31. இவ்வுலகிலாவது நாஸ்திகம் நல்ல பலனைத் தருகிறதா?
இவ்வளவு தெளிவாக நாஸ்திகத்தின் தீமைகளை விளக்கிய பின்பும் அவற்றில் நம்பிக்கையுள்ள நாஸ்திக நண்பர்களுக்காக, மறுமையைப் பற்றிய சிந்தனையை விட்டு, இவ்வுலக சிந்தனையை மட்டும் கருத்தில் கொண்டு, அந்த இவ்வுலக சுபீட்ச வாழ்க்கைக்காவது நாஸ்திகம் நல்ல பலனைத் தருகிறதா? அல்லது ஆஸ்திகம் நல்ல பலனைத் தருகிறதா? என்று தெளிவாக அடுத்துப் பார்ப்போம்.
கல்லையும், மண்ணையும், மிருகங்களையும், பறவைகளையும் இன்னும் கண்ட கண்ட பொருட்களையெல்லாம் கடவுள்களாக மூடத்தனமாக நம்பிச் செயல்படும் மக்களைத் திருத்தும் நல்ல நோக்கோடு, இறைவன் இல்லை என்ற தவறான தத்துவத்தை நில நாட்டுவதன் மூலம் மக்களிடையே ஏற்பட்டுள்ள மூட நம்பிக்கைகள், மூடச் சடங்குகள், ஒழுக்கமற்ற நிலைகள் இவற்றை அகற்றி, சுபிட்சமான ஒரு வாழ்க்கை முறையை மனித சமுதாயத்திற்கு அளிக்கும் திட்டத்தில் நாஸ்திகர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்பதற்குரிய ஆதாரங்களை விபரமாகப் பார்த்தோம்.
ஆக இதுவரை இறைவன் இல்லை என்று இறைவனை மறுக்கும் நாஸ்திகர்களின் போக்கு மிகவும் தவறானது, ஆபத்தானது, விவேகமற்றது என்பதை உரிய ஆதாரங்களுடன் விரிவாகப் பார்த்தோம். நடுநிலையோடு நமது ஆய்வை அணுகுகிறவர்கள் இறைவன் இல்லை என்ற தவறான கொள்கையை மாற்றிக் கொள்வர்கள் – இறை நம்பிக்கiயாளர்களாக – ஆஸ்திகர்களாக மாறிவிடுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது. இவ்வளவு தெளிவான விளக்கங்களுக்குப் பிறகும் நாஸ்திகக் கொள்கையில் நம்பிக்கையுடன் இருக்கும் நண்பர்களுக்கு இறுதியாக சில விளக்கங்களை எடுத்துச் சொல்ல விரும்புகிறோம்.
32. நிச்சயம் இரண்டில் ஒன்று:
பிறந்த மனிதன் இறக்கிறான், மரணத்தைத் தவிர்க்கும் ஒரு வாழ்க்கையை மனிதன் வாழவில்லை என்பதில் நாஸ்திக நண்பர்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நிச்சயமாக நாம் அனைவரும் மரணத்தை எதிர்பார்த்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு நாளைக்கு மரணமடையப் போகிறோம். எனவே இப்போது மரணத்தின் பின்னுள்ள நிலையைப்பற்றி நம் இரு சாராரும் மறுக்க முடியாத உண்மை நிலை இரண்டில் ஒன்றுதான். அதாவது நாஸ்திக நண்பர்கள் கூறுவது போல், இறைவனும் இல்லை, மரணத்தின் பின் விசாரணiயும் இல்லை, சொர்க்க நரகமும் இல்லை, மரணத்தோடு மனிதன் மண்ணோடு மண்ணாக ஆகிவிடுகிறான், மறு உலக வாழ்க்கை என்ற ஒன்று இல்லை என்பது உண்மையானால் நாஸ்திகர்களும் தப்பித்துக் கொள்வார்கள், நாமும் தப்பித்துக்கொள்வோம். மறுமையில் நஷ்டம் இரு சாராருக்கும் இல்லை என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.
அதே சமயம் அவர்கள் கூற்று பொய்யாகி, நமது கூற்று உண்மையானால் அவற்றை மறுத்துக் கொண்டிருந்த நாஸ்திகர்கள் வகையாக மாட்டிக் கொண்டு துன்பப்படபோகிறார்கள். காரணம், அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மறுமைக்குரிய எவ்வித முன்னேற்பாடும் செய்யவில்லை. ஆனால், நாம் மறுமையை நம்பி அதற்குரிய முன்னேற்பாடுடன் செல்வதால் இறை அளிக்கும் தண்டனைகளிலிருந்து தப்பித்து சுவர்க்கம் செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆக, எந்தக் கோணத்தில் பார்த்தாலும் நாம் பாதுகாப்பின் பக்கமே இருக்கிறோம். நாஸ்திகர்களோ கடுமையான ஆபத்தின் பக்கம் இருக்கிறார்கள்.
