ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட கடமைகளிருக்கின்றன. இக்கடமைகள் தனது கணவனுக்கு அவள் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட கடமைகளுக்குப் பகரமாகி விடுகின்றன.
அவை அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாற்றிமில்லாக் காரியங்களில் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது, அவன் உண்பதற்கும் பருகுவதற்கும் தயார் செய்து கொடுப்பது, குழந்தைகளுக்குப் பாலூட்டுவது, அவர்களை வளர்ப்பது, அவனது பொருளையும் மானத்தையும் பாதுகாப்பது, தனது கற்பைப் பாதுகாத்துக் கொள்வது, அனுமதிக்கப்பட்ட வகைகளில் அவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்வது, அழகுபடுத்திக் கொள்வது போன்றவைகளாகும்.
இவை ஒரு பெண் அவளது கணவனுக்குச் செய்ய வேண்டிய கடடாயக் கடமைகளாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
மனைவியர் மீது கணவர்களுக்கு உள்ள உரிமைகளைப் போலவே முறைப்படி கணவர்கள் மீது மனைவியருக்கும் உரிமையுண்டு. (2:228)
முஃமினான பெண் இவற்றை அறிந்து எவ்வித நாணமும் பயமுமின்றி இவ்வுரிமைகளைக் கேட்டுப் பெற வேண்டும் என்பதற்காக இவற்றைக் கூறுகிறோம். இவைகளில் சிலவற்றை அவள் மன்னித்து விட்டாலன்றி, கணவன் இவைகளை முழுமையாக மனைவிக்கு வழங்குவது கடமை. அவள் விட்டுக் கொடுப்பதும் கூடும்.
அவன் தனது வசதி, ஏழ்மை நிலையைக் கவனித்து அவளுக்குச் செலவுக்குக் கொடுக்க வேண்டும். ஆடை, உணவு, குடிப்பு, மருத்துவம், தங்குமிடம் இவைகளுக்காக செலவை அவள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆண், பெண்ணை நிர்வகிக்க வேண்டியவனாகயிருப்பதால் அவளின் மானம், மரியாதை, உடல், பொருள், மார்க்கம் இவை அனைத்திலும் அவளைப் பாதுகாக்க வேண்டும். ஒரு பொருளைப் பாதுகாத்து கவனித்து வருவதென்பது அதனை நிர்வகித்து வருபவனின் பொறுப்பிலுள்ளதாகும்.
அவளின் மார்க்க விசயங்களில் அவசியமானவற்றை அவளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவனுக்கு இயலா விட்டால் அல்லாஹ்வின் இல்லங்களிலும், கல்விக் கூடங்களிலும் நடைபெறுகின்ற பெண்களுக்குரிய மார்க்கக் கூட்டங்களுக்குச் சென்று வர அனுமதியளிக்க வேண்டும். ஆனால் அவ்விடங்கள் குழப்பத்தை விட்டும் பாதுகாப்பானதாக இருப்பதோடு அவனுக்கோ அவளுக்கோ அதில் இடையூறு ஏற்படாமலிருப்பதும் அவசியமாகும்.
அவளிடம் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான் : அவர்களோடு நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள் (4:119)
நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள் என்பதில் உடலுறவில் அவளுக்குரிய உரிமையைக் குறைத்திடாமலிருப்பது, திட்டமிடுவது, இழிவுபடுத்தவது, கேவலப்படுத்துவது போன்றவற்றால் அவளுக்குத் தொல்லை கொடுக்காமலிருப்பது ஆகியவை அடங்கும்.
இன்னும் அவள் தனது உறவினர்களைச் சந்தித்து வருவதால் குழப்பம் ஏற்படுமென அவன் பயப்படாத போது அவனைத் தடுக்காமலிருப்பதும், அவளுக்கு முடியாத வேலைகளைச் செய்யும்படி சிரமம் கொடுக்காமலிருப்பதும், சொல்லிலும், செயலிலும் அவளுடன் அழகிய முறையில் நடந்து கொள்வதும் அதில் அடங்கும்.
ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் : தம் மனைவியரிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர். உங்களில் நான் எனது மனைவியரிடத்தில் சிறந்தவளாக இருக்கின்றேன். மேலும் கூறினார்கள் : பெண்களைக் கண்ணியமாக நடத்துபவர்களே நல்லவர்கள். அவர்களை இழிவாக நடத்துபவர்கள் தாம் கெட்டவர்கள்.
