மழையும் மாமறையும்
நாம் சுவாசிக்கின்ற ஆக்ஸிஜன், நமக்குப் பலனளிக்கும் நைட்ரஜன், வெப்பத்தைத் தக்க வைக்கும் கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றைத் தாங்கி நிற்பது வளி மண்டலம்! அந்த வளி மண்டலம் இண்டு இடுக்குகள் இல்லாமல் ஐந்து அடுக்குகளாக அமையப் பெற்று சூரியனின் புற ஊதாக் கதிர்களை உள்ளே ஊடுருவாமல், பிரமாண்டமான வால் நட்சத்திரங்களை உள்ளே நுழைய விடாமல் இந்தப் புவியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது.
அந்த வளி மண்டலத்தைத் தன் கைவசம் வைத்திருப்பது புவி ஈர்ப்பு விசை என்பதை அறிந்தோம். இந்தப் புவி ஈர்ப்பு விசையின் இன்னொரு பயன் வானிலிருந்து மழையைப் பெற்றுத் தருவதாகும். அது எப்படி? என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னால் தாகம் தீர்க்கும் மேகத்தைப் பற்றி முதலில் பார்ப்போம்.
பென்னம் பெரும் மலைகளைப் போல் வானத்தில் திரண்டு நிற்கும் கன்னங்கருத்த மேகத்தை நாம் பார்க்கின்றோம். இந்த மேகம் இவ்வாறு திரள்வதற்கு முன்பாக இரண்டு கட்டங்களைச் சந்திக்கின்றன. மூன்றாவது கட்டமாகத் தான், சூழ் கொண்ட இந்தத் திரட்சி நிலையை அடைகின்றன.
பஞ்சுகளைப் போல் திட்டு திட்டாக தனித்தனியாக மிதந்து நிற்கும் குட்டி குட்டி மேகங்களைக் காற்று தள்ளிக் கொண்டு செல்கின்றது.
இவை அனைத்தும் ஒன்றிணைகின்றன.
இவ்வாறு ஒன்றிணைந்த மேகங்கள் செங்குத்தாக விண்ணை நோக்கி எழுகின்றன. குவியக் கூடிய இந்த மேகங்களின் மத்திய தொகுதி ஓர் இழுவை சக்தியாக செயல்பட ஆரம்பித்து தன் இரு பக்கவாட்டிலும் உள்ள மேக சகாக்களை அரவணைத்து விண்ணை நோக்கி செங்குத்தாக இழுத்துச் செல்கின்றது. விண்ணகத்தின் குளிர்ந்த பகுதியை நோக்கி இது இழுத்துச் செல்லப் படுகின்றது. அவ்வாறு இழுத்துச் செல்லும் போது அந்த மத்தியப் பகுதியான இழுவை சக்தி குளிரினால் பொழிந்து சிந்தி விடாமல் பக்கவாட்டிலுள்ள மேகங்கள் பார்த்துக் கொள்கின்றன.
விண்வெளியின் குளிர் பகுதியின் உச்சி நிலைக்குச் செல்லச் செல்ல மேகத்தின் வயிற்றில் ஆலங்கட்டிகள், நீர் திவளைகள் சூல் கொண்டு மேகத் தொகுப்பின் எடை கூடுகின்றது. ஆக, அந்தரத்தில் கன்னங்கருத்த கனமான இமயத்தை விஞ்சும் அளவுக்கு 25,000 முதல் 30,000 அடி வரை ஒரு பெரும் மலை உருவாகின்றது.
தனது எல்லைக்குள் இப்படி ஆலங்கட்டிகள் தொகுப்பாக கனமான ஒரு மலையாக ஏறுவதை அனுமதிக்காக புவி ஈர்ப்பு விசை அம்மலையை கீழ் நோக்கி இழுக்கின்றது. அது தான் நம் மீது அருளாகப் பொழிகின்ற மழை! இது மழையைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு! இப்போது விஷயத்திற்கு வருவோம்.
வானிலை ஆராய்ச்சியாளர்கள் இன்று இந்த மேகங்களை நாம் மேற்கண்டவாறு வகைப்படுத்துகின்றனர். இப்படி சூல் கொண்டு திரண்டெழுந்து நிற்கும் இந்த மேகக் கூட்டத்திற்கு ஈன்ம்ன்ப்ர்ய்ண்ம்க்ஷன்ள், ஈப்ர்ன்க் என்று குறிப்பிடுகின்றனர். இன்று வானியல் வல்லுநர்களால் வகைப்படுத்தப் பட்ட இந்த மேகத் திரட்சியை, மழைப் பொழிவை எந்தப் பல்கலைக் கழகத்திலும் போய் படித்து மேதையாகிடாத, ஏடெத்துப் படித்திராத முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் எப்படிச் சொல்ல முடிந்தது? மேற்கண்ட நவீன கண்டுபிடிப்புகளை அச்சுப் பிசகாமல் அப்படியே அல்குர்ஆன் சொல்வதைப் பாருங்கள்!
அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. (அல்குர்ஆன் 24:43)
இதிலிருந்து புனித ரமளான் மாதத்தில் இறங்கத் தொடங்கிய இந்த வேதத்தின் வசனங்கள் படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் என்று சான்று கூறி நிற்கின்றன! இந்த வசனத்தில் அல்லாஹ், மேகங்களுக்குப் (பனி) மலைகள் என்ற பதத்தைப் பயன்படுத்தியிருக்கின்றான். இன்று வானியல் ஆய்வாளர்கள் சொல்லும் இந்தக் கருத்தை அல்குர்ஆன் அன்றே சொல்லி முடித்திருக்கின்றது எனும் போது இது நூற்றுக்கு நூறு அல்லாஹ்வின் வேதம் தான் என்ற நம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கின்றது.
மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது, “அதன் மின்னொளி கண்ணைப் பறிக்கப் பார்க்கின்றது” என்று சொல்லி முடிக்கின்றான். அதன் மின்னொளி என்றால் எதன் மின்னொளி? இதற்கான விளக்கத்தை அடுத்து வரும் மின்னல்’ என்ற தலைப்பில் பார்ப்போம்.
மின்னல்
அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. (அல்குர்ஆன் 24:43)
இந்த வசனத்தில் மின்னலைப் பற்றிக் குறிப்பிடும் போது, அதன் மின்னல் என்று மின்னலை ஏதோ ஒன்றுடன் இணைத்து அல்லாஹ் கூறுகின்றான். எதன் மின்னல்? என்ற கேள்விக்கு நாம் விடையைத் தேடினால் இந்த வசனத்திலேயே இதற்கு முன்பாக ஆலங்கட்டியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகின்றது. அதன் மின்னல்’ என்பது ஆலங்கட்டியின் மின்னல்’ என்று திருக்குர்ஆன் பதில் கூறுகின்றது.
அது சரி! ஆலங்கட்டிக்கும் மின்னலுக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி இப்போது எழுகின்றது. எனவே இந்த மின்னலைப் பற்றி அறிவியல் உலகம் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
ஒன்றாகத் திரண்டு நிற்கும் மேக மலையின் மேற்பகுதியில் உள்ள ஆலங்கட்டிகள், அதிகம் குளிர்ந்து போன நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகளின் மேல் விழும் போது மேகங்கள் மின் காந்தப் புலன்களைப் பெற்று விடுகின்றன. இந்த நேரத்தில் குளிர்ந்த நீர்பபகுதிகள் மற்றும் பனித்துகள்களிலிருந்து எலக்ட்ரான்கள் கிளம்பி சூடான ஆலங்கட்டிகளை நோக்கித் தாவுகின்றன. அதனால் ஆலங்கட்டி எதிர் மின்னூட்டத்தையும் குளிர்ந்த நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகள்கள் நேர் மின்னூட்டத்தையும் பெறுகின்றன.
இதன் விளைவாக நேர் மின்னூட்டம் பெற்ற சின்னஞ்சிறு பனித்துகள்கள் உடைந்து சிதறுகின்றன. சிதறிய சின்னஞ்சிறு சிதறல்கள் மேகத்தின் மேற்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்ற போது அங்கு ஏற்கனவே எதிர் மின்னூட்டத்தைப் பெற்றிருக்கின்ற ஆலங்கட்டிகள் மேகத்தின் அடிப்பாகத்தில் விழுகின்றன.
கீழே விழுந்த ஆலங்கட்டிகளின் எதிர் மின்னூட்டங்கள் தான் மின்னல் வெட்டுவதன் மூலம் வெளியேற்றப் படுகின்றன. இந்த மின் வெட்டு தன்னைச் சுற்றிலும் உள்ள காற்றை 30,0000 C அளவுக்கு வெப்பப் படுத்துகின்றது. இது சூரியனின் மேற்பரப்பிலுள்ள வெப்பத்தை விட 5 மடங்கு அதிகமாகும். (சூரியனின் மேற்பரப்பு வெப்பம் 60000 C) இந்த அளவுக்கு வெளியாகும் வெப்பம் காற்றை வெகு வேகமாக விரிவுபடுத்துகின்றது. இதில் உருவாவது தான் இடி முழக்கம்!
இங்கு நாம் கவனிக்க வேண்டிய அம்சம், அதன் மின்னல் என்று கூறியதன் மூலம் மின்னலுக்குக் காரணம் ஆலங்கட்டி தான் என்று அல்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன் சொன்ன உண்மையை இன்று வானிலை ஆய்வாளர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இதுவும் அல்குர்ஆன் தூய நாயனான அல்லாஹ்வின் வேதம் என்பதற்கு ஓர் அற்புதமான அறிவியல் சான்றாகும்.
