அல்லாஹ் ஜல்லஷானஹுதாஆலா இப்பூமியை படைத்த பொழுது அது அசைந்து ஆடி நடுங்கியது. எனவே அதன் மீது மலைகளை நிலை நாட்டினான். பூமியின் மீது மலைகளை உற்பத்தி செய்து அமைத்த பின்னர் பூமி நிலை பெற்றுவிட்டது. மலைகளின் உறுதியையும், பிரமாண்டத்தையும் கண்ணுற்ற வானவர்கள கீழ்கண்டவாறு இறைவனிடம் கேட்டனர்.
வானவர்கள்: யா அல்லாஹ்! மலைகளைவிட உறுதியானவற்றை இவ்வுலகில் நீ படைத்து இருக்கின்றாயா?
இறைவன்: ஆம்! இரும்பை படைத்துள்ளேன். மலையையே தகர்க்கும் சக்திகொண்டது இரும்பு.
வானவர்கள்: இரும்பை விட உறுதியான படைப்பை படைத்து இருக்கின்றாயா?
இறைவன்: ஆம்! நெருப்பை படைத்து இருக்கின்றேன். ஏனெனில் அந்த இரும்பையே உருக்கும் ஆற்றல் கொண்டது நெருப்பு.
வானவர்கள்: நெருப்பைவிட உறுதியான படைப்பை படைத்து இருக்கின்றாயா?
இறைவன்: ஆம்! நீரை படைத்து இருக்கின்றேன். நீரானது நெருப்பையே அழிக்கக்கூடிய திறன் வாய்ந்தது.
வானவர்கள்: நீரை விட உறுதியான படைப்பை நீ படைத்து இருக்கின்றாயா?
இறைவன்: ஆம்! காற்றை படைத்து இருக்கின்றேன். காற்றானது நீரையே அலைகழிக்கும் ஆற்றல் மிக்கது.
வானவர்கள்: காற்றைவிட உறுதியான படைப்பை நீ படைத்து இருக்கின்றாயா?
இறைவன்: ஆம்! ஆதத்தின் சந்ததிகளைப் படைத்துள்ளேன்; ஆனால் அவர்கள் இடக்கைக்கு தெரியாமல் வலக்கையால் ஏதேனும் தர்மம் செய்யும் பொழுதுதான்.
இவ்வாறு இறைவன் கூறியதாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்துள்ளார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மிதி) தர்மத்தின் வலிமையை பார்த்தீர்களா? சுப்ஹானல்லாஹ்!