27. கடவுளுக்கு அடுத்து அரசியல்
”கடவுளுக்கு அடுத்தப்படியாக அரசியல்; அனைவரையும் ஆட்கொள்ளத்தான் செய்யும்!” இது திரு சி.என். அண்ணாத்துரையின் கூற்றாகும். திரு. சி.என். அண்ணாத்துரை நாஸ்திகத்தைத் தமிழ்நாட்டில் பரப்பிய திரு. ஈ.வெ. ராவின் பிரதம சிஷ்யர் என்பது நாடறிந்த உண்மை.
அரசியலை ஆதரிப்பவர்கள், இறை நம்பிக்கையை எதிர்ப்பது விவேகமான செயல் அல்ல என்பதையே இக்கூற்று ஊர்ஜிதம் செய்கிறது. அரசியலிலுள்ள ஊழல்களை அகற்றி, தூய்மையான அரசியலை மக்களுக்குக் கொடுக்க அறிவாளிகள் கடமைப்பட்டுள்ளனர். இதேபோல் இறை நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள ஊழல்களை அகற்றி, தூய்மையான இறை நம்பிக்கையை மக்களுக்கு போதிப்பது அறிவாளிகளின் கட்டாயக் கடமையாகும்.
அடுத்து, ”இறைவனே இல்லை” என்று கூக்குரலிடுவதன் மூலம் மக்களிடையே ஏற்பட்டுள்ள மூட நம்பிக்கைகள், மூடச் சடங்குகள், ஒழுக்கமற்ற நிலைகள் இவற்றை அகற்றி, சமத்துவ, சகோதரத்துவ, சுபிட்ச வாழ்க்கையை மக்களுக்கு இந்த நாஸ்திகர்கள் கொடுத்திருக்கிறார்களா? என்றால் இல்லை என்ற பதிலைத்தான் நாம் பெற முடியும்.
28. கம்யூனிஸத்தின் அழிவு
ரஷ்ய நாட்டில் 1917-ல் நாஸ்திகர்களின் அரசாங்கம் நிலை நாட்டப்பட்டது. கடவுள் நம்பிக்கையை மக்களிடமிருந்து அகற்ற பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதற்காக பல கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. பல கோடிக்கணக்காண மக்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
ஸ்டாலின் தனது பொதுவுடமைக் கொள்கைகளை நிலைநாட்ட இரண்டு கோடி மக்களை கொன்றிருப்பார் என்று மதிப்பிடப்பட்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்களைப் பலி கொடுத்த பின்பாவது, நாஸ்திகத்தால் மக்களுக்குச் சுபிட்சமான ஒரு வாழ்க்கையைத் தர முடிந்ததா? என்றால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். இதற்கு உடைந்து சிதறிய ரஷ்யாவே உலகத்துக்குப் போதுமான சாட்சியாக உள்ளது.
இன்று அகில உலகிலும் நீக்கமற நிறைந்து காணப்படும் வன்செயல்களுக்கு வன்முறையின்றி எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை என்ற நாஸ்திகவாதிகளின் தவறான தத்துவமே முழு முதல் காரணமாகும். நாஸ்திகத்தை நிலைநாட்ட முற்பட்ட ரஷ்யா, தனது செயல்களை இரும்புத் திரைக்குப் பின்னால் மூடி மறைத்துக்கொண்டது ஏன்? என்று சிந்திப்பவர்களுக்கு நாஸ்திகவாதத்தின் இயலாமை புலப்படும்.
கோர்பசேவ், ரஷ்ய அதிபரான பின் நாஸ்திகவாதம் தவறான சித்தாந்தம் என்பதைச் சிறிது சிறிதாக உணர்ந்து வந்தார், பகிரங்கமான கூறவும் முற்பட்டார். பொதுவுடைமைக் கொள்கையால் ஆளப்பட்ட ரஷ்யாவில் கடந்த 75 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள சீரழிவுகள், ஒழுக்கக்கேடுகள், மனித அமைதிக்கும், சுபிட்சத்திற்கும் ஏற்பட்டுள்ள பங்கங்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. ரஷ்யர்கள் நாஸ்திக வாதம் தவறென்ற முடிவுக்கு வந்து, தங்கள் விடிவுக்கு வேறு வழிகள் உண்டா? என்று சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். இன்று ரஷ்யா சிதறி பல குட்டி நாடுகளாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டன.
ரஷ்யா நாட்டில்தான் நாஸ்திக வாதம் தோல்வியுற்றது என்றில்லை. அதற்கடுத்து சீனாவில் நிலைநாட்டப்பட்ட நாஸ்திக வாதமும் தோல்வி கண்டு வருகின்றது. சீனாவின் ஆட்சியாளர்களும் தங்கள் நாஸ்திகவாதக் கொள்கைகளிலுள்ள குறைகளை உணர்ந்து தங்களின் போக்கை மாற்றிக்கொள்ள முற்பட்டிருக்கிறார்கள்.
29. தமிழகத்தில் நாஸ்திகம்
தமிழகத்தில் நாஸ்திகத்தைப் பரப்ப பெரும் முயற்சி செய்யப்பட்டது. தமிழகத்தின் துயர் துடைக்கப் பட்டுள்ளதா? தமிழக மக்கள் அனைவரும் அனைத்தும் பெற்று, சுபிட்சமான, சந்தோஷ, சமத்துவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? என்று எண்ணிப்பாருங்கள்.
