பெருமானர் صلى الله عليه وسلم அவர்களை கனவில் காண முடியுமா?
இன்ஷா அல்லாஹ், காணலாம்.
‘என்னைக் கனவில் காண்பவர்கள் என்னை விழிப்பு நிலையிலும் காண்பார்கள்’ – (ஸஹீஹுல் புகாரி)
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காண்பது குறித்து சில ஆலிம்களின் கருத்து மேலோட்டமாக இருக்கிறது.
”பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் வாழ்ந்த தோழர்களுக்கு மட்டும்தான் இது பொருந்தும்; அவர்கள் தான் கனவில் பெருமானாரைக் கண்டால் விழிப்பு நிலையிலும் அதாவது நேரிலும் போய்க் காண்கின்ற வாய்ப்பு பெற்றவர்கள்; எனவே நம்மாலெல்லாம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காணவே முடியாது; அப்படிக் கண்டதாக யாராவது கூறினால் அது பொய்யாகும்; தங்களை ஒரு அவ்லியா அந்தஸ்துக்கு உயர்த்திக் கொள்ள விரும்புகின்றவர்களுடைய செயலாகும்” என்பது அவர்களுடைய ஆணித்தரமான பதில்.
(அவர்களுடைய) மேலோட்டமான புரிந்து கொள்ளலுக்கு இது ஒரு நல்ல உதாரணம். அவர்களால் முடியாத ஒரு காரியத்தை மனிதகுலம் அனைத்துக்கும் பொதுவான ஒரு பிரச்சனையாக அவர்கள் பார்த்துவிட்டார்கள்.
ஸஹீஹுல் புகாரியின் எந்த ஒரு தொகுப்பை எடுத்துப் பார்த்தாலும் அவர்கள் சொன்ன அந்த ஹதீது உள்ளது. ஆனால் ‘விழிப்பு நிலை’ என்ற வார்த்தைக்கு அடிக்குறிப்பு ஒன்று உள்ளது. அதில் ‘விழிப்பு நிலை’ என்பது மறுமையைக் குறிக்கும் என்று உள்ளது!
ஒரு ஹதீதை தனியாக பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி நாம் சிந்திக்கத் தவறிவிடுகின்றோம். குறைந்தபட்சம் எல்லா ஹதீதுகளையும் நாம் தனியாகப் பார்க்கக்கூடாது என்பதையாவது ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். உதாரணமாக ஒரு விஷயத்தைப் பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட ஹதீதுகள் இருக்கும் பட்சம் அவையனைத்தையும் ஒருசேரப் பார்ப்பதுதான் பயனளிக்கும், தெளிவை ஏற்படுத்தும்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காணமுடியுமா என்ற கேள்விக்கு பதிலாக ஒரேயொரு ஹதீதை மட்டும் காட்டிவிடுவது உள்நோக்கம் கொண்டதாகவே ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட ஹதீதுகள் இருக்கும் பட்சம் அவையனைத்தையும் ஒருசேரப் பார்ப்பதுதான் பயனளிக்கும், தெளிவை ஏற்படுத்தும்.
பெருமானார் விஷயத்தைப் அவர்களை கனவில் காணமுடியுமா? என்ற கேள்விக்கு பதிலாக ஒரேயொரு ஹதீதை மட்டும் காட்டிவிடுவது உள் நோக்கம் கொண்டதே ஆகும்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரில் பார்த்திருந்த, பழகியிருந்த தோழர்கள் அவர்களை கனவில் கண்டால் அது அவர்கள்தானா? என்று சந்தேகம் ஏற்பட வாய்ப்பே இல்லை. பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அங்க அடையாளங்கள்கூட அந்த சங்கைமிகு தோழர்களுக்கு மனப்பாடமாக இருந்தது!
அவர்களின் மீது கொண்ட அன்பின் மற்றும் மரியாதையின் காரணமாக அவர்களின் ஒவ்வொரு அசைவையும் பற்றி தோழர்கள் துல்லியமாக அறிந்து வைத்திருந்தார்கள். அவர்களுக்கு எத்தனை நரை முடிகள் இருந்தன என்பது உட்பட!
முடி என்றுகூட அவர்கள் சொல்வதில்லை. மரியாதையாக ‘பாலெமுபாரக்’ (அருள் பாலிக்கப்பட்ட முடி) என்றோ அல்லது அதையொத்த அரபி வார்த்தைகளாலேயேதான் குறிப்பிட்டார்கள். இத்தகைய மரியாதையும் கண்ணியமும் மனிதகுல வரலாற்றில் வேறு எந்த மனிதருக்கும் கிடைத்ததில்லை.அத்தகைய தோழர்கள் கனவில் பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்டால் அது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தானா என்ற சந்தேகம் எப்படி வரும்? சந்தேகம் வந்தால் அதை நிவர்த்தி செய்து கொள்வதற்காகத்தான் இந்த ஹதீது. தோழர்களுக்கோ சந்தேகம்வர வாய்ப்பே இல்லை எனில், இந்த ஹதீது யாருக்கு? நமக்குத்தான்.
