பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஜாங்ஜியாகோ இடையிலான நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கடந்த 10 நாட்களாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் நகர முடியாமல் ஸ்தம்பித்துப் போயுள்ளன. இந்த இடியாப்பச் சிக்கல் தீர இன்னும் சில வாரங்களாகுமாம்.
இந்த நெடுஞ்சாலையில் சுமார் 60 மைல் நீளத்திற்கு வாகனங்கள் தேங்கிக் கிடக்கின்றன. பெய்ஜிங்கில் நடந்து வரும் சாலை அமைப்புப் பணி காரணமாக ஏற்பட்ட நெரிசல் இது. கடந்த பத்து நாட்களாக இந்த நெரிசல் நீடித்து வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வாகன ஓட்டுனர்கள் வண்டியை விட்டுவிட்டும் போக முடியாமல், வண்டியிலும் உட்கார்ந்திருக்க முடியாமல் தவியாய் தவித்து வருகின்றனர். டிரைவர்களை மாற்றி மாற்றி கார்களையும் வாகனங்களையும் நகர்த்திக் கொண்டுள்ளனர்.
டிரைவர்கள் தங்கள் வாகனத்திலேயே தூங்கி, வெளியே குழாய்களில் தண்ணீரைப் பிடித்து குளித்து, லாரிகளுக்கு அடியில் சமைத்து சாப்பிட்டு பொழுதைக் கழித்து வருகின்றனர்.
அடுத்த மாத மத்தி வரை இந்த நெரிசலை சரி செய்ய முடியாது என்கிறார்கள். அவ்வளவு வண்டிகள் தேங்கிக் கிடக்கின்றனவாம். நத்தையை விட மிக மிக மெதுவாக வாகனங்கள் நகர்ந்து வருகின்றனவாம்.
கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த நெரிசல் காணப்படுகிறது. கார்கள், லாரிகள் என சகல வாகனங்களும் மாட்டிக் கொண்டு முழிக்கின்றன. ஒன்றையொன்று இடிப்பது போல வாகனங்கள் நிற்பதால் மிக மிக மெதுவாக வாகனங்களை நகர்த்தி வருகின்றனர்.
ஒரு நாளைக்கு ஒரு கிலோமீட்டர் அளவுக்குத்தான் வாகனங்கள் நகர முடிகிறதாம். ஆனால் இது இந்த வாரமாம், போன வாரம் இதை விட மோசமாக நகர்ந்தோம் என்கிறார்கள் டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்ட வாகனதாரிகள்.
ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கிய இந்த போக்குவரத்து நெரிசல் புதிதல்லவாம். ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு சம்பவம்தானாம். திடீரென 40 சதவீத அளவுக்கு வாகனங்கள் பெருத்துப் போனதுதான் இந்த நெரிசலுக்குக் காரணம் என்கிறார்கள் அதிகாரிகள்.
மேலும், மங்கோலியாவில் புதிய நிலக்கரி சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாகனப் போக்குவரத்து இப்பகுதியில் பெருமளவில் அதிகரித்து விட்டதும் போக்குவரத்து நெரிசல் இப்படி மாறிப் போனதற்குக் காரணம் என்கிறார்கள்.
செய்தி: பாலைவனத் தூது