அல்லாஹ், அவன்தான் மனிதனைப் படைத்து பாதுகாக்கும் ஒரே இறைவன் ஆவான். அவன் ஒருவனே இப்பூமியையும் மற்றும் பூமியிலுள்ளவைகள் யாவையும் படைத்த படைப்பாளனாகவும், பாதுகாப்பவனாகவும் இருக்கின்றான். அவனே அருளானவனாகவும், கண்ணியமிக்கோனாகவும் இருக்கின்றான். அவன் யாவற்றையும் அறிந்தவன்; மறைவானவைப் பற்றி அறிந்தவனுமாக இருக்கின்றான். அவனே நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி. அவன் மனித மனங்களில் உள்ளவைகளையும், வெளியில் உள்ளதையும் அறிந்தவனுமாக இருக்கின்றான். அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்:
”(நபியே!) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு – நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில்தான் இருக்கிறது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்பொழுது நாம் அவர்களுக்கு அறிவிப்போம் – நிச்சயமாக அல்லாஹ் இருதயங்களில் உள்ளவற்றை நன்கறிபவன். ( அல் குர்ஆன் 31:23).
வணக்க வழிபாடு என்பது மனிதன் தன் சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியுடையவனும் ; மறைவானவைப் பற்றி அறிந்தவனும்; தகுதிவாய்ந்த இறைவனிடம் மனிதன் உதவி கேட்பதும், நன்றி செலுத்துவதுமாகும். ஆதலால் வணக்க வழிபாடு கடமை என்பதுடன், அது ஆத்மார்த்தமாக உளப்பூர்வமாக உதவி கேட்பதுமாகும். எவர்கள் மனப்பூர்வமாக ஒருமுகத்துடன் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றனரோ அவர்களால் மட்டுமே அதன் முழுப்பலனைப் பெறமுடியும்.
பிறரை கவரக்கூடிய வகையில் மிக அழகாக வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டபோதிலும், முழுமனதுடன் ஆத்மார்த்தமாக ஒருமுகத்துடன் இல்லையென்றால் அவ்வணக்க வழிபாடு பலனளிக்காது. அது ஒரு உதடுகள் அசையும் போது ஏற்படும் முனகலே அன்றி வேறில்லை. தொழுகை என்பது அர்த்தமுள்ளதாகிறது எப்பொழுது என்றால், தொழுகை செய்பவனின் (இதயம்) மனமுருகி இறைவனிடம் உதவி கேட்கும் போதும், அவன் அளித்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் போதும் தான். ஆகையால் வணக்க வழிபாடுகளில் எல்லாம் முதன்மையானது தொழுகை ஆகும்.
இப்பொழுது மனிதன் யாரை தொழ வேண்டும்? யாரை மனிதன் வணங்க வேண்டும்? . ஆம்! அவையாவும் அல்லாஹ் ஒருவனுக்கே. அவனே இப்பிரபஞ்சத்திலுள்ளும் வெளியிலும் உள்ள மறைவான இரகசியங்களின் சாவியை வைத்திருப்பவன். ஒவ்வொரு மனிதனின் பகுத்தறிவும் அத்தகைய தகுதிவுடைய ஒருவனையே வணங்க வேண்டும் என்று சொல்லும். தொழுகை என்பது தன்னைப் படைத்த படைப்பாளனுக்கும், பாதுகாப்பாளனுக்கும் மாத்திரம் மனிதன் செய்ய வேண்டிய கடமையாகும். இதைத்தான் ‘இஸ்லாம்’ நமக்கு கற்றுத் தருகிறது.
இறைநம்பிக்கை(ஈமான்) எப்பொழுது வலுவடையும் என்றால் தொழுகையும் மற்ற வணக்க வழிபாடுகளும் இறைவன் ஒருவனுக்கே எனும் போதுதான். தவ்ஹீத் எனும் ஓரிறை கொள்கையைத் தான் இஸ்லாம் நம் அனைவருக்கும் வலியுறுத்துகின்றது.
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் இதயத்தின் ஓரத்திலும் இறைநம்பிக்கை இருக்கின்றது. அதை மனிதன் தன் சந்தேகத்தினாலும், நம்பிக்கையில்லாமையினாலும் அவன் தாழ்ந்த நிலைக்கு சென்று இயற்கையை வழிபட தொடங்குகின்றான். அவன் தன்னுள் இருக்கும் உறுப்பொருளை, சாரசம்சத்தை தாழ்வு நிலையில் சிந்திப்பதால், அவன் இவ்வுலகில் காணும் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் மீது சக்தி இருப்பது போன்று உணர்கின்றான். மனிதன் ஆத்மீகமான உயர்வான நிலையை அடைய வேண்டும் என்று சொன்னால், நிகரற்ற யாராலும் வெல்லமுடியாத சக்தியாக விளங்கும் ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனையே வணங்கவேண்டும். அவனுக்கு மட்டுமே வழிபட வேண்டும். அவனுக்கு வழிபடுவதற்க்கேயன்றி நம்மை அவன் படைக்கவில்லை. மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56).
நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன். (அல் குர்ஆன் 51:58).
மனிதன் தன் பாவ காரியத்திலிருந்தும் மற்றும் மானக்கேடானவைகளிலிருந்தும் தன்னை காத்துக் கொள்ள வேண்டுமென்றால் மனிதன் தன்னை படைத்து பாதுகாக்கும் ஒரே இறைவனை வணங்க வேண்டும். அருள் மறை குர்ஆன் நமக்கு கீழ்க்காணும் வசனங்களின் மூலம் நமக்கு கட்டளையிடுகின்றது:
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம். (அல் குர்ஆன் 2:21)
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முனனுள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னுள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை – அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (அல் குர்ஆன் 2:255).
அவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்;. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 3:6).
அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். (அல் குர்ஆன் 3:18).
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு யாருமில்லை. நிச்சயமாக உங்கள் அனைவரையும் இறுதிநாளில் அவன், ஒன்று சேர்ப்பான் – இதில் சந்தேகமில்லை. மேலும் அல்லாஹ்வைப் பார்க்கிலும் சொல்லில் உண்மையுடையோர் யார்? (அல் குர்ஆன் 4:87).
நிகரற்ற உயர்ந்த பண்புகளைக் கொண்டவனும்; இணையற்றவனுமான அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்து வணக்க வழிபாடுகளும் என்று தன் நம்பிக்கையில் நிலைத்திருக்கும் ஒருவன் இறை நம்பிக்கை எனும் கதவின் வழியாக உள் நுழைந்து, தன்னை ஒரு விசுவாசியாக இறைநம்பிக்கையாளனாக (Mu’min) மாற்றிக் கொள்ள முடியும்.
மனிதன் ஓர் இறைவனை ஏற்க்கும் போது , ஒரு வித்தியாசமான இனம் புரியாத சந்தோஷத்தை உணர்ந்தவனாக வாழ்வில் முன்செல்கின்றான். அவன் இவ்வுலகில் உள்ள படைபினங்களின் காலில் விழுந்து வணங்கமாட்டான். மாறாக, தன்னை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கு தன் வழிபாடுகளை முழுவதுமாக அர்ப்பணித்து, அல்லாஹ்வின் உண்மையான கட்டளைகளை ஏற்று நடப்பான். அப்பொழுது தான் அவன் முஸ்லீமாக, இறைவனுடைய விருப்பத்திற்குரிய பாதையில் தன்னை முழுவதும் அர்ப்பணித்தவனாக மாற்றிக் கொள்ள முடியும்.
source: http://alaipupani.blogspot.com/