உள்ளமும் உறங்கட்டுமே!
[ அற்புதமான கட்டுரை ]
நான் பணம் படைத்தவர்களைப் பார்த்தோ, அழகாக இருப்பவர்களைப் பார்த்தோ, உயர் பதவியில் இருப்பவர்களைப் பார்த்தோ ஏக்கப்பெருமூச்சு விட்டதில்லை.
இவர்கள் எல்லோரையும் விட, படுத்தவுடன் சட்டெனத் தூங்கிப் போய் விடுகிறார்களே, அவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். அவர்களைப் பார்த்தால்தான் பொறாமையாக இருக்கும்.
நம்மில் எத்துணை பேருக்குப் படுத்தவுடன் தூக்கம் வருகிறது?
தேவையற்ற எண்ணங்களும், சிந்தனைகளும் மனத்தை அலைக்கழிக்க, தூக்கம் என்னவோ வெகு தூரத்தில் அல்லவா உள்ளது? நம் பெரிய துக்கமே தூக்கமின்மைதான்.
நித்தமும் வாழ்க்கையோடு “மல்லு’க்கட்டிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக் கானோர் நிம்மதியாகத் தூங்குகின்றனரே! விடியலே அவர்கட்கு ஒரு பெரிய கேள்விக்குறி. அவர்களைப் பொறுத்தவரை அந்த நிமிடமே சத்தியமானது; நிரந்தரமானது. அடுத்த நாளை ஆண்டவனிடம் விட்டு விட்டு ஆனந்தமாகத் தூங்குகின்றனர். இவர்களுக்குத் கொசுக்கடியும் தெரிவதில்லை; கோடை வெப்பமும் தெரிவதில்லை.
ஆனால் பஞ்சு மெத்தையும், பட்டு விரிப்பும், குளிரூட்டியும் பலருக்குத் தூக்கத்தைத் தருவதில்லை. காரணம், இவர்கள் உள்ளம் உறங்குவதில்லை. சதா சர்வ நேரமும் சிந்தனைகள். அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டு, தோல்விகளுக்காக வருந்தி, விடியலில் சந்திக் கப்போகும் பிரச்சினைகள் பயமுறுத்த, தூக்கம் தொலைந்து போகும். இதெல் லாம் தூக்கமின்மைக்கான காரணங்கள் என்றாலும், இயற்கையாகவே சரியாகத் தூக்கம் வராதவர்களும் உண்டு.
நம்மில் பலருக்கு விடிகாலையில்தான் நன்றாகத் தூக்கம் வரும். நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது அலாரம் அடித்தால் – “உலக மகா கொடுமை’ அதுதான். அப்போது அதன் தலையில் தட்டிவிட்டு மீண்டும் தூங்குவதுதான் சுவர்க்கம். ஆறு மணிக்கு வேலைக்குப் போக வேண்டிய ஆண்களுக்காக நான்கு மணிக்கு எழுந்து சமையல் செய்யும் பெண்கள், பாவம். எங்கே தூங்கி விடுவோமோ என்று விழித்து விழித்துப் பார்த்துக்கொண்டு, நிம்மதியான தூக்கம் இருக்காது.
இரவுப் பணிக்குச் செல்பவர்கள், ஆரம்பத்தில் இரவு முழுதும் கண் விழிக்க மிகவும் சிரமப்பட்டு, பின்னர் பழகிக் கொண்டு விடுவர். இரவு முழுவதும் கண்விழிக்க வேண்டியவர்கள் பகலில் தூங்கியாக வேண்டும். ஆனால் பல சமயம் பகலில் தூங்கச் சாத்தியப்படுவதில்லை. விருந்தினர் வருகை, தொலை பேசி, மின்சாரக் கட்டணம் செலுத்துவது, ரேஷன், உறவினர் வீட்டின் நல்லது, கெட்டது… இப்படி எல்லாமும் இருக்கும்போது பகல் தூக்கம் கெட்டுவிடுகிறது.
