ஷேக் முஹம்மது ஸாலிஹ் அல் முனஜ்ஜத்
ஈமானின் பலவீனத்திற்கு பல அடையாளங்கள் இருக்கின்றன, அவை:
இறைவனால் தடுக்கப்பட்டவற்றை மற்றும் பாவமான காரியங்களில் வீழ்ந்து விடுவது:
சிலர் பாவமான காரியங்களிலேயே வீழ்ந்து கிடப்பார்கள், மற்றும் சிலர் பலவிதமான பாவமான காரியங்களைச் செய்து கொண்டிருக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் பாவமான காரியங்களைச் செய்ய ஆரம்பித்து விடுவார்களென்று சொன்னால், அதுவே ஒட்டிப் பிறந்த பழக்கமாக மாறி, காலப்போக்கில் அவை பாவமான காரியங்களாகவே அவர்களுக்குத் தோன்றாத அளவுக்குச் சென்று விடும்.
பிறர் அறியாதவண்ணம் செய்து கொண்டிருந்த பாவமான காரியங்களைப் பற்றிய பாரதூரங்களைப் பற்றி எப்பொழுதும் அவர் கவலைப்படாதவராக மாறி விடுவாரோ, அப்பொழுது மறைவாகச் செய்து கொண்டிருந்த அந்தப் பாவமான காரியங்களை வெளிப்படையாகச் செய்ய ஆரம்பித்து விடுவார். இன்னும் அந்தப் பாவம்.., ஒரு தவறாகவே அவருக்குத் தோன்றாது.
என்னுடைய உம்மத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் நல்லவர்களே, யார் பாவங்களை வெளிப்படையாகச் செய்கின்றார்களோ அவர்களைத் தவிர, உதாரணமாக, ஒரு மனிதன் இரவில் செய்ததை, காலையை அவன் அடைந்ததும் அல்லாஹ் அவன் செய்ததை மறைத்து விடுகின்றான், (பாவம் செய்த) அவன் ஓ! இன்ன மனிதனே, நான் இன்ன இன்னதைச் செய்தேன் என்று கூறி விடுகின்றான். இரவு முழுவதும் அவனது பாவத்தை அவனது இறைவன் மறைத்தான், ஆனால் இறைவன் மறைத்தை இவன் வெளிப்படுத்துகின்றான். (புகாரி, ஃபத்ஹுல் பாரி 10ஃ486)
ஒருவன் தனது இதயம் இறுகி கடினமாகி விட்டதாக உணர்வது:
ஒரு மனிதன் தனது இதயம் கடினமாகி அதனுள் எதுவும் புக முடியாத அளவு பாறை போல் இறுகி விட்டதாக உணர்வது. அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான் :
இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன. அவை கற்பாறையைப் போல் ஆயின் அல்லது, (அதை விடவும்) அதிகக் கடினமாயின் (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை. (2:74)
எவனது இதயம் கற்பாறையைப் போல் இறுகி விட்டதோ, அவனது இதயத்தில் மரணத்தைப் பற்றியோ அல்லது இறந்த மனிதர்களைப் பார்ப்பதனாலோ அல்லது மண்ணறையைப் பார்ப்பதனோலோ அவனுக்கு அந்த மரணத்தைப் பற்றிய பயம் தோன்றாது. இன்னும் மரணத்திற்குப் பின் சந்திக்கவிருக்கின்ற மறுமையைப் பற்றிய அச்சமும் தோன்றாது.
மேலும் அவன் தனது தோளில் மைய்யித்தைச் சுமந்து சென்றாலும் சரியே! அவன் அந்த மையித்தை மண்ணறையில் போட்டு மூடி விட்டு, அந்த மண்ணறைகளுக்கு ஊடே நடந்து சென்றாலும் கூட பாறை போல இறுகி விட்ட அவனது மனதில் மரணத்தைப் பற்றிய சிந்தனையையோ, மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கை பற்றியோ எந்தவித சிந்தனையையும், அதன் மூலம் கிடைக்கக் கூடிய படிப்பினையையும் அவனால் பெற்று விட இயலாது.
