நீட்டப்படும் மாதங்கள்!
[ மேக மூட்டம் காரணமாக முப்பது நாட்களைப் பூர்த்தி செய்துவிட்டு மறுநாள் தலைப்பிறை என்று முடிவு செய்கிறோம். ஆனால் வானில் பிறை சற்று பெரிதாகத் தெரிகின்றது. ஆஹா இது இரண்டாவது பிறையல்லவா? முதல் பிறையைத் தவறவிட்டு விட்டோமே? என்று அலட்டிக் கொள்ளக் கூடாது. முந்தைய மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். அதாவது அல்லாஹ்வின் பார்வையில் இன்னும் மாதம் பிறக்கவில்லை என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.]
கண்களால் பார்த்துத் தான் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை கூறும்ஹதீஸ் இது தான்.
حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا محمد بن فضيل عن حصين عن عمرو بن مرة عن أبي البختري قال خرجنا للعمرة فلما نزلنا ببطن نخلة قال تراءينا الهلال فقال بعض القوم هو ابن ثلاث وقال بعض القوم هو ابن ليلتين قال فلقينا ابن عباس فقلنا إنا رأينا الهلال فقال بعض القوم هو ابن ثلاث وقال بعض القوم هو ابن ليلتين فقال أي ليلة رأيتموه قال فقلنا ليلة كذا وكذا فقال إن رسول الله صلى الله عليه وسلم قال إن الله مده للرؤية فهو لليلة رأيتموه – مسلم
நாங்கள் உம்ராவுக்காகப் புறப்பட்டோம். பதன் நக்லா என்ற இடத்தில் ஓய்வெடுத்தோம். அப்போது பிறை பார்க்க முயன்றோம். (பிறை தென்பட்டது) சிலர் இது மூன்றாவது இரவின் பிறை என்றனர். மற்றும் சிலர் இரண்டாவது இரவின் பிறை என்றனர்.
நாங்கள் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்து இது பற்றிக் கூறினோம். அதற்கவர்கள் நீங்கள் எந்த இரவில் பார்த்தீர்கள்? என்று கேட்டார்கள். இந்த இரவில் பார்த்தோம் என்று விடையளித்தோம்.
அதற்கு இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ”பிறையைப் பார்க்கும் வரை (முதல்) மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான்” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர். எனவே பிறையை எந்த இரவில் நீங்கள் பார்த்தீர்களோ அந்த இரவுக்குரியது தான் என்று விளக்கமளித்தார்கள். (அறிவிப்பவர் : அபுல்பக்தரீநூல் : முஸ்லிம்)
வானில் பிறை இருப்பதோ, கணிக்கப்படுவதோ, அல்லது வேறு எங்கோ பார்த்ததாகத் தகவல் கிடைப்பதோ பிறையைத் தீர்மானிக்க உதவாது. மாறாக நாளைத் தீர்மானிக்க நமது பார்வையில் தென்படுவது மட்டுமே ஒரே அளவு கோல் என்று இந்த ஹதீஸ் மிகத் தெளிவாகப் பறை சாற்றுகிறது.
பிறையை பார்க்கும் வரை மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்
என்ன அற்புதமான வாசகம் என்று பாருங்கள்.
இந்த ஹதீஸை இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பயன்படுத்திய சந்தர்ப்பம் கவனிக்கத் தக்கது.
பிறையின் அளவு பெரிதாக இருப்பதால் ஒரு பிறையைத் தவற விட்டு விட்டோமே என்று சிலரும், இல்லை இல்லை நாம் இரண்டு பிறைகளைத் தவற விட்டு விட்டோம் என்று மற்றும் சிலரும் கூறுகிறார்கள். அவர்களில் யாருமே அதைத் தலைப்பிறை என்று நினைக்கவில்லை. காரணம் பிறையின் அளவு பெரிதாக இருந்தது தான்.
அது போன்ற சமயத்தில் தான் நீங்கள் எந்த இரவில் பார்த்தீர்களோ அந்த இரவின் பிறை தான் என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். இதைத் தீர்மானிக்கும் உரிமை பார்வைகளுக்கே உள்ளது என்ற நபிமொழியையும் எடுத்துக் காட்டுகிறார்கள்.
பிறையைப் பார்ப்பது வரை மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்பது எவ்வளவு அற்புதமான வாசகம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உண்மையில் பிறை பிறந்திருக்கலாம்; ஏதோ காரணத்தால் அதைப் பார்க்க முடியாமல் இருக்கலாம். அவ்வாறு பார்க்காததால் மாதம் பிறந்தும் அதைத் தவற விட்டு விட்டோமே என்று யாரும் எண்ணக் கூடாது.
