பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
பத்ர் போரில் பிடிபட்ட கைதிகள் குறித்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது தோழர்களுடன் ஆலோசித்தார்கள். அப்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு “அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் நமது தந்தை வழி உறவினர்கள். நமது சகோதரர்கள் மற்றும் நெருக்கமான குடும்பத்தார்கள். எனவே, (இவர்களை கொலை செய்யாமல்) இவர்களிடம் (ஃபித்யா) ஈட்டுத்தொகை பெற்றுக் கொண்டு இவர்களை விடுதலை செய்வோம். நாம் வாங்கும் ஈட்டுத்தொகை இறைநிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்கு நமக்கு உதவியாக இருக்கும். அதிவிரைவில் அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டக் கூடும். அப்போது இவர்களும் நமக்கு உதவியாளர்களாக மாறுவர்” என்று கூறினார்கள்.
பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் “கத்தாபின் மகனே! நீங்கள் என்ன யோசனை கூறுகிறீர்கள்?” எனக் கேட்டார்கள். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய ஆலோசனையை நான் விரும்பவில்லை.
மாறாக, இவர்களைக் கொலை செய்வதே எனது யோசனை. எனது இன்ன உறவினரை என்னிடம் கொடுங்கள். அவர் கழுத்தை நான் வெட்டுகிறேன்.
அக்கீல் இப்னு அபூதாலிபை அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுங்கள்.
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர் கழுத்தை வெட்டட்டும்.
ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அவரது இன்ன சகோதரரை கொடுங்கள். ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவரது கழுத்தை வெட்டட்டும்.
இதன்மூலம் இணைவைப்பவர்கள் மீது எங்களது உள்ளத்தில் எந்தப் பிரியமும் இல்லை என்று அல்லாஹ் தெரிந்து கொள்வான்.
அது மட்டுமா! இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் குறைஷிகளின் தலைவர்களும் அவர்களை வழி நடத்தும் கொடுங்கோலர்களும் ஆவார்கள்” என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.
அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏற்று கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:
அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரும்பினார்கள். நான் கூறியதை விரும்பவில்லை. எனவே கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள்.
அதற்கு அடுத்த நாள் நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அழுதவர்களாக இருந்தார்கள்.
நான் “அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்களது தோழரும் ஏன் அழுகிறீர்கள்? அழுகைக்குரிய செய்தி எதுவும் இருப்பின், முடிந்தால் நானும் அழுகிறேன். முடியவில்லையென்றால் நீங்கள் அழுவதற்காக நானும் அழ முயல்கிறேன்” என்றேன்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ஈட்டுத்தொகை வாங்கியதின் காரணமாக உமது தோழர்களுக்கு ஏற்பட்டதை எண்ணி நான் அழுகிறேன்.
அருகில் உள்ள ஒரு மரத்தை சுட்டிக் காண்பித்து இம்மரத்தை விட நெருக்கமாக அவர்களுக்குரிய வேதனை எனக்குக் காண்பிக்கப்பட்டது” என்றார்கள்.
இது தொடர்பாகவே அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:
(இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளைக் கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல.
நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்வை விரும்புகிறான்.
அல்லாஹ் மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
அல்லாஹ்விடம் (பத்ர் போரில் கலந்த முஸ்லிம்களுக்கு மன்னிப்பு உண்டு என்ற) விதி ஏற்கனவே உறுதி செய்யப்படாமலிருப்பின் நீங்கள் (பத்ர் போரில் கைதிகளிடமிருந்து ஈட்டுத் தொகையை) வாங்கியதில் மகத்தானதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும். (அல்குர்ஆன் 8:67, 68) (நூல்; முஸ்லிம்.)
அன்பானவர்களே!
அல்லாஹ்வின் பகைவர்களை முதன்முதலில் வெற்றிகொண்டு இம்மண்ணில் ஏகத்துவத்தை நிலை நாட்டிய பத்ர் போரில் உயிரோடு பிடிக்கப்பட்ட கைதிகள் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆலோசித்தபோது, உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய வார்த்தைகள் அவர்களது ஈமானிய உறுதியையும், இறைவன் மீது கொண்ட அளப்பரிய நேசத்தையும் வெளிப்படுத்துவதோடு, இறைவனது பகைவர்கள் என்னதான் எங்களின் ரத்தபந்தமாக இருந்தாலும் அவர்கள் எங்களுக்கு எதிரிகளே என்று கர்ஜித்த அந்த வீரமும், அல்லாஹ் பெரியவன்! அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மொழிந்தவையாகும்.
அதற்கு உமர்ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கருத்தை ஆதரித்து அல்லாஹ் இறக்கிய வசனம் சான்றுபகர்கிறது. மேலும், இந்த வசனம் இறங்கிய மாத்திரமே அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், தோழர்களும் அழுவதைக் கண்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், இறைத்தூதர் அவர்களே! ஏன் அழுகிறீர்கள் என்று சொன்னால் நானும் அழுவேன். அழ முடியவில்லையாயின் அழுக முயற்ச்சிக்கிறேன் என்றார்களே உமர் அவர்கள். இதில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது உமர் ரளியல்லாஹு அன்ஹு கொண்டிருந்த அளப்பரிய நேசம் வெளிப்படுவதை காணலாம்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தால் சிரித்து; அவர்கள் அழுதால் அழுது, எங்களுக்கென தனி சந்தோசம் எதுவுமில்லை; எங்கள் தலைவரின் மகிழ்ச்சியே எங்களின் மகிழ்ச்சி என்று வாழ்ந்த அந்த உத்தமத் தோழர்களை உலகம் உள்ளளவும் உண்மை முஃமின்களின் உள்ளம் நினைவு கூறும் இன்ஷா அல்லாஹ்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த நல்லறத் தோழர்களுக்கு சுவனத்தில் உயர்வான அந்தஸ்த்தை வழங்கிடுவானாக!
முகவை அப்பாஸ்
source; http://sahaabaakkal.blogspot.com/2010/08/blog-post_25.html