வாரா வாரம் வியாழன் ஆனால் ஒரு ஆரவாரம் தான். மறு நாள் வெள்ளிக்கிழமை எல்லோருக்கும் லீவாச்சே. அதை நினைத்து ஒரு சந்தோசம். அது மாதிரி தான் ஒரு நண்பரின் தேவை விஷயமாய் இன்னொரு நண்பரை பார்த்து விட்டு வரும்போது அந்த நண்பர் சொன்னார்: ”இன்னிக்கி நைட் அல் கோபார் போலாம். பின்னிரவு சொற்பொழிவு நடக்கும் அதைக் கேட்டு விட்டு சஹர் சாப்பாடு (காலைப் பொழுது விடிவதற்கு சற்று முன் வரை) அங்கேயே சாப்பிட்டு விட்டு வந்து விடலாம்” .
சாப்பாடாச்சே விடலாமா ?? விடக் கூடாது. போய் விட்டேன். என்ன பார்க்கிறீங்க நாமெல்லாம் அப்படி தான்!!
போய்ப் பார்த்தால் உருதுவில் சொற்பொழிவு நடந்துக் கொண்டிருந்தது. அட வெளங்காதவனே அத மொதல்லேயே சொல்லி இருக்கக் கூடாது என்று நண்பனை திட்டி விட்டு (என்னையும் தான்), ஆனாலும் புரிந்த மாதிரி உட்காராவிட்டால் தமிழ் கூறும் நல்லுலகுக்கு இழுக்காச்சே, உட்கார்ந்து விட்டேன்!!
அப்ப தான் எனக்கு நன்கு பரிட்சையமான குடும்ப நண்பர் ஒருவர் அங்கு அவருடைய பரிவாரங்களோடு வந்திருப்பது கண்டு அப்படியே சொற்பொழிவின் சப்தமில்லாத பகுதிக்கு அவரை அழைத்துச்சென்று பேசிக் கொண்டிருந்தேன். அப்ப தான் அந்த செய்தியை சொன்னார். அது இது.
நேற்று பிற்பகல் (3 30 மணி) அசர் தொழுது விட்டு சற்று கண்ண சரலாம் என்று படுத்து சிறிது நேரமே உறங்கி இருப்பேன். அப்ப எனக்கு ஒரு அலை பேசி வந்தது. அதை எடுத்துப் பேசும் போது ஒரு அரபுகாரன் பேசினான். என்னுடைய அலை பேசி நம்பரைச் சொல்லி “இது யார் நம்பர்” என்று கேட்டான். என்னுடையது தான் என்றேன். பெயரென்ன என்றான். நான் என் பெயரைச் சொன்னேன். எத்தனை வருஷமா யூஸ் பண்ணிக் கிட்டிருக்கே என்று கேட்டான். பத்து வருஷமா என்றேன். அப்படியா என்று நிறுத்தி “இந்த நம்பருக்கு லக்கி ப்ரைஸ் அடிச்சிருக்கு என்றான். எனக்கு தூக்கம் கலஞ்சுடுசுங்க. என்னது என்று சொல்லி பட்டென்று எழுந்து உட்கார்ந்து விட்டேன்.
ரெண்டு லட்சம் ரியால் (இந்திய ரூபாய் மதிப்பு 25 லட்சம்) கார் உனக்கு உன் செல் நம்பருக்கு லாட்டரி அடிச்சிருக்கு. கார் வேணுமா அல்லது கேஸா வேணுமா என்றான். நான் கேஸாவே கொடு கார் வேணாம் என்று சொன்னேன். (இந்த சப்தம் கேட்டு வீட்டில் மனைவி பிள்ளைகள் அனைவரும் என் முன் குழுமி விட்டனர்)
அப்படியா என்று சொல்லி, இந்த நம்பரை நோட் பண்ணிக்கோ என்று சொன்னான் ( 8996601 ) பண்ணிக் கொண்டேன். உடனே உன் சிம்மை கழட்டிப் பாரு அந்த நம்பர் இருந்தா அந்த ப்ரைஸ் உனக்கு தான். நீ செக் பண்ணிட்டு சரியா இருந்தா எனது செல்லுக்கு திரும்ப பேசு என்று சொல்லி கட் பண்ணிட்டான்.