பிறை பிறந்தது உண்மையாகவே இருந்தாலும் அது தெரியாவிட்டால் முதல் மாதத்திற்கு ஒரு நாளை அல்லாஹ் நீடித்து விடுகிறான். உண்மையில் அடுத்த மாதத்தின் தலைப்பிறை தோன்றியிருந்தால் கூட அல்லாஹ்வின் பார்வையில் அம்மாதம் பிறக்கவில்லை. அவனது பார்வையில் முதல் மாதமே நீடிக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது.
விஞ்ஞானக் கணிப்புப்படி தலைப்பிறை இன்று பிறந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் யாரும் பிறையைப் பார்க்கவில்லை என்றும் வைத்துக் கொள்வோம். வானியல் கணிப்புப்படி அடுத்த மாதம் ஆரம்பமாகி விட்டது. ஆனால் அல்லாஹ்வின் பார்வையில் முதல் மாதம் நீட்டிக்கப்படுகிறது.
இப்போது வானியல் கண்டுபிடிப்புப்படி பிறை பிறந்து விட்டது. அதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் வணக்க வழிபாடுகள் செய்வதற்கு இதை அளவுகோலாக எடுத்துக் கொள்வது சரி தானா? அல்லாஹ்வின் பார்வையில் அது ரமளானாக இருக்கும் போது வானியல் கணக்குப்படி பெருநாள் வந்து விட்டது. அல்லாஹ் அவனது கணக்குப்படித் தான் நம்மை விசாரிப்பான்.
வானியல் அறிவு மூலம் துல்லியமாகக் கணிக்க முடியும் என்பதை நாம் மறுக்க மாட்டோம். இதைப் பின்னர் விளக்கவுள்ளோம். ஆனால் மாதம் எப்போது துவங்குகிறது என்பதற்கு இதை அளவுகோலாகக் கொள்ளக் கூடாது. அல்லாஹ்வின் பார்வையில் ரமளான் எப்போது துவங்குமோ அப்போது நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ்வின் பார்வையில் ஷவ்வால் பிறந்து விட்டால் பெருநாள் கொண்டாட வேண்டும்.
அல்லாஹ்வின் பார்வையில் பிறை கண்ணுக்குத் தெரிந்தால் மாதம் பிறந்து விடுகின்றது. பிறை தெரியாவிட்டால் முப்பதாம் நாளில் அம்மாதம் முடிகிறது என்று கூறுவதே இறையச்சத்துக்கு உகந்த முடிவாகும். எனவே பிறையைப் பார்த்து நோன்பு வைப்பது ஒன்றே நபிவழியாகும் என்பதை அறியலாம்.
பத்து நாட்கள் மேக மூட்டம் இருந்தால் பத்து நாட்கள் அம்மாதத்தில் அதிகமாகி விடுமா என்று சிலர் விதண்டாவாதம் பேசுகின்றனர்.
பிறை பார்க்க வேண்டும் என்பதே சந்தேகத்திற்குரிய 30ஆம் இரவில் தான். அன்று பிறை தெரியவில்லை என்றால் முந்தைய மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என முடிவு செய்து
அடுத்த நாளை தலைப்பிறையைத் தீர்மானிக்க வேண்டும். இது தான் அந்த ஹதீஸின் கருத்து.
மாதத்துக்கு முப்பது நாட்கள் தான் அதிக பட்சம் என்று ஹதீஸ் உள்ளதால் இது 30ஆம் இரவுக்கு மட்டும் உரியது. முப்பது முடிந்து விட்டால் பிறை பார்க்கத் தேவையில்லை.
மாதம் நீட்டப்படுகிறது என்பதை இப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும். எனவே மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்றால் ஒரு நாள் நீட்டியுள்ளான் என்பதே பொருள்..
மேக மூட்டம் காரணமாக முப்பது நாட்களைப் பூர்த்தி செய்துவிட்டு மறுநாள் தலைப்பிறை என்று முடிவு செய்கிறோம். ஆனால் வானில் பிறை சற்று பெரிதாகத் தெரிகின்றது. ஆஹா இது இரண்டாவது பிறையல்லவா? முதல் பிறையைத் தவறவிட்டு விட்டோமே? என்று அலட்டிக் கொள்ளக் கூடாது. முந்தைய மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். அதாவது அல்லாஹ்வின் பார்வையில் இன்னும் மாதம் பிறக்கவில்லை என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.
பிறையைப் பார்த்துத் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு இந்த ஹதீஸ் தெளிவான ஆதாரம். வானில் பிறை இருக்கிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அது நம் கண்ணுக்குத் தெரிகின்றதா என்பது தான் முக்கியம்.
source: http://islamicdvd.blogspot.com/2010/08/blog-post_28.html