சந்தேகம் : 01
அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான். இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள் “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 18:21)
கஹ்ப் அத்தியாயத்தில் இடம்பெறுகின்ற மேற்குறித்த வசனத்தின் மூலம் கப்ருகளின் மீது பள்ளிவாயல்களை எழுப்பலாம் என்பதை அறிய முடிகின்றதல்லவா? கப்ருகளின் மீது கட்டடம் கட்டும் நடைமுறை முன்னைய சமுதாய நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. அல்லாஹ் இச்சம்பவத்தை அறிவிப்புச் செய்யும் போது இச்செயல் தடுக்கப்பட்ட செயல் என்று அறிவிக்காததினால் ‘முன் சென்றோரின் மார்க்கம் எங்களுக்கும் மார்க்கமாகும்’ என்ற சட்ட மூலாதாரத்திற்கு ஏற்ப இது தெளிவான ஆதாரமாக இருக்கின்றதே.
தெளிவு :
குறித்த வாதத்திற்கு சுருக்கமாக மூன்று விதங்களில் பதிலளிக்க முடியும்.
01.முஸ்லீம்களைப் பொருத்தமட்டில் அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகள் மாத்திரமே மார்க்க, வேத ஆதாரங்களாக கொள்ளப்பட வேண்டும். இதனை திருமறையின் பல வசனங்களும், நபிகளாரின் பொன்மொழிகளும் எடுத்தியம்புகின்றன. ஆதாரத்திற்காக ஒரே ஒரு வசனத்தை மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றேன்.
”(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (அல்குர்ஆன் 7:3)
இவ்விரண்டிற்கப்பால் இஜ்மா, கியாஸ், இஸ்திஹ்ஸான், ஸஹாபிகளின் சொந்தக் கூற்று, ஸலபிகளின் கூற்று, முன்வந்தோர்களின் மார்க்கம், ஊர் வழக்காறு, மத்ஹப் பிடிவாதம் போன்றவைகள் ஒரு காலமும் இறைவனின் மாரக்கத்தை தீரமானிக்காது. இவை ஒவ்வொன்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்த நமது தலைப்பு இடம் கொடுக்காததினால் நமது தலைப்போடு சம்பந்தப்பட்ட ‘முன்வந்தோர்களின் மார்க்கம்’ என்ற அம்சத்தை மாத்திரம் ஆதாரங்கள் அடிப்படையில் அலசுவோம்.
முன்வந்தோர்களின் மார்க்கம் எமக்கு மார்க்கமாகுமா? ஒரு காலமும் எமக்கு மார்க்கமாகாது. இது சட்டக்கலையில் எல்லோராலும் அறியப்பட்ட ஒரு அம்சமாகும். இதனை அறபியில் பின்வருமாறு அழைப்பர்.
شرع من قبلنا ليس شرعا لنا
அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளை மாத்திரமே பின்பற்ற வேண்டும் என்ற இறை கட்டளையின் மூலமே இவ்விரண்டும் அல்லாதவைகள் மார்க்க மூலாதாரமாக இல்லை என்பதை விளங்கக் கூடியதாக இருந்தாலும் பிரத்தியேகமாக ‘முன்வந்தோரின் மார்க்கம்’ நமக்கு மார்க்க மூலாதாரம் இல்லை என்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனமும் நபிகளாரின் ஆதாரபூர்வமான பொன்மொழியும் எடுத்துக் காட்டுகின்றன.
அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். ‘உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்;’ (அல்குர்ஆன் 5:48)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்சென்ற எந்த ஒரு நபிக்கும் கொடுக்கப்படாத ஐந்து சிறப்பம்சங்கள் தனக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறிவிட்டு, அதில் ஒரு அம்சமாக பின்வரும் விடயத்தைக் குறிப்பிடுகின்றார்கள். ஜாபிர் பின் அப்தில்லாஹ்ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஸஒவ்வொரு நபியும் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கே அனுப்பப்பட்டுள்ளனர். நான் மாத்திரமே முழு மனித சமுதாயத்திற்குமாக அனுப்பப்பட்டுள்ளேன். ஸஎன நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புஹாரி-427)
மேற்குறித்த அல்குர்ஆன் வசனத்திலிருந்தும், ஆதாரபூர்வமான நபிமொழியிலிருந்தும் முன்வந்த சமூகத்தின் எந்த கிரியைகளும் நமக்கு மார்க்கமாகாது என்பதை விளங்க முடிகின்றதல்லவா? இது நாமாக சுயமாக கண்டுபிடித்த விளக்கங்கள் கிடையாது. எமக்கு முன்சென்ற இஸ்லாமிய அறிஞர்களும் இவ்வாறுதான் விளக்கம் சொல்லியுள்ளனர்.
