உற்சாகத்தின் தொழிற்சாலை!
கொஞ்சம் அக்கறை,
கொஞ்சம் கனிவு,
கொஞ்சம் விழிப்புணர்வு
இருந்தால் போதும். உங்களுக்குள் உருவாகும் உற்சாகத்தின் தொழிற்சாலை.
பிறவிக் குணமல்ல உற்சாகம். பழக்கத்தாலும் பயிற்சியாலும் வருவதுதான். இந்த உண்மையை முதலில் ஒப்புக் கொள்வோம். எல்லோருக்கும், எல்லாச்சூழலும் உற்சாகமாய் உள்ளத்தை வைத்திருக்கும் வாய்ப்பை வழங்காது. ஆனால் உற்சாகமாய் இருப்பது என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால் வெளிச்சூழல் அதை மாற்றவே முடியாது.
ஏன் தெரியுமா?
வெளியேயிருந்து வருவதல்ல உற்சாகம். உள்ளே இருந்து உருவாவது அது.
உங்கள் அழகுக்கும் உற்சாகத்துக்கும் சம்பந்தமில்லை.
உங்கள் பணத்துக்கும் உற்சாகத்துக்கும் சம்பந்தமில்லை.
உங்கள் வேலைக்கும் உங்கள் உற்சாகத்துக்கும் சம்பந்தமில்லை.
இவையெல்லாம் மிக சாதாரணமாக இருந்தாலும் நீங்கள் அசாதாரணமானவராக, அதீத உற்சாகம் உள்ளவராக இருக்க முடியும்.
நீங்கள் யார் என்கிற பிம்பத்தைக் கட்டமைப்பது உங்கள் உற்சாகம் மட்டுமே. உங்களை காந்தசக்தி மிக்கவராய் உருவாக்குவது உற்சாகம் மட்டுமே!
இந்த விநாடி நான் உற்சாகமாக இருக்க வேண்டும் என்றால் அதற்குக் காரணம் வேண்டாமா? என்று சிலர் கேட்பார்கள்.
இந்த விநாடி நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்கிற ஒற்றைக் காரணமே போதும்.
விழிப்புடன் இருக்கிற விநாடி ஒவ்வொன்றிலும் உற்சாகமாய் இருப்பது என்று நீங்கள் தேர்வு செய்துவிட்டால் உங்களுக்குள் இருக்கும் உற்சாகத்தின் தொழிற்சாலை 24×7 வேலை பார்க்கத் தொடங்கிவிடும்.
சின்ன ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் எடுக்க நீங்கள் போனால்கூட, உங்களை புன்னகைக்க வைக்கப் போராடுகிறார் புகைப்படக் கலைஞர். ஏன்? புகைப்படம் என்பது, குத்துமதிப்பாக நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று காட்டுவதற்கான ஒரு விஷயம். அதில் நீங்கள் புன்னகையோடு புத்துணர்வோடு இருந்தால் பார்ப்பவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படும் என்பதுதான் காரணம். நிழல் ஏற்படுத்தும் அபிப்பிராயத்தை நிஜம் உறுதிசெய்ய வேண்டுமே தவிர கெடுத்து விடக் கூடாது. நடந்து போகிறபோது உங்கள் நிழலை கவனியுங்கள். உங்கள் உருவ அமைப்பு பற்றிய ஒரு வரைபடத்தை மட்டுமே அது வரைகிறது. நிழலை விட நிஜம் இன்னும் எடுப்பாக இருந்தால்தானே சிறப்பாக இருக்கும்.
