வெற்றிமேல் வெற்றி உன்னைத் தொடர என்ன செய்ய வேண்டும்?
Dr. A.P.முஹம்மது அலி. Phd. I.P.S.(rtd)
என் அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் சான்டியாகோ நகரில் தமிழ் முஸ்லிம் தொண்டு நிறுவன நண்பர் சாதிக் அவர்களைக் காண சந்தர்ப்பம் கிடைத்தது. அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ‘நமது சமுதாய இளைஞர்களிடையே நம்பிக்கை குறைந்து வருகிறது. ஆகவே அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கட்டுரை எழுதுங்கள’ என்று கேட்டுக் கொண்டார். அந்த வேண்டுகோள் உண்மைதான் என்று சமீபத்திய பிளஸ் 2 பரிட்சையில் முஸ்லிம் மாணவிகள் அபார வெற்றியடைந்தது போன்று மாணவர்கள் சோபிக்கவில்லை.
உதாரணத்திற்கு நெல்லையைச் சார்ந்த கார்ப்பரேஷன் பள்ளியில் படித்த மாணவி யாஸ்மின் மாநிலத்திலே முதல் மாணவியாக வெற்றி பெற்றது போல பணத்தினைக் கொட்டி பல்வேறு டூயூஷன் வைத்தாலும் மாணவர்கள் சிறப்புடன் வெற்றியடைவில்லை.
இளையான்குடி மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி இறுதிப்பரீட்சை எழுதிய 170 மாணவிகளும் 117 பத்தாம் வகுப்பு எழுதிய மாணவிகளும் வெற்றியடைந்திருப்பது பாராட்டலுக்குரியது. ஆனால் ஆண்கள் படிக்கும் தமிழக பள்ளிகளின் வெற்றி சதவீதம் பாராட்டுவதுக்குரியதாக இல்லை.
கல்வியறிஞர் ‘யாஸ்பால’ அறிக்கைப்படி நாட்டில் பள்ளி இறுதி வகுப்பு எழுதிய 70 லட்ச மாணவர்களில் வெறும் 30 லட்சம் பேர்கள் தான் உயர்கல்விக்குச் செல்கிறார்கள் என்று தெரிகிறது.
மற்றவர்கள் பள்ளிப்படிப்பினை பாதியில் நிறுத்தி வேலை தேடி ஆரம்பித்து விடுகிறார்கள். காரணம் மாணவிகளை பெற்றோர் கண்டிப்புடன் வளர்ப்பது போல மாணவர்களை பெற்றோர் கண்டிக்காமல் பேனிக்காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதன் அர்த்தம் என்னவென்றால் அவர்களெல்லாம் சம்பாதிக்கும் மிஷினாகவும், திருமண வியார சந்தையில் அதிக விளை போகும் பொருளாக கருதப்படுவதால்தானே அந்த நிலை!
மாணவன் படிப்பில் கவனம் செலுத்தாததிற்கு டி.வி. சினிமா, விளையாட்டு, தந்தையின் செல்வக்கொழிப்பும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. தமிழக அரசு 3.5 சதவீதம் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு வாய்ப்புக் கொடுத்தாலும் பணியிடங்களில் ஆட்களை நிரப்ப தகுதியான முஸ்லிம்களில்லை என இடங்கள் காலியாக வைக்கப்பட்டு அதனில் வேறு பிரிவினருக்கு ஒதுக்கும் நிலை பரிதாபமானது என உங்களுக்குத் தோன்றவில்லையா?
நமது மாணவர்களும், பட்டதாரிகளும் தங்கள் முயற்சியில் தோல்வியடைந்தால் சோர்ந்து விடுவதினை விட்டு மறுபடியும் அந்தத்தோல்விக்கான காரணங்கள் கண்டுபிடித்து வெற்றிக்கனியினைப் பறிக்க உதவுவதிற்காக தீட்டப்பட்டதே இந்த தன்னம்பிக்கைக் கட்டுரை.
பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஜனநாயக கட்சி மாநாட்டில் அமெரிக்கா ஜனாதிபதி வேட்பாளர-கறுப்பினத் தலைவர் ஜெசி ஜேக்ஷன் போட்டியிடும்போது பேசுகையில், ‘கறுப்பின மக்களைப்பார்த்து கூறிய மூன்று வார்த்தைகள், ‘நம்பிக்கை கொள்வீர், நம்பிக்கை கொள்வீர், நம்பிக்கை கொள்வீர்’.
அன்று அவர் முயற்சி தோல்வியில் முடிந்தாலும் அவர் கூறியபடி 2009 ஆம் ஆண்டு ஒரு கலப்பு-கறுப்பினத் தலைவர் பாரக் ஒபாமா அமெரிக்க அரியணையில் ஏறியது கறுப்பின மக்களிடம் மட்டுமல்லாது உலகில் நசுக்கப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறது என்றால் அது பொய்யாகுமா? உங்கள் நம்பிக்கையில் சில இடர்ப்பாடுகள் வரலாம். அதனை நினைத்து உங்கள் உள்ளம் சோர்வடையக் கூடாது. உதாரணத்திற்கு விமானப் பயணத்தினை எண்ணிப்பார்க்கலாம்.
விமானம் புறப்படும் போது அது செல்லும் பாதை, நேரம், தட்ப வெட்ப நிலை போன்றவை துள்ளிதமாகக் காட்டும் கருவிகள் உதவியுடன் விமானி அதனை செலுத்தினாலும், சிறிதும் எதிர் பார்க்காத அளவில் இயற்கைச் சீற்றத்தின் பயனாக மழை, இடி, மின்னல், இருள் கொண்ட மேகம், மனித தவறினைத் தாண்டி விமானக் கேப்டன் விமானத்தினை திறமையாக தரையிறக்குவார். அதே போன்றுதான் வாழ்க்கையில் பல தடுமாற்றமிருந்தாலும் நம்பிக்கையினை கைவிடாவிட்டால் நிச்சம் வெற்றி உங்கள் பக்கமே!
உங்கள் உள்ளத்தில் கொழுந்துவிட்டெரியும் குறிக்கோளினை உருவாக்கிக் கொண்டு அதில் ஆர்வத்தினைச் செலுத்தினால் வெற்றிவாகை சூட முடியும். ‘மைக்ரோ சாப்ட்வேரின’ அதிபர் பில்கேட்ஸ் கல்லூரி படிப்பினை பாதியில் நிறுத்தியவர் என்பதும் ஆனால் இன்று உலக கல்விக்கும,; வேலைக்கும் உத்திரவாதம் கொடுக்கும் சிறப்பு செயல் கம்யூட்டரினை உருவாக்கி உலக முதல் பணக்காரராகி தன் பாதி வருமானத்தில் உலக சுகாதாரத்திற்காக செலவிடும் சமூக தொண்டராக இருப்பது எவ்வாறு முடிந்தது என்றால் விடா முயற்சியே வெற்றிக்கு அடித்தளம் என்ற கொள்கையினைக் கொண்டதால்தானே!!
ராபர் புரஷனிங் என்ற அறிஞர், ‘உங்கள் உடல் உழைப்பு வலி குறையும் போது உங்களுக்கு கைமேல் பலன் கிடைக்கும்;’ என்கிறார். இது எதனைக்காட்டுகிறது என்றால் தன்னம்பிக்கை கொண்ட எந்த மனிதருக்கும் பின்னடைவு ஒரு தடைக்கல்லாக இருக்கக்கூடாது என்பது தான். மாறாக அது தன் வாழ்க்கையில் முன்னேறும் வெற்றிப்டிகளாக அமையும்.
