அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் அது தண்ணீர் குடிக்கும் விஷயத்தில் கூட உண்மையாகியிருக்கிறது. அதிர்ச்சியை அள்ளித்தரும் இந்த உண்மைச் சம்பவம் யூ.கே யில் நடந்திருக்கிறது.
நல்ல ஆரோக்கியமான, திடகாத்திரமான, மருந்து மாத்திரைகளை நாடாத நாற்பத்து நான்கு வயதான ஆண்ட்ரூ தன்னுடைய ஈறுகளில் இருந்த வலியை மட்டுப்படுத்த குளிர்ந்த நீரை குடித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக எட்டு மணி நேரத்தில் அவர் குடித்த தண்ணீரின் அளவு சுமார் பத்து லிட்டர். தொடர்ந்து மூன்றாவது நாளாக எட்டு மணி நேரத்திற்கு சுமார் பத்து லிட்டர் எனுமளவில் தண்ணீர் குடித்ததால் அவருடைய உடலிலிருந்த உப்புச் சத்துக்கள் கரைந்து, அடர்த்தியிழந்து மரணமடைந்திருக்கிறார்.
அதிகப்படியான தண்ணீர் உடலின் அனைத்து செல்களையும், உறுப்புகளையும் வீக்கமடையச் செய்திருக்கின்றன. அது மூளைக்கு அதிகப்படியான அழுத்தத்தையும், வீக்கத்தையும் கொடுத்திருக்கிறது. அதுவே அவரது உயிரையும் பறித்திருக்கிறது.
மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது உடல் வலுவிழந்து அதிக போதையில் இருந்தவரைப் போல தள்ளாடியிருக்கிறார். முதலில் போதையில் இருக்கிறார் என மருத்துவர்கள் நினைத்திருக்கின்றனர், பின்னர் உண்மை உணர்ந்து சிகிச்சை அளிக்கத் துவங்கியிருக்கின்றனர். ஆனால் கூடவே மாரடைப்பும் வந்து அவரை மரணத்துக்குள் அமிழ்த்தியிருக்கிறது.
மனித உடலில் ஐம்பத்து ஐந்து முதல் எண்பது விழுக்காடு தண்ணீரால் ஆனது. மூளையின் எண்பத்து ஐந்து விழுக்காடும், குருதியின் எண்பது விழுக்காடும், தசைகளின் எழுபது விழுக்காடும் தண்ணீரால் ஆனதே. நாம் உண்ணும் உணவிலிருந்து உடல் சுமார் இருபது விழுக்காடு தண்ணீரைப் பெற்றுக் கொள்கிறது.
உடலுக்கு எவ்வளவு தேவையோ அதைத் தவிர அதிகமாய் தண்ணீர் உட்கொண்டால் தண்ணீர் கூட உயிருக்கு உலை வைக்கும் எனும் தகவல் மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது,
சரி, எவ்வளவு தண்ணீர் குடிப்பது நல்லது? எனும் கேள்விக்கு ஆரோக்கியமான மனிதன் ஒருநாள் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்.
அதிக வியர்வை சிந்தும் வேலை செய்பவர்கள் அதற்கேற்ப அதிக தண்ணீரைக் குடிக்கவேண்டும் என்பதும், விளையாட்டு வீரர்கள் வெறும் தண்ணீருக்குப் பதிலாக உப்பு, கார்போஹைட்ரேட் இவை கலந்த ஐசோடானிக் பானத்தை அருந்தலாம் என்பதும் மருத்துவர்களின் பரிந்துரையாகும்.