02. மேற்குறித்த அதாவது, முன்சென்றோரின் மார்க்கம் எங்களுக்குரிய மார்க்கமே என்ற கருத்தை ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும் அவர்களது வாதப்படியே இது தவறானது என்பதுதான் யதார்த்தமாகும். ஏனெனில்; இதனை மார்க்க மூலாதாரமாக கருதுபவர்களிடத்தில் ஒரு நிபந்தனை இருக்கிறது. அதாவது, ‘நமது மார்க்கத்தில் அதற்கு முரணான ஒரு செய்தி வராத வரையில்தான் முன்வந்தோர்களின் மார்க்கம் எங்களுக்குமுரிய மார்க்கமாகும்’ ஆனால் இந்நிபந்தனை, குறித்த நமது விடயத்தில் பொய்ப்பிக்கப்பட்டிருக்கின்றதே. நமது மார்க்கத்தில் கப்ருகளின் மீது பள்ளிவாயல்கள் எழுப்புவது தெளிவாக தடுக்கப்பட்டு விட்டதல்லவா? எனவே, முந்தைய மார்க்கத்தை நமது மார்க்கம் மாற்றி இருக்கும் போது இவ்வசனத்தை அவர்கள் ஆதாரமாக முன்வைப்பது வேடிக்கையாக இல்லையா?
03.இன்னும் சொல்லப்போனால் சூஃபிகள் தங்களது வாதத்திற்கு ஆதாரமாக முன்வைத்த குறித்த வசனத்திலிருந்து ‘முன்சென்றோரின் மார்க்கத்தில் கப்ருகளின் மீது இறை இல்லங்கள் எழுப்புகின்ற அனுமதி இருந்தது’ என்று கூட சொல்ல முடியாது. ஏனெனில், குறித்த வசனத்தில் இச்செயலில் ஈடுபட்டவர்கள் இறைவிசுவாசிகள் என்றோ, நபிக்கு வழிப்பட்டு நடந்தவர்கள் என்றோ எங்கும் இடம்பெறவில்லை. மாறாக, அவ்வசனத்தில் குறித்த விவாதத்தில் மிகைத்து வெற்றி பெற்றோர் என்றே கூறப்பட்டுள்ளது. எனவே, இறை இல்லங்களின் மீது கப்ருகளை எழுப்பியதானது பலவந்தமாக மிகைத்து வெற்றிபெற்றோரின் செயலாகத்தான் இருக்கிறது. நல்லோர்களுக்கு பலவந்தமாக மிகைத்து வெற்றிபெற வேண்டிய அவசியம் கிடையாது. இது அவர்களின் பண்புமன்று. எனவே, எப்படிப்பார்த்தாலும் குறித்த வசனத்திலிருந்து பெரும்பாவத்தை நியாயப்படுத்தக்கூடிய இவர்களது அக்கிரம செயலுக்கு இம்மியளவு கூட ஆதாரம் இல்லை என்பதை அறிவுள்ளோர்கள் உணர்ந்து கொள்ளலாம்.
சந்தேகம்: 02
நபியவர்களின் அடக்கஸ்தலமே புனிதமிக்க மஸ்ஜிதுன் நபவியிலே அல்லவா இருக்கிறது. மஸ்ஜிதுன் நபவியின் நிலை என்ன?
தெளிவு:
இச்சந்தேகம் நியாயமாக பலருக்கும் எழுகின்ற சந்தேகம்தான் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அதனால்தான் மக்கள் இலகுவில் நம்பும்படியான இச்சந்தேத்தை கிளப்பிவிட்டிருப்பதை பரவலாக பார்க்கின்றோம். ஆதலால் இதனை சற்று தெளிவாகவும் சுருக்கமாகவும் பார்க்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கிறது.
