ரமளான்: செயல் களத்தின் மாதம்
ரமளான் குறித்த கட்டுரைகளில் இது ஒரு மகுடம்
[ இன்று ரமளான் என்றால் பசியும் தாகமும் தான் முன்னிறுத்தப்படுகிறது! நிச்சயமாக இறையச்சமென்பது அதுவன்று நபிகளாரின் வாக்குகளில்!
பொய்யான செயல்களையும் சொற்களையும் விட்டொழிக்காதவரை ரமளான் நமக்கு எட்டாக்கனியாகிவிடும் எச்சரிக்கை!
சோம்பலுடனும் தூக்கத்துடனும் கழிப்பதற்கா இம்மாதத்தின் நோக்கம்! நிச்சயமாக இல்லை!
இஸ்லாமிய வரலாற்றின் மீது ஒரு முதன்மையான ஆய்வை மேற்க்கொண்டால் தெரியவரும் அது செயற்களத்தின் மாதமென்று! பத்ரும், வாதில்குராவும், பத்ஹே மக்காவும், தபூக்கும், ஹத்தீனும், அய்னுன் ஜாலூத்தும் நடைபெற்ற மாதமல்லவா இது!
ரமளானுடைய காலக்கட்டங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சஹாபாக்களும் மஸ்ஜிதில் அமர்ந்திருந்தால் பத்ரும், தபூக்கும், பத்ஹே மக்காவும், வாதில் குராவும் நடைபெற்றிருக்குமா அல்லது அதில் வெற்றியைத்தான் பெற்றிருக்க முடியுமா?.ஹிஜாஸிலிருந்து இணைவைப்பின் கடைசி சின்னங்கள் வரை துடைத்தெறியத்தான் முடிந்திருக்குமா?.
இறையச்சத்தின் இலக்கணத்தை அவர்கள் விளங்கிக் கொண்டது இவ்வாறுதான் ரமளானில் நோன்பு நோற்று, இரவுகளில் நின்று வணங்கி, திருக்குர்ஆனை ஓதுவதுடன் நன்மையை ஏவி தீமையத் தடுக்கும் இலட்சியப் பணியையும் அவர்கள் நிறைவேற்றினார்கள்.]
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர் ஆன் இறக்கியருளப்பட்டது.ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறார்களோ,அவர் அம்மாதம் நோன்பு நோற்கவேண்டும். (அல்குர்ஆன்2:185)
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது!(அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்! (அல்குர்ஆன்2:183)
“மேற்கண்ட வசனத்தின் மூலம் நோன்பு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தின் மீதும் விதிக்கப்பட்டிருந்த்தை அறிய முடிகிறது.நோன்பு கடமையாக்கப்பட்டிருப்பதன் பின்னணி இதுதான்.
மனிதர்களை அல்லாஹ்வுக்கு அதிகமதிகம் அஞ்சி நடக்கக்கூடியவர்களாக மாற்றுவது. நோன்பின் முக்கிய நோக்கம் தக்வாவாகும்.
நோன்பு நோற்பதன் மூலம் இறைவன் இட்ட கட்டளைக்கு முற்றிலும் கீழ்படிவதும், மேலும் இந்த பண்பை மனித மனங்களில் படிப்படியாக புத்துயுரூட்டுவதுமாகும்.
அல்லாஹ் படைத்த இந்த பிரபஞ்சத்தில் ஒழுங்குமுறைகளை நிலை நிறுத்துவதும் மனித சமூகத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கான போராட்டத்தை நடத்தவும் பிற மனிதர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டிய பொறுப்பை முஸ்லிம் உம்மத்திற்கும் நோன்பு உணர்த்துகிறது.
நோன்பு இயல்பாகவே மனிதனின் மனோபலத்தை சோதனைச் செய்வதற்காகவே அவன் மீது விதிக்கப்பட்டுள்ளது.இதன் முக்கிய நோக்கமாவது மனிதனுக்கும் இறைவனுக்குமிடையேயான உறவின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
மேலும் மனிதன் தனது உடல் தேவைகளையும் இச்சைகளையும் வெல்வதன் மூலம் அவனுக்கு இறைவனிடமிருந்து பெரும் பாக்கியத்தையும் வெகுமதியையும் பெற்று தருகிறது.” (ஷஹீத் செய்யத் குதுப் தமது ஃபீ ழிழாலில் குர்ஆன் தஃப்ஸீரில்)
நன்மைகளின் பொற்காலமாய் பாவங்களின் இலையுதிர் காலமாய் மீண்டும் ஒரு ரமலானை நாம் சந்தித்துள்ளோம். மனித மனங்களில் மண்டிக் கிடக்கும் மாசுகளை அகற்றி அவனை மாண்பாளனாக மாற்றும் வித்தை ரமலானுக்கு உண்டென்றால் அது மிகையன்று!