விண்ணகத்தில் வெப்பத்தைப் பிரசவித்து வெளிவரும் இந்த மின்னல் மண்ணகத்தில் என்ன சாதித்துக் கொண்டிருக்கின்றது? இதைப் பற்றியும் அல்லாஹ் திருக்குர்ஆனில் நாம் வியக்கும் வண்ணம் கூறுகின்றான்.
அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான். இடியும் அவனைப் புகழ்ந்து போற்றுகிறது. அவனைப் பற்றிய அச்சத்தினால் வானவர்களும் (புகழ்ந்து போற்றுகின்றனர்). இடி முழக்கங்களையும் அவனே அனுப்புகிறான். தான் நாடியோரை அவற்றின் மூலம் தண்டிக்கிறான். அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றனர். அவன் வலிமை மிக்கவன். (அல்குர்ஆன் 13:12,13)
இவ்விரண்டு வசனங்களும் மின்னல், இடியைப் பற்றி விளக்குகின்றன. இடி, மின்னல் எவ்வாறு உருகின்றன என்பதை மேலே நாம் கண்டோம். எல்லாம் வல்ல அல்லாஹ் இவ்விரண்டில் மின்னலைப் பற்றி குறிப்பிடும் போது, அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலைக் காட்டுகின்றான் என்று கூறுகின்றான்.
மின்னல் பளிச்சென்று வெட்டி மறையும் போது நம்முடைய நாடி நரம்புகளில் அச்ச அலைகள் ஓடிப் பரவுகின்றன. 30,0000 ஈ வெப்பத்தை ஏற்படுத்தும் மின்னலைப் பற்றி அச்சம் தரக் கூடியது என்று அல்குர்ஆன் கூறுவதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் மின்னலில் எதிர்பார்ப்பு, ஆதரவு உள்ளது என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து என்ன கருத்தை அவன் சொல்ல வருகின்றான் என்று எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை.
மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்த வேண்டும்? என்ற விளக்கத்தைக் காண நாம் களமிறங்குவோம்.
வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன் 21 சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 சதவிகிதமும், ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன என்பதை வளி மண்லத்தில் கலந்திருக்கும் வாயுக்கள் என்ற தலைப்பில் முன்னர் கண்டோம்.
ஒரு தடவை மின் வெட்டி மறையும் போது, ஏதோ மின் வெட்டி மறைகின்றது என்று நாம் கண் சிமிட்டி விட்டு அதைக் கண்டு கொள்ளாது விட்டு விடுகின்றோம். ஆனால் ஒரு தடவை மின்னல் வெட்டுகின்ற போது அங்கு ஒரு கல்யாணமே நடந்து முடிகின்றது.
ஆம்! காற்றிலுள்ள 78 சதவிகித நைட்ரஜனும் 21 சதவிகித ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை கோர்க்கின்றன. இதனால் பிறக்கின்ற குழந்தை தான் நைட்ரேட்டுகள்! நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது. இந்த நைட்ரேட்டுகள் மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது.
வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன! இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை உடைத்து அமிலமாக, சத்தாக, சாறாக மாற்றி மழை நீருடன் ஆறாக ஓடச் செய்கின்றது.
மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன. அந்தக் கனிமங்களுடன் இது கலக்கும் போது அவற்றின் நைட்ரேட்டுகள் உருவாகின்றன. கால்சியத்துடன் கலக்கும் போது கால்சியம் நைட்ரேட்டு உருவாகின்றது. இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றன. இவற்றை நேரடியாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது இவற்றைச் சாப்பிடும் ஆடு, மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடுவதன் மூலமோ மனிதன் நைட்ரஜனைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றான்.
மனிதனுடைய உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த நைட்ரஜன் அவன் இறந்தவுடன் மீண்டும் அது மண்ணிலேயே போய் சேர்ந்து விடுகின்றது. மனித உடலில் மட்டுமல்லாது மொத்த உயிரினங்களின் உடலிலும் நைட்ரஜன் கலந்து அந்த உயிரினங்கள் மடிந்ததும் மண்ணில் கலந்து விடுகின்றது. பின்னர் மீண்டும் காற்றிலேயே கலந்து விடுகின்றது. இதற்குப் பெயர் தான் நைட்ரஜன் சுழற்சி என்று வழங்கப் படுகின்றது.
சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ் மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என பெயர் வைத்தான் என்ற உண்மை நமக்கு மின்னல் போல் பளிச்சிடுகின்றதல்லவா? மிகப் பெரிய ஆற்றலாளனான அவன் நைட்ரஜன், ஆக்ஸிஜன் என்ற பின்னல்களில் மின்னலைப் பாய்ச்சி நம்மை வாழ வைக்கின்றான். நாம் எப்படி அவனுக்கு நன்றி செலுத்த மறந்தவர்களாக இருக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்ப்போம்!
