ரமளான் மாதமும் நோன்பும் (1)
நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது?
முஸ்லிம்கள் அதிகமதிகம் எதிர்பார்க்கக்கூடிய ரமழான் நம்மை வந்தடைந்து இருக்கிறது. முஸ்லிம்கள் அனைவரையும் இந்த மாதத்தில் ஆன்மீகத்தில் மிக ஈடுபாடு உடையவர்களாக நம்மால் காணமுடியும். தள்ளாத வயதிலும் கூட நோன்பு வைப்பவர்கள், பசி பொறுக்க முடியாத பச்சிளம் குழந்தைகள், இப்படி முஸ்லிம்களில் அனைத்து சாராருமே நோன்பு நாள்களில் மிகுந்த ஆன்மீக ஈடுபாட்டில் உள்ளதை நாம் காணமுடியும்.
ரமழான் மாதத்தின் பகல் நேரத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் நோன்பு நோற்க முடியாத நிலையிலுள்ள தள்ளாத வயதினரும் கூட பலபேர் பார்க்கஇ உண்ண பருக மாட்டார்கள். வெறும் நோன்பு விஷயத்தில் மாத்திரமல்ல மற்ற ஏனைய விஷயங்களிலும் மிகுந்த பேணிப்புடன் நடந்துகொள்வதையும் தீமைகளின் பக்கம் மக்கள் அதிகம் செல்லாதிருப்பதையும் நாம் ரமழான் காலங்களில் பார்க்க முடியும்.
இவ்வாறு பக்திமான்களாக காணப்படும் முஸ்லிம்கள் ரமழான் அல்லாத காலங்களில் ஏன் நற்செயல்களில் அதிகம் ஈடுபடுவதில்லை? இன்னும் சில இடங்களில் சில சகோதரர்களால் ‘ரமழான் முழுவதும் பள்ளியில் காணப்பட்ட முஸ்லிம்களை காணவில்லை! காணவில்லை!! என சுவர் விளம்பரம் செய்யுமளவிற்கு நம்மவர்கள் அப்படியே முழுமையாக மாறிப்போய் விடுகிறார்கள்.
ஒரு மாதம் தீமைகளின் பக்கம் கவனம் செலுத்தாதவர்கள் அடுத்த மாதம் அல்ல பெரு நாளிலேயே வேறு நபர்களாய் மாறிப்போய்விடுகிறார்கள். ரமழான் முழுவதும் நோன்பு நோற்று தொழுது வந்தவர்கள் பெருநாளன்று தனது மாற்றுமத நண்பர்களுக்கு விருந்தளிக்கிறோம் என்ற பெயரில் மது அருந்துவதையும் இன்னும் பல தீமையான காரியங்களில் ஈடுபடுவதையும் நம்மால் காணமுடியும்.
எனது சொந்த ஊரில் ஈத் தொழுகை முடிந்த பிறகு இளைஞர்கள் குத்பா மிம்பர் படியின் பின்புறம் கோலிக்குண்டு என்றழைக்கப்படும் விளையாட்டில் பணம் கட்டி அதிமும்முரமாக சூதாட்டத்தில் ஈடுபடுவார்கள். அவர்கள் பெருநாளைக்கு அணிந்த ஆடைகூட கறைபடிந்திருக்காது. ஆனால் அவர்களின் உள்ளம் அத்தனை கறைபடிந்து போயிருக்கும்.
இதற்கும் அவர்கள் சதாரான இளைஞர்களா! ரமழான் முழுவதும் நல்லறங்களில் ஈடுபட்டவர்கள் மாத்திரமல்ல. மக்களிடம் வசூலித்து சஹர் நேரத்தில் நோன்பு நோற்க எழுப்புவதற்காக ஒலிபெருக்கிகள் அமைத்து மார்க்க விஷயங்களை ஒலிபரப்பி மக்களை நன்மையின்பால் தூண்டியவர்கள் அவர்கள்.
