வருக ரமளானே!
லறீனா அப்துல் ஹக்
வாடி வரண்டிருக்கும் மனத்தரைகள் செழித்தோங்க
வான்மழையாய் அருள்சுமந்து வருக நீ ரமளானே!
தேடிப் பெருஞ்செல்வம் சேர்ப்பதிலே இறைமறந்தோர்
தேட்டம் தனைத் திருத்த வருக நீ ரமளானே!
நிசியிலும் எழுந்திருந்து இறைவனுக்கு சிரம்பணிய
நித்தமும் அவன் நினைவில் ‘கல்பு’ கசிந்துருக
பசியின் கொடுமையினை அனுபவித்து உணர்ந்தொருக்கால்
பிணியுற்றோர் தனக்கிரங்க பயிற்சிகொடு ரமளானே!
பகைமறந்து நம் சமூகம் ஓரணியில் இணைவதற்கும்
பரிவுடனே சகோதரரின் இடர் களையும் மனம்கொடுத்து
வகையறிந்து சதிகளையே முறியடித்து இஸ்லாத்தை
வையந்தனில் நிலைநாட்டும் உறுதிகொடு ரமளானே!
திருமறையின் தித்திப்பை நாள்தோறும் வழங்கிடவே
திக்ருடைய மகத்துவத்தை உள்ளங்களில் பதித்திடவே
இருமையிலும் ஈடேற்றம் பெறுவதற்கு மாந்தர்கட்கு
இம்மையிலே வரமளிக்க வருக நீ ரமளானே!