முகவை அப்பாஸ்
[ அன்று இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக அமைக்கப்பட கூடாரத்தில் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் மனம் உருகி பிரார்த்தித்தார்கள்;
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ருப்போரின்போது தம் கூடாரமென்றில் இருந்தபடி, ‘(இறைவா! எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதி மொழியையும், உன் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் கோருகிறேன்.
இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் இனி ஒருபோதும் (உலகில்) இருக்கப் போவதில்லை‘ என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு, ‘போதும்! இறைத்தூதர் அவர்களே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்‘ என்று கூறினார்கள்.
அப்போது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவச உடையில் இருந்தார்கள். பிறகு, ‘இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும்‘ எனும் (திருக்குர்ஆன் 54:45,46) வசனங்களை ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள். (புஹாரி எண் 4877)]
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும் சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த- வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மக்காவில் ஏகத்துவக்கொள்கையை எடுத்தியம்பியபோது அதை ஏற்றுக்கொள்ளாத மக்கத்து இணைவைப்பாளர்கள் அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கும் பல்வேறு கடுமையான துன்பங்களை தந்தனர். ஓரிறைக்கொள்கையை ஏற்ற ஒரே காரணத்திற்காக பல சஹாபாக்கள் உயிர்களையும் பறித்தனர் பாவிகள்.
ஒருகட்டத்தில் தங்களது ஈமானை பாதுகாக்கும் நோக்கில் அபிசீனியாவிற்கு சகாபாக்கள் சிலரும், பின்னால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலைமையில் மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்யும் நிலை ஏற்பட்டது. மதீனா வந்த பின்னும் எப்படியேனும் முஹம்மதையும் அவரது தோழர்களையும் ஒழிக்கவேண்டும் என்று அதற்கான தருணம் பார்த்துக்கொண்டிருந்தனர் மக்கத்து குறைஷிகள்.
இதற்கிடையில் மக்கத்து குறைஷிகளின் பொருட்கள் அடங்கிய வாகனக்கூட்டத்தை அபூ சுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், (அபூ சுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அப்போது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை) சிரியாவிலிருந்து மதீனாவை அடுத்துள்ள பத்ர் மார்க்கமாக மக்காவை நோக்கி வழிநடத்தி சென்று கொண்டிருந்தார்கள்.
இந்த செய்தி நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எட்டியவுடன், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக நம்முடைய சொத்து பத்துக்களை இழந்து நாடு துறக்கும் நிலைக்கு ஆளாக்கிய குறைஷிகள் இந்த செல்வங்களும் கிடைக்கப்பெற்றால் இன்னும் வலிமை பெற்று இஸ்லாத்திற்கு எதிராக களம் காண்பார்கள். எனவே இந்த வாகன கூட்டத்தை வழிமறிக்கவேண்டும் என்ற ரீதியில் நபித்தோழர்களிடம் ஆலோசனை நடத்தினார்கள்.
நபியவர்களின் இந்த ஆலோசனையை அறிந்துகொண்ட அபூசுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், முஹம்மதும் அவரது தோழர்களும் உங்களது வணிகபொருட்களை அபகரிக்க திட்டம் தீட்டியுள்ளனர். எனவே உங்களின் பொருட்களை பாதுகாக்க படை திரட்டி வாருங்கள் என்று ழம்ழம் இப்னு அல் கிபாரி என்பவன் மூலமாக குறைஷிகளுக்கு தூது அனுப்பிவிட்டு, தனது பயணத்தின் பாதையை மாற்றி பத்திரமாக பொருட்களுடன் மக்கா வந்து சேர்ந்தார். (இப்னு ஹிஷாம்0
இதற்கிடையில் குறைஷிகள் படை மக்காவிலிருந்து கிளம்பி பத்ர் அருகே நெருங்கிவிட்டிருந்தனர். இதையறிந்த அபூசுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தானும், உங்களது பொருட்களும் பத்திரமாக மக்கா வந்தடைந்து விட்டோம். எனவே உடனடியாக திரும்பி வாருங்கள் என்று குறைஷிகூட்டத்திற்கு அபூசுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தகவல் அனுப்பினார்.
சில கோத்திரத்தார் அபூசுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மக்கா திரும்ப எஞ்சிய படைகளுடன் அபூஜஹல் மறுத்து பிடிவாதமாக பத்ரை வந்தடைந்தான். (இப்னு ஹிஷாம்)மறுபுறம் அபூ சுஃப்யானின் வாகன கூட்டத்தை முற்றுகையிட ஆயத்தமாகிக் கொண்டிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு, குறைஷிகளின் படை மதினாவை நோக்கி பத்ரில் மைய்யம் கொண்டுள்ள தகவல் கிடைக்கிறது.
அபூசுப்யான் மக்காவை சென்றடைந்த தகவல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறியவில்லை. எனவே இப்போது வாகனக்கூட்டத்தை முற்றுகைஇடுவதா? அல்லது குறைஷிகளை எதிர்த்து போர் புரிவதா? என்ற இரு நிலைமைகள் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களிடம் ஆலோசனை செய்கிறார்கள். அப்போது அபூபக்கர்[ரலி], உமர்[ரலி] போன்ற பெரும்பாலான நபித்தோழர்கள் போர் செய்வதையே வலியுறுத்தினார்கள். (முஸ்லிம்)
மேலும் அல்லாஹ்,
وَإِذْ يَعِدُكُمُ اللّهُ إِحْدَى الطَّائِفَتِيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ اللّهُ أَن يُحِقَّ الحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ
(அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான். (8:7)
என்ற வசனம் மூலமாக இரண்டில் ஒன்றை அது எதுவாக இருந்தாலும் வெற்றி உண்டு. எனினும் அல்லாஹ் காபிர்களை வேரறுக்கவே நாடுகிறான் என்ற வசனம் தெளிவாக்குகிறது. இறுதியாக போர் செய்யும் முடிவுக்கு வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் படை பத்ரில் மைய்யம் கொள்கிறது.