இன்று நாம் பார்க்கின்ற நபிகளாரின் கப்ரு அமைப்பு ஸஹாபாக்களின் காலத்தில் இருந்த அமைப்பு கிடையாது. மாறாக நபிகளாரது அறை, மஸ்ஜிதுந் நபவிக்கு அருகாமையில்தான் அமையப் பெற்றிருந்ததே அல்லாமல் மஸ்ஜிதிற்குள்ளே இருக்கவில்லை. அறைக்கும் பள்ளிக்குமிடையே ஒரு மதில் (சுவர்) பிரித்திருத்தது. அதன் வழியாகத்தான் நபிகளார் பள்ளிக்குச்சென்று வருபவர்களாக இருந்திருக்கிறார்கள். இது எல்லோராலும் அறியப்பட்ட வரலாற்று உண்மை. எனினும், நபிகளார் மரணித்தவுடன் அவர்களது அறையிலேயே அவர்களை நபித்தோழர்கள் அடக்கம் செய்திருந்தனர்.
காரணம், அவர்களது கப்ரின் மீது எந்த ஒரு இறையில்லமும் எழுப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக. அறைக்கு அருகாமையில் புனிதமிக்க மஸ்ஜிதுன் நபவி இருக்கும் போது அருகாமையில் இருக்கின்ற நபிகளாரின் மன்னறையில் இன்னுமொரு பள்ளி அமைக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அவ்வாறு செய்தனர். ஆனால், அவர்கள் எதை அஞ்சினார்களோ அது அவர்களுக்குப்பின் நடந்தேறிவிட்டது. அதாவது, வலீத் பின் அப்துல் மலிக்கினது ஆட்சிக்காலத்திலே அவர் பள்ளியை விஸ்தீரனப்படுத்த விரும்பிய போது அதனை (பள்ளியை) இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு நபிகளாரின் மனைவியர்களின் அறைகளை பள்ளியோடு சேர்த்து விட்டார். இக்கட்டத்தில் ஆயிஷா நாயகியின் (நபிகளாரின் கப்ரு இருந்த) அறையும் பள்ளியோடு ஒன்றாகிவிட்டது. (ஆதாரம்: தாரீஹ் இப்னு ஜரீர்-05/222,223 தாரீஹ் இப்னு கதீர்-09ஃ74,75)
வலீத் பின் மர்வானின் இச்செயலை உரிமையோடு கண்டிப்பதற்கு அந் நேரத்தில் நபித்தோழர்கள் எவருமே இருக்கவில்லை. எனினும், சிலர் நபித்தோழர் ஒருவர் இருந்தார் என்று கருதுகின்றனர். ஆனால், அதில் எவ்வித உண்மையும் கிடையாது. கீழ்வரும் ஹாபிழ் முஹம்மத் பின் அப்துல் ஹாதீ அவர்களின் கருத்தை அவதானித்தால் நன்றாக புரிந்து விடும்.
”மதீனாவிலே இருந்த அனைத்து நபித்தோழர்களும் மரணித்த பின்பே வலீத் பின் அப்துல் மலிகின் இவ்விஸ்தீரனப்பணி நடைபெற்றது. இறுதியாக மரணித்தவர் நபித்தோழர் ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்தான். அவர் வலீதினுடைய தந்தை அப்துல் மலிகினது ஆட்சியிலேயே ஹிஜ்ரி 78ம் ஆண்டிலேயே மரணித்துவிட்டார். ஆனால் வலீத் ஆட்சியைப் பொறுப்பெடுத்தது ஹிஜ்ரி 86ம் ஆண்டிலேயாகும். (ஸாரிமுல் மன்கி:136)
எனவே, மேற்குறித்த ஆதாரபூர்வமான வரலாற்றுக் குறிப்பிலிருந்து வலீதின் இச்செயலுக்கும் நபித்தோழர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது நமக்கு புலனாகிறது. அல்குர்ஆனுக்கோ, அஸ்ஸுன்னாவிற்கோ, நபித்தோழர்களுக்கோ சம்பந்தமில்லாத வலீத் என்ற தனி மனித ஆட்சியாளனின் மார்க்கத்திற்கு முரணான செயல் ஒரு காலமும் மார்க்க ஆதாரமாக அமையாது என்பதை கவனத்திற் கொள்ளவேண்டும். இன்னும் சொல்லப்போனால். ஹுலபாஉர் ராஷிதீன் என்றழைக்கப்படக் கூடிய உமர், உத்மான் ஆகிய இரு நபித்தோழர்களும் இதே விஸ்தீரனப்பனியை மேற்கொண்டே இருக்கின்றனர். ஆனால், அவர்களில் எவரும் நபிகளாரின் கப்ரை பள்ளிவாயலுக்குள் நுழைவிக்கவில்லை. இதன் மூலம் வலீத் செய்த இக்காரியம் தவறானது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அவர் விஸ்தீரனப்படுத்தும் போது நபிகளாரின் கப்ர் விடயத்தை மார்க்க அடிப்படையில் கையாண்டிருக்க வேண்டும். எனினும் அவர் அவ்வாறு செய்யவில்லை. (அல்லாஹ் அவரது பாவத்தை மன்னிப்பானாக!)