பர்தா அணிதல்
நிச்சயமாக இஸ்லாம் குடும்ப அமைப்பு வீழ்ந்து சின்னா பின்னப்பட்டுப் போகாமல் அதைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டுள்ளது. இதனால் அதைச் சுற்றி ஒழுக்கங்கள் மற்றும் நற்குணங்களாலான உறுதி வாய்ந்த வேலியை எழுப்பியுள்ளது.
காரணம் மனிதர்கள் நிம்மதியாகவும் சமுதாயம் தூய்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக. அச்சமுதாயத்தில் காம உணர்வு தூண்டப்பட முடியாது. காமம் கிளறப்பட முடியாது. இயற்கைச் சூழ்நிலையைக் கேடுபடுத்திட முடியாது. இன்னும் நிச்சயமாக இஸ்லாம் குழப்பத்தில் பால் இட்டுச் செல்லக் கூடிய அனைத்து வாசல்களிலும் திரையை ஏற்படுத்தியுள்ளது. ஆண் பெண் இருபாலரும் தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளும்படியும் ஏவியுள்ளது.
நிச்சயமாக அல்லாஹ் பெண்ணைக் கண்ணியப்படுத்துவதற்காகவும்,
இழிவிலிருந்து அவளின் மான மரியாதையைப் பாதுகாப்பதற்காகவும்,
குழப்பவாதிகள் மற்றும் தீய எண்ணம் உடையவர்களின் கெடுதியை விட்டும் அவளைத் தூரப்படுத்துவதற்காகவும்,
கண்ணியத்தினுடைய விலைமதிப்பை அறியாதவர்களிடமிருந்து அவளைப் பாதுகாத்துக் கொள்தவதற்காகவும்,
விஷப்பார்வைகளுக்குக் காரணமாக குழப்பத்தின் வாசலை அடைத்திடுவதற்காகவும்,
பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவுமே
அல்லாஹ் பெண்களுக்குப் பர்தா அணிவதை சட்டமாக ஆக்கியுள்ளான்.
இஸ்லாமிய அறிஞர்கள் பெண்கள் தங்களின் இரு முன் கைகளையும் முகத்தையும் தவிர உள்ள எல்லாப் பாகங்களையும் மூடி மறைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் அந்நிய ஆண்களின் முன்னிலையில் தனது அழகையும், கவர்ச்சியையும் வெளிப்படுத்தக் கூடாது என ஏகமனதாக முடிவு செய்துள்ளனர். முகத்தையும் முன் கைகளையும் மறைக்க வேண்டுமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உள்ளது. ஒவ்வொரு பிரிவினரிடத்திலும் தங்களது கருத்திற்கேற்ப ஆதாரங்களும் உள்ளன.
நாம் வாழுகின்ற இந்தக் காலப் பிரிவில் குழப்பங்கள் மலிந்துள்ளன. பெண்களுக்கெதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் மிகுந்து காணப்படுகின்றன. பொது இடங்களில் பெண்களைச் சீண்டுவதும் அதிகரித்திருக்கின்றது. காரணம் இறைவழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ளாத சமூகத்தில் உள்ளவர்கள், இறையச்சம் இல்லாதவர்கள் தான் இத்தகைய இழி செயல்களில் ஈடுபடுகின்றார்கள்.
இஸ்லாம் பெண்கள் அந்நிய ஆடவர்களுடன் கலந்துறவாடுவதைத் தடைசெய்துள்ளது. இவையனைத்தும் பண்பாடுகள், சிறப்புகள், குடும்பங்கள் முதலியவற்றைப் பாதுகாப்பதற்கும், குழப்பத்தின் வாசல்களையும் குழப்பதை ஏற்படுத்தக் கூடிய வழிகளையும் அடைப்பதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் இஸ்லாம் அக்கறை கொள்கிறது. பெண் வெளியே செல்வதால், அந்நிய ஆடவர்களுடன் கலந்து விடுவதால், பர்தா முறையை மேற்கொள்ளாமலிருப்பதால் இச்சைகள் தூண்டப்படுகின்றன, தவறுக்கான காரண காரியங்களை எளிதாக்கப்படுவதோடு அவற்றை அடைவதும் இலேசாக்கப்படுகின்றன.
