குளிப்பு கடமையான நிலையில் நோன்பு
மெளலவி K.L.M.இப்ராஹீம் மதனீ
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
விளக்கம்: நோன்பு நோற்பதற்கு முன் அதாவது, இரவில் ஒருவர் முழுக்காளியாக இருந்து ஸப்ஹுடைய பாங்கிற்குப் பின் குளிப்பதில் எந்த குற்றமுமில்லை. அந்த நோன்பும் பரிபூரணமானதுதான். அதே போல் பகல் நேரத்தில் நோன்பு நோற்றவர் தூக்கத்தினால் குளிப்பு கடமையாகிவிட்டால், குளித்துக் கொண்டால் மாத்திரம் போதுமாகும்.
ஆனால் வேண்டுமென்றே ஒருவர் நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் முழுக்காளியாவது அல்லாஹ்விடத்தில் பெரும் குற்றமாகும். அது நோன்பையும் முறித்துவிடும்.
அவ்வாறே ரமளான் மாதத்தின் பகல் நேரத்தில் கணவன் மனைவி உடலுறவில் ஈடுபடுவதும் நோன்பை முறித்துவிடும். அது பெரும் குற்றம் என்பதுடன் அந்த நோன்பை மீண்டும் நிறைவேற்றுவதுடன் குற்றப்பரிகாரமும் செய்ய வேண்டும்.
அதற்குரிய குற்றப்பரிகாரம், ஒரு அடிமையை உரிமையிடுவதாகும், அதற்கு முடியாவிட்டால் இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும், அதற்கும் முடியாவிட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன் எனக்கூறினார்.
உம்மை அழித்தது எது? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.
ரமளானின் (பகல் நேரத்தில்) என் மனைவியோடு நான் உடல் உறவில் ஈடுபட்டேன் என கூறினார்.
ஒரு அடிமையை உரிமை இட முடியுமா என (அம்மனிதரிடம்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். முடியாது எனக்கூறினார்.
இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோற்க முடியுமா என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். முடியாது எனக் கூறினார்.
அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க முடியுமா என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். முடியாது எனக் கூறினார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை அமருமாறு கூறினார்கள் அவரும் அமர்ந்து விட்டார்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு பெரிய பேரீத்தம் பழக்கூடை நன்கொடையாக கொண்டுவரப்பட்டது. அதை (ஏழைகளுக்கு) தர்மமாக கொடுத்துவிடும்படி (அம்மனிதருக்கு) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
மதீனாவின் எல்லைக்குள் எங்களைவிட வறுமையானவர்கள் யாருமில்லையென அம்மனிதர் கூறினார். (அதைக்கேட்ட) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களின் கோரைப்பல் தெரியுமளவு சிரித்துவிட்டு, அதை எடுத்துக் கொண்டு, உன் குடும்பத்திற்கே உணவளி என்றார்கள். (திர்மிதி)
நன்றி: இஸ்லாம் கல்வி