ஜப்பான் நாட்டில் ஹிரோசிமா-நாகசாகி என்ற நகரங்களின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் ஆறாம் தேதி அமெரிக்கா ‘லிட்டில் மாஸ்டர்’ என்ற அனுகுண்டை வீசி சின்னா பின்னமாக்கியது. இன்று ஜப்பானியர் முயற்சியால் அந்த நகரம் அழகு நகரமாக உயர்ந்த கட்டிடங்களுடன் எரிந்த சாம்பலுக்கிடையில் ‘பீனிக்ஸ’ பறவைபோல எழுந்து நிற்கிறதும், உலக குத்துச் சண்டை போட்டிகளிலே பல தோல்விகளைக் கண்டாலும் மூன்று முறை சாம்பியனாக வெற்றிக் கொடி நாட்டியதோடு மட்டுமல்லாமல் ஐ.நா.வின் ஆப்பரிக்கா சிறப்புத்தூதராக பணியாற்றிய முகம்மது அலி((கேசியஸ் கிலே) தோல்விமனப்பான்மையுடையவர்களுக்கு நம்பிக்கையூட்டும் நட்சத்திரங்கள் என்றால் மிகையாகுமா?
நம்மிடையே நம்பிக்கையாளர்களிடமிருந்து அவ நம்பிக்கையாளர்களை கீழ்கண்ட உதாரணத்துடன் அறிந்து கொள்ளலாம். நமது வீட்டிற்கு தாகத்துடன் ஒரு விருந்தாளி வந்து தண்ணீர் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு அரைகிளாஸ் தண்ணீர் கொடுக்கிறீர்கள் என்றால் அந்தத் தண்ணீரைப்பருகியவர் ‘கஞ்சப்பய கிளாஸ் நிறைய தண்ணீர் கொடுக்காமல் அரைக்கிளாஸ் தண்ணீர் கொடுக்கிறானே’ என நினைத்தால் அவன் அவ நம்பிக்கையாளன். அதனை விடுத்து அரைக்கிளாஸ் தண்ணீராவது குடிக்க கிடைத்ததே என்று மனநிறைவு கொள்பவன் நம்பிக்கையாளனாகும். ஆகவே அவநம்பிக்கை என்ற இருள் உங்களை எந்த நேரத்திலும் கவ்வாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
சார்லஸ் டிக்கன்ஸ் என்ற புகழ் பெற்ற எழுத்தாளரை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அவர் ஆரம்பத்தில் கட்டுக்கட்டாக கதை எழுதித்தள்ளி பல்வேறு பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவை ஒன்று கூட பிரசுரிக்கவில்லை. டிக்கன்ஸ_டைய நன்பர்கள் அனைவரும் அவரை கழுதை திண்பதிற்காக கதை எழுதும் எழுத்தாளர் என கேளி செய்தார்கள். ஆனால் டிக்கன்ஸ் அதனைப் பொருட்படுத்தாது மேலும் எழுதினார். என்ன ஆட்சரியம். ஒரு மாத இதழில் அவருடைய கதையொன்று பிரசுரமானகி பிரபலமானது. அதன் பின்பு அவருடைய ஒவ்வொரு வரிக்கும் காசோ காசுவென்று கொட்டித்தள்ளியது. வெற்றி வீரர்களின் பெயரளவில் ஒரு சதவீதம் தான். ஆனால் அவர்கள் உடலுழைப்பு 99 சதவீதமாகும்.
நீங்கள் உங்கள் லட்சியத்தினை அடைய லாட்டரி சீட்டோ அல்லது அலாவுதீன் அற்புத விளக்கு போன்ற மாயை பொருளோ தேவையில்லை. மாறாக கீழ்கண்ட செயல்பாடுகளின் மூலம் உங்கள் வெற்றியினை அடைய முடியும்:
1) செயல்திறன்: உங்கள் குறிக்கோளை அடைய வேண்டும் என்ற அவசரத்தினை முன் வைத்து வேலையினைத் தொடர வேண்டும். அதற்கு மன உறுதியும், இடையூறுகளை சமாளிக்கும் திறனும், பயத்தினை விட்டொழிக்கவும் தெரிய வேண்டும். உங்கள் முன் மாதிரியாக உங்கள் தொழில், கல்வியில் வெற்றியடைந்தவர்களை எடுத்துக் கொண்டு அவர்கள் போல வளர ஆசைப்பட வேண்டும்.
