மெளலவி JSS அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி
புகழ் அனைத்தும் அகிலத்தார்களைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்விற்கே உரியது. நிச்சயமாக இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களின் இம்மை, மறுமை, வாழ்விற்குத் தேவையான எல்லா வற்றையும் சரியான முறையிலும் இலேசான முறையிலும் கற்றுத் தரக்கூடிய மார்க்கம்.
அம்மார்க்கம் பெண்களின் ஆடை விஷயத்தில் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்ற ஒழுக்கமான நன்னடத்தையையும், கண்ணியமான தூய வாழ்க்கைக்கும் வழி காண்பிக்கின்றது. இவ்விஷயத்தில் ஆழமாக சிந்தித்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்வும், முழுமையான ஒழுக்கங்களையும் உள்ளடக்கிய மார்க்கம் இஸ்லாம் என்று தெளிவாக விளங்க முடியும்.
இறைவன் அருள்மறையில் கூறுகிறான். நபியே ! நீர் உன் மனைவி மார்களுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்களின் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்களென) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க அன்புடையோன் (அல் அஹ்ஜாப் 59)
மேலும் கூறுகிறான். நபியே ! முஃமினான பெண்களிடம் நீர் கூறுவீராக ! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்களின் வெட்கத்தலங்களைப் பேணிப் பாதுகாத்தும் கொள்ள வேண்டும் மேலும் தங்கள் அலங்காரத்தை அவற்றில் வெளியே தெரியக்கூடியதைத் தவிர (வேரெதையும்) வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் தங்களின் மார்பகங்களை மறைத்துக் கொள்ளட்டும். மேலும் அவர்கள் தங்களின் கணவரிடத்திலே தவிர தங்களின் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம். (அந்நூர் 31)
மேலும் கூறுகிறான் (நபியின் மனைவியர்களே) நீங்கள் உங்களின் வீடுகளிலேயே தங்கி விடுங்கள். முன்னர் அறியாமைக் காலத்துப் பெண்கள் திரிந்ததைப்போன்று திரிந்து கொண்டிருக்காதீர்கள். (அல் அஹ்ஜாப் 33) மேலும் கூறுகிறான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியரிடம் நீங்கள் ஏதாவது ஒரு பொருளைக் கேட்பதாகயிருந்தால் திரை மறைவிலிருந்து கேட்டுக் கொள்ளுங்கள். (அல் அஹ்ஜாப் 53) என்று விரிவாக நம்மிடம் பேசுகிறான்.
நிச்சயமாக இஸ்லாமியப் பெண்கள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமான கடமைகளில் உள்ள ஒன்றுதான் பர்தா அணிந்து கொள்வது. இஸ்லாம் மட்டுமே ஒரு குடும்பம் வீழ்ந்து சின்னாபின்னப் பட்டு சிதைந்து போகாமல் அதைப் பாதுகாப்பதின் மீது அக்கறை கொண்டுள்ளது. இயற்கைச் சூழ்நிலையை கேடு படுத்திடாமல் குடும்பங்கள் ஆரோக்கியமாகவும், சமுதாயம் தூய்மையாகவும் வாழ வேண்டும் என்பதற்காக இஸ்லாம் ஒழுக்கங்கள், நற்குணங்கள் என்ற உறுதிவாய்ந்த சுவரை எழுப்பியுள்ளது. காரணம் இஸ்லாம், குழப்பத்தின் பால் இழுத்துச் செல்லக்கூடியவற்றை தடுப்பதற்காக பர்தா என்ற திரையை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்களும், பெண்களும் சந்திக்கும்போது தங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளும்படியும் ஏவுகிறது. நிச்சயமாக அல்லாஹ் பெண்களை கண்ணியப்படுத்து வதற்காகவும், இழிவிலிருந்து அவளின் தன்மானத்தை தற்காத்துக் கொள்ளவும், மேலும் குழப்பவாதிகள் தீய எண்ணம் உடையவர்களின் கெடுதியைவிட்டும் பெண்களை தூரப்படுத்துவதற்காகவும், கண்ணியம், விலைமதிப்பு, மானம் மரியாதையை அறியாதவர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும்,
அதே சமயம் விஷப் பார்வைகளுக்குக் காரணமான குழப்பத்தின் வாசலை அடைத்திடுவதற்குமே அல்லாஹ் பெண்களுக்கு பர்தாவை மார்க்க மாக்கியுள்ளான். என்பதை தெளிவாக விளங்க முடிகிறது. இதை விட்டு விட்டு இஸ்லாம் பெண்களை ஆண்களை விட்டும் நீங்கி அந்நிய ஆடவருடன் கலந்துரையாடுவதை தடை செய்திருக்கின்றது என்று தவறாக விளங்கி தேவையில்லாத அறிவற்ற பிரச்சாரத்தை சில விஷமிகள் பரப்பி வந்தனர் வருகின்றனர்.