இப்போது நாஸ்திகர்கள் ஒரு கேள்வியை எழுப்பலாம், மறுமை என்ற ஒன்று இருப்பதாக நம்பி, இவ்வுலக வாழ்க்கையை நீங்கள் வீணாக்கிக் கொள்கிறீர்களே, அது உங்களுக்கு நஷ்டம் தானே? என்ற கேள்வியே அது. இதிலும் அவர்கள் அறியாமையிலேயே இருக்கிறார்கள் என்றே நாம் சொல்லுவோம்.
உலக ஆசாபாசங்களை விட்டு விலகியவர்களே வெற்றி பெற முடியும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. சிற்றின்ப வாழ்க்கையைத் துறந்தவர்களே சித்தி பெற முடியும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. இறை மறை இவ்வாறு கூற வில்லை, இவை அனைத்தும் மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட மதங்களின் கூற்றுக்களாகும். மாறாக, உலக வாழ்க்கையில் ஆசாபாசங்களுக்கிடையே அனைத்து இன்பங்களையும் முறையாக அனுபவித்துக் கொண்டே முழுமையான வெற்றி பெறும் ஒரு வாழ்க்கைத் திட்டத்தையே இஸ்லாம் மனித வர்க்கத்திற்கு கொடுத்துள்ளது.
இறை கொடுத்த வழியில் நடப்பவர்கள் அணு அளவும் தங்கள் இம்மை வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மையாகும். இவ்வுலக வாழ்க்கையில் சுபிட்சமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழும் வழி முறைகளையே இறைவன் வாழ்க்கை நெறிகளாக மனிதனுக்கு அளித்துள்ளான். நாஸ்திகர்களை விட இறை கொடுத்த மறைவழி நடப்பவர்களே இவ்வுலக வாழ்க்கையின் இன்பங்களை நிறைவாக அடைந்து, மன திருப்தியுடன் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்று உறுதிபட நம்மால் சொல்ல முடியும். இதனை பின்னால் நாம் விரிவாக விளக்குவோம்.
33. மதத்தால் விளைந்த விளைவு:
நாஸ்திகர்களின் இத்தவறான கூற்று மனித அபிப்பிராயங்களை கொண்டு மார்க்கத்தை மதமாக்கி, குருட்டு நம்பிக்கையில் இறைவன் பெயரைச் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே அப்படிப்பட்ட மதவாதிகளின் வாழ்க்கை நிலைகளைப் பார்த்துச் சொல்வதாகும். இறை கொடுத்த மறைவழி கண்டு சொல்லுவதில்லை.
ஆதி மனிதன் ஆதாம் முதல் இன்று வரை இந்த மனித சமுதாயத்திற்கு இறைவன் கொடுத்தது மனிதனுக்கு சாந்தியை அளிக்கும் சாந்தி மார்க்கம்-இஸ்லாம் ஆகும். காலத்திற்கு காலம் இறை கொடுத்த வழி மறந்து, மனிதன் தனது மனோ இச்சையினால் அமைத்துக் கொண்ட வழி முறைகளே மதங்களாகும். மதங்களிலும் பல நல்ல போதனைகள் இருக்கின்றனவே என்ற மனமருட்சி அவசியமற்றதாகும். சட்ட விரோதமாக தயாரிக்கப்படும் கள்ள நோட்டுக்களிலும் செல்லா நோட்டுக்களிலும் நல்ல நோட்டுக்களிலுள்ள பல அம்சங்கள் இருக்கலாம். அதனால் அவை நல்ல நோட்டுகளாக ஆகிவிடுவதில்லை எனவே சத்திய மார்க்கம் மனிதக்கரம்பட்டு மதமாகி விட்டால் அது தனது பரிசுத்த நிலையை இழந்து விடுகிறது. இறை கொடுத்த தூய வாழ்க்கை நெறி பிறழ்ந்து வழி தவறிச் செல்லும் நிலை அங்கு உருவாகி விடுகிறது.