பேருந்து ஓட்டுநர்களும், ஆபத்தான இயந்திரத்தைக் கையாள்பவர்களும் வேலையின்போது சற்று கண்ணயர்ந்துவிட்டாலும் பெரும் ஆபத்துதானே! தூக்கம் வராததற்கு வேறு காரணங்களும் உண்டு. வயிறு நிரம்பாவிட்டால் தூக்கம் வராது. சிலருக்கு வழக்கமாகப் படுக்கும் இடத்தில் படுத்தால்தான் தூக்கம் வரும். புதிய இடம் என்றால் தூக்கம் வராது. வயதானவர்களுக்கும் தூக்கம் குறைந்துவிடும். ஆழ்ந்த தூக்கம் வராது. வேறு வேலை இல்லாததால் பகலில் தூங்கிவிட்டு, பின் இரவிலும் தூக்கம் வர வேண்டும் என்று பேராசைப்படலாமா?
மாணவர்களில் இரவில் அதிக நேரம் கண் விழித்துப் படிப்பவர்கள் உண்டு; இரவு சீக்கிரம் படுத்துவிட்டு அதிகாலை எழுந்து படிப்பவர்களும் உண்டு. இரவில் தேநீர் அருந்தினால் தூக்கம் வராது, நன்றாகப் படிக்கலாம் என்ற எண்ணம் எப்படியோ மாணவர் மத்தியில் பதிந்துவிட்டது. தூங்காமல் வெகு நேரம் வெட்டி அரட்டை அடித்துவிட்டுப் பின்னர் காலையில் நேரம் கழித்து எழுகின்றனர்.
தூக்கம் வராதது ஒரு வியாதி. அதிக தூக்கமும் நோயின் அறிகுறி. சுறுசுறுப் பில்லாமல் எப்போதும் தூங்கி வழிந்து கொண்டிருப்பவர்களும் மருத்துவரை நாட வேண்டும்.
பேருந்து / புகைவண்டியில் அமர்ந்தவுடன் தூங்கிவிடும் பேர்வழிகளும் உண்டு. பேருந்தில் போகும்போது தூங்கித் தூங்கிப் பக்கத்து இருக்கைக்காரர் தோளில் சாய்ந்து விழுந்து படுத்தி விடுகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் பேருந்தில் நின்று கொண்டிருக்கும் போதுகூடத் தூங்கிவிடும் தூக்கமன்னர் களையும் கண்டு அதிர்ந்து போனேன். இத்தகைய மன்னர் ஒரு நாள் தன் நண்பரின் மிதிவண்டியின் பின்னால் அமர்ந்துகொண்டு சென்றிருந்திருக்கிறார். அப்படியே தூங்கிப் போய் சைக்கிளிலிருந்து கீழே விழுந்திருக்கிறார். இவர் கட்குக் கட்டிலும் வேண்டாம், மின்விசிறியும் வேண்டாம். படுக்கும்போதே கண்கள் ஒத்துழைத்துவிடும். பிறகென்ன? விடியுமட்டும் “கட்டை’தான்.
நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்போம். பாதி இரவில் விழிப்புத் தட்டிவிடும். மதிய வேளையில் தூங்கும்போது தொலைபேசி செய்து (அநாவசியமாக) நம்மை எழுப்ப மக்கள் யோசிப்பது இல்லை. அதே போல் விற்பனைப் பிரதிநிதிகள் சரியாக மதியம் 2.30 மணிக்கு வந்து அழைப்பு மணியை அழுத்தி நம் தூக்கத்தைக் கெடுத்து, இலவசமாகக் கடுமையான தலைவலியையும் தந்து விடுகின்றனர். தூக்கத்தில் குறட்டை விட்டு, மற்றவர் களின் தூக்கத்தைக் கெடுப்பவர்கள் உண்டு.
மதிய தூக்கம் நல்லதா? கெட்டதா? வயிறு நிறைந்தவுடன் கண்களைச் சுழற் றிக்கொண்டு வருமே, அப்போது ஒரு குட்டித்தூக்கம் வீட்டிலிருப்பவர்களுக்குச் சரிப்படும், ஆனால் “டப்பா’ சாப்பாடு சாப்பிடும் அலுவலகவாசிகளுக்கு எப்படித் தூக்கம் வரும்?