இஸ்லாம் பெண்களை ஆண்களை விட்டும் தூரப்படுத்தி அவர்களின் சுதந்திரத்தை பரித்து ஆணாதிக்கத்திற்கு கீழ்படிந்துதான் வாழவேண்டும் என்றெல்லாம் சிலர் பர்தா முறையை தவறாக விளங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இன்று ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் யார் யாரெல்லாம் அப்பிரச்சாரங்களை செய்து வந்தார்களோ அவர்களே பர்தா முறையை வரவேற்று பெண்களுக்கு பாதுகாப்பு பர்தா என்ற திரைதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும் அனைத்துப் பெண்களின் நற்குணங்கள், குடும்ப அமைப்பு, சிறப்புக்கள் மற்றும் கண்ணியமான நடைமுறைகளை பாதுகாப்பதற்கும், குழப்பங்களையும் தவறான எண்ணங்களையும் தடுத்து நிறுத்துவதற்கும் இஸ்லாமிய சட்டங்கள் மட்டுமே சரியான வழிமுறைகளை வகுத்துத்தந்துள்ளது.
நம்மைச் சீர்திருத்திக் கொள்வதுடன் சமூகத்தையும் சீர்திருத்தச் சொல்லும் மார்க்கம்தான் இஸ்லாம் என்பதை அவர்கள் மட்டுமல்ல அனைத்து சமூகமும் ஒப்புக்கொண்டுள்ளது. காரணம் குழப்பம் சூழ்ந்து பரவிக்கிடக்கும் இந்தக் காலத்தை விட குழப்பத்தின் பயம் வேறு எந்தக்காலத்தில் அதிகமாக இருக்கமுடியும். நல்லவர்கள் இறையச்சமுடையவர்களை விட பாவிகள் நிறைந்து போய் விட்டனர்.
கடைவீதிகளிலும் பல்வேறு இடங்களில் நின்றுகொண்டு தன் தவறான விஷப்பார்வையால் தன் கையில் வைத்திருக்கும் மொபைலின் மூலம் (செல்போன்) அன்றாட சமையல் தேவைக்காக காய்கறி மற்றும் மீன் இறைச்சி வாங்குவதற்காக பஜாருக்கு வரும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து அதை மற்றவர்களுக்கும் S.M.S.மூலமாகவும் E.மெயில், இண்டர்நெட் என அனுப்பி தான் ஒரு பகுத்தறிவு படைத்த மனிதன் என்பதையே மறந்து ஷைத்தானுக்கு வழிபட்டு மிருகத்தனமான செயல்களிலே ஈடுபடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இவ்விஷயத்தில் அல்லாஹ் கடுமையான எச்சரிக்கையை தருகின்றான். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின் பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் (ஷைத்தான்) உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான். நிச்சயமாக அவன் (ஷைத்தான்) தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும், அல்லாஹ்வைப்பற்றி நீங்கல் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான். (அல்பகரா 168 மற்றும் 169) என்று இறைவன் கூறுகிறான்.
இவ்வாறான தவறான எண்ணம் கொண்ட விஷமிகளிடமிருந்து சமுதாயப் பெண்கள் பாதுகாப்புப் பெற்று கண்ணியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகத்தான் பர்தாவை இஸ்லாம் மார்க்க மாக்கியுள்ளது.
எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே ஒழுக்கமும் நன்னடத்தையும் நமது உடலில் உள்ள உயிரையும் நாம் சுவாசிக்கும் சுவாசத்தையும் போன்றது. குர்ஆனிலும் நபி மொழியிலும் அல்லாஹ்வின் மார்க்கம் ஒரு வலுவான கட்டடத்திற்கு உதாரணமாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த மாளிகையின் அடித்தளமாயிருப்பது ஈமான் என்றால் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள தூண்களும், சுவர்களும், மேற் கூரையுமே இஸ்லாமாகும். இஸ்லாம் என்ற மாளிகையை கட்டி எழுப்புவதற்கும் அதை உறுதியாய் எழிலுடன் நிலை நிறுத்துவதற்கும் தேவையான இரண்டு விஷயங்கள்தான் தக்வா எனும் இறையச்சம் இஹ்ஸான் எனும் ஒழுக்கமும் நன்னடத்தையுமாகும்.
இறைவன் அந் நஹ்ல் 128 வது வசனத்தில் எவர்கள் இறையச்சம் கொள்கிறார்களோ மேலும் நன்னடத்தையை மேற்கொள்கிறார்களோ அத்தகையவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்று கூறுகிறான். எனவே அல்லாஹ் எனக்கும் உலக மக்கள் அனைவர்களுக்கும் ஒழுக்கமுள்ள நல்ல சிந்தனைகளை வழங்கி இறைவனுக்கும் இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் வழிபட்டு நடக்கும் பாக்கியத்தை வழங்கு வானாக ஆமீன் வஸ்ஸலாம்
நன்றி:- www.mudukulathur.com