முகத்தில் இருக்கிற புன்னகை புகைப் படத்தில் விழவேண்டுமே தவிர, புகைப்படத்தில் இருக்கும் புன்னகையை முகத்தில் கொண்டுவருவதற்கு மூச்சுத் திணறக்கூடாது. அப்படியானால் புன்னகையை, புத்துணர்வை உங்கள் இயல்பாகவே ஆக்கிக் கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் இதற்கு முயற்சியும், பயிற்சியும் முக்கியம். பின்னர் நீங்களாக விரும்பினால்கூட சோர்வாக இருக்க முடியாது. அடிப்படையில் எந்தப் பழக்கமும் அப்படித்தான். சில கெட்ட பழக்கங்களைப் பழகிக் கொள்கையில் முதலில் சிரமப்படுகிறவர்கள் பிறகு அதை உடும்புப் பிடியாய் பற்றிக் கொண்டு பின்னால் விட முடியாமல் போராடுகிறார்கள். உற்சாகமாய் இருக்கப் பழகிக் கொள்வதில் இருக்கிற பெரிய வசதியே, அதைப் பழக்கமாக ஆக்கிக் கொண்டு விட்டால் பின்னர் அதை விடுவதற்கு நீங்கள் போராட வேண்டிய அவசியமேயில்லை.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை: உங்கள் நடையும் பாவனையும் உங்களை உற்சாகமானவராகக் காட்டும் முதல் அடையாளங்கள். பாரதி சொன்ன இந்த இலக்கணம் புதுமைப்பெண்களுக்கு மட்டுமல்ல. புதுமையின் புதையலை வாழ்வில் தேட நினைக்கும் ஒவ்வொருவருக்குமே உரியது.
இறுக்கமில்லாத முகம் நெருக்கமான குணம்: முகத்தில் இருக்கும் இறுக்கமே, சிரித்த மூஞ்சிகளை சிடுமூஞ்சிகள் ஆக்குகின்றன. முகத்தில் இருக்கும் இயல்புநிலையே, எதிரே இருப்பவரை ஈர்க்கிறது. இறுகிய முகங்கள், இழுத்துச் சார்த்திய கதவுகள் கொடுக்கும் அதே வெறுமையைத்தான் வெளிப்படுத்தும். அச்சம், பதட்டம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றின் அடையாள அட்டைகளே இறுக்கம். இறுக்கத்தைத் தளர்த்துங்கள். இனிய புன்னகையை மலர்த்துங்கள்.
தென்றல் வீசும் கண்கள்: கண்களை நேருக்கு நேராகப் பார்த்துப் பேசுவதுபற்றி பலரும் சொல்லியிருக்கிறார்கள். இன்னொருவர் கண்களுக்குள் உங்கள் கண்கள் மின்னல் பாய்ச்சும் போது அதில் தென்றல் வீச வேண்டும். புலனாய்வுப் பார்வையை செலுத்துவதன் மூலம் உங்கள் அவநம்பிக்கையை வெளிப்படுத்தி அவ நம்பிக்கையையே பெறுகிறீர்கள்.
பெயர் சொல்லும் பரிவு: அறிமுகமானவர்களின் பெயர்களை உதடு மலர்த்தி உச்சரிப்பதன் மூலம் நீங்கள் அவர்மேல் அக்கறை கொண்டிருப்பதை அறிவிக்கிறீர்கள். உலகின் மிக இனிமையான சங்கீதம், அவரவர் பெயர்கள். குறைந்தது மூன்றாவது சந்திப்பிலாவது அவரை நீங்கள் பெயர் சொல்லி அழைக்க வேண்டும். பார்த்த இரண்டாவது நொடியிலேயே அவருடைய பெயரை நீங்கள் சொல்லிவிட வேண்டும். இதற்கு மிக நல்ல வழி, முதலில் அவர் பெயரைத் தெரிந்து கொண்டதுமே அதைப் பலமுறை உங்கள் உரையாடலில் பயன்படுத்தி உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்வதுதான்.
கருத்துக்கள் தெரிவிப்பதற்கே! திணிப்பதற்கல்ல: நான்கு பேர் மத்தியில் பொது விஷயம் ஒன்றைப் பேசத் தொடங்குகையில் ஒரு கலந்துரையாடலைத் தொடங்கி வையுங்கள். எடுத்ததுமே தீர்ப்புச் சொல்லி திரையை மூடி விடாதீர்கள். “செம்மொழி மாநாடு பற்றி என்ன நினைக்கிறீங்க” என்று தொடங்கலாமே தவிர “இந்த மாநாட்டிலே என்ன பெரிசா நடந்துடுச்சு” என்று ஒரே போடாகப் போடாதீர்கள். பிறர் தங்களை வெளிப்படுத்த வாய்ப்புத் தருபவர்களே பெரிதும் விரும்பப்படுகிறார்கள்.