இந்நிலைக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால் நமக்கு ஒரு விஷயம் நன்றாகவே புலப்படும். அது என்னவென்றால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ரமழானின் நோக்கத்தை சரிவர உணராததால்தான் இப்படிப்பட்ட நிலையிலுள்ளார்கள். பலர் ரமழானின் நோக்கத்தை தவறாகவும் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆகவே ரமழானின் நோக்கத்தை சரிவர புரிந்துகொண்டாக வேண்டும். ரமழானில் நோன்பும் இன்னும் பிற நல்லறங்களும் கடமையாக்கப்பட்ட நோக்கத்தை சரிவர புரிந்துகொண்டோமேயானால் வருங்காலங்களில் நம்மை செம்மைப்படுத்திக்கொள்ள உறுதுணையாக அமைவதோடு மிகப்பெரிய நன்மையாகவும் இருக்கும். தற்போது நாம் நோன்பைப்பற்றியுள்ள மக்களின் எண்ண ஓட்டத்தை கருத்தில் கொண்டு அவைகளின் நிலை பற்றி சிறிது ஆராய்வோம்.
நல்லறங்கள் மாத்திரம் செய்வதற்காகவா?
ரமழான் என்பது ஏதோ சில நல்லறங்கள் புரிவதற்கும், பகலிலே பசித்திருப்பதற்காகவும், இரவிலே தொழுவதற்காகவும் கடமையாக்கப்பட்டது என நம்மில் பெரும்பாலோர் புரிந்துவைத்துள்ளனர். உண்மையில் இந்த நோக்கத்தை உள்ளடக்கியதாக மட்டும் இருந்திருக்குமானால் இது போன்று ரமழான் அல்லாத ஏனைய காலங்களிலும் இறைவன் நோன்பை கடமையாக்கியிருப்பான். ஆனால் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதத்தை தேர்வு செய்து அதில் பசித்திருப்பதை கடமையாக்கியிருக்கிறான் என்றால் அதில் வேறு ஏதேனும் புறக்காரணங்கள், விஷேச காரணங்கள் இருந்தாக வேண்டும்.
இங்கு ஓர் ஐயம் எழும். அதுதான் முஹர்ரம் 9-10ஆகிய தினங்கள்இ அரபா நாள் போன்ற சில தினங்களில் நல்லறங்களில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதேஇ ஆகவே வணக்க வழிபாடுகளில் கவனஞ்செலுத்தவே நோன்பு கடமையாக்கட்டுள்ளது என கருதுவதில்; தவறொன்றுமில்லை. ஆனால் ரமழானுக்கும் ஏனைய தினங்களுக்குரிய வேறுபாடுகளை கண்டறிந்து கொண்டால் இந்த குழப்பம் தானாகவே தீர்ந்துவிடும். முஹர்ரம் என்பது நபி மூஸா (அலை) மற்றும் ஏனைய நபிமார்களுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் திருநாள். அரபா என்பது நபி இப்றாஹீம் (அலை) அவர்களை நினைவுபடுத்தும் முகமாக சமுதாயத்தின் தலைவர்கள் ஒரு இடத்தில் ஒன்றுகூடி சமுதாய நலனில் அக்கறை கொள்வதற்காக துவக்கப்பட்ட நாள். ஆனால் ரமழான் அப்படியில்லையே! குர்ஆன் இறங்கிய மாதமாயிற்றே!
மருத்துவ பலனா?
இன்னும் நம்மில் பெரும்பாலோர் ரமழான் மாதத்தில் நாம் பசித்திருப்பதினால் வயிற்றுக்கு நல்லது என்றும், 11 மாதங்களில் நமக்கு ஏற்பட்ட வயிறு சம்பந்தமான நோய்களை நிவாரணம் செய்வதற்காகத்தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என கருதுவோரும் உண்டு. இந்த வாதம் ஓரளவு ஏற்புடையதாக இருந்தாலும் யதார்த்தத்தில் அதுவல்ல நோக்கம். ஏனெனில் வயிற்றுக்கு நிவாரணி வேண்டும் என்ற நோக்குடன் கடமையாக்கப்பட்டிருந்தால் எப்பொழுதெல்லாம் வயிற்று பிரச்சினை வருகிறதோ அப்பொழுதெல்லாம் உங்கள் மீது கடமையென இறைவன் விதித்திருப்பான். நாம் அப்படி குர்ஆனுடைய எந்த அத்தியாயங்களிலும், ஹதீஸ்களிலும் நம்மால் காணமுடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் பசியோடு இருப்பதினால் அல்சர் போன்ற வியாதிகள் உருவாக சந்தர்ப்பங்கள் உள்ளது.