34. மனிதன் மாறுட்ட கருத்துடையவனே!:
மனிதன் மாறுபட்ட கருத்துகளை உடையவன் என்பதில் ஐயமில்லை. எனவே பற்பல கருத்துக்கில் பற்பல மதங்கள் தோன்றின. ஆயினும் மனிதன் தனது கற்பனையினால் தோன்றிய மதங்களுக்கும் இறைச் சாயம் பூசி இருப்பதால் நாஸ்திகர்கள் இந்த மதங்களை எல்லாம் தூய வாழ்க்கை நெறி கொடுத்த இறைவனுடன் சம்பந்தப்படுத்தி ஏமாறுகின்றனர். மனித சமுதாயத்தில் வேற்றுமைகளை உண்டுபண்ணும் மதங்களை கொடுத்த ஒரு இறைவன் இருக்க முடியுமா?, என்று வினா எழுப்புகின்றனர். ”கைசேதம், இறை கொடுத்த இறுதி மறையாக ஒரு புள்ளியும் பழுது படாத நிலையிலுள்ள குர்ஆனை ஒப்புக்கொள்ளும் முஸ்லிம்களாவது தங்கள் வாழ்க்கை முறைகளில் மனித அபிப்பிராயங்களைக் கலக்காமல் தூய இஸ்லாமிய நெறிமுறையில் வாழ்கின்றார்களா? என்றால் இல்லை என்ற பதிலைத்தான் பெற முடியும்.” வெகு சொற்பமான முஸ்லிம்கள் அந்த அடிப்படையில் வாழ்ந்தாலும் இது நாஸ்திகர்களின் கண்ணில் படுவதில்லையே.
முஸ்லிம்கள் என்ற பெயரோடு உலகலாவிய அளவில் இஸ்லாமிய நெறி பிறழ்ந்து வாழும் பெரும்பான்மை சமுதாயத்தைத்தானே முஸ்லிம்களாக அவர்கள் பார்க்க முடியும். முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளும் இறை கொடுத்த இறுதி மறைக்கும், இஸ்லாமிய நெறி பிறழ்ந்து வாழும் பெரும்பான்மை சமுதாயம் கொடுக்கும் விளக்கத்தைத்தானே அவர்கள் சரி என்று ஏற்க முடியும். இது மனித இயல்புதானே, இதை மறுக்க முடியுமா? குர்ஆனும், ஹதீஸும் தெளிவாக மறுக்கின்ற எத்தனையோ கணக்கற்ற சடங்குகளை இந்த முஸ்லிம் சமுதாயத்தினர் செய்து கொண்டிருக்கினறனர்.
மரணமே இல்லாத, என்றும் நித்தியனான இறைவனை விட்டு விட்டு இவர்களைப்போல் இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் இவ்வுலகில் வாழ்ந்து மரணித்தபின் அவர்களுக்காக சமாதிகளைக் கட்டி, தர்காக்களை உண்டாக்கி அங்கே பூஜை புணஸ்காரம் செய்யும் மக்கள்தானே தங்களை உண்மை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மாற்று மதங்களிலுள்ள ஜாதிப் பிரிவினைகள் போல் இஸ்லாத்திலும் மத்ஹபுகளின் பெயரால் பிரிவினைகளை உண்டாக்கிக் கொண்டு பெருமை பேசுபவர்கள் தானே தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இறைவனின் உண்மைத் தூதர்-இறுதித்தூதர் தன்னோடு இருந்தவர்களையெல்லாம் தனது தோழர்கள் என அழகாக அழைத்து நடைமுறைப்படுத்திக் காட்டித் தந்திருக்க அதற்கு மாற்றமாக பீர்-முரீது என்று மற்ற மதத்தினரைக் காப்பியடித்து, குரு சிஷ்ய நடைமுறையை நடைமுறைப்படுத்தும் தரீக்கா வாதிகள்தானே தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறர்கள். இன்று முஸ்லிம் சமுதாயத்தின் மிகப்பெரும்பான்மையினர் இப்படிப்பட்ட மனித அபிப்பிராயங்களால் உண்டாக்கப்பட்ட மதங்களைக் கடைபிடித்துக் கொண்டு தங்களை உண்மை முஸ்லிம்கள் என்று சொல்லி வருவதால், நாஸ்திகர்கள் இவர்களின் இந்த சொற் செயலை வைத்துத்தான் இஸ்லாத்தையம் கணிக்கின்றனர்.
மூட நம்பிக்கைகளையும் அர்த்தமற்ற சடங்கு சம்பிரதாயங்களையும் செய்யத் தூண்டும் மக்களை மடைமையில் மூழ்கச் செய்யும் மதங்களைப் போல் இஸ்லாமும் ஒரு மதமே என்று தவறாகக் கணக்குப் போடுகின்றனர். நாஸ்திகர்களின் மதிப்பீடுகள் எல்லாம் இந்த அடிப்படையில் அமைந்தவையே.
இன்ஷா அல்லாஹ், தொடரும்