவிட்டாலும் முழுமையான சுவையோடு அவற்றை சுவைப்பவர்களாக இல்லை என்பதோடு மறுமை வாழ்க்கையை மற்றிலுமாக நஷ்டப்படுத்திக் பெரும் துன்பத்தில் மாட்டப் போகிறார்கள் என்பதே உண்மையாகும்.
நாஸ்திகத்தை விட்டு விடுபட்டும், மதங்களை விட்டு நீங்கியும், இறை கொடுத்த மறைவழி ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு அது காட்டும் நேர்வழி நடப்பவர்கள் மட்டுமே இவ்வுலக வாழ்க்கையின் சுவையை முழுமையாகச்சுவைத்து வாழ்வதோடு, மறுமையில் எல்லையில்லா பேரின்பத்தை அடைந்து அனுபவிக்கும் பாக்கியவன்களாக இருக்கிறார்கள். காரணம் இறை கொடுத்த மறைவழி என்பதே இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனிதன் பெறவேண்டிய அனைத்துப் பாக்கியங்களையும் தவறாது முழுமையாகப் பெற்று முழுமையான நிறைவான வாழ்வு வாழ்வதற்குரிய தன்னிகரில்லா ஒரே வழியாகும்-வாழ்க்கை நெறியாகும்.
இன்ஷா அல்லாஹ், தொடரும்