சாராய சாம்ராஜ்ய அதிபதிகளும், விபச்சார விற்பன்னர்களுமே வளர்ந்துள்ளனர். மது, மாது, சூது இவற்றால் ஒரு சிலர் குபேர வாழ்க்கை வாழ்வதற்கு வழியேற்பட்டுள்ளது. பெருந்தொகையினர் நாள் முழுவதும் உழைத்தும், கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வழி இல்லாமலும், உழைத்துப் பெற்ற அற்ப காசையும் குடியில் அழித்தொழித்து அல்லல்படுவதையுமே கண்கூடாகக் கண்டு வருகிறோம். நாஸ்திக வாதம் இப்படிப்பட்ட மக்களை திருத்த முடியவில்லை. ஒழுக்கம் நிறைந்த மக்களைப் பார்ப்பது அரிதாகவே இருக்கிறது. தமிழக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இருக்கும் தமிழக சட்டசபையில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் தமிழகத்தைத் தலை குனிய வைத்துள்ளன.
ஆக, உலகின் மூன்றில் ஒரு பங்கினரை ஆட்கொண்ட நாஸ்திக வாதம் தனது இயலாமையை வெளிச்சம் போட்டுக் காட்டத் தொடங்கிவிட்டது. நாஸ்திகத்தால் ஆட்கொள்ளப்பட்ட பலர் தங்கள் தவறை உணர்ந்து திருந்த முன் வந்திருக்கின்றனர். இது நாஸ்திக நண்பர்கள் மறுக்க முடியாத உண்மையாகும்.
சத்தியத்திற்கு மாற்றமான கொள்கைகள் இவ்வுலகில் என்றுமே வேரூன்றியதில்லை. அவற்றின் ஆரம்ப காலத்தில் அவை பெரும் முற்போக்குத் திட்டங்கள் போலும், மக்களின் சர்வ பிரச்சனைகளையும் தீர்க்கும் சர்வலோக நிவாரணிகள் போலும் தோற்றமளித்தாலும், அவை நடைமுறைப்படுத்தப்பட்டு, செயல் வடிவில் பார்க்கும்போது அவற்றின் போலித்தனம் தெளிவாக தெரிந்தே தீரும். அந்த அடிப்படையில் ”நாஸ்திக வாதமும்” நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு, அதன் இயலாமை உள்ளங்கை நெல்லிக்கனி போல் நிலை நாட்டப்பட்டுள்ளது.
இதன் பிறகாவது நாஸ்திகவாத்தில் நம்பிக்கை உடையவர்கள் சிந்திப்பார்களா? முனிதன் என்றால் அவனுக்கு சுய அறிவு இருக்க வேண்டும். சுய அறிவு இல்லை என்றால் கேள்வி அறிவாவது இருக்க வேண்டும். சுய அறிவும் இல்லை, கேள்வி அறிவும் இல்லை, அனுபவ அறிவாவது இருக்க வேண்டும். இது இறுதிநிலை, சுய அறிவும் இல்லை, கேள்வி அறிவும் இல்லை, அனுபவ அறிவும் இல்லை என்றால் அவனை மனிதனாக உலகம் மதிக்காது.
30. முஸ்லிம்களின் குறையேயன்றி இஸ்லாத்தில் குறை இல்லை
இவ்வுலகில் நாஸ்திகக் கொள்ளையை நிலைநாட்டிட பல ஆண்டுகளாக முயற்சிகள் செய்தும் அதன் நோக்கங்கள் நிறைவேறவில்லை என்பதைப் பெரிதாகப் பேசும் நீங்கள் இஸ்லாத்தின் பெயரால் 1400 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்தும் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியவில்லையே. அதனை ஏன் உணரத் தவறி விட்டீர்கள், எனக் கேட்கலாம். அதற்கான விடையாவது, சுமார் 23 வருட முயற்சியிலேயே இறைவனின் இறுதித்தூதர் இவ்வுலகில் குறிப்பிட்ட இலக்கை எட்டி, செயல் முறையிலே காட்டி விட்டார்கள். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது வாழ்நாளிலேயே தனது முயற்சிகளின் பலனை கண்ணால் கண்டவர்கள், முடி சூடா மன்னராகத் திகழ்ந்தவர்கள் என்பதை சரித்திரம் அறிந்த எவரும் மறுக்க மாட்டார்.
இந்த முஸ்லிம் சமுதாயம் என்று இறை கொடுத்த நேர்வழி விட்டு, மனித அபிப்பிராயங்களை மார்க்கதில் நுழைத்து, இஸ்லாத்தின் உண்மை நிலையைச் சிதைத்து மனிதர்களால் கற்பிக்கப்பட்ட மற்ற மதங்களைப் போல் இஸ்லாத்தையும் ஒரு மதமாக்கியதோ அன்றே இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு வீழ்ச்சி ஏற்பட்டது. இன்று முஸ்லிம்களில் பெரும்பாலோர் மனித அபிப்பிராயங்களையே இஸ்லாத்தின் பெயரால் நடைமுறைப்படுத்திக் கொண்டிருகின்றனர். மனித அபிப்பிராயங்கள் நீக்கப்பட்டு, இறை கொடுத்த நேர்வழி மட்டும் நடைமுறைப் படுத்தப்பட்டால், முஸ்லிம்கள் ஒரு தன்னிகரில்லா உயர் சமுதாயமாக உயர்ந்து, மற்ற சமுதாயங்களுக்கு வழிகாட்ட முடியும் என்றே நாங்கள் சொல்கிறோம்.
இன்ஷா அல்லாஹ், தொடரும்