விதிக்கப்பட்ட கடமைகளை அல்லது வணக்க வழிபாடுகளைச் செய்யாமல் இருப்பது:
இதன் மூலம் அவனது மனது அலைபாயக் கூடியதாகவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல் மற்றும் பிரார்த்தனை புரியும் பொழுதும் அவனது மனது ஒர்மையாக இல்லாமல், அவன் எந்த வழிபாடுகளைச் செய்கின்றானோ அதன் மீது முழுமையான கவனத்தைச் செலுத்த இயலாமல் ஆகி விடும். அவன் என்ன கூறிக் கொண்டிருக்கின்றான் என்பதைப் பற்றி அவனுக்கு ஞாபகமே இருப்பதில்லை. இன்னும் தொழுகையின் பொழுது சில துஆக்களை மனனமிட்டவாறு கூறிக் கொண்டே இருப்பான், ஆனால் அந்த துஆவின் அர்த்தம் என்னவென்பது பற்றி அவன் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
எவன் இறைவனைப் பற்றி அச்சமற்றிருக்கின்றானோ, இத்தகையவர்களுடைய துஆக்களை இறைவன் அங்கீகரிப்பதில்லை. (திர்மிதி 3479, அல் சில்சிலாஹ் ஸஹீஹ் 594).
வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் சோம்பேறித்தனம் மற்றும் பொடுபோக்குத் தன்மை. நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.
இன்னும் சில சிறப்பு வழிபாடுகளில் கூட இவர்கள் கலந்து கொள்வதைத் தவிர்த்து விடக் கூடியவர்களாக இருப்பார்கள். இதன் காரணம் என்னவெனில், இத்தகைய மனிதர்கள் இறைவன் வழங்கவிருக்கக் கூடிய சிறப்பு வெகுமதிகளைக் கூட ஆர்வம் காட்டுவதில்லை. எனவே தான் அவர்களுக்கு ஹஜ் செய்வதற்கான தகுதிகள், வாய்ப்புகள் இருந்தும் அதனைத் தாமதப்படுத்தக் கூடியவர்களாகவும், இறைவழியில் போராடக் கூடிய தகுதிகள் இருந்தும் அதனைத் துச்சமாக மதிக்கக் கூடியவர்களாகவும், கூட்டு வணக்க வழிபாடுகளை நிறைவேற்றக் கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதனை உதாசினம் செய்து வாழக் கூடியவர்களாகவும், ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றுவதற்குச் சக்தி இருந்தும் அதனை நிறைவேற்றாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இறைவன் அவர்களை நரக நெருப்பில் இடும் வரையிலும், (கூட்டு வணக்க வழிபாடுகளில்) முன் வரிசையில் நிற்பதனின்றும் அவர்கள் பின் தங்கியே இருந்து கொண்டிருப்பார்கள். (அபூதாவுது 979).
இத்தகைய மனிதர்கள் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றாமல் தூங்கி விட்டாலோ அல்லது அதனை மறந்து விட்டாலோ இன்னும் அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ள சுன்னத்தான, நபிலான வணக்க வழிபாடுகள் இன்னும் திக்ருகள் போன்வற்றில் ஈடுபடாமல் இருப்பது பற்றி எந்த குற்ற உணர்வும் இல்லாதவர்களாக இருந்து கொண்டிருப்பார்கள். இன்னும் விடுபற்றவற்றை நிறைவேற்ற வேண்டுமே என்ற அச்சம் கூட அவர்களது மனதில் இருப்பதில்லை. அவற்றை நிறைவேற்றுவதுமில்லை.
இன்னும் பர்ளு கிஃபாயா போன்ற, அதாவது சிலர் அவற்றைச் செய்தால் போதும் ஏனையோர்கள் மீது அது பற்றிய கேள்வி கணக்கு இருக்காது, ஆனால் யாருமே செய்யாத பட்சத்தில் அனைவருமே அது பற்றி வினவப்படுவார்கள் என்ற நிலையில் உள்ளவற்றைக் கூட அவர்கள் நிறைவேற்ற முன்வருவதில்லை.