மனிதர்கள் முக்கியம்: விவாதங்கள் முக்கியம். அவற்றை விட முக்கியம் மனிதர்கள். மற்றவர்களை மடக்கி வீழ்த்துவது மல்யுத்தத்தில் வேண்டுமானால் வெற்றி தரலாம். சந்திப்புகளில் இது சங்கடத்தையே ஏற்படுத்தும். பிறர் சொல்கிற விஷயத்தில் துளி நியாயம் இருந்தாலும் அவர்களைப் பாராட்டத் தவறாதீர்கள். பலர் கூடியிருக்கும் இடத்தில் எல்லோரும் முக்கியம் என்கிற எண்ணம் யாருக்கிருக்கிறதோ அவர் எல்லோராலும் விரும்பப்படுகிறார்.
வராதவரை விமர்சிக்காதீர்கள்: பொது இடத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கே இல்லாதவரைப்பற்றி விமர்சனங்கள் எழுந்தால் நாசூக்காகத் தவிர்த்து விடுங்கள். முடிந்தால் அவருடைய நல்ல இயல்புகள் சிலவற்றைச் சொல்லுங்கள். இதில் இரண்டு நன்மைகள். தாங்கள் அங்கே வந்திருக்காவிட்டாலும் கூட தங்களைப் பற்றி நீங்கள் நல்லவிதமாய் பேசுவீர்கள் என்று அங்கே இருப்பவர்கள் நம்புவார்கள். யாரைப் பற்றிப் பேச்சு வந்ததோ அவர்களுக்கு அந்தத் தகவல் நிச்சயம் போகும். அதில் நீங்கள் சொன்ன வார்த்தைகள் உங்கள்மேல் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.
பன்னீர்த் துளியல்ல பாராட்டு: பலரும் பிறரைப் பாராட்டும்போது பன்னீர் தெளிப்பது போல் பட்டும்படாமல் தெளிப்பார்கள். தங்களுக்கு மட்டும் பாராட்டு குற்றால அருவிபோல் கொட்ட வேண்டுமென்று விரும்புவார்கள். வஞ்சமில்லாமல் பாராட்டுபவர்களே பாராட்டுக்கும் பிறரின் நிபந்தனையில்லாத பிரியத்திற்கும் ஆளாகிறார்கள்.
தெரியாது என்பதால் சரியாது பெருமை: தெரியாத விஷயத்தைத் தெரியாதென ஒப்புக் கொள்வதால் ஒருவரின் பெருமை சரியாது. மாறாக அவர்மேல் இருக்கும் ஈர்ப்பைக் கூட்டும். எந்தத் திசையில் இருந்தும் கற்றுக் கொள்ளத் தயாராய் இருப்பதைக் காட்டும். விஷயங்களை அறிந்து கொள்வதில் யாருக்கு அக்கறை இருக்கிறதோ அவர்கள் என்றும் உற்சாகமாகத்தான் இருப்பார்கள்.
கூட்ட வேண்டாம் குரலின் சுருதி: சொல்லும் கருத்தில் உறுதி காட்ட குரலின் சுருதியைக்கூட்ட வேண்டாம். அது ஆணவத்தின் அறைகூவலாய் அறிந்து கொள்ளப்படும் அபாயமிருக்கிறது. இதமான முறையில் சீரான குரலில் கருத்துக்களை விதைக்கிற முறை உங்களை அபாரமான நம்பிக்கை கொண்டவராகவும் காட்டும். உங்கள் மேல் நம்பிக்கையையும் ஊட்டும்.
கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் கனிவு, கொஞ்சம் விழிப்புணர்வு இருந்தால் போதும். உங்களுக்குள் உருவாகும் உற்சாகத்தின் தொழிற்சாலை. உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்ஸ வெற்றிகளின் வரைவோலை.
நன்றி: நமது நம்பிக்கை