மின்னலில் பொதிந்திருக்கும் இந்த ஆற்றலை அறிவியல் உலகம் கண்டு பிடிப்பதற்கு முன்னால் அன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மூலம் குர்ஆனில் சொல்லி முடித்த அந்த நாயன் மிகப் பெரியவனே! அல்லாஹு அக்பர்!
எரிமலையும் இறைமறையும்
வானியல் ஆராய்ச்சியாளர்களிடம் மிகவும் பிரபலமானது பெரு வெடிப்புக் கொள்கை (Big bang theory) ஆகும். இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படும் பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களும் துணைக் கோள்களும் நட்சத்திரங்களும் ஒரே பொருளாகத் தான் இருந்தன.
இந்தப் பொருள் பூமியை விட 318.5 மடங்கு எடையைக் கொண்டதாகவும் மிக மிக அடர்த்தியானதாகவும் இருந்தது. அந்தப் பொருள் ஏதோ ஒரு வானியல் மாற்றத்தால் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அண்டம் முழுவதும் ஒரே தூசுப் படலமாகப் பரவியது. இது சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
இதற்குப் பிறகு புகை மூட்டமாக இருந்த அந்தத் தூசுப் படலம் ஈர்ப்பு விசையின் காரணமாக சிறிது சிறிதாக இணைந்து பெரிதாகி இப்போதுள்ள கோள்கள், துணைக் கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை தோன்றின. இவ்வாறு தூசுப் படலத்திலிருந்து பிரிந்து கோள்கள் உருவான நிகழ்வு சுமார் 500 கோடி முதல் 750 கோடி வருடங்களுக்கிடையில் நடைபெற்றது. இது தான் பெரு வெடிப்புக் கொள்கை (இண்ஞ் க்ஷஹய்ஞ் ற்ட்ங்ர்ழ்ஹ்) ஆகும்.
மனிதன் தன்னுடைய விஞ்ஞான அறிவையும் நவீன கருவிகளையும் கொண்டு இந்தப் பேரண்டம் எவ்வாறு தோன்றியது என்ற வரலாற்றை தற்போது கண்டறிந்துள்ளான். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன் இதைப் பற்றி யாருக்காவது தெரிந்திருந்ததா? பூமி, சூரியன், சந்திரன் ஆகியவற்றைப் பற்றி வெறும் கதைகளையும் கற்பனைகளையும் நம்பிக் கொண்டிருந்த காலம். இன்று கூட மற்ற மதங்களின் வேதங்களில் இந்தக் கதைகள் தான் கூறப்படுகின்றன. பேரண்டத்தின் தோற்றம் குறித்து திருக்குர்ஆன் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)
பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. (அல்குர்ஆன் 41:11)
என்ன அற்புதமான வார்த்தைகள்! பூமியும் இதர கோள்களும் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒரே பொருளாக இருந்தன என்பதையும் அதன் பிறகு புகை போன்றிருந்த நிலையில் தான் அனைத்தும் உருவாயின என்பதையும் இவ்விரு வசனங்களும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேலே நாம் கூறியுள்ள பெரு வெடிப்புக் கொள்கையையும் இந்த இரு வசனங்களையும் படித்துப் பாருங்கள்! உண்மையிலேயே நமது உடலைப் புல்லரிக்கச் செய்கின்றதல்லவா? இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும். எனவே திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது.
அடுப்பிலிருந்து ஒரு தீக்கங்கை கிடுக்கியில் தனியாக எடுத்து ஓரிடத்தில் வைக்கின்றோம். நேரமாக நேரமாக அந்தத் தீக்கங்கின் மேற்பகுதி குளிர்ந்து விடுகின்றது. ஆனால் அதன் உட்பகுதியோ நெருப்புக் குழம்பாகக் கனன்று கொண்டிருக்கின்றது.
சூரியனிலிருந்து பிரிந்து வந்த பூமி மேற்பகுதியில் குளிர்ந்து, அதன் மீது தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அதன் உட்பகுதியோ நெருப்புக் குழம்பாகக் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது. அதனால் தான் அது அவ்வப்போது எரிமலைகளைக் கொப்பளிக்கின்றது. இந்தப் பூமி ஒரு காலத்தில் சூரியனுடன் ஒன்றாக இருந்தது என்பதற்கு இந்த எரிமலைகள் அக்கினி சாட்சிகளாகத் திகழ்கின்றன!
நெருப்பைப் பஞ்சு மெத்தையாக்கி எங்களை வாழ வைக்கும் இறைவா! நீ தூயவன்! என்று தினமும் அந்த வல்ல இறைவனைத் துதிப்போமாக!
source: http://www.tntj.net/?p=18707