நன்மைகள் நம் வாசல் தேடி வரும்போது அதனை வழி மறிக்கும் ஷைத்தானுக்கு கூட விலங்கிடப்பட்ட பரிசுத்த மாதம் இது!. தேடல் என்பது பொருளாதாரத்தையும்,புகழையும் நோக்கி நிற்கும் காலக்கட்டத்தில் நன்மையின் தேடலாய் நம்மை அரவணைக்கும் இறையச்சத்தின் மாதம் ரமலான்! ரமலானின் ஏராளமான சிறப்புகளைப் பற்றி நபிகளாரின் வாக்குகளில் இவ்வாறு காணலாம்.
”ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன’.- நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1898, முஸ்லிம் 1956)
”ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன”…. – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1957)
”நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன.” நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1956)
”அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது.’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)
”நல்லதைத் தேடுபவனே! முன்னேறிவா! தீமையைத் தேடுபவனே! (தீமையைக்) குறைத்துக் கொள்! என்று அழைப்பாளர் ஒருவர் அழைக்கிறார்.’ -நபிமொழி (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதி – 618, இப்னுமாஜா 1642)
மற்றொரு அறிவிப்பில் ”ஒரு வானவர் அழைக்கிறார்” என்று வந்துள்ளது.
”ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி – 722)
”நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’. (நபிமொழி) (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதி-619)
இன்று ரமளான் என்றால் பசியும் தாகமும் தான் முன்னிறுத்தப்படுகிறது! நிச்சயமாக இறையச்சமென்பது அதுவன்று நபிகளாரின் வாக்குகளில்! பொய்யான செயல்களையும் சொற்களையும் விட்டொழிக்காதவரை ரமலான் நமக்கு எட்டாக்கனியாகிவிடும் எச்சரிக்கை! சோம்பலுடனும் தூக்கத்துடனும் கழிப்பதற்கா இம்மாதத்தின் நோக்கம்! நிச்சயமாக இல்லை!
இஸ்லாமிய வரலாற்றின் மீது ஒரு முதன்மையான ஆய்வை மேற்க்கொண்டால் தெரியவரும் அது செயற்களத்தின் மாதமென்று! பத்ரும், வாதில்குராவும், பத்ஹே மக்காவும், தபூக்கும், ஹத்தீனும், அய்னுன் ஜாலூத்தும் நடைபெற்ற மாதமல்லவா இது!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சரி அவர்களுடைய தோழர்களும் சரி ரமளானைப் பார்த்த விதமே வேறு. அவர்கள் ரமளானை இறையச்சத்திற்குரிய மாதமாக அல்லாஹ்வின் காருண்யமும், வெற்றியும் இறக்கப்படும் மாதமாகத்தான் சிந்தித்தார்கள், அதனடிப்படையில் செயல்படவும் செய்தார்கள். இறையச்சம் என்பது வெறும் மஸ்ஜிதுகளில் அமர்ந்து தொழுவதுடனோ, திக்ருகளை செய்வதுடனோ, திருக்குர் ஆனை ஓதுவதுடனோ முடிவதல்ல!
ரமளானுடைய காலக்கட்டங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சஹாபாக்களும் மஸ்ஜிதில் அமர்ந்திருந்தால் பத்ரும், தபூக்கும், பத்ஹே மக்காவும், வாதில் குராவும் நடைபெற்றிருக்குமா அல்லது அதில் வெற்றியைத்தான் பெற்றிருக்க முடியுமா?.ஹிஜாஸிலிருந்து இணைவைப்பின் கடைசி சின்னங்கள் வரை துடைத்தெறியத்தான் முடிந்திருக்குமா?.