இப் பள்ளியின் விஸ்தீரனப்பணி இறைத் தூதரின் வழிகாட்டலுக்கு முரணாக இருக்கின்ற அதே நேரம் செய்த தவறில் முடிந்தளவு பேணுதலாக நடந்துள்ளனர். அதனால்தான் கப்ரின் மீது உயர்ந்த சுவரை கட்டி கப்ரு ஸியாரத் என்ற பெயரில் நடைபெறுகின்ற ஷிர்க், பித்அத்களை தடுக்கும் விதத்தில் அமைத்துள்ளனர். எனவேதான் இன்றைக்கும் அதற்கு முன்னால் ஷிர்க் பித்அத்களை தடுப்பதற்காக பாதுகாப்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். எனினும், எது எவ்வாறிருப்பினும் அது தவறுதான் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும்
இல்லை.
சந்தேகம்: 03
மஸ்ஜிதுல் ஹைப்க என்ற பள்ளிவாயலில் நபிகளார் அவர்கள் தொழுதிருக்கிறார்கள். ஆனால் அங்கே 70 நபிமார்களின் கப்ருகள் இருப்பதாக ஹதீத் இடம்பெற்றிருக்கிறதே?
தெளிவு:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பள்ளியில் தொழுதுள்ளார்கள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அங்கு 70 நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று வரும் செய்தி பலவீனமானதாகும். அந்த ஹதீதின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் பல அறிவிப்பாளர்கள் ஹதீத் கலை அறிஞர்களால் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். தேவை ஏற்படின் அவற்றை விரிவாக விளங்கப்படுத்துவோம்.
ஒரு வாதத்திற்கு அந்தஹதீத் ஆதாரபூர்வமானது என்று வைத்துக்கொண்டாலும் வெளிப்படையாக அப்பள்ளியில் எந்த ஒரு கப்ரும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இவ்வாறான பலீனமான ஹதீத் ஒன்று அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் அது பற்றிய சிறு சந்தேகம் கூட தோன்றியிருக்காது. இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்தமட்டில் வெளிரங்கங்களை வைத்தே எத்தீர்ப்பும் அளிக்கப்படும். இரகசியங்களுக்கு அந்த ரப்புல் ஆலமீனே பொறுப்பாளனாக இருக்கின்றான்.
எனவே, இதுவும் பலவீனமான வாதம் என்பது புலனாகிறது. இன்னும் சொல்லப்போனால் இவ்வாறான போலியான வாதங்களை முன்வைத்து இவர்கள் நாடவிரும்புவது கந்தூரி, ஆகுமாக்கப்படாத ஸியாரத் வழிமுறை, அவ்லியாக்களிடம் கையேந்திப் பிரார்த்தித்தல், கப்ரை வலம் வருதல், கப்ரை முத்தமிடல், கப்ரின் மீது மண்டியிடல், கப்ரை விழாக்கோலமாக மாற்றுதல் போன்ற ஷிர்க், பித்அத்கள் நடைபெறாமல் மஸ்ஜிதுல் கைப் தௌஹீதின் கோட்டையாக தூய்மையாக பாதுகாக்கப்பட்டிருப்பதிலிருந்தே அங்கே 70 நபிமார்களின் கப்ருகள் இல்லை என்பதை அறியமுடிகின்றதல்லவா? இருந்தாலும், அவற்றின் அங்க அடையாளங்கள் எதுவும் இல்லை என்பதால் எவ்வித பாதிப்பும் இல்லை.