வயிற்று பிரச்சினைகளை சமாளிப்பதற்கு நோன்பைவிட மருத்துவப் பயன்பாடுகள் கொண்ட நவீன பொருட்கள் அதிகமாகவும் குறைந்த விலையிலும் கிடைக்கப் பெறுகிறோம்.
உண்ணாவிரதமா?
இன்னும் நோன்பு வைப்பதின் நோக்கத்தை சொல்ல வரும்போது ”’பசியோடு இறைவனிடத்தில் கேட்கப்படும் போது அத்தேவைகளை இறைவன் நிவர்த்தி செய்து விடுகிறான். பசியோடு இருக்கும்போது மனிதனே இரக்கம் கொள்ளும்போது அளவிலா கருணையுடைய இறைவன்; இரக்கம் கொண்டு நாம் கேட்டதையெல்லாம் தந்துவிடமாட்டானா?” என சிலர் வாதிடுவர்.
உண்ணாவிரதம் என்ற பெயரில் அரசியல் நடத்துகிற நோக்கத்தில் செய்யப்படும் செயல்களோடு இறைவனுக்காக செய்யப்படும் வணக்கங்களை ஒப்பிட்டு விடக்கூடாது. இது மாதிரியான நோக்கங்களை சொல்வோமேயானால் இஸ்லாமிய நம்பிக்கையின்படி அது மிகத் தவறானதாகும்.
பசியை புரிந்துகொள்ளவா?
இன்னும் பலர் நோன்பு நோற்பதற்கான காரணம் ”பசியின் நிலையை புரிந்துக்கொள்ளத்தான் கடமையாக்கப்பட்டது” என்று கூறுவோரும் உண்டு. இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முற்படும்போது சில விஷயங்களை நம்முடைய கவனத்தில் கொண்டுவருதல் மிக அவசியமாகும். நோன்பு வைப்பவர்கள் பசியை உணர்வதற்காக எந்த வகையிலாவது ஈடுபாடு கொண்டுள்ளார்களா? என்று பார்க்கவேண்டும். உலக நடைமுறை இதற்கு பதிலளிக்கிறது.
நோன்பாளிகள் பலர் நோன்பு காலங்களில் நிறைய ஓய்வெடுத்துகொள்கிறார்கள். தனது அலுவல்களை வெகுவாகவே மாற்றிக்கொள்கிறார்கள். காலையில் சஹருக்காக அவர்கள் விதவிதமான உணவுகளை உட்கொள்வதிலும், இதெற்கெனவே பிரத்தியேக முயற்சிகள் எடுத்துவருகிறார்கள். இதன் காரணமாகவே ரமழான் மாதத்தில் குடும்ப செலவினங்கள் அதிகரிக்கிறது. சஹர் சாப்பிட்டபிறகு உண்ட மயக்கத்தோடு சுபுஹ் தொழுகையை நிறைவேற்றிவிட்டு நெடிய தூக்கம். அதன்பிறகு வீட்டுத்தேவைகளுக்கென சிறிது மார்க்கெட் செல்வது. தான் சார்ந்திருக்கும் தொழிற்துறைகளை சற்று கவனித்து விட்டு லுஹருடைய தொழுகையை நிறைவேற்றிவிட்டு கொஞ்சம் ஓய்வு! இப்படியாக தனது அலுவல்களை, முடித்தபிறகு அஸர் தொழுகை. அஸருக்கு பிறகு மறுபடியும் நோன்பு திறப்பதற்காக பலத்த ஏற்பாடுகள் செய்துவிட்டு நோன்பு திறந்து விடுகிறார்கள்.
அரபு நாடுகளில் வேலைப்பார்ப்போரின் நிலை இதை விட சொகுசானது. அங்கு ரமாழனில் இரவு நேரந்தான் அலுவல்கள் அனைத்துமிருக்கும். இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் என்பதுதான் அரபுநாடுகளின் நிலை. இந்த முஸ்லிம்கள் எங்கே பசியை உணர்கிறார்கள்? ரமழான் வந்துவிட்டால் பசியை உணர்வதற்கு பதிலாக பகலில் எப்படி தூங்கி கழிக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள்! இவர்கள் பசியை உணர்வதற்கு கொஞ்சநஞ்ச காரணங்களாவது இருக்கிறதா? பசியை உணர்வதுதான் நோன்பின் நோக்கமாக இருக்குமேயானால் பின்வரும் நபிமொழிச்செய்தி அதற்கு முரனாக அமைகிறது.
எத்தைனையோ நோன்பாளிகள் தனது நோன்பிலிருந்து பசியைத்தான் உணர்கிறார்களே தவிர வேறு எதையும் உணர்வதில்லை. எத்தனையோ இரவு நேரங்களில் நின்று வணங்கும் தொழுகையாளிகள் கண்விழித்தைத்தவிர வேறு எதையும் உணர்வதில்லை. (அறிவிப்பாளர்: அபுஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸயி, இப்னுமாஜா, ஹாகிம்.)
மேற்கூறப்பட்ட நபிமொழி உணர்த்த வரும் செய்தி என்ன? பசியை உணர்வதற்காகத்தான் நோன்பு கடiயாக்கப்பட்டது என்றிருக்குமானால் நபிகள் நாயகம் (ஸல்) இப்படி கூறியிருக்கமாட்டார்கள். ஆகவே பசியை உணர்வதற்காக நோன்பு கடமையாக்கப்படவில்லை. இன்னும் திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் கூறப்பட்ட நோன்பின் சிறப்புகளோடு ஒப்படுவோமானால் நாம் சொல்லக்கூடிய எந்த காரண காரியங்களும் சரியானதாக நமக்கு தோன்றாது.
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (திருக்குர்ஆன் 2:183)
ஆதமுடைய சந்ததியினர் செய்யக்கூடிய எல்லா நல்லறங்களும் அவர்களுக்கே சொந்தமானது, ஆனால் நோன்பு மாத்திரம் அவர்களுக்கு சொந்தமானதல்ல. அது எனக்கே சொந்தமானது. நானே அதற்கு கூலிக்கொடுக்கிறேன். என்று அல்லாஹ் சொல்வதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்னார்கள். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் அஹ்மத், முஸ்லிம், நஸயீ)
நோன்பும், குர்ஆனும், மறுமைநாளில் அடியானுக்கு பரிந்துரை செய்யகூடியவைகளாகும். நோன்பு கூறும் ‘ ”இறைவா நான் இந்த அடியானை பகல்நேரத்தில் சாப்பிடவிடாமலும், மனோஇச்சைகளின்படி நடக்கவிடாமலும் தடுத்துவைத்திருந்தேன். ஆகவே இவன் விஷயத்தில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக!” இன்னும் குர்ஆன் ”இறைவா இரவு நேரங்களில் இந்த அடியானை என்னை ஓதுவதற்காக இவனை தூங்கவிடாது தடுத்துவந்தேன். ஆகவே இவன் விஷயத்தில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக” என கூறும். அவ்விரண்டின் பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு , நூல் : அஹ்மத்)
நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து யா ரஸுலல்லாஹ் என்னை சுவர்க்கத்திற்கு கொண்டு சேர்க்ககூடிய ஒரு நல்லறத்தை அறிவித்துத் தாருங்களேன் என வேண்டினேன். அதற்கவர்கள் நீ நோன்பு வைத்துவா ஏனெனில் நோன்புக்கு நிகர் வேறெதுவுமில்லை. என்றார்கள் பின்னர் இரண்டாம் தடவையாக அவர்களிடம் வந்து மேற்கூறிய கேள்வியையே கேட்டேன். அதற்கவர்கள் நோன்பு வைத்து வா என்றார்கள். (அறிவிப்பாளர் அப்துல்லாஹ அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு நூல் அஹ்மத் நஸயீ)
அல்லாஹ்வுடைய வழியில் ஒரு நாள் நோன்பு வைப்பதினால் இறைவன் நோன்பு வைப்பவருடைய முகத்தை நரக நெருப்பிலிருந்து 70 ஆண்டுகாலம் திருப்பிவிடுவான். அறிவிப்பாளர் அபூஸயீதில் குத்ரீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், நூல் புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா, நஸயீ அஹ்மத்சுவர்க்கத்தில் ரய்யான் என்றழைக்கப்படக்கூடிய வாயிலொன்று உள்ளது. மறுமைநாளில் அந்த வாயிலிருந்து நோன்பாளிகள் எங்கே? என கூப்பிடப்படும். நோன்பாளிகளில் இறுதி நோன்பாளி நுழையும் வரை வாயில் திறக்கப்பட்டிருக்கும். அவரும் நுழைந்துவிட்டால் அதன் வாயில் மூடப்படும். என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் ஸஃது இப்னு ஸஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு , நூல் புகாரி, முஸ்லிம்)
ரமழான் மாதம் வந்தபோது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உங்களிடத்தில் அபிவிருத்திமிக்க மாதம் வந்துள்ளது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கியுள்ளான். இம்மாதத்தில் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகிறது. நரக வாயில்கள் மூடப்படுகிறது. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள். இம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. இதன் நன்மைகளை அடைய முயற்;சி செய்யாது எவர் உள்ளாரோ அவர் எந்த நன்மையையும் அடைந்துக்கொள்ளமாட்டார். (அறிவிப்பாளர் அபூஹுரைரா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், நூல் அஹ்மத் நஸயீ பைஹகீ)
அர்பஜா என்பவர் கூறுகிறார். நான் உத்பா பின் பர்கதிடம் இருந்தேன் அவர் ரமழானின் சிறப்புகளை சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர் ஒருவர் எங்களிடம் வந்தார். அவர் ரமழானின் சிறப்பம்சங்களை எங்களிடம் சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்னார் ரமழானில் நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள். பின்பு சொன்னார்கள் அம்மாதத்தில் ஓர் மலக்கு மக்களிடம் நன்மைகளை தேடக்கூடிய மக்களே இதோ சுபச்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள் அதிகமாக நன்மைகளை செய்யுங்கள். தீமை செய்வோரே உங்கள் தீமைகளை குறைத்துக்கொள்ளுங்கள் என ரமழான் மாதம் முடியும்வரை சொல்லிக்கொண்டேயிருப்பார். என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் (அறிவிப்பாளர் ஆபூஹுரைரா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், நூல் அஹ்மத் நஸயீ)
யார் ரமழான் மாதத்தில் ஈமானிய சிந்தனையோடும், இன்னும் பிற தேவைகளின் நிமித்தமாகவும் நோன்பு வைக்கிறார்களோ அவர்கள் முன் செய்த பாவமனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.ஆறிவிப்பாளர் ஆபூஹுரைரா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், நூல் அஹ்மத்
போர்க்களத்தில் கேடயம் கொண்டு எப்படி உங்களை பாதுகாத்துக்கொள்கிறீர்களோ அது போன்று நோன்பு நரகத்திலிருந்து உங்களை பாதுகாக்கும் கேடயமாகும். (அஹ்மத்)
நோன்பாளிகள் நோன்பு திறக்கும் நேரத்தில் செய்யப்படும் துஆக்கள் உடன் அங்கீகரிக்கப்படும். ( இப்னு மாஜா)
இப்படி என்னிலடங்கா சிறப்புகள் அடங்கிய நோன்பை இது போன்ற அற்ப காரணங்களோடு ஒப்பிட்டுவிடக் கூடாது. அதை விட பெருங்காரணமிருக்கிறதா என சிந்திக்க வேண்டும். இதற்கு ஹதீஸ் ஒளியில் ஏதேனும் தடயங்கள் இருக்கிறதா என அலசியாக வேண்டும். இதோ சில தடயங்களை பாருங்கள்.
எவர் ரமழான் மாதத்தில் நோன்பு வைத்து, அதன் ஒழுக்கவிழுமங்களை அறிந்து, பேணப்படவேன்டிய விஷயங்களை பேணி நடந்து வருகிறரோ அவர் முன் செய்த பாவமனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூ ஸயீதுல் குத்ரி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், நூல் அஹ்மத், பைஹகீ)
ஒவ்வொரு தொழுகையும் அடுத்த நேர தொழுகை வரும் வரை பாவங்களை போக்கக் கூடியதாகும். ஒரு ஜும்ஆ தொழுகை மறு ஜும்ஆ தொழுகை தொழும் வரை ஏற்படும் பாவங்களை போக்கக்கூடியதாகும். ஒரு ரமழான் மாத்தில் நோன்பு வைப்பது அடுத்த வருடம் வரும் ரமழானில் நோன்பு வைக்கும் வரை ஏற்படும் பாவங்களை போக்ககூடியதாகும். எனினும் இக்காலங்களில் பெரும் பாவங்கள் எதுவும் செய்யாமலிருப்பது மிக்க அவசியமாகும். (முஸ்லிம்)
இந்த ஹதீஸை சற்று விளக்கப்படுத்தி கூறினால் நோன்பின் நோக்கத்தை யாரும் சுட்டிக்காட்டாமலே விளங்கிக்கொள்ளமுடியும். ஒரு தொழுகையை நிறைவேற்றியதின் பின்னால் அந்த தொழுகை தொழுகையாளிக்கு எவ்வளவு பாதிப்பை உருவாக்கியிருக்க வேண்டும் என்றால் அடுத்த நேர தொழுகை வரை அந்த தொழுகையாளி எத்தகைய சிறும்-பெரும் பாவங்களும் செய்யாமலிருக்கத் தூண்டவேண்டும். அதுபோன்று ஜும்ஆ தொழுகையும் ஒரு ஜும்ஆவின் பாதிப்பு ஒருவருக்கு அடுத்த ஜும்ஆ வரை எவ்வித கெட்ட செயல்களில் ஈடுபடாமலிருக்க உதவி புரியவேன்டும். அது போன்றே நோன்பும் ஒரு வருடம் நோற்ற நோன்பு அடுத்த வருடம் வரை மனஅளவிளான பாதிப்பை ஏற்படுத்தவேண்டும்.
உண்மையில் இந்த நோன்பு கடமையாக்கப்பட்டது எதற்காக என்றால் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பயிற்ச்சி கொடுப்பதற்காக கடமையாக்கப்பட்டது. நோன்பு நோற்கிற எல்லா முஸ்லிம்களும் பயிற்சி எடுக்கிறார்கள். இந்த பயிற்சி ஏனைய 11 மாதங்களில் எப்படி தனிமனித ஒழுக்கவிழுமங்களிலும், அடுத்தவர்களின் உரிமைகளிலும் எப்படி நடந்து கொள்ளவேன்டும் என்பதை செயல்வடிவமான பயிற்சியாக அளிக்கப்படுகிறது.
இந்த ஆன்மீகப் பயிற்சி எப்படியெல்லாம் முஸ்லிம்களை புடம் போட்ட தங்கமாக மாற்றக்கூடிய வலிமை வாய்ந்தது என்பதை ஒவ்வொன்றாக பாருங்கள்.
தொடர்ச்சிக்கு கீழுள்ள ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்