அல்லாஹ் கூறுகிறான்: ”நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள்.” (அல்குர்ஆன் 30:31)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். ஆதாரம்: முஸ்லிம்.
முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத், திர்மிதி)
தொழுகையைத் தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகி விடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி)
தொழுகையை விடுவோர் நரகில் நுழைவார்:
‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள். அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன) இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்குர்ஆன் 19:59)
தொழாதவர்கள் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவான்:
யார் தொழுகையைப் பேணித் (தொழுகின்றாரோ) அது அவருக்கு மறுமையில் ஒளியாகவும், அத்தாட்சியாகவும், பாதுகாக்கக் கூடியதாகவும் ஆகிவிடும். யார் அதை பாதுகாத்துத் தொழ வில்லையோ, அது அவருக்கு ஒளியாகவோ, அத்தாட்சியாகவோ, பாதுகாப்பாகவோ இருக்காது. இன்னும் அவன் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், தப்ரானி)
சடைந்தவர்களாக தொழுவோரின் தான தர்மங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது:
அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில், அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை. (அல்குர்ஆன் 9:54)