இந்தத் தூக்கப் பிரச்சினை குழந்தை பிறந்ததிலிருந்தே ஆரம்பித்து விடுகின்றது. சில குழந்தைகள் பகலில் தூங்கிவிட்டு, இரவில் கத்திக்கொண்டே இருக்கும். ஈன்ற தாயுடன் சேர்ந்து அந்தக் குடும்பமே விழித்துக்கொண்டு அவஸ்தைப் படும். பகலில் பிறக்கும் குழந்தை இரவில் அழும்; இரவில் பிறக்கும் குழந்தை பகலில் அழும் என்ற நம்பிக்கை வேறு. அப்போதிருந்தே மனிதனுக்கு மனிதன் தூங்குவதில் வேறுபடுகிறான்.
மனித வாழ்க்கையில் பிரச்சினைகளுக்கா பஞ்சம்? பணம் இருப்பவனுக்கும் பிரச்சினை, இல்லாதவனுக்கும் பிரச்சினை. நாள் முழுவதும் பணத்தின் பின்னும், பதவியின் பின்னும், புகழின் பின்னும், வெற்றியின் பின்னும் ஓடி ஓடிக் களைத்துப் போகும் மனிதனுக்கு நிம்மதி தூங்கும்போது மட்டும்தான் கிட்டும்.
தன் பகை உணர்ச்சியை, பழி உணர்ச்சியை, விரக்தியை, பயத்தை, வெறுப்பை, அவநம்பிக்கையை, அற்பத்தனத்தை, கோபத்தை, ஆற்றாமையை – எல்லாம் மறந்து நிச்சலனமாகத் தூங்கும் போதுதான் மனிதனது மூளைக்கும் சேர்த்து ஓய்வு கிட்டுகிறது.
படுக்கப் போகும் முன் நம் கவலைகளையெல்லாம் கழற்றி வைத்துவிட்டுப் போக வேண்டும். பகலெல்லாம் ஆரவாரத்துடன் இருக்கும் நகரம் (நரகம்!) இரவில் உறங்கும்போது எத்துணை அழகாக, அமைதியாக இருக்கிறது என்று வியந்து பாடுகிறான் வோர்ட்ஸ்வொர்த்.
எதிர்காலம் பற்றிய பயம், வீண் கற்பனைகள், பழி உணர்ச்சி, தேவையற்ற சிந்தனைகள், குழப்பங்கள் இவைகளைத் தவிர்த்தால் தூக்கம் நிச்சயம். ஒரு மனி தன் குறைந்தது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். நன்றாகத் தூங்கினால் தேக ஆரோக்கியத்திற்கு அதுவே உத்தரவாதம். தூக்கம் வரும் போது தூக்கத்தை அனாவசியமாகத் தள்ளிப்போட வேண்டாம். தூக்கம் பலசமயம் நமக்குக் கண்ணாமூச்சி காட்டுகிறது. தேர்வு சமயத்தில் வரும் தூக்கம், தேர்வு முடிந்த அன்று எங்கே போய் விடுமோ? அதேபோல் ஞாயிறன்று கொஞ்சம் அதிக நேரம் தூங்கலாமென்று படுத்தால், பழியாக அன்று அதிகாலையே விழிப்பு வந்துவிடுகிறது.
தூக்கம் நமக்கு உள்ள அற்புதமான விஷயம். தூங்கும் நேரமாவது நமக்கு நிம்மதி கிட்டட்டுமே! எனவே தேவையில்லாமல் கண் விழித்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளாமல் தூங்குவோமானால் நம் நெஞ்சில் நீங்காது ஆசனம் போட்டு அமர்ந்திருக்கும் கவலைகளும், சோகங்களும் தாற்காலிகமாகக் காணாமல் போகும்.
நன்றி: வெ. இன்சுவை, நிலா முற்றம்