2) நம்பிக்கை: நீங்கள் உங்கள் குறிக்கோளை அடைய முடியும் என்ற அசைக்க முடியாத நூறு சதவீத நம்பிக்கை வேண்டும்.
3) தெளிவு: உங்கள் குறிக்கோளின் கனவுகள் குழப்பமில்லாமலும் தெளிவாகவும் இருக்க வேண்டும். அதற்கு உதாரணமாக உங்கள் தந்தை அல்லது அண்ணன் உங்களுக்கு சைக்கிள் கற்றுக் கொடுத்ததை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் சைக்கிள் ஓட்டும் போது கை, கால்களில் அடிபட்டு காயம் ஏற்பட்டதினை நினைத்து சைக்கள் ஓட்டுவதினை விட்டு விட்டீர்களா? இல்லையே! அதேபோல் தான் உங்கள் முதல் முயற்சியில் தோல்வியேற்பட்டாலும் துவளாது வெற்றி வரை உழைக்க வேண்டும்.
4) இழப்பு-ஆபத்து: உங்கள் முயற்சியில் இழப்பு, ஆபத்துக்கள் நேரலாம். ஆனால் அறிவுப்பூர்வமான மற்றும் உணர்வுப் பூர்வமான நம்பிக்கையாக எடுக்கும் முயற்சிகள் மூலம் அவைகளை முறியடிக்க முடியும்.
5) நட்பு: தன்னம்பிக்கையுள்ளவர்களுடன் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு முட்டாள் நண்பர்களை விட ஒரு கூர்மையான பென்சில் மேல் என்ற பழமொழிக்கிணங்க உங்கள் குறிக்கோளுக்கு உதவும் வகையில் நட்பினை தேடிக் கொள்ளுங்கள்.
6) உரு: உங்களுடைய குறிக்கோளை ஒரு காகித்தில் எழுதி அதற்கு உருக்கொடுக்க வேண்டும். ஜென் பழமொழி ஒன்று சொல்வார்கள், ‘மலையை நகர்த்த சிறு கற்களை முதலில் உடையுங்கள்’ என்று. ஆகவே உங்கள் குறிக்கோளினை சிறிது சிறிதாக செயல் படுத்துங்கள்.
7) தோல்விக்கான காரணங்கள்: நீங்கள் தோல்வியடைந்தால் என்ன காரணத்திற்காக தோல்வியடைந்தோம் என ஆராயுங்கள். உங்கள் குறிக்கோளுக்கு புதிய உருக் கொடுங்கள். தோல்வி மனித இயற்கையென்று நினைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு 1953ஆம் ஆண்டு மே மாதம் 29ந்தேதி உலக உயரமான இமய மலையினை வெற்றிக் கொண்ட எட்மண்ட் ஹில்லாரியினை ஞாபகமிருக்கும்.
அவர் முதல் முயற்சியில் தோல்வியடைந்தார்.
அதன் பின்பு முயற்சியினை கைவிடவில்லை.
மாறாக எவரஸ்ட் சிகரத்தின் படத்தின் முன்னின்று, ‘எவரஸ்ட் சிகரமே! இந்தத் தடவை நீ ஜெயித்து நான் தோல்வியடைந்து விட்டேன். ஏனென்றால் நீ எந்த அளவு உயரமாக வளர முடியுமோ அந்த அளவு வளர்ந்து விட்டாய். ஆனால் இன்னும் வளர்ந்து கொண்டேயிருக்கிறேன். உன்னை விடப்போவதில்லை, விடப்போவதில்லை’ என்று கூறி அடுத்த முயற்சியில் வெற்றியும் கண்டார். அதேபோன்று உங்கள் தோல்வியினை கண்டு மிரளாது தொடர் முயற்சி செய்தால் உங்கள் குறிக்கோளில் வெற்றி மேல் வெற்றி வந்து உங்களைத் தழுவாதா?