எனவே இத்தகையவர்கள் ஈதுப் பெருநாள் தொழுகை, கிரகணத் தொழுகை, மழைத் தொழுகை இன்னும் ஜனாஸாத் தொழுகையின் பொழுது கூட வந்து கலந்து கொள்வதில்லை. இறைவனுடைய அருட்கொடைகள் பற்றி கவனம் செலுத்துவதில்லை. இத்தகையவர்களின் நிலை இறைவன் திருமறையிலே ஒருசிலர் பற்றிக் கூறியிருப்பவற்றுக்கு எதிர்மறையாகவல்லவா இருந்து கொண்டிருக்கின்றது.
நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் – இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள். (21:90)
இன்னும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழக்கமாகப் பின்பற்றுவதற்கு அறிவுறுத்தி இருக்கின்ற சில சுன்னத்தான வணக்க வழிபாடுகளை அவன் நிறைவேற்றுவதில்லை. அதாவது இரவுத் தொழுகை, காலையில் விரைவாக எழுந்து பள்ளிக்குச் சென்று கடமையான தொழுகைக்காகக் காத்திருத்தல், நபிலான தொழுகை, இன்னும் துஆக்கள், இவை போன்றவைகள் அவனது வாழ்வில் நடைபெறாத அம்சங்களாக இருத்தல், தனிமையில் இருக்கும் பொழுது பாவ மன்னிப்புக்காக இரண்டு ரக்அத் தொழுவதில்லை, நாட்டங்கள் நிறைவேறுதவற்காகவும் நடைபெற வேண்டியவை நல்லனவாக நடப்பதற்கும் தொழக் கூடிய இஸ்திகாராத் தொழுகையும் அவன் கண்டு கொள்வதில்லை.
மன இறுக்கம், அலைபாயும் மனது, சோர்வாக இருத்தல் இத்தகையவர்கள் சமூகத்தில் மதிப்பிழந்தவர்களாகவும் இன்னும் சின்னச்சின்ன விசயங்களுக்கு எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இன்னும் இவர்களிடம் சகிப்புத் தன்மை என்பதே இருக்காது.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ”ஈமான் என்பது பொறுமையும் சகிப்புத் தன்மையும் தான் (அல் சில்சிலத்துல் ஸஹீஹ் 554, 2ஃ86) இன்னும் இறைநம்பிக்கை கொண்டவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்றால், நட்புக் கொள்ளத் தூண்டக் கூடியவர்களாகவும் இன்னும் அவர்களால் பிறர் பாதுகாப்புப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். எவரிடம் நட்புக் கொள்ளக் கூடிய தன்மையும், பிறர் பாதுகாப்புப் பெற்றுக் கொள்ளக் கூடிய தன்மையும் அற்றவராக இருப்பாரோ அவரிடம் எந்த நன்மைகளும் இல்லை.” (அல் சில்சிலத்துல் ஸஹீஹ் 427)
குர்ஆனின் வழிகாட்டுதலின் பக்கம் அவன் கவனம் செலுத்துவதில்லை, அது கூறக் கூடிய சொர்க்கத்தை விரும்புவதில்லை, நரகத்தைக் குறித்து அச்சம் கொள்வதில்லை, அதன் கட்டளைகளை ஏற்று நடப்பதில்லை, மாறாக அது வழங்கக் கூடிய கட்டளைகளையும், தடுத்திருப்பவற்றையும் பின்பற்றுவதில்லை. இன்னும் மரணித்த பின் மீண்டும் எழுப்பப்படக் கூடிய அந்த நாளைப் பற்றிய குறிப்புகளைச் சிந்தித்து உணர்வதில்லை.
எவரது ஈமான் பலமிழந்து இருக்கின்றதோ, அத்தகைகயவர்களுக்கு முன் குர்ஆன் ஓதப்படும் பொழுது மிகவும் சடைந்து சோம்பேறித்தனமாக அவர் காட்சி அளிப்பார்கள், இன்னும் தொடர்ந்து ஓதுவதற்கு அவர்கள் விரும்புவதில்லை. எப்பொழுதெல்லாம் அவர் குர்ஆனை ஓதுவதற்காக திறக்கின்றாரோ, அதனை விரைவில் மூடி வைப்பதற்கே அவர் விரும்பக் கூடியவராக இருப்பார்.ரத்த தானம் கொடுப்பவர்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்