சந்தேகம்: 04
இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களது கப்ரு புனிதமிக்க மஸ்ஜிதுல் ஹராமிலே இருப்பதாக சில செய்திகள் இடம்பெருகின்றனவே?
தெளிவு:
இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களது கப்ரோ அவர்கள் அல்லாத வேறு எந்த ஒரு நபியின் கப்ரோ புனிதமிக்க ஆலயத்தில் கிடையாது. எந்த ஒரு ஹதீத் கிரந்தங்களிலும் ஆதாரபூர்வமாக இவ்வாறான செய்தி பதிவு செய்யப்படவில்லை. மாறாக நபிகள் நாயகத்தோடு எந்த விதத்திலும் சம்பந்தப்படாத சில செய்திகள் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை கூட ஆதாரத்திற்கு எடுக்க முடியாத மிக பலவீனம் வாய்ந்த செய்திகளே. விரிவை அஞ்சி தவிர்க்கின்றேன்.
அடுத்து, ஒரு வாதத்திற்கு புனித பள்ளியில் கப்ருகள் இருப்பதாக நம்பப்பட்டாலும் அவை வெளிரங்கத்தில் தென்படாததால் எவ்விதப்பாதிப்பும் இல்லை. இங்கே கவனிக்கப்பட வேண்டிய அம்சம் கப்ருகளின் மீது பள்ளிவாயல்கள் எழுப்பட்டிருக்கிறதா? என்பதுதான். கப்ரின் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் பூமிக்கு கீழே இருந்தால் அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை. மற்றும், மேற்குறித்த தடைக்குள் உள்ளடங்கவுமாட்டாது.
சந்தேகம்: 05
நபி அவர்களின் காலத்தில் அபூ ஜன்தல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூ பஸீர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கப்ரில் பள்ளிவாயல் கட்டியிருக்கிறார்கள் அல்லவா?
தெளிவு:
குறித்த தகவலை இப்னு அப்தில் பர் அவர்கள் மாத்திரமே ‘இஸ்தீஆப்’ என்ற கிரந்தத்தில் அபூ பஸீரின் வாழ்க்கைக் குறிப்பைப் பற்றி குறிப்பிடும்போது இந்த தகவலை இடம்பெறச் செய்திருக்கிறார். ஆனால் அது ஆதாரத்திற்கு நிற்காத செய்தியாகும். ஒரு வாதத்திற்கு அந்த செய்தி ஆதாரபூர்வமானது என வைத்துக் கொண்டாலும் அந்த செய்தியை ஆதாரமாகக்கொண்டு, ஏனைய தெளிவாக தடைசெய்து வருகின்ற ஆதாரபூர்வமான ஹதீகளை தட்டிவிட முடியாது. காரணம், இந்த சம்பவ நிகழ்வை நபிகளார் பார்த்து அங்கீகரித்ததாக எங்கும் இல்லை. அப்படித்தான் அண்ணலார் அங்கீகரித்தார்கள் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் அது தடைசெய்யப்படுவதற்கு முன்னால் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நபிகளார் மரணப்படுக்கையில் இருக்கும் போது கூட இது பற்றி எச்சரிக்கை செய்து தடுத்திருக்கின்றார்கள் என்று ஆதார பூர்வமான நபிமொழிகள் இடம்பெறும் போது அவற்றை தூக்கி எரிந்து விட்டு வேறு சட்டம் எடுக்க முடியாது. இத்தனைக்கும் அது ஆதாரபூர்வமானது இல்லை என்பது வேறு விடயமாகும்.
இதற்கப்பால், நபித்தோழர்களே கப்ரு உள்ள இடத்தில் தொழுவதை தவிர்ந்தும், தடுத்தும் வந்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரபூர்வமான செய்திகள் இருக்கின்றன. தகவலிற்காக ஒரே ஒரு செய்தியை மாத்திரம் கீழே தருகின்றேன்.