அன்று இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக அமைக்கப்பட கூடாரத்தில் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் மனம் உருகி பிரார்த்தித்தார்கள்;இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ருப்போரின்போது தம் கூடாரமென்றில் இருந்தபடி, ‘(இறைவா! எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதி மொழியையும், உன் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் கோருகிறேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் இனி ஒருபோதும் (உலகில்) இருக்கப் போவதில்லை’ என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு, ‘போதும்! இறைத்தூதர் அவர்களே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவச உடையில் இருந்தார்கள்.
பிறகு, ‘இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும்’ எனும் (திருக்குர்ஆன் 54:45,46) வசனங்களை ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள். (புஹாரி எண் 4877 )
இறை நிராகரிப்பாளர்கள் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி நபியவர்களுக்கு புது தெம்பை தந்தது. அதை அதிகரிக்கும் வகையில் சகாபாக்களின் ஒத்துழைப்பும் இருந்தது.
மிக்தாத் இப்னு அஸ்வத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நான், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இணைவைப்போருக்கெதிராகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது நான், ‘(இறைத்தூதர்) மூஸாவின் சமுதாயத்தார், ‘நீங்களும் உங்களுடைய இறைவனும் போய்ப் போரிடுங்கள்’ என்று (நகைப்பாகக்) கூறியது போன்று நாங்கள் கூற மாட்டோம். மாறாக, நாங்கள் தங்களின் வலப்பக்கமும், இடப்பக்கமும், முன்னாலும், பின்னாலும் நின்று (தங்கள் எதிரிகளிடம்) போரிடுவோம்” என்று சொன்னேன். (இதைக் கேட்டதும்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகம் ஒளிர்ந்ததை கண்டேன். (என்னுடைய சொல்) அவர்களை மகிழச் செய்தது. (புஹாரி எண் 3952)
இறுதியாக போரின் தொடக்கத்தில் முஸ்லிம்கள் தரப்பில் அதிகபட்சமாக 319 வீரர்களும், குறைஷிகள் தரப்பில் ஆயிரம் பேர்களும் இருந்தனர். (முஸ்லிம்)
அல்லாஹ்வின் உதவிகள்
போருக்கு முன்பாக சகாபாக்களை அமைதிப்படுத்தும் வகையில் தூக்கத்தையும்-மழையையும்வழங்கி அருளியது.
அணியணியாக திரளும் ஆயிரம் வானவர்களை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தலைமையில் அனுப்பி உதவியது.
இறுதியாக ரமலான் பிறை 17 அன்று நடந்த போரில் முஸ்லிம்கள் தரப்பில் 14 பேர் ஷகீதானார்கள். காபிர்கள் தரப்பில் 70 நபர்கள் கொல்லப்பட்டார்கள். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றியை தந்தான். அபூஜஹல் உள்ளிட்ட முக்கிய குறைஷி தலைவர்கள் அனைவரும் இதில் கொல்லப்பட்டனர். இதில் அபூஜஹல், முஆத், முஅவ்வித் என்ற இரு இளைஞர்களால் இழிவாக கொல்லப்பட்டான்.
பத்ர் போரில் பெறவேண்டிய படிப்பினைகள்
இறை நிராகரிப்பாளர்கள் வசதி வாய்ப்புகளோடும்- வலிமையோடும் இருந்தாலும் அவர்களுக்கு இம்மையிலும் இழிவுண்டு. மறுமையிலும் மகத்தான வேதனையுண்டு.
இஸ்லாத்தைகாக்க சிறிய படைகிளம்பினாலும், பென்னம் பெரிய படையை அது இறையருளால் வெல்லும்.
சிலர் கூறுவது போன்று, எதிரியின் எண்ணிக்கையில் பாதியளவு இருந்தாலே போர் கடமை என்பது தவறாகும். ஏனெனில், இந்த போரில் எதிரியின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி நபர்களை கொண்டே போர் தொடுத்து அதில் வெற்றியும் பெறப்பட்டுள்ளது. இந்த போர் மட்டுமல்ல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எந்த போரிலும் எதிரிகளின் தலையை எண்ணி பின்பு போருக்கு சென்றதில்லை. எனவே எண்ணிக்கை என்று சொல்லி முஸ்லிம்களிடமிருந்து போர் சிந்தனையை அகற்றுபவர்களின் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.
முறையான வாகனமும்-வலுவான ஆயுதமும் இன்றி, குறைவான எண்ணிக்கையில் இருந்த போதும் நிறைவான இறையச்சத்தால் வெற்றிவாகை சூடிய அந்த மாவீரர்களின் வழிமுறையில், ‘இஸ்லாத்தின் லட்சியம் காக்கும் நிலை வருமாயின்,எங்களின் இன்னுயிரையும் இரையாக்குவோம்’ என்ற சிந்தனை நம் உள்ளத்தில் ஆழமாக பதியவேண்டும்.