கட கட வென்று செல்லை ஓபன் பண்ணி சிம்மை கழட்டிப் பார்த்தா அந்த நம்பர் இருக்கு. எங்களுக்கு சந்தோஷத்தில் கையும் ஓடல காலும் ஓடல. இங்கு வீட்டில் ஆளாளுக்கு ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, நான் திரும்ப அந்த அரபுக்காரனுக்கு செல் பண்ணினேன். அவன் தான் எடுத்தான். பார்த்தியா இருக்கா என்றான்; இருக்கு என்றேன்.
அப்ப உனக்கு கேஷ் தான் வேணுமா? அப்படியானால் ஒரு குறிப்பிட்ட பேங்க் பெயரைச் சொல்லி அங்க வந்து தான் கலக்ட் பண்ணிக்கணும் சரியா என்றான் ; சரி என்றேன். திரும்பவும் உனக்கு பேங்கில் அக்கவுண்ட் இருக்கா என்றான்; இல்லை என்றேன்.
நான் உடனே கலக்ட் பண்ரதுக்குள்ள “சீக்ரட் கோட் நம்பர்” ஏதேனும் இருக்குமே அதைக் கொடு என்றேன். அப்ப தான் அவன் சொன்னான். அது வேணும்னா நீ ஒரு காரியம் பண்ணனும் என்றான் ; என்ன?? என்றேன். 300 ரியால் மதிப்புள்ள sawa டெலி போன் கார்டு வாங்கி என்னுடைய மொபைல் நம்பருக்கு top up பண்ணு தருகிறேன் என்றான். உஷாராகி விட்டேன்.
என்னிடம் அவ்வளவு பணமெல்லாம் இல்லை; நான் சாதா கூலி தொழிலாளி என்றேன். அவன் விடாப் பிடியாக, இல்லையென்றால் உண்டாக்கு பரிசு கிடைக்காது என்றான்.
இதற்கிடையே வீட்டில் என் பிள்ளைகள் மனைவி உள்பட நான்கு பேரும் அவரவர்களுடைய செல்லை ஓபன் செய்து சிம்மை கழட்டிப் பார்க்கையில் அத்தனையிலும் மேற்படி குறிப்பிட்ட நம்பர் இருப்பதை ரகசியமாக என்னிடம் தெரிவித்தார்கள். (அந்த நம்பருக்கு பக்கத்தில் டேஷ் போட்டு 48000 என்று சில நம்பர்கள் இருக்கும் என்பது வேறு விஷயம்)
நான் அந்த அரபுக்காரனுக்குப் பிடி கொடுக்காததால், செல் கை மாறி ஒரு பாகிஸ்தானியிடம் போனது. அவன் “இந்த ரமலான் நேரத்தில் அல்லாஹ் உனக்கு மிகப் பெரிய ரஹ்மத்தும் பரக்கத்தும் செய்திருக் கிறார் சகோதரா! அதனால நீ கொஞ்சம் கூட தாமதிக்காது அந்த அரபுக் காரர் சொன்னதை செய். உனக்கு மிகப் பெரிய தொகை கிடைக்க இருக்கிறது” என்றான்.
(இதற்கிடையே என்னிடம் பேசிகொண்டிருக்கும் போதே ஒவ்வொரு விவரமும் கம்பியூட்டரில் சரி பார்ப்பது போல் கீ போர்ட் சப்தம் வருவது போல் பிரமையை உருவாக்கி கொண்டிருந்தான்கள்)
நான் ரூட்டை மாற்றினேன். “ஒன்று வேணும்னா செய்யலாம், அதாவது எனக்கு கிடைக்கும் தொகையில் ஐயாயிரம் ரியால் வேணும்னா கழித்துக் கொள்ளுங்கள்” என்றேன். டக்கென்று அவன் சுருதி குறைந்தது. ரெண்டு 300 ரியால் கார்டாவது வாங்கி பார்வர்ட் பண்ணு என்றான்.
பத்தாயிரம் ரியால் வேணும்னாலும் கழித்துக் கொண்டு கொடு, என்னிடம் பைசா காசு இல்லை என்றேன். டக்கென்று செல்லை கட் பண்ணி விட்டான்கள்.
என்னங்க இது! இன்டர்நெட்டில் வந்து தான் நைஜீரியாக் காரங்கள் கொள்ளையடிப்பதாக கேள்விப் பட்டிருக்கிறேன். இது ரொம்ப மோசமாவுல தெரியுது.
டிஸ்கி : மக்களே உஷாரா இருங்கள்!! எல்லோரையும் உஷார்ப் படுத்துங்கள்!!
நன்றி: A. அஹமது முஹையித்தீன்