நாம் தான் பெருமானார் அவர்களை கனவில் கண்டால் அது அவர்கள் தானா என்று சந்தேகம் தோன்றக்கூடிய துர்பாக்கிய சூழ்நிலையில் இருப்பவர்கள். இந்த சாதாரண விஷயத்தைக்கூட புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு மார்க்க அறிஞர் ஒருசிலர் இல்லையென்பது மிகவும் ஆச்சர்யர்யமாகத்தான் இருக்கிறது.
‘மனிதர்கள் உறங்குகிறார்கள். மரணம் வரும்போது விழித்துக் கொள்வார்கள்’ என்று இன்னொரு ஹதீது. இம்மையை உறக்கம் என்றும் மறுமையை விழிப்பு என்றும் இந்த ஹதீது தெளிவுபடுத்துகிறது.
மனிதர்கள் பெருமானார் அவர்களை கனவு கண்டதாக சொன்னால் அவர்கள் அவ்லியாவாக தங்கள் அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக (!) சொல்வதாக அந்த மவ்லவி கூறுகிறார். சரி, அதையே அவ்லியாக்கள் சொன்னால்?
கௌதுல் அஃலம் அப்துல்காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பெருமானாரைக் கனவில் கண்டதாக தனது சொற்பொழிவுகளில் கூறுகிறார்கள். இமாம் ஜாஃபர் சாதிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள். இது போன்ற வரலாறுகள் எண்ணற்றவை. எதையுமே நம்புவதற்குத் தயாராக நாம் இல்லையென்றால் ஹதீதுகளையும் வரலாற்றையும் நாம் வேண்டுமென்றே சரியாகப் புரிந்து கொள்ள மறுக்கிறோம் என்றே பொருள்.
மேலோட்டமான புரிந்து கொள்ளுதலுக்கு இன்னொரு உதாரணம்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்சொன்னதைச் செய்வது அவர்களுக்கு செய்யும் மரியாதையாகும். இதில் இரண்டு கருத்து கிடையாது. எனினும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்சொல்வதை செய்யாமலிருப்பது மரியாதையாகுமா என்றால் பொதுவாக ஆகாது என்றுதான் நாம் நினைப்போம். அது சரிதான் என்றாலும் சில சூழ்நிலைகளில் அவர்கள் சொல்வதை செய்யாமலிருப்பதும் அவர்களுக்குச் செய்யும் மரியாதையாகி இருக்கிறது. ஆச்சரியம்தான் ஆனாலும் உண்மை!
ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று எழுதப்பட்டதை எதிர்குழாம் ஒத்துக்கொள்ளாமல் ‘அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது’ என்று எழுதச்சொல்ல, முதலில் எழுதியதை அழித்துவிட்டு மறுபடியும் அவர்கள் சொன்னதுபோலவே எழுதுங்கள் என்று பெருமானார் அவர்கள சொல்ல அலீ ரளியல்லாஹு அன்ஹு அப்படி எழுத மறுத்துவிட்டார்கள்! காரணம் மரியாதைதான்.
ஒரு விஷயத்தை ஆழமாகப் புரிந்து கொள்ளும் போது முரண்பாடுகள் மறைந்துவிடுகின்றன. ‘லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று சொன்னவர் சொர்க்கம் செல்வார் என்ற ஹதீதை வைத்துக் கொண்டு ஐவேளைத் தொழுகையெல்லாம் தேவையில்லை என்று வாதிடுவதைப் போல இருக்கிறது ஒரு ஹதீதை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு கேள்விக்கு பதில் இப்படித்தான் என்று ‘ஆணி’த்தரமாகச் சொல்வது.
புரிந்து கொள்வதைப் பற்றி நாம் நிறையத்தான் புரிந்து கொள்ள வேண்டியுளள்ளது!
ஆளாளுக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் கண்டதாகக்கூறி சுய ஆதாயம் பெரும் தவறு நிகழ்ந்து விடக்கூடாது என்கின்ற அக்கரையில் அவர்கள் இக்கருத்தை கூறியிருந்தாலும் அதுகூட தவறுதான். ஏனெனில் கனவு என்பது மனித சக்திக்கு அப்பார்ப்பட்டது. நல்ல கனவுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவதாக பெருமானார் அவர்களே கோடிட்டுக் காட்டியுள்ளார்களே!
இவர்களின் கருத்தின்படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஒருவரின் கனவில் வருவதற்கு இவர்களே 144 தடையுத்தரவு போடுவது போல் அல்லவா இருக்கிறது?! அந்த அதிகாரத்தை இவர்களுக்கு வழங்கியது யார்?
இவர்களில் எவருடைய கனவிலேனும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றினால், இது அவர்கள் இல்லை என்று சொல்வார்களா? மனித குலத்தில் பிறந்த எவருக்கேனும் அப்படிச் சொல்ல மனம் வருமா என்ன! மனதில் கை வைத்து சொல்லுங்கள்.!! அல்லாஹ்வே அறிந்தவன்.