இறையச்சத்தின் இலக்கணத்தை அவர்கள் விளங்கிக் கொண்டது இவ்வாறுதான் ரமலானில் நோன்பு நோற்று, இரவுகளில் நின்று வணங்கி, திருக்குர் ஆனை ஓதுவதுடன் நன்மையை ஏவி தீமையத் தடுக்கும் இலட்சியப் பணியையும் அவர்கள் நிறைவேற்றினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை இவ்வாறு கூறினார்கள், “எத்தனையோ நோன்பாளிகளுக்கு அவர்களது நோன்பால் பசித்திருந்ததைத் தவிர எந்தப் பயனும் இருக்காது. எத்தனையோ தொழுகையாளிகளுக்கு அவர்களின் தொழுகை மூலம் கண் விழித்திருந்ததைத் தவிர வேறு பலன் கிடைக்காது’ என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்:இப்னுமாஜா,அஹ்மத்)
அவ்வாறெனில் இறைவன் ஆண்டிற்கொருமாதம் நோன்பு நோற்கச் சொல்வது மனிதர்களை துன்புறுத்தவா?. தனது அடியார்களை ஒரு மாதகாலம் பட்டினி போடச்செய்வதன் மூலம் இறைவன் எதனை நாடுகிறான். நிச்சயமாக இதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை. நோன்பு நோற்பதன் மூலம் மனிதன் சில மணிதியாலங்கள் தன்னை உணவுக்கொள்வதிலிருந்தும், பானங்கள் அருந்துவதிலிருந்தும் தடுத்துக் கொள்கிறான். அத்தோடு தனது உடல் ரீதியான மனோ ரீதியான இச்சைகளிலிருந்தும் தன்னை காத்துக் கொள்கிறான்.
மனிதனின் இத்தகைய சூழல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஏனெனில் மற்ற அமல்களைப் பொறுத்தவரை அதன் வெளிப்புறத் தோற்றம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் நோன்பு என்பது ஒருவர் அதன்மூலம் தனது உடல்ரீதியான மனரீதியான இச்சைகளை தவிர்த்துக் கொள்வதை அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாரும் அறிய முடியாது.
அதனால் தான் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.”மனிதனின் ஒவ்வொரு அமலுக்கும் கூலி இரட்டிப்பாக வழங்கப்படுகிறது.ஒரு நன்மைக்கு பத்து நன்மைகள் முதல் எழுநூறு மடங்கு வரை.இறைவன் சொல்கிறான் நோன்பைத் தவிர. ஏனெனில் நிச்சயமாக எனக்குரியது. நானே அதற்கு கூலி வழங்குகிறேன். காரணம் அடியான் தனது ஆசையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகிறான்.” (முஸ்லிம்)
ஆகவே நோன்பு இறைவனுக்கும் மனிதனுக்குமிடையேயான தொடர்பை விளக்கும் ஒரு வணக்கம்.
அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுபட்டு சாதாரண காலத்தில் அனுமதிக்கப்பட்ட தேவைகளைக்கூட நோன்பின்போது சில மணிநேரங்கள் தியாகம் செய்யும் மனிதன்;
இதன்மூலம் பெற்ற பயிற்சியை நோன்பு அல்லாத காலங்களிலும் அல்லாஹ் தடுத்தவற்றை நிராகரித்து
அவன் அனுமதித்த்தை மட்டுமே அங்கீகரித்து இன்ன பிற துறைகளிலும் இந்த இறையச்சத்தை செயல்படுத்தும்போது
அவன் மாண்பாளனாக மாறிவிடுகிறான்.
ஏன் அல்லாஹ்வுக்காக மனிதனிடம் மிகப்பெரும் மதிப்புமிக்க அவனது உயிர் உட்பட அனைத்தையும் அவன் தியாகம் செய்ய தயாராகிவிடுகிறான்.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு சமூகமே உருவாகும்பொழுது இவ்வுலகில் இன்னலுக்கு இடமேது.
இத்தகைய இறையச்சத்தைப் பெற்றவருக்குத்தான் நாளை மறுமையில் சுவனம் தயார்செய்து வைக்கப்பட்டிருப்பதாக
அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
“அத்னு என்னும் அந்தச் சுவனபதிகளை அர்ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு – அவற்றை அவர்கள் காண முடியாத போதே வாக்களித்தான்; நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறும். ஸலாம் (சாந்தி) என்பதைச் (செவியுறுவார்களே) தவிர அச்சுவனபதிகளில் அவர்கள் வீணான எதையும் செவியுற மாட்டார்கள்; இன்னும் அங்கே அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் அவர்களுடைய உணவு இருக்கிறது. இத்தகைய சுவர்க்கத்திற்கு நம் அடியார்களில் தக்வா பயபக்தி உடையவர்களை நாம் வாரிசாக்கிவிடுவோம்.” (அல்குர்ஆன் 19:61,62,63)
நாமும் இந்த ரமலானில் நோற்கும் நோன்பின் மூலம் இறையச்சத்திற்கான பயிற்சியைப் பெற்று அதனை நமது முழுவாழ்விலும் செயல்படுத்தி இறையச்சமுடையோருக்காக அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கும் சுவனத்தின் வாரிசு தாரர்களாக மாற முயல்வோமாக! வல்ல, இறையோனாகிய அல்லாஹ் அதற்கு துணைப்புரிவானாக.
Source பாலைவனத் தூது