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள், கப்ருக்கு சமீபமாக தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னைக் கண்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘கப்ரு, கப்ரு’ என்பதாகச் சொன்னார்கள். அவர் கப்ரு என்று சொன்னதை ‘கமர்’ (சந்திரன்) எனக் கருதி வானத்தை நோக்கி எனது பார்வையயை உயர்த்தினேன். (முஸன்னப் இப்னு அபீ ஷைபா: 10ஃ316)
இங்கே மற்றுமொரு விடயம் என்னவென்றால், சிலர் நபியவர்களின் கப்ரின் மீது ‘குப்பா’ எழுப்பப்பட்டிருப்பதை ஆதாரமாக எடுத்துக்கொண்டு அவ்லியாக்கள், நாதாக்களின் கப்ருகளில் குப்பாக்களை எழுப்புகின்றனர். ஆனால் நபியவர்களோ தனது கப்ரின் மீது குப்பா எழுப்ப வேண்டுமென்று எந்த ஒரு வஸிய்யதும் செய்யவில்லை. அவ்வாறே, நபிகளார் சிறப்பித்துக் கூறிய எந்த ஒரு நூற்றாண்டிலும் இவ்வாறு நபியவர்களின் கப்ரின் மீது குப்பா எழுப்பப்டவில்லை. அதற்குப் பின்னர்தான் மார்க்கம் தெரியாத பித்அத்வாதிகளினால் எழுப்பப்பட்டது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவர் எங்களது மார்க்கத்தில் இல்லாத புதுமையான காரியத்தை உருவாக்கிறாரோ அது நிராகரிக்கப்படும். (புஹாரி:2550)
மேலும், அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அபுல் ஹய்யாஜ் அல் அஸதியை நோக்கி ‘அறிந்து கொள்! நபிகள் நாயகம் என்னை எதற்காக அனுப்பினார்களோ அதற்காக நானும் உன்னை அனுப்புகின்றேன். (அதாவது) எந்த ஒரு சிலுவையையும் தரைமட்டமாக்காமல் விட்டுவிடாதே, மற்றும் பூமியின் மட்டத்தை விட்டும் உயர்ந்திருக்கின்ற எந்த ஒரு கப்ரையும் சமப்படுத்தாமல் விட்டு விடாதே எனப்பணித்து அனுப்பினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்:1662)
மேற்குறித்த செய்திலிருந்து கப்ருகளை உயர்த்திக் கட்டுவது எவ்வளவு படுபயங்கரமான பாவம் என்பதை உணர முடிகின்றதல்லவா?
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!
இன்னும் சில வாதங்கள் இருக்கின்றன. எனினும் அவை பெரிதாக நமது சமூகத்தில் பிரச்சாரம் செய்யப்படாததால் அவற்றை இங்கு தவிர்த்துவிட்டோம். கப்ருகள் இருக்கின்ற பள்ளிவாயல்களில் எக்காரணம் கொண்டும் நாம் தொழுதுவிடக் கூடாது. இவ்விடயத்தில் அலட்சியம் செய்து நாம் தொழுகின்ற தொழுகைகளை பாழ்படுத்திவிடக் கூடாது என்று எனதருமை சகோதர சகோதரிகளுக்கு நஸீஹாவாக கூறிக்கொள்கின்றேன்.
அடுத்து, நமது இக்கருத்தே நான்கு மத்ஹபினரின் கருத்துமாக இருப்பதால் ஒவ்வொரு இமாம்களையும் தனித்தனியாக குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன். ஆதாரத்திற்காக இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கூற்றை மாத்திரம் கோடிட்டுக்காட்டி நிறைவு செய்கின்றேன்
”மக்காவில் இருந்த கவர்னர்கள் கப்ருகளின் மீது எழுப்பப்பட்டிருந்த கட்டங்களை தரைமட்டமாக்குவதை நான் (நேரடியாக) பாரத்தேன். புகஹாக்களில் எவரும் இச்செயலை குறை கூறவுமில்லை. (கூடாத ஒன்றாக இருந்தால் தடைசெய்திருப்பார்கள்.) (ஆதாரம்: அல் ஹாவில் கபீர்-39ஃ128) சத்தியத்தை சத்தியமாக அறிந்து அதனை நடைமுறைப்படுத்தவும் அசத்தியத்தை அசத்தியமாக அறிந்து அதிலிருந்து தவிர்ந்து வாழ்வதற்கும் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.
நிறைகள் அனைத்தும் இறைவனைச்சாரும், குறைகள் அனைத்தும் என்னைச்சாரும்
அல்லாஹ்வின் அருளை ஆதரவு வைக்கும் இறையடியான் மௌலவி MFM சிபான் (பலாஹி)
Email: alhafilshifan@gmail.com — abooashfaq@gmail.com