அல்லாஹ் கூறுகின்றான் :
”(நபியின் மனைவியர்களே!) நீங்கள் உங்களின் வீடுகளிலேயே தங்கி விடுங்கள். முன்னர் அறியாமைக் காலத்துப் பெண்கள் திரிந்ததைப் போன்று திரிந்து கொண்டிருக்காதீர்கள். (33:33)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியரிடம் நீங்கள் ஏதாவது ஒன்றைக் கேட்பதாக இருந்தால் திரை மறைவிலிருந்து கேட்டுக் கொள்ளுங்கள்.” (33:53)
ஆண்களும் பெண்களும் கலந்து விடுவதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டிப்பாகத் தடை செய்துள்ளார்கள். இன்னும் அப்படி கலந்து விடுவதற்குக் காரணமான அனைத்தையும் – வணக்க வழிபாடுகள் நடைபெறும் இடங்களிலும் கூட தடுத்துள்ளார்கள்.
ஒரு பெண் சில சந்தர்ப்பங்களில் தனது அவசியத் தேவைகளை நிறைவு செய்த கொடுப்பவரில்லாத போது தனது தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கும் அல்லது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உணவைத் தேடிக் கொள்வதற்காக விற்பதற்கும் வாங்குவதற்கும் அல்லது இது போன்ற அவசியத் தேவைகளுக்காக ஆண்களிருக்கும் இடத்திற்கு போக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி விடுகிறாள். இந்தச் சமயத்தில் அவள் மார்க்க வரம்புகளைப் பேணி தனது அலங்காரத்தை வெளிப்படுத்தாமல் இஸ்லாமிய முறைப்படி தன்னை மறைத்துக் கொண்டு வெளியேறி, ஆண்களை விட்டும் நீங்கி, அவர்களுடன் கலந்திடாதவாறு சென்று வருவதில் குற்றமில்லை.
ஒரு பெண் அந்நியருடன் தனித்திருப்பதை இஸ்லாம் தடுத்திருப்பதானது, குடும்பத்தையும் பண்பாட்டையும் பாதுகாப்பதற்கு இஸ்லாம் அமைத்துள்ள சிறந்த வழியாகும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெண் தன்னுடைய கணவன் அல்லது அவள் மணம் முடித்துக் கொள்ள விலக்கப்பட்டவன் இல்லாத போது அந்நிய ஆணுடன் அவள் தனித்திருப்பதை கடுமையாக எச்சரித்துள்ளார்கள். ஏனெனில் நிச்சயமாக ஷைத்தான் உள்ளங்களையும் குணங்களையும் கெடுப்பதற்கு மிகவும் பேராசை உள்ளவனாக இருக்கின்றான்.
இன்னும் மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தத் தீட்டு போன்ற சமயங்களில் அவளை வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கும் பழக்கத்தை இஸ்லாம் அடியோடு மாற்றி அமைத்து, அந்த சமயங்களில் அவர்கள் பேண வேண்டி வழிமுறைகள் என்ன என்ன என்பதை தனிச் சட்டமாகவே இஸ்லாம் பெண்களுக்குத் தொகுத்துத் தந்துள்ளது என்பது மற்ற மதங்களில் இல்லாத, இஸ்லாத்திற்கே உள்ள தனிச்சிறப்பாகும்.
இவ்வளவையும் மதம் என்ற நிலையில் நின்று இஸ்லாம் இந்த மனித சமுதாயத்திற்கு சட்ட திட்டங்களை வகுத்துத் தரவில்லை. மாறாக, அவற்றை ஒரு வாழ்க்கை நெறியாகத் தந்து, இந்த மனித சமுதாயம் இந்தப் பூமியில் அமைதியான முறையில் வாழ்வதற்கும், இயங்குவதற்கும் வழிவகை செய்து கொடுத்துள்ளது என்றிருக்கும் போது, மற்ற மதங்களைப் போலவே இஸ்லாமும் பெண்ணடிமை மார்க்கம் என்று தூற்றுவோர், உண்மையில் தங்களது இதயங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு விமர்சனப் பார்வையை வீசுவது நல்லது.
கம்யூனிஸமும், முதலாளித்துவமும் இன்னும் பிற இஸங்களும் மனிதர்களை ஒரு பொருளாதாரப் பிராணியாகவே பார்க்கின்றன. ஆனால் இஸ்லாமோ, இறைவனின் உன்னதப் படைப